யோகப்பயிற்சிகளாலோ, உணவுக்கட்டுப்பாட்டினாலோ, புலன் அடக்கத்தினாலோ அவரவர்க்கு உண்டான ஊழ்வினையாம் கர்மவினையாம் தீவினைகள் தம்மை தொடர்ந்து வருவதினின்று தப்பிக்க முடியாது என்றும் அவை நம்மை தொடர்ந்து வந்து நம்மை துன்பத்தில் ஆழ்த்திவிடும் என்றும் என்ன முயற்சி செய்திட்டாலும் ஊழ்வினையின் தாக்கத்திலிருந்து நாம் விடுபட முடியாது என்றும் உணர்ந்திடவும் கூடும்.
உணர்ந்த அவர் இந்த தேகம் எத்தனை பயிற்சி செய்தாலும், எத்தனை பாடுபட்டாலும், இயற்கை நியதிக்கு உட்பட்டு வீழ்ந்துதான் போகும். அழியா வரம் அருளும் தயாநிதிக் கடவுள் தன்னிகரில்லா தனிப்பெரும் ஞானத்தலைவன் ஞானமளிக்கும் எங்கள் ஞானபண்டிதன் முருகப்பெருமானார் திருவடி திருத்துணையினால்தான் கர்மவினைதனின் கொடுமையிலிருந்து தப்பி கடைத்தேறி ஞானம் பெற்று பரிணாம வளர்ச்சியின் சுழற்சியில் இருந்து விடுபட்டு ஜென்மத்தைக் கடைத்தேற்றிட அந்த முருகப்பெருமானின் திருவடியை உளம் உருக ஊன் உருக உளமார மனம் உருகி பூசித்து அவனருள் பெற்றாலன்றி இயலாது என்றே உணரலாம்.
உணர்ந்துமே முருகன்தன் திருவடி முன்னே அவரவரும் தம் தம் உள்ளம், உடல், பொருள், ஆவிதனை சரணாகதியாக அவர்தம் திருவடிக்கே கையினிலே நீரேந்தி மூன்றுமுறை நீரினால் மானசீகமாக தர்ப்பணம் செய்தே அவர்தம் திருவடிமுன்னே வீழ்ந்து வணங்கி, “முருகா நாயினும் கடையேனாகிய என்னையும் ஒரு பொருட்டாக மதித்து கனிவு கொண்டு என்னை உமது அருட்கண் பார்வையால் உற்று நோக்கினால் அந்த கருணைப் பார்வையே எனக்கு சிறப்பறிவையும் நல்லுணர்வையும் எனக்கு தந்து என்னை கடைத்தேற்றும் என்பதை நான் உணரவும், உணர்ந்து உமதருளால் உனது திருவடியைப் பற்றி பூசித்து ஆசி பெறவும் நீரே எமக்கு அருள் செய்திடல் வேண்டும். தொடர் பிறவிக்கு காரணமான உடம்பை பற்றியும் உயிரைப் பற்றியும் அவை கர்மவினைகளினால் சிறைப்பட்டு மீள முடியாமல் தவிப்பதற்கு காரணமான உடல் மாசைப் பற்றியும், உயிர் மாசைப் பற்றியும் அறியவும், அறிந்து அந்த உடல் மாசையும் உயிர் மாசையும் வெல்லுதற்கு விடா முயற்சி கொண்டு முழுமையாக விடுதலை அடையும் வரையிலும் தளராத உறுதியும் ஆற்றலையும் தந்தருள வேண்டும்.
நீரே எமக்கு சிந்தையும் செயலும் சொல்லுமாய் இருந்து எம்மை வழிநடத்தி யான் மேற்கொண்ட முயற்சிகளுக்கு சக்தியாய் துணையிருந்து எம்மை சார்ந்து எமது வினைகளிலிருந்து எம்மைக் காத்து இரட்சித்து அருள் புரிந்து எனது ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ள உறுதுணையாய் வந்தருள் புரியுங்கள் அருளரசே! எம்மை காத்தருள் புரியுங்கள் என்றெல்லாம் அவனருளாலே அவன்தாள் வணங்கி ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ள வாய்ப்பையும் பெற்று முருகன் திருவடி வணங்கி ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ள உறுதியும் நம்பிக்கையும் பிறக்கும்”
முருகனடியைப் பற்றி முருகனருள் பெற்று முழுமை விடுதலை பெற முயல்வோமாக!
-சுபம்
No comments:
Post a Comment