முருகா என்றால் :
உடல் உயிர் தோற்றம் பற்றியும், அதனுள் மும்மலக்குற்றம் பற்றினதால் வந்த கேடுகள் பற்றியும் அதை நீக்க வழிமுறைகளும் உரைத்து மனிதனைப் பற்றிய பொறாமை, பேராசை, கடுங்கோபம், கொடுஞ்சொல் கூறுதல் ஆகியவற்றினின்று நம்மைக் காத்து கடைத்தேற்றுவான்.
ஆதியில் அகிலாண்டகோடி பிரம்மாண்ட அண்ட வெளி முழுதும் மிகமிகமிக பிரம்மாண்டமாய் பரந்து விரிந்து பரமாணுக்களால் ஆகி அணுக்களாய் பரந்து விரிந்து பிரம்ம நிலையில் அசைவற்று நின்றன. நின்ற அந்த பிரம்மாண்டமே திடீரென ஒருவித பேரியக்கதிற்கு உள்ளாயின. அந்த பேரியக்கத்தின் மூலாதாரமாக எல்லையில்லாது பரந்து விரிந்த பெருஞ்சோதி சுடரொன்று தோன்றியே விரிந்தது. அந்த ஒளிச்சுடர் தனின் ஈர்ப்பினாலே அண்டத்தினுள்ள அனைத்தும் கவரப்பட்டு மாபெரும் இயக்கத்திற்கு உண்டாயின.
இயக்கத்திற்கு உட்பட்ட அணுக்களெல்லாம் அவை அவை தன்மைக்கேற்ப ஒன்று கூடி ஒளியிலிருந்து காற்று உண்டானது. காற்று உண்டான உடன் நெருப்பு உண்டானது. அதன் தொடர்ச்சியாக நீர் நிலம் உண்டானது. இந்த காற்றையும், நெருப்பையும், நீரையும், நிலத்தையும் தாங்கி நின்றது ஆகாயமாயிற்று. ஆதலின் அணுக்களெல்லாம் ஒன்று கூடி இவ்விதமே பஞ்சபூதங்களாக பிரம்மாண்டமாய் பரந்து விரிந்து நின்றன. இவையெல்லாம் ஒன்று கூடி அதாவது பஞ்சபூதங்களான மண்ணும், நீரும், நெருப்பும், காற்றும், ஆகாயமும் என்றே அவற்றுள் ஒன்றென்றும் பிறிதொரு பூதத்தினை பல்வேறு பட்ட அளவில் பலவிதமாகவே கலந்து கலந்து கலந்து முடிவில் பல்லாயிரக்கணக்கான கோடி உடல்களாகவும், அதே பஞ்சபூதம் தனது கூறாய், ஆன்ம வடிவினதாகி அந்தந்த உடல்களையும் சார்ந்திட்டது.
ஆதலின் உடலும் உயிரும் ஏககாலத்திலேதான் தோன்றியது. இது தவிர பஞ்சபூதங்களெல்லாம் ஒன்று கூடிட்டாலும் ஆன்மா இயங்க தகுதியற்றவையெல்லாம் ஜடப்பொருளாகவே மாறிவிட்டது.
அப்படி தோன்றியவைகள் அனைத்தும் ஏககாலத்திலே ஒரு நொடிப் பொழுதினிலே சிந்தனைக்கு எட்டாத வகையினிலே அதிஅதிஅதி விரைவாக தோற்றியது ஒரு சக்தியாம். அந்த சக்தியே இயற்கை அன்னை ஆவாள்.
அந்த இயற்கை அன்னை அனைத்தையும் ஒரு விளையாட்டு போல நொடிப்பொழுதில் படைத்தனள். அனைத்தும் அவளது விதிக்கு அவளது கதிக்கு உட்பட்டு தோன்றி வளர்ந்து அழிந்து பின்தோன்றி வளர்ந்து அழிவதாய் அதனதன் உள்ளேயே ஒரு தனி இயக்கம் தனிலே சிக்கின்று தொடர்ந்து இயங்கி வரலாயின.
ஒவ்வொரு உயிரும் உடல் சார்ந்து இயங்க இயங்க அவை அவை இயக்கத்தினால் உண்டான செயல்களும் அதன் விளைவுகளும் அதன் பிரதி வினைகளும் அந்த உடல் சார்ந்து அந்த உடலை இயக்கிய ஆன்மாவினிலே தங்கலாயிற்று. இப்படி தங்கிய ஆன்மா தனது தூய்மை தன்மையினின்று மாறுபட்டு வினைக்கு உள்ளாயிற்று.
தோன்றிய அனைத்து உயிர்களிலே மனித தேகம் சார்ந்திட்ட உயிருக்கு மட்டும் அந்த உடம்பின் பயனை உணர்ந்து எந்த இயற்கையால் தோற்றுவிக்கப்பட்டதோ அந்த இயற்கையை அந்த இயற்கையின் தயவினால் வெல்லும்படியானதொரு அறிவை தந்தது.
இயற்கையை வெல்லுகின்ற உபாயமாய் அமைந்த அற்புத கருவியே மனித தேகமாகும். ஆன்மா இயற்கையின் மற்ற தேகங்களை சார்ந்த பொழுது அந்தந்த தேகத்தினை ஒத்து, ஒன்று முதல் ஐந்து வரையிலான அறிவினைப் பெறும் மனிததேகத்தை சார்ந்திட்டதால்தான் நல்லது கெட்டதை பிரித்தறிந்து கடைத்தேறிட ஏதுவான ஆறாம் அறிவினையும் பெறுமாறு அருள் தந்தது.
அந்த ஆறாம் அறிவின் பயனால் தோன்றிய காலத்திலிருந்து தான் இயங்கிட இயற்கை அவனுள் பாசமெனும் ஆசையை அவன் வாழ கருணையாய் வைத்தது. அந்த ஆசையாகிய காமம் அல்லது ஈர்ப்பு இல்லாவிடின் உயிர்கள் வாழ்வதினிலே நாட்டமின்றி ஜடநிலைக்கு வந்துவிடும். ஆதலின் வாழ்வதற்கு தேவையானவற்றை அவன் பெற்று தனது வாழ்வை சுகமாக்கிக் கொள்ள அவனுக்கு தேவையான உணவு மற்றும் இதரப் பொருள்களை சேர்க்க விருப்பத்தை உண்டாக்கிற்று இயற்கை.
மனிதனுக்கு மட்டுமே இந்த குணமாம் மற்றைய ஜீவராசிகளெல்லாம் சேர்த்து வைப்பதற்குரிய அறிவை இயற்கை அளிக்கவில்லை. ஒரு சில உயிர்கள் மட்டும் வாழ்வை வாழ எதிர்காலத்திற்காக தமது இனம் வாழ சேமித்து வைக்கும். மற்றைய பெரும்பாலான உயிரினங்கள் சேமிக்காது. பசி தோன்றும் போது கிடைத்ததை தின்று வாழும், கடைசியில் இறந்து விடும்.
ஆனால் ஆறறிவு படைத்த மனிதன், தன் அறிவைக் கொண்டு செயல்பட்டு காலத்திற்கும் உணவிற்காக அலையாமல் பலநாட்களுக்கு தேவையான உணவை பாடுபட்டு சிலநாட்களில் சேர்த்து வைத்து பின் அதனை கொண்டு பல நாட்கள் வாழலாயினன்.
இதன் பயனை ருசிகண்டு மனிதன் சேர்த்து வைப்பதற்கு பல்விதமாய் பாடுபடுவதைவிட பிறர் சேர்த்து வைப்பதை அபகரிப்பது எளிதாய் எண்ணி பிற உயிர்கள் சேர்த்து வைத்திருப்பதையும், பிற மனிதர் கூட்டம் சேர்த்து வைத்த பொருட்களையும் உடல் பலம் கொண்டு போராடி அடைந்திடல் ஆயினன்.
உயிர் வாழ இயற்கை அளித்த அந்த ஆசையாகிய அற்புத உணர்வு பேராசையாய் மாறிட வினைக்குற்றங்கள் மிகுந்து அந்த ஆன்மாக்களை பற்றலாயின. பற்றின வினை மீண்டும் மீண்டும் தோன்றி தோன்றி ஆசை வலைக்குட்படுத்தி அவனை மயக்கத்தில் ஆழ்த்தி பேராசையை தூண்டி பாவியாக்கிக் கொண்டே வந்து தொடர் பிறவிக்கு காரணமாக்கி துன்பத்திலாழ்த்தி பழிவாங்குகிறது.
இப்படி பேராசையே பிறவிக்கு காரணமாக அமைவதை கண்டுபிடித்த முதல் ஞானவான் ஞானபண்டிதனாவார். அவரே பேராசை, பொறாமை, கடுங்கோபம், கொடுஞ்சொல் ஆகிய குற்றங்களை தெளிவுற உணர்ந்து பற்றற்ற நிலை நின்று பேராசை ஒழித்து கடைத்தேறினவன் ஆவான்.
பற்றற்றவன் துணையினால்தான் பேராசையை நாம் ஒழித்திட முடியும். அவனால்தான் பேராசையைக் கட்டுக்குள் கொண்டு வரமுடியும் என்பதை முருகனருளால் உணர்ந்து அவன் தாள் போற்றிட முருகனருளால் பேராசை வென்று அவன் திருவடிக்கே ஆளாகி கடைத்தேறலாம்.
பற்றற்ற பரமன் முருகன் திருவடி பற்றுவோம்!
பற்றுகளை விட்டு முருகன் திருவடிக்கு அடைக்கலமாவோம்!!
.............
மகான் ஆறுமுக அரங்கமகாதேசிகர் சுவாமிகள்
No comments:
Post a Comment