மகான் குதம்பைச்சித்தர் ஞான சூட்சும நூல்
சோதி வடிவாய் நின்ற குமரா
சுவாமி மலை அமர்ந்த முருகா
ஆதி உமை அருளை பெற்ற
அறுமுகனே அன்புக் குமரா
குமரனே குன்றக் குடியானே
குகனே எங்களின் தலைவனே
அமரனாய் ஆனந்த குமரனாய்
அனைத்துமாய் நிற்கும் வேலனே
வேலனே பன்னீரு கரம் கொண்டு
வினை போக்க வேல் கொண்டவனே
ஞாலத்தை வெல்ல ஞானியாய்
ஞான தேசிகனாய் வந்து உலகுக்கு
உலகுக்கு ஞான அமுதூட்டும்
உன் சூட்சுமம் கண்டேனப்பா
உலகோர் நலம் கருதியே
உயர் ஞான சூட்சும நூலை
நூலை குதம்பைச் சித்தர் யானும்
கண்டுரைப்பேன் உலக மக்களே
மக்களே பிறவிக் கடல் தனை
மறுபிறப்பு கொள்ளா நீந்திட
ஊக்கமுடன் ஓங்காரக் குடிலுக்கு
உடன் வருதல் வேண்டும்
வேண்டி வந்து விழுந்து வணங்கி
வேலவனாய் அரங்கன் காட்சி கிட்ட
தொண்டு செய்தே குடிலில் இருக்க
தேசிகன் அருளாசி அடைவரப்பா
அப்பப்பா அரங்கனை அலட்சியம்
அகிலமதில் கண்டிடும் மக்கள்
தப்பிக்க கலிகாலமதில் வழியில்லை
தண்டனைக்கு உள்ளாக நேரும்
நேராது காத்து நிந்தனை கொள்ளா
நிலமதனில் அமைதி மிகுபட நடந்து
சேராது துர் தீகுணம் ஒழிய
சிவராஜ யோகி அரங்கன் நிழல்
நிழல் அகலா தொண்டு செய்து
நித்தம் செபதபத்தில் இருக்க
சுழலும் நவக்கோள்கள் தானும்
சுத்த சன்மார்க்கவாதி என காத்தருளும்
அருளும் பொருளும் தானே கிட்டும்
அரங்கன் கருணை மிகுதி கிட்ட
மருளும் மக்களே விழித்து எழுங்கள்
மரணமிலா வாழ்வு அரங்கனால் கிட்டும்
உலக மக்களே உண்மை உரைப்பேன் யான், உணர்ந்து பற்றிக் கொள்ளுங்கள். தாங்கள் மீளா பிறவிக் கடலினுள் ஆழ்ந்து தொடர் பிறவிதனிலே மீள இயலாது தவிக்கின்றீர். மீளா பிறவிக்கடல்தனை மறுபிறப்பு கொள்ளாது நீந்தி கடைத்தேறிடவே நீங்களெல்லாம் மிகுந்த ஊக்கமுடன் உத்தம ஞானமளிக்கும் ஞானஆலயமாம் ஆதிகுருநாத அவதார ஆறுமுக அரங்கமகா தேசிகர் வாழும் கருணாலயமாம் ஓங்காரக்குடில்தனக்கு காலம் தாழ்த்தாது உடனே வாருங்கள்.
அற்புதன் அகிலம் ஆளும் அரங்கன் திருக்குடிலிற்கு பயபக்தியுடன் மனம் ஒடுங்கி கடைத்தேற்றுங்கள் தயவே! என்றே மனமுருகி அரங்கதரிசனம் சாபவிமோசனம் என்றே எண்ணியே குடில் எல்லை வந்து வீழ்ந்து பணிந்து வணங்கி அற்புத வடிவுடை வேலனாய் அகத்துள் அமர்ந்து அரங்கராய் காட்சிதரும் ஆறுமுகப்பெருமானை ஐம்புலன் ஒடுங்கிடும் படியான பணிவுடனும் பயபக்தியுடன் ஆன்ம ஒடுக்கம் பெற்றாற் போலெண்ணி அற்புத மகா சன்னிதானம் அருள் அரங்கரை கண்ணால் கண்டு வணங்கிடவே அரங்கன் காட்சி கிட்டிடவே குடில் வரும் அவரவரும் குடில் சார்ந்து குடில்தனிலே அரங்கரால் மேற்கொள்ளப்பட்ட தரும அறப்பணிகளிலே தன்னலமற்று, எதிர்பார்ப்பின்றியே தாராளமாய் உதவிகள் செய்தும், தொண்டுகள் செய்தும், அரங்கதரிசனம், என்று கிடைக்குமோ! என்றே ஏக்கம்தனை ஆன்ம உருக்கத்துடன் கொண்டுமே தளராது செய்துவர செய்துவர, வருகின்ற அவரவரெல்லாம் அருள்நிறை அரங்கரின் அருளிற்கு பாத்திரமாகி அரங்கரின் அருளாசிதனை அடைவாரப்பா.
சிவராஜயோகி, பரமானந்த சதாசிவா ஆதிமூல குருமகா சன்னிதானம் அருள்நிறை ஆறுமுக அரங்கமகா தேசிக சுவாமிகள் தன்னை சாதாரணமாக எண்ணிவிடாதீர். அவர் தம்மை பார்ப்பதற்கும் அணுகுதற்கும் எளிதானவர் என்றே எண்ணியே அவர்தம் மறைப்பின் இரகசியம் உணராது மாயையுள் சிக்கி சன்னிதான மகாபிரபு அரங்கரை அலட்சியம் செய்து விடாதீர்கள். அலட்சியம் செய்திட்டால் அதுவே அவர்கள் வாழ்வில் செய்திட்ட மிகப்பெரிய பிழையாகும்.
உலகை காத்திடவே நம்பால் இரக்கம் மிகக் கொண்டுமே சாதாரண மனிதன் முதல் யோகியரும் அச்சமின்றி அணுகுதல் பொருட்டே எளிமை கொண்டனன் அரங்கன்
அரங்கமகாதேசிகனின் துணை இல்லையேல், அரங்கன் தயவை பெறவில்லையேல் அரங்கனின் அருள் இல்லையேல் அரங்கனின் அருட்கண் பார்வையை பெறாவிடில், அரங்கனின் அன்பிற்கு பாத்திரம் ஆகாவிடில் சுழற்றி சுழற்றி அடித்து மகாமாயையுள் உம்மை வீழ்த்தி நரகத்திற்கு கொண்டு செல்லும் கலியுகமாயை இந்த கலியுகத்தின் கோரப்பிடியின் கொடுமையிலிருந்து உம்மால் மீளமுடியாது. அரங்கனை அலட்சியம் செய்திட்டால் செய்தவர்கள் கட்டாயம் தண்டனைக்கு உள்ளாக நேரிடுவது தப்பாது.
ஆதலின் மக்களே இவ்வித தண்டனைகளுக்கு உள்ளாகாமல் உங்களை காப்பாற்றிக் கொள்ளுங்கள்.
அரங்கரின் ஆறுமுக சூட்சுமம் உணராவிட்டாலும் பரவாயில்லை. அவர்தம் ஆற்றலை உம்மால் உணர முடியாவிட்டாலும் பரவாயில்லை. அவர்தம் அருள் கொடையின் வெளிப்பாட்டை உணர முடியாவிட்டாலும் பரவாயில்லை. ஏதோ உங்களால் முடிந்த அளவு தொண்டோ, பூசைகளோ ஞானிகள் பெயரிலே செய்துவிட்டு, வந்த சுவடு தெரியாமல் அமைதியாக சென்று விடுங்கள். உங்களால் முடிந்த அளவிற்கு அரங்கனின் அறதருமப் பணிகளுக்கு உதவிடுங்கள். உங்கள் உதவி அரங்கன் தனக்கு செய்வதாய் யாரும் தவறாக எண்ணிவிட வேண்டாம். நீங்கள் செய்யும் தருமமும் தொண்டும் உங்கள் நலனிற்காக உங்கள் ஆன்ம முன்னேற்றத்திற்காக நீங்கள் செய்து கொள்வதே அன்றி அரங்கனுக்கு செய்வதாக எண்ணிவிடாதீர்கள்.
அரங்கன் ஞானிகள் எங்கள் தலைவன். ஆறுமுகப் பெருமான், அகிலத்தையே காக்கும் வல்லமை உடையவன். அவன்தனை நீங்கள் காப்பதாக எண்ணி கற்பனை செய்து விடாதீர்கள். தன் அருள் பேராற்றல்தனை உண்மையில் அரங்கன் வெளிப்படுத்தினால் இந்த அகிலமே தாங்காதப்பா, பெரும் பிரளயமே ஏற்பட்டுவிடும். ஆதலின் அகில உயிர்களை காத்திடவே வந்திட்ட அரங்கன் அமைதி கொண்டான் ஆறுமுகனான தம்மை மறைத்து அகிலத்தோர் அணுகிட எளிய வேடம் தாங்கியே.
அகில நெருப்பு தொட்டால் சுடும் அரங்க நெருப்பு தொடாமலேயே சுட்டுவிடும். எச்சரிக்கை! எச்சரிக்கை! அரங்கனிடம் பணிந்து போற்றி திருவடி நிழல் சார்ந்து கடைத்தேறிட முடியாவிட்டாலும் பரவாயில்லை.
அதைவிடுத்து அகிலாண்டகோடி பிரம்மாண்ட நாயக ஆறுமுக அரங்க ஞானக்கனலை தவறான எண்ணத்துடன் தீண்டி வீடாதீர்கள். மிகுந்த பாதிப்பிற்கு உள்ளாவீர்கள் அரங்கரை அலட்சியமாய் எண்ணி ஏதேனும் செய்து விட்டால் செய்தவர் தமக்கு வினைகள் அளவிறந்து சேருவது மட்டுமன்றி அவர்தம் குலமே நாசமாகும்.
ஆதலின் அரங்கன் திருவடிக்கு பணிந்து பயபக்தி கொண்டு நடந்து, தோற்றம் கண்டு சாதாரணமாய் எண்ணாமல் சாட்சாத் பரப்பிரம்மமாய் சுத்தஞானியாய் ஆறுமுகனாய் கண்டிப்பாக எண்ணியே வணங்கிடல் வேண்டும். இயலாவிடில் அமைதியாக சென்று விடுங்கள். அரங்கனை துவேசம் செய்திட எண்ணினால் விளைவுகள் தம்மை யாரும் சிந்திக்கக் கூட இயலாது.
உத்தமமாய் உண்மை உரைத்தேன் உலகோரே! பாவத்தின் சாகரம் தன்னிலே வீழாது காத்திடவே குதம்பையன் யான்.
ஆதலின் அரங்க நிந்தனை கொள்ளாது இவ்வுலகினிலே அவரவரும் அமைதியினை மிகுதியாக கடைப்பிடித்துமே அனைத்தும் அரங்கன் செயல் என்றே எண்ணி நடந்து தீய குணங்களும் துர்சிந்தனைகளும் தம்முள் தோன்றா வண்ணமே நடந்து சிவராஜயோகி அரங்கன் நிழலில் அகலாது தொண்டுகள்தனை பயபக்தியுடன் மனம் ஒன்றி மனம் உருகி செய்து தினம்தினம் இடைவிடாது செபதபங்களில் இருந்திட, இருக்கின்ற அவரவர்களை நவகோள்களின் நாயகர்களும் அவர்கள் தம் ஆசியினை சுத்த சன்மார்க்கவாதிகளாய் உள்ள அவர்தமக்கு அருளிக் காப்பார்கள்.
மருளாகிய மாயையுள் சிக்கி தடுமாறுகின்ற மக்களே காலம் இல்லை! யுகமாற்றம் விரைந்து வருகிறது, காத்திருக்காது காலம், விழித்து எழுங்கள், விரைந்து வாருங்கள், நேரம் உள்ளபோதே அரங்கன் திருவடியை பற்றிட முயற்சியுங்கள். அன்பிற்கு மட்டுமே மனமிரங்கும் அரங்கனை அன்பினால் தொழுது அவனருளை பெற்று உயர்ந்திடுங்கள். மரணமில்லாப் பெருவாழ்வு அரங்கனால் படிப்படியாக கிட்டிடப் பெறுவீர்கள் என அரங்கனியல்பு உரைத்து அரங்கதரிசனம் சாபவிமோசனம் அரங்க நிந்தனை குலச்சாபம் என்பதையும் அன்பரும் மக்களும் அறிந்திட உண்மை உரைத்து ஞானசூட்சும நூல் கூறுகிறார் மகான் குதம்பைச்சித்தர்.
-சுபம்-
No comments:
Post a Comment