உடம்பைப் பற்றியும் உயிரைப் பற்றியும் தன்னறிவினுள்ளே உணர்ந்து முருகனே ஞானத்தலைவனாய் உணர்த்தப்பட்ட, உணர்ந்த அவரெல்லாம் ஞானத்தலைவன் முருகப்பெருமான் அருளாலே உடம்பும் உயிரும் சமநிலையில் நின்றால்தான் தவம் சித்திக்கும் என்றும், ஏதேனும் ஒன்று தாழ்ந்தாலும் ஏதேனும் ஒன்று மிகுந்தாலும் ஒன்றை ஒன்றுவிட்டு நீங்கவோ அழிக்கவோ செய்துவிடும் என்றறிந்து உடம்பின் ஆற்றலையும் உயிரின் ஆற்றலையும் ஏககாலத்தில் ஞானிகள் துணையோடு சமன் செய்து தராசுதட்டுபோல பாவித்து பராமரித்து தவம் சித்தி பெற வேண்டும் என்ற உண்மை அறிவு உள்ளுணர்வால் உணர்த்தப்படும். முருகன் அருளால் அன்றி தவம், யோகம், ஞானம் என்ற யாதொன்றையும் அறியவோ அறிந்து உணரவோ, உணர்ந்து கடைப்பிடிக்கவோ, கடைப்பிடித்து கடைத்தேறவோ கடைத்தேறி பிறவி வெல்லவோ, கண்டிப்பாக முடியாது என்ற சிறப்பறிவினை பெறுவார்கள்.
ஒரு நொடிப்பொழுதில் அணுவிலிருந்து அகிலாண்டகோடி அண்ட மாபிரம்மாண்டமாய் பிரபஞ்சம் முழுதும் பரந்து விரிந்து அருளொளி வீசி பரப்பி அருள்நிறை தெய்வமாய் அருளும் ஆற்றலுடை முருகனை மறவாது துதியுங்கள், போற்றுங்கள் வணங்குங்கள்.
எத்துணை எத்துணை எத்துணை மகாபிரம்மாண்டமாய் விரிந்து விரிந்து சென்ற முருகப்பெருமானார், நீ மனமுருகி உண்மை மனதோடு உள்ளன்போடு, பயபக்தியுடன் உனது ஆன்ம நேய உரிமையுடன் அன்பால் அழைத்திட்டால் வேறெந்த சக்திகளாலும் வேறெந்த விதங்களிலும் கட்டுக்கடங்காத பிரம்மாண்ட சோதி நாயகன் முருகன் பக்தனே உனதன்பிற்கு கட்டுப்பட்டு சுருங்கி உனதுளே சார்ந்து உம்மை நாடி வந்து “அஞ்சேல் மகனே யாமிருக்கேன் பயமேன்” என்றே அபயகரம் நீட்டி அருளி உம்மை காத்தருள் புரிந்து கருணைமிக கொள்வான். தாயினும் மிக்க தயவுடை நாயகன் நம் முருகப்பெருமான் அவனது கருணையின் அன்பிற்கு அளவுண்டோ யாருமறியார் அவன் கருணை அளவை.
கண்ணீர் மல்க மனமுருகி உண்மை அன்பால் முருகனை மனமுருகி அழையுங்கள் முருகனின் அருளின்பத்தில் திளைத்து இன்புறுங்கள்.
No comments:
Post a Comment