Contact தொடர்பு

உலகமக்கள் நன்மைகருதி சித்தர் சுவடிகள்

Friday, 19 August 2016

சொல்லுவோம் முருகன் நாமத்தை! வெல்லுவோம் வினைகளை!

முருகா என்றால்,


இளமை நிலையாமை, செல்வம் நிலையாமை, உடல் நிலையாமை என்பன பற்றி அறிந்து உணரலாம்.

நாம் பெற்ற இந்த இளமை என்றும் நிலையானது அல்ல என்றும் இந்த இளமை காலத்தால் அழியக்கூடியது என்றும் அந்த இளமை உள்ளபோதே நம்மைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்ற உண்மை அறிவு முருகனருளால் நம்முள் தோன்றி இளமை உள்ளபோதே என்றும் மாறா இளமை கொண்ட அருட்கடவுள் முருகப்பெருமான் திருவடியைப் பற்றி ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ள வேண்டும் என்ற பேரறிவும் ஆறுமுகனார் தம் திருவடிப் பற்றிட ஆர்வமும் முயற்சியும் உண்டாகி என்றும் மாறா இளமை பெற்ற அந்த ஆறுமுகனார் பெற்றிட்ட அந்த அற்புத வாய்ப்பை தாமும் பெறவேண்டுமென்ற ஞானஅறிவு தோன்றி ஆன்மாவினில் எழுச்சி உண்டாகி ஞானத்தேடலை தோற்றுவிக்கும்.

ஞானத்தேடலின் முடிவாக ஞானவான் முருகனே இதனை அளிப்பவனென்றும் அவனடிப் பற்றினாலன்றி அழியும் இளமையை அழியாமல் காக்க இயலாதென்பதனை உணர்ந்து என்றும் அழியா இளமையை பெற ஞானபண்டிதனின் ஆசியை பெற்றுயர முயற்சிகளை செய்வார் முருகனருள் பெற்றோர்.

செல்வம் என்பது ஓரிடத்திலும் என்றும் யாவரிடத்தும் நிலையாய் இருப்பதில்லை என்ற உண்மையை உணர்வார்கள்.

செல்வம் என்பது ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ள நாம் முன்சென்ம புண்ணியத்தால் நமக்கு கடவுளால் அளிக்கப்பட்ட கொடை என்றும் அந்த செல்வம் காலத்தால் நம்மைவிட்டு ஒரு நாள் சென்றுவிடும் என்றும், நிலையற்ற செல்வத்தை நம்முடனே நிலைப்படுத்த அந்த செல்வத்தை பயன்படுத்தி ஏழை எளியோர்க்கும், இயலாதோருக்கும் தரும அறப்பணிகளாய் செய்து நிலையில்லாத செல்வத்தை என்றும் மாறாத பிரபஞ்சமே அழிந்தாலும் அழியாது நம்மை தொடர்ந்து உடலை ஆன்மா மறந்து உடல்விட்டு உயிர் பிரிந்தாலும் ஆன்மாவை தொடர்ந்து வந்து மீண்டும் மீண்டும் பிறவிதோறும் நம்மை தொடரும் தரும ஆற்றலாய் மாற்றிக் கொள்ள வேண்டுமென்ற பெரும் சிறப்பறிவு முருகனை வணங்க வணங்க அவர்தம்முள் தோன்றும்.

தொடரும் தரும ஆற்றல் துணை கொண்டு நிலையற்ற செல்வத்தை நிலையான பெருஞ்செல்வமாம் முருகனருளாய் மாற்றியே முருகன் திருவடி திருத்தொண்டிற்கே ஒப்புவித்து முருகனருள் என்ற பெருஞ்செல்வத்தை பெற்று என்றும் மாறா அருட்செல்வமாம் முருகனருளை பெறுவதே இந்த செல்வத்தின் பயன் என்றுணர்ந்து ஆறுமுகனார் திருவடிக்கே யாம் பெற்ற செல்வமும் வாழ்வும் என்றே அவனது திருவடிக்கே சரணாகதியாகிடும் அற்புதமான ஞானமும் அவர் தம்முள்ளே தோன்றி ஆறுமுகனருளாலே ஆறுமுகன் திருவடிப்பற்றி செல்வத்தின் துணைகொண்டு திருப்பணிகள் செய்து திருவருள் பெற்று நிலையான பேரின்ப வாழ்வை பெற்றுயரும் வாய்ப்பினை முருகன் திருவடிக்கே சரணடைந்து பெற்றிடவும் வழிவகை செய்யும் முருகன் நாமமே என்றுணர்யது முருகன் திருவடி பற்றிட தூண்டிடும் முருகனின் பக்தியின் சக்தி.

யாக்கை நநிலையாமையாகிய இந்த உடம்பை பற்றிய உண்மை ஞானம் உண்டாகும். நாம் பெற்ற இளமையும், செல்வமும் நிலையற்றது என்றுணர்ந்து அப்பன் ஆறுமுகன் திருவடிக்கே சரணாகதி அடைந்திட அடைந்திட நாம் பெற்ற இந்த தேகமும் ஒரு நாள் அழிந்தே போகும். என்றும் அழியக்கூடிய இந்த தேகத்தின் உதவியால்தான் அழியாத தேகத்தை பெறமுடியும் என்றும் உணர்வார்கள்.


முருகன் அருளால் முருகனின் மீது செலுத்திய பக்தியின் ஆற்றலால் முருகநாமத்தின் சக்தியால் அவர் தம்முள்ளே அந்த முருகனே உண்மை அறிவை தூண்ட தூண்ட ஞானஅறிவின் தூண்டல்தனை பெற்ற அவரெல்லாம் அழியக்கூடிய இந்த தேகத்தின் உதவியால் அழியாததேகம் பெற்றிட என்றும் மாறா இளமையும், எல்லையில்லா பேராற்றலும், ஞானத்தின் தலைவனாயும் உள்ள ஞானபண்டிதனாம் முருகன்தான் நம்மைச் சார்ந்து அழியும் இந்த தேகத்தை அழிவற்ற ஞானதேகமாக தோற்ற தேகமான இந்த தூலதேகம் சார்ந்து கசடு நீக்கி அழியும் தேகத்தை அழியாத ஒளி பொருந்திய சூட்சும தேகமாக மாற்றிடுவான் என்றுணர்ந்து அந்த ஆறுமுகனார் வருகைக்காக இந்த மும்மலக் குற்றமுடை கசடான இந்த தேகம் கடைத்தேறிட அளவிலா பக்தியையும் அளவிலா தர்மத்தையும் செய்திட முனைந்து ஞானவழிதனிலே அவனருள் பெற்று சென்றிடுவார்கள் முருகனருளால்.

முருகன் அருள் கூட கூட ஒரு காலத்திலே முன்செய்த தருமமும் தொண்டும் உடன்வர முருகன் அருள் துணைபுரிய முருகனே தயவாய் மாறியே தேகம்தனை மாற்றி ஒளிதேகம் தந்திட பிறவா நிலையும் பெற்றுயர்வார்கள் முருகன் பக்தியின் ஆற்றலினால்.

இளமை நிலையாமை உணர்ந்து காலம் உள்ளபோதே முருகனை பூசித்தும் தொண்டுகள் செய்தும் செல்வம் உள்ளபோதே தர்மங்கள் செய்து அழியா அருள் செல்வத்தையும் என்றும் அழியா புண்ணியத்தையும் பெற்று அழியக்கூடிய இந்த தேகத்தை அழியாத தேகமாக ஆக்கிக் கொள்ள வேண்டுமென்ற உண்மை பேரறிவு முருகபக்தியால் மட்டுமே பெறமுடியும்.

முருகா முருகா முருகா என்றே மனம் உருகி போற்றிடுங்கள் முருகனை. முருகனருளால் முருகனாக உணர்ந்து முருகனாகவே ஆகிவிடலாம் முருக பக்தியினாலே!


முருகன் திருவடியை போற்றுவோம்!
முக்தியும் சித்தியும் பெறுவோம்!
வாழ்க முருக நாமம்! வளர்க முருகன் புகழ்!!

அனைத்துமானாய் நீயே முருகா! 
வந்ததும் நீயே தந்ததும் நீயே! வாழ்வதும் நீயே!
வாழவைப்பதும் நீயே!
எல்லாமும் ஆனாய் எம்பெருமானே!
காப்பாய் எம்மை கருணைக்கடலே!
கடைத்தேற்றுவாய் அருள் தயவே!
உமதடிக்கே எம்மை ஆளாக்கிடுவாய் அருட் கருணையே!
உண்பதும் உடுப்பதும் நீயே ஆவாய்!
நாடுவதும் தேடுவதும் நீயே ஆவாய்!
கூடுவதும் குழைவதும் நீயே ஆனாய்!
உண்மை உரைப்பதும் நீயே ஆனாய்!
உத்தமனாய் ஆக்குவதும் நீயே ஆவாய்!
உன்னடி பற்றிட உறுதுணை நீயே ஆவாய்!
சிந்தையும் நீயே ஆவாய்!
செயலும் நீயே ஆவாய்!
சொல்லும் நீயே ஆவாய்!
சொல்ல வைப்பதும் நீயே ஆவாய்!

எல்லாமும் ஆகியே எம்மை ஆட்கொண்டருள் எம்பெருமானே முருகா! முருகா! முருகா! ஞானபண்டிதா! சற்குருவே! தயாநிதியே! தற்பரமே! பொற்பதமே! காத்தருள் புரிவாய் அன்பே! ஆறுமுகனே என்று போற்றிடுங்கள் முருகனை! பெற்றிடுங்கள் பேரின்ப லாபத்தை! கந்தன் என்றபோதே வந்தேன் என்றருள்வான் முருகன்! விடாதீர்கள் முருகனை! ஓடும் முருகனை உண்மை உள்ளன்பால் பிடித்து வையுங்கள்! 

சொல்லுவோம் முருகன் நாமத்தை! வெல்லுவோம் வேற்படை கொண்டு வினைகளை!
-சுபம்-

மகான் ஆறுமுக அரங்கமகாதேசிகர் சுவாமிகள்

No comments:

Post a Comment