முருகனை பூஜித்து ஆசி பெற்றிட்டால் :
இப்பிறப்பு, மறுபிறப்பு, இனி பிறவாமை ஆகிய மூன்றையும் அறிந்து ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்கின்ற அறிவைப் பெறலாம். ஆறறிவு என்பது பெறுதற்கரிய பிறவியை பெற்றதன் பயனை உணர்ந்து அவரவர் ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ள வேண்டும் என்பதேயாம்.
அப்படி ஆதிஞானத்தலைவன் நம்மை சார்ந்து வழி நடத்தி ஜென்மத்தைக் கடைத்தேற்றி ஒளி தேகத்தை அளிக்க வேண்டுமாயின் அதற்கு ஏராளமான புண்ணிய பலம் வேண்டும், பூஜை பலம் வேண்டும். வெறும் நூலறிவோ, ஏட்டுக் கல்வியோ, பயிற்சிகளோ ஒருபோதும் உதவாது.
முருகப்பெருமானை மனம் உருகி தினம்தினம் தவறாமல் ஓம் சரவணஜோதியே நமோ நம என்றும், ஓம் சரவண பவ என்றும், ஓம் முருகப்பெருமான் திருவடிகள் போற்றி என்றும் தவறாமல் பூஜை செய்ய செய்ய முருகனது ஆசியை பெறலாம்.
முருகனது ஆசியே அறிவாக, பின் தெளிந்த அறிவாக அதுவே பெருகி தயை சிந்தையாக மாறிட அவனே அருள் செய்து தயவை பெருக்க தேவையான பொருளை மலைபோல் குவித்து அந்த பொருளைக் கொண்டு ஜீவர்களுக்கு இரங்கி இதம் புரிகின்ற புண்ணியங்களை செய்ய வாய்ப்பளித்து அப்புண்ணிய செயல்களை செய்ய தேவையான இடம், பொருள், ஏவல், காலம், காவல், அறிவு ஆகிய அனைத்தையும் தந்து ஏராளமான புண்ணியங்களை செய்ய வைத்து வாசி நடத்திக் கொடுத்து அவனுள் தானே சார்ந்து படிப்படியாக தேகக் குற்றங்களை நீக்கி அவனையும் தன்னைப் போலவே ஒளி உடம்பை பெற செய்து மரணமிலாப் பெருவாழ்வை அளித்து கடைத்தேற்றி காக்கின்றான் முருகப்பெருமான்.
கடைத்தேறும் உபாயம் கண்ட முருகனை
இடைவிடாது பூசிக்க இன்பம் உண்டாம்.
முற்றும் உணர்ந்த முருகன் திருவடியே
பற்றுடன் பூசித்து பயன்பெறுதல் நலமே.
No comments:
Post a Comment