Contact தொடர்பு

உலகமக்கள் நன்மைகருதி சித்தர் சுவடிகள்

Friday, 19 August 2016

முருகா என்றால் புலால் உண்ணுவது பாவம் என்று உணர்த்தப்படும்

முருகா என்றால்

உயிர்க்கொலை செய்து புலால் உண்ணுவது பாவம் என்று உணர்த்தப்படும். ஒரு மனிதனுக்கு உணவு, உடை, தங்குமிடம் ஆகியவை கிடைப்பதில் ஏதேனும் இடையூறு ஏற்படுவதும் அப்படி கிடைத்தாலும் அவற்றை அவனால் நல்லவிதமாக அனுபவிக்க முடியாமல் போவதற்கும் காரணம் அவன் பிற உயிர்களை கொன்று தின்றதால் வந்த பாவமே என்பதை உணர்வார்கள்.

ஒருவன் பிறருக்கு அடிமையாய் இருப்பதும் காலம் முழுதும் அடிமை வாழ்வை வாழ்வதற்கும் காரணம் உயிர்களை இம்சித்து கொலை செய்ததால் வந்த பாவமே என்பதையும் உணர்வார்கள்.

உலகினில் ஒருவன் கடுமையான நோய்வாய்ப்பட்டு உணவின்றி உடுக்க உடையின்றி தங்க ஒரு இடமும் இன்றி அனாதையாக பசிப்பட்டினியோடு தெருவினில் அலைந்து நோய்வாய்ப்பட்டு ஒரு வேளை சோற்றிற்கே பிச்சை எடுத்து சாப்பிடும் அவலநிலை வருவதற்கு காரணம் அவன் முன் சென்மங்களிலே கடவுள் இல்லையென்று பேசியும் பாவபுண்ணியங்கள் இல்லையென்று பேசியும் பாவபுண்ணியங்கள் இல்லையென்றும் அனைத்தும் மனித முயற்சிதான் என்றும், தான் கடவுள் நம்பிக்கையினின்று பிறழ்ந்து போனதோடு நில்லாமல் தன்னை சார்ந்தவர்களது அறியாமையைப் பயன்படுத்தி கடவுள் நம்பிக்கையுள்ள அவர்களையும் கடவுள் நம்பிக்கை அற்றவர்களாக மாற்றி கடவுள் நம்பிக்கையை பாழ்படுத்தி உயிர்க்கொலை செய்து புலால் உண்டும் வாழ்ந்தவனே அவன் என்றும், அவன் இச்சென்மத்திலே கடவுளால் தண்டிக்கப்பட்டு இந்த ஜென்மத்திலே இப்படி சோற்றிற்கு ஆளாய் பறக்கும் பிச்சைக்காரனாக அனாதையாக தெருவில் திரிகிறான் என்பதை உணர்வார்கள்.

முருகா முருகா முருகா என்றே முருகனின் நாமம்தனை செபிக்கின்றவர்களெல்லாம் தெருவினில் இதுபோன்று கடவுள் சாபத்தினால் தண்டிக்கப்பட்டவர்களை பார்க்கும் போதெல்லாம் அவர்தம் செய்திட்ட பாவவினைகள் தமக்கு உள்ளுணர்வால் உணர்த்தப்பட்ட நாம் இன்றைக்கு நல்லவிதமாக வாழ்வது கந்தனின் கருணையே என்று மானசீகமாக முருகனின் திருவடியை தொழும் வாய்ப்பினை பெறுவார்கள், காத்தது கந்தபெருமானே என்பதையும் உணர்வார்கள்.


முன்சென்மத்திலே கந்தபெருமான் அருள்தனை பெற்றதாலே முருகப்பெருமானை வணங்கிந்தாலும், ஏழைகளுக்கு பசியாற்றுவித்தும், உயிர்க்கொலை தவிர்த்தும், புலால் மறுத்தும், தம்மால் இயன்ற அளவு பிறருக்கு உதவிகள் செய்தும் வாழ்ந்ததின் பயனே இச்சென்மத்திலே உண்ண உணவும் உடுக்க உடையும் தங்க இடமும் கிடைத்திருக்கின்றது என்பதை உணர்ந்து கிடைத்த இந்த வாய்ப்பினை நழுவவிடாது காப்பாற்றிக் கொள்ள வேண்டுமென்ற உணர்வு மேலோங்கும்.

ஆதலின் முருகன் அருளைப்பெற்று எந்த உயிர்க்கும் தீங்கு செய்யாத வாழ்வை மேற்கொள்ளும் வாய்ப்பையும், அன்னதானம் செய்வதற்கு வாய்ப்பையும் பக்தி செலுத்திட வாய்ப்பையும் முருகா முருகா முருகா என்றே மனமுருகி முருகன் திருவடியை தொழுதேற்றி பெற்றுக் கொள்ள வேண்டுமென்ற முழுமுயற்சியை மேற்கொள்வான்.

முருகனை வணங்க வணங்க அவர் தம்முள்ளே ஒருவன் படுகின்ற எந்த துன்பத்திற்கும் அவன் முன்சென்மங்களிலே செய்திட்ட பாவமே இச்சென்மத்திலே துன்பமாய் வருகின்றது என்பதையும், வந்த துன்பத்தினை போக்கி சுகமடைய இச்சென்மத்திலேயாவது புண்ணியங்கள் செய்திட வேண்டும் என்ற உணர்வும் பெறுவான், பெற்றே அவர்களெல்லாம் முருகனடியை தொழுது தொழுது முருகன் நாமம் செபித்து செபித்து முருகன் அருள் கூடிட வினை ஒழிந்து சுகமான வாழ்வை பெறுவார்கள்.

போற்றுவோம் முருகன் திருவடியை!
பெறுவோம் வினை நீங்கிய வாழ்வை!!

-சுபம்-

No comments:

Post a Comment