அகவேள்வியும் புறவேள்வியும்
யாகம் என்பது வளர்த்தல் என்பதாகும். யாகம் செய்து வளர்க்கப்பட வேண்டிய ஜீவகாருண்யமே அல்லாது நெருப்பை மூட்டி நெருப்பை வளர்ப்பது அல்ல. அதாவது மனிதனுள் உள்ள ஜீவதயவினை, தயவெனும் ஒளியினை, தயவெனும் ஆன்ம ஜோதியை வளர்ப்பதாகும். அதை விடுத்து புறத்தில் காணப்படுகின்ற எரிகின்ற நெருப்பான ஜோதியை எரியும் நெருப்பை பலவித பொருள் கொண்டு மேலும் மேலும் வளர்க்கின்றதான, செயல் யாகம் அல்ல.
ஆன்ம ஜோதியான ஆன்மா எனும் அணையா நெருப்பை, தீபத்தை மேலும் ஒளி பெறச்செய்வதான ஆன்ம யாகத்தை வளர்த்திட, ஓம் சரவண பவ எனும் அருட்சோதி வடிவினனான அந்த சுயஞ்சோதி பிரகாச பேரொளியாளன் முருகப்பெருமானின் மூலமந்திரத்தை செபிப்போம்.
நம்மைப்போலவே கடவுளால் படைக்கப்பட்ட அனைத்து உயிர்களிடத்தும் அன்பு செலுத்திடல் வேண்டும்.
உயிர்களை உடல் விட்டு நீக்கும் கொடும் கொலைபாதக செயலை செய்யாதிருத்தல் வேண்டும்.
உயிர்க்கொலை செய்து உடல்தனை உண்ணும் கொடும்பாவத்தை செய்யாதிருத்தல் வேண்டும்.
எந்த அளவிற்கு இயலுமோ, அந்த அளவிற்கு பிற உயிர்களுக்கு பசியாற்றிவித்து அவ்வுயிர்களுக்கு பாதுகாவலனாய் இருக்க வேண்டும்.
நமக்கு உற்ற விருந்தை உபசரிப்பதும், பிறரை மதித்து நடத்தலும் பிறர் குற்றத்தை பொறுத்தலும் அவர் நமக்கு செய்த குற்றத்தை மன்னித்து, விட்டுக்கொடுத்து அனுசரித்து செல்ல வேண்டும்.
எதிலும் பொது நோக்கமாய் இருத்தல்.
இவையனைத்துமே ஆன்மசோதி விளக்கம் பெறுவதற்கான செய்யப்படுகின்ற ஆன்ம வேள்வியாகிய யாகத்தினை வளர்க்கும் உபாயங்களாகும். இவையே ஆன்மசோதியை அருட்பெருஞ்சோதியாக மாற்றவல்ல சக்திகளாகும்.
வேள்வி, யாகம் என்பதே ஜீவதயவை பெருக்குவது ஒன்று மட்டுமேயாகும் என்பதை அறிந்து தெளியுங்கள்.
அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத்து உண்ணாமை நன்று.
- திருக்குறள் - புலால் மறுத்தல் - குறள் எண் 259.
நெய் முதலிய பொருள்களைத் தீயில் சொரிந்து ஆயிரம் வேள்விகள் செய்தலைவிட, ஒன்றன் உயிரைக் கொன்று உடம்பை தின்னாதிருத்தல் நல்லது.
நன்றாகும் ஆக்கம் பெரிதெனினும் சான்றோர்க்குக்
கொன்றாகும் ஆக்கம் கடை.
- திருக்குறள் - கொல்லாமை - குறள் எண் 328.
கொலையால் நன்மையாக விளையும் ஆக்கம் பெரிதாக இருந்தாலும், சான்றோர்க்குக் கொலையால் வரும் ஆக்கம் மிக இழிவானதாகும்.
- நன்றி மு.வரதராசனார்.
ஒரு உயிரைக் கொன்றால்தான் மோட்ச லாபம் கிடைக்கும் என்ற ஒரு நிலை வந்தாலும் மோட்ச லாபத்தை இழப்பார்களே தவிர ஒரு போதும் உயிர்க்கொலை செய்ய மாட்டார்கள் அறிவுடையோர்கள்.
இப்படி எந்தவொரு சூழ்நிலையிலும், உயிர்க்கொலை செய்யாது, புலால் உண்ணாது, ஜீவதயவே ஜென்மத்தைக் கடைத்தேற்றும் என்று முழுமையாக நம்பி ஆன்ம இலாபத்தை பெறுவதற்கு அடிப்படை ஜீவதயவு என்று உணர்ந்து ஜீவதயவின் தலைவனாம் ஜீவதயவுடை சோதி சொரூபனாம் முருகனை இடைவிடாது செபித்து ஆன்மாவை ஒளி பெற செய்வதே உண்மையான வேள்வி அல்லது யாகமாகும்.
முருகனை வணங்குவோம்
ஜீவதயவை பெருக்கிக் கொள்வோம்.
களைகளைந்த அருணகிரி களறிய அலங்காரமே
களை களைய உதவும் கருத்தே.
- சுபம்-
மகான் ஆறுமுக அரங்கமகாதேசிகர் சுவாமிகள்
No comments:
Post a Comment