Contact தொடர்பு

உலகமக்கள் நன்மைகருதி சித்தர் சுவடிகள்

Tuesday, 30 August 2016

ஞானம்பெற தலையாய குணம் ஜீவதயவு

முருகா என்றால் :



சாதாரண மனிதன் ஞானியாகுவதற்கு முதல் தடையாய் இருப்பது உயிர்க்கொலை செய்து அதன் மாமிசத்தை உண்டதால் வந்த பாவம்தான் என்ற உண்மையை உணர்ந்து உயிர்க்கொலை தவிர்த்து புலால் மறுத்து சைவஉணவை மேற்கொண்டு ஞானம்பெற முருகன் திருவடியை பற்றிட வேண்டுமென்ற மனஉறுதி தோன்றும்.



இயற்கை மனிதனை தோற்றுவிக்கும்போதே அந்த மனிததேகத்தினை சைவஉணவிற்கு உகந்ததாகத்தான் தோற்றுவித்தது. அவனது செரிமான மண்டலத்தில்கூட மாமிசத்தை செரிப்பதற்கான எந்த சிறப்பு அமைப்பும் இல்லை. ஏனெனில் ஞானம் பெறுவதற்காகவே உருவாக்கப்பட்ட சிறப்பான இந்த மனித தேகத்தில் பாவம் சேர்ந்து விடலாகாது என்பதினாலேயே இயற்கை ஜீவதயவின் அருளைப் பெற ஏதுவாக சைவஉணவை மேற்கொண்டு சாந்தமனநிலை கொண்டு ஜீவதயவினால் ஒளிதேகம் பெற்றிடவே இந்த தேகத்தை சாந்த தேகமாக படைத்திட்டது.



ஆனால் இயற்கையின் கொடையை அதன் அற்புதம் உணரா மனிதன் சுவைக்கு அடிமையாகி உணவு தேடலில் ருசியின் தன்மைக்கு அடிமையாகி எளிமையாக கிடைக்கிறது, சத்தானதாக உள்ளது என கற்பனை செய்து மாமிசத்தை சாப்பிட ஆரம்பித்தான். என்றைக்கு மனிதன் உயிர்க்கொலை செய்து அதன் மாமிசத்தை சாப்பிட ஆரம்பித்தானோ அன்று வந்தது அவனது வினைத்தொடர்ச்சி. அன்று வந்தது அவனது அதீத பாவச்சுமை. அன்று வந்தது அறியாமையெனும் அதீத இருள். அன்று தான் இறைவனுடன் கொண்டிருந்த அற்புத தொடர்பு துண்டிக்கப்பட்டு அறியாமை எனும் இருளில் மூழ்கி ஒளிபொருந்திய தூய சாந்தஅறிவு மழுங்கி மிருக அறிவு ஓங்கி மும்மலக் குற்றத்துள் ஆழஆழ புதைந்தனன் மனிதன்.



அந்தோ பரிதாபம்! தான் என்ன செய்கின்றோம் என்றே அறியாமல், அறியாமையில் உழன்று உழன்று உயிர்க்கொலை செய்த பாவம் இன்றுவரை அவனை மீளவிடாமல் மீண்டும் மீண்டும் பாவத்தில் தான் தள்ளுகிறதே தவிர அவனை மீண்டு வரவிடவே இல்லை.



ஞானம்பெற தலையாய குணம் ஜீவதயவு, ஜீவதயவு ஞானவீட்டின் திறவுகோல். ஆதலின் ஞானம்பெற விரும்புகிறவன் ஜீவதயவின் முதல் எதிரியான உயிர்க்கொலையை கண்டிப்பாக இனி அவனது வாழ்நாளில் ஒருமுறை கூட செய்திடல் ஆகாது.



ஞானம்பெற விரும்புகின்ற ஒருவன் ஜீவதயவாகிய ஞானவீட்டின் திறவுகோலை தொலைத்துவிட்டு ஞானம்பெற விழைவது எப்படி சாத்தியம். உயிர்க்கொலை செய்பவனுக்கு எப்படி ஜீவதயவு வரும்? ஜீவதயவை தொலைத்தவனுக்கு ஞானம் எப்படி வரும்?



ஆதலின் ஞானம்பெற விரும்புகிறவன் முதன்முதலில் ஜீவதயவை பெற ஏதுவாக உயிர்க்கொலை தவிர்த்து புலால் மறுத்து ஞானிகள் திருவடியைப் பற்றினால் தான் ஞானத்திற்குரிய சிறப்பறிவை தலைவன் முருகன் அருளால் பெறலாம்.


தாவரங்களும் உயிர்தானே அது உயிர் கொலையில்லையா என்பார் அறிவாளி சிலர்.


ஓரறிவு உயிர்தனை கொன்றால் பாவம்தான், அதுவும் உயிர்தான். ஆயின் மனித முயற்சியால் ஒருபடி நெல்லை உண்ட மனிதன். அதே தனது சுய முயற்சியால் அதன் முளைக்கா வித்தை அது முளைப்பதற்கு ஏதுவாக நிலம்தனை பண்படுத்தி பதப்படுத்தி நீர்விட்டு, உரமிட்டு அந்த ஒரு உயிருக்கு பதிலாக உபகாரமாக ஆயிரம் ஆயிரம் கோடி உயிர்களை அவனது முயற்சியால் தோற்றுவிக்க இயலும். இயற்கை மனிதன் கடைத்தேற்றுவதற்காகவே சைவ உணவையும், அந்த உயிர் பாவம் நீங்க அவனுக்கு ஆறாம் அறிவாகிய பகுத்தறிவின் மூலம் அந்த ஓரறிவின் கொலை பாவம் நீங்க அந்த ஓரறிவு உயிரை உண்டாக்கி பெரும் புண்ணியத்தையும் இணைத்தே தருவித்து தோற்றுவித்தது. ஆனால் ஐந்தறிவு உடைய விலங்கை கொன்றால் மீண்டும் மனிதனால் தோற்றுவிக்கலாகாது.



ஆதலின் உடம்பினின்று உயிர் பிரித்து மகிழ்ந்து சுவை கொட்டி சாப்பிடும் அசைவ உணவினை விட்டு விலகினால் அன்றி உயிர்க்கொலை பாவம் நீங்கினாலன்றி அவனது ஞான முயற்சியில் எத்துணை எத்துணை புண்ணியம் செய்தாலும் கடைத்தேற இயலாது என்பதையும் இறையருள் பெற முடியாது  என்பதையும் முருகனது திருஅருள் கொடையால் உணர்வார்கள்.



முருகா! முருகா! முருகா! என்போம் ஜீவதயவின் தலைவன் ஜீவதயாசோதி முருகன் அருளைப் பெறுவோம். ஜீவதயவுடையவராய் ஆகியே ஞானம் பெறுவோம். முருகன் அருளே சிறப்பறிவாய் மாறி ஜீவதயவை  நம்முள் தோற்றுவிக்கும்.
..............



மகான் ஆறுமுக அரங்கமகாதேசிகர் சுவாமிகள்

No comments:

Post a Comment