மகான் சட்டநாதர் ஞான சூட்சும நூல்
சத்திய ஜோதியே அரங்கராசா
சத்திய கீர்த்தியே தவராசா
சத்திய மூர்த்தியே சற்குரு தேவா
சன்மார்க்க யோகியே ஞான தேசிகா
தேசிகாய நமஹ என்று சொல்ல
தீவினை அகன்று மாற்றமும்
தேசிகாய நமஹ என்று சொல்ல
தேவைகள் யாவும் நிறைவேற்றி அருளும்
அருளும் அரங்கா வாழ்க வாழ்க
அளவிலா தருமராசனே வாழ்க
அருளும் மகாயோகியே வாழ்க
அண்ணலே வாழ்கயென வாழ்த்தி
உரைக்கவே சைவ வழி நடந்து
உண்மைபட வாழும் மக்களும்
கரையேற அரங்கன் நிழல்
கண்டாலே போதும் மாற்றமுண்டு
உண்டான புலன் வழி அல்லல்
உடன் அவர்களை விட்டகன்று
கண்டிடுவர் சகலவழி தேற்றம்
கருணை மிகுதீட்சை அரங்கனிடம் ஏற்க
ஏற்கவே எவ்வகை செயலும்
ஏற்றமே தடைகள் ஏது
உற்றதொரு சகல சேவைகளும்
உயர்வாய் செய்து சிறப்பர்
சிறப்பறிவு ஊட்டும் அரங்கனே
சிறந்த கலியுக தவசியே
சிறப்பு வழி காட்டும் அரங்கனே
சிவயோகம் காட்டும் ஞானியே
ஞானி அரங்கன் பெருமையை
ஞான அவதார சூட்சுமத்தை
நானிலத்தில் மக்கள் அறியவே
ஞான சூட்சும நூலில் உரைக்கின்றோம்
உரைக்கவே ஆசானை எண்ணி
உருகி மனதுள் தியானிக்க
குறையிலா எப்புலன் வழியும்
குவலயத்தில் அணுகி அருள் புரிவார்
அருள் பெற்று ஆசான் பெருமை
அகிலமெங்கும் பரப்பி மக்கள்
இருள் நீக்கி ஞான ஒளிகண்டு
இனி பிறவா பேரின்பகதி அடைவீர்
சிறப்பறிவினை மக்களுக்கு அளித்து முன்னேற்றும் அரங்கனே இவ்வுலகின் கலியுகத்தின் மிகச்சிறந்த ஞானியாவார்.
சிறப்பான வழிகளை மக்களுக்கு எடுத்துக் கூறுபவர் மகாஞானி அரங்கனே ஆவார். சிவயோகத்தையும், அதன் தன்மையையும் அதன் சூட்சா சூட்சுமங்களையும் உணர்த்தி கடைத்தேற்றும் சிவயோக ஞானி அரங்கனேயாவார். உயர் ஞானமளித்து உன்னதநிலை கொண்டு சென்று காத்தருள் புரிகின்ற அரங்கரின் பெருமையை அவர் இவ்வுலகினிலே தோன்றிட்ட அவதாரத்தின் இரகசியத்தை ஆறுமுகனாய் அமர்ந்து அரங்கனாய் வெளிப்படுகின்ற விதத்தை அரங்கரின் இரகசியத்தின் பொருளை இவ்வுலக மக்களெல்லாம் தெளிவுடன் அறிந்து தெளிந்து அரங்கனே முருகனென்று உணரவும் அரங்கன் திருவடியைப் பற்றி கடைத்தேற்றிடவே எண்ணியே ஞான சூட்சுமங்களை உலகறிய உரைக்கின்றோம் ஞானிகள் நாங்களெல்லாம்.
உயர் ஞானமளித்து காக்கும் உத்தம மகாஞானயோகி ஆறுமுகனார் அவதாரம், சற்குருநாதர், சொற்குருநாதர், ஞானகுருநாதர், யோககுருநாதர் அரங்கமகா தேசிகனை இவ்வுலகின் எந்த இடத்திலிருந்தும் மக்கள் மனதுள் உருகி உருகி தியானிக்க, தியானிக்கும் அம்மக்கள் விரும்புகின்ற எந்த துறையாயினும் சரி எந்த விதமானாலும் சரி அவரவர் விரும்பிய வண்ணமே அந்தந்த துறைகளிலே வெற்றியையும், அருளையும், உடன் அணுகி அருள் புரிவார் அரங்கமகா தேசிக தாய்.
அத்தகு உயர் ஞான பெருந்தாய் அரங்கன் பெருமைதனை உலகெங்கும் பரப்பி மக்கள் தனது இருள் நீங்கிடும் படியாகவே அரங்கனருள் உலகெங்கும் கூடிடும் வகைதனிலே பரப்பிடுங்கள்.
உலகினில் அரங்கனின் அருள்பெருகி பெருகி ஞானம் பரவி மக்கள் அறியாமை இருள் நீங்கி ஞானஒளி கண்டு இனி பிறவா பேரின்பநிலையை அடைந்து வெற்றி பெறுவீர்கள் என கூறுகிறார் தமது தியான சூட்சுமநூல் மூலம் மகான் சட்டநாதர்.
-சுபம்-
No comments:
Post a Comment