முருகா என்றால் :
நடுநிலை நின்று நலமாய் வாழ அருளுவான் முருகன்.
நடுநிலை என்பது நீதிக்குட்பட்டு நடுநிலை நின்று வாழ்வது என ஒரு பொருள்படும்.ஆயினும் நடுநிலை என்பது உடல் சார்ந்தியங்கும் இடது கலையாகிய சுவாசத்திற்கும் ஆன்ம இயக்கம் சார்ந்த வலது கலையாகிய சுவாசத்திற்கும் இடையே நின்று இடது வலது கலைகளை சமன் செய்திட அந்த சுவாசம் நடுநிலையாகிய புருவமத்தியின்கண் உள்ள பத்தாம் வாசலாகிய நடுவன் என்று சொல்லப்படுகின்ற சுழிமுனை தனிலே பிரவேசித்து செல்லும் நிலையைக் குறிக்கின்றதாகும்.
அதுவே நடுநிலை நின்றலாகும். உடல் சார்ந்து சுவாசம் இயங்க அதாவது இடதுகலை மிகுதியாக இயங்க இயங்க உடல் சார்ந்த இயக்கங்கள் அதிகமாகி உடல் சார்ந்த காமவிகாரங்கள் அதாவது உடற்பற்று மிகுந்து மிகுந்து அளவிலாத பொருள்பற்றும், காமப்பற்றும் உண்டாகி அவனைப் பாடாய்படுத்தி விட்டு அவனை நரகத்தில் தள்ளிவிடும்.
வலது கலையாகிய வலதுகலை மிகுந்து இயங்க இயங்க அது ஆன்மாவைத் தாக்கி ஆன்ம இயக்கம் உடல் சக்திக்கு மிகுந்து இயங்க இயங்க, ஆன்ம குற்றமாகிய கோபமாகவும் ஆணவமாகவும் மாறி வெளிப்பட துவங்கும். அதாவது வலதுகலை, உடல் உஷ்ணம்தனை அபரிமிதமாக ஏற்றி அதன் உஷ்ணம்தனை உடல் தாங்காது கோபமாக மாறிவிடும். அந்த உஷ்ணமே மூளையைத் தாக்கி தன்னைக் கட்டுப்படுத்த இயலாத அளவிற்கு கோபமாக மாறி செயல்படும்.
ஆதலின் இந்த இருகலைகளையும், கலைஞானம் கற்ற சான்றோர் தமை நாடிச்சென்று சமன் செய்திடல் வேண்டும் என்ற உணர்வு முருகப்பெருமானாரை வணங்க வணங்க மிகும்.
இடது வலது கலைகளை சமன் செய்து நடுவாகிய சுழிமுனை கதவு திறந்து சுழிமுனை பிரவேசம் செய்தாலன்றி ஆன்மாவைப் பற்றியுள்ள கோபம் நம்மை விட்டு அகலாது என்ற உணர்வும் உணரப் பெறுவர்.
எவனொருவன் சுழிமுனைதனை திறந்து வாசிவசப்பட்டு வெற்றி பெற்றானோ அவனது திருவடியை பற்றினால்தான் கோபத்தினையும், பற்றுகளையும் தம் கட்டுக்குள் கொண்டு வரமுடியும் என்ற உண்மை அறிவும் வரும்.
குணமே வடிவமாய், அருளே வடிவமாய், அன்பே வடிவமாய், தயவே வடிவமாய், நிற்கின்ற ஞானத்தலைவன் முருகப்பெருமான் திருவடியைப் பற்றிட பற்றிட குணக்கேடுகள் தம்மை விட்டு நீங்கும் என்பதை அறிந்து ஆறுமுகனார் திருவடியைப் பற்றி தொழ தொழ அவர்தம்முள்ளே ஆறுமுகனார் அருள்ஒளி தோன்றிட கோபத்தின் தீவிரம் குறையும், பற்றின் வேகம் குறையும்.
முருகன் மீது பக்தி கொண்டு பக்தி கொண்டு பக்தி விசுவாசமுள்ள பக்தனாகி வேண்டுதல், வேண்டினாலும் அவரவர் வினைக்குற்றத்தின் மிகுதியினால் அவரவர் வேண்டுகோள் நிறைவேற சிலசமயம் காலதாமதம் ஆகலாம். ஆயின் தாமதம் தாளாத பக்தர்கள் அகிலாண்டகோடி பிரம்மாண்ட நாயகன் முருகனை ஏகவசனத்தில் விளித்து முருகா உனக்கு கண்ணில்லையோ? உம்மையே நாடிய பக்தன் நான், எனது துன்பம் களைந்திடாமல் அமைதியாய் ஏன் இருக்கிறாய்? என்றெல்லாம் பக்தி விசுவாசத்தில் தூற்றுவான். அவனது வசவுகளையும் மலர் மாலையாய் எண்ணி சிரித்து மகிழ்ந்து இன்முகம் கொண்டு ஏற்று அருள்புரிவான் ஆறுமுகன். அத்தகு தாயன்பு உள்ளவர்தான் முருகன், கோபமே அற்ற குணக்குன்று. அந்த குணக்குன்று முருகன்தன் திருவடியைப் பற்றி அவன்தன் திருவடி நிழலிலே அடைக்கலம் புகுந்து கோபமெனும் கொடும் பாதகத்தின் தீவிரத்தினின்று தப்பி சாந்தமாக வாழுங்கள்.
முருகனருளாலே முருகன் திருவடியைப் பற்றுவோம்! முருகனருள் பெற்று சாந்தமான வாழ்வை வாழ்வோம்!!
மகான் ஆறுமுக அரங்கமகாதேசிகர் சுவாமிகள்
No comments:
Post a Comment