Contact தொடர்பு

உலகமக்கள் நன்மைகருதி சித்தர் சுவடிகள்

Tuesday, 30 August 2016

செயல்களிலே வெற்றி பெறுவதற்கு என்னென்ன தகுதிகள் வேண்டும்


முருகா என்றால் :



ஒருவன் மேற்கொள்ளும் செயல்களிலே வெற்றி பெறுவதற்கு என்னென்ன தகுதிகள் வேண்டும் என்பது அவனுள் முருகனருளால் உணர்த்தப்படும்.



முருகனருள் பெற அந்த செயல் செய்வோன் முருகனது திருவடியைப் பற்றி மனமுருகி வணங்கி முருகா நான் இன்றுமுதல் உயிர்க்கொலை செய்யமாட்டேன், புலால் உண்ண மாட்டேன், பிறஉயிர்களுக்கு தீங்கு செய்ய மாட்டேன், பிறர் பொருளை வஞ்சனையாக அபகரிக்க மாட்டேன், சாதி, மத, இன, மொழி பாகுபாடு பார்க்க மாட்டேன், பொருள் மீது வெறிகொண்டு பற்றுமிகுந்து பொருள்மீது அதீத இச்சை கொள்ள மாட்டேன், பிறர் வளர்ச்சி கண்டு பொறாமை கொள்ள மாட்டேன். இது உமது திருவடிக்கு சமர்ப்பிக்கின்றேன். இச்செயல்களை செய்யாதிருக்க எம்மால் ஆகாது. இவை என்னை வஞ்சித்து விடாமல் என்னை காத்தருள்.



முருகா உமது நாமத்தை சொல்பவருக்கும் உமது திருவடியைப் பற்றி பூசிப்போர்க்கும் உமது திருவடி பெருமையை சொல்வோர்க்கும் உமது கருணையான தயவால் அவர் தமக்கு உணவு, உடை, தங்க இருப்பிடம், அத்தியாவசிய தேவைகள் அனைத்தும் தங்கு தடையின்றி தாராளமாய் கிடைக்கும் என்பதை உமதருளால் உணர்ந்திட்டாலும் எனது மனமோ, மனைவி, பிள்ளைகள், உற்றார், உறவினர், நண்பர் என்றே பலவிதமாய் திரிந்து பாசவலையுள் அகப்பட்டு பரிதவித்து நாளைக்கு என்ன செய்வோம்? என்றே எண்ணி ஏங்கி பொருள்மீது பற்று கொள்ள செய்து உமது பொன்னடியை மறக்க செய்கிறது. மகோன்னத மாணிக்கமே மாமேருவே ஞானத்தலைவ முருகா எம்மைக் காத்தருள்.



இன்றைக்கு அருளின முருகன் நாளைக்கும் அருளுவான் என்றே அரங்க உபதேசம் கேட்ட நான் அதை மறந்து நாளைக்கு நமக்கு வேண்டுமே என மாயையுள் வீழ்ந்து தடுமாறுகிறேன் என்று உமதருளை உமது அன்பை உமது கருணையை உளமார உண்மையுடன் உணர்ந்து உமது வழி தொடர்வேனோ யாமறியேன் பாவியேன் என்னை கடைத்தேற்றுங்கள். எமக்கு உண்மை உணர்த்தி உமதருள் பெற நல்லருள் புரியுங்கள்.



அன்பே, ஆரா அமுதே, ஞானமே, ஞானச்சுடரே, அனாத இரட்சகனே, பாவியேன், எம்மீதும் ஒருகருணை பார்வை பாரப்பா. உமது கடைக்கண் அருளிருந்தால் கடைத்தேறுவேன் யான். கருணை இருந்தால் தப்பித்து விடுவேன். உன் அன்பிருந்தால் உம் திருவடியைப் பற்றிடுவேன் யான்.



எம் இறையே தயாநிதியே, தன்னிகரில்லா தனிப்பெரும் தகைமையே குணக்குன்றே தலைவா உமதடிப் பற்றும் உத்தமச் செயல்களிலே வெற்றிபெற எமக்கு அருளுங்கள். செயல்களிலே வெற்றிதனை உமதருளால் பெற்றிடவும், அதனினும் மேலான உண்மை வெற்றியாம் குணக்கேடுகளின் பிடியினின்று விடுபட்டு உமது திருவடியைப் பற்றுவதிலே அடைகின்ற வெற்றிதான் உண்மை வெற்றி என்பதை எமக்கு உணர்த்தி உமது திருவடிக்கே எம்மை ஆளாக்கி வெற்றிபெற உறுதுணை செய்யுங்கள் என்றே மன்றாடி முருகன் அருள் பெறபெற முருகனருளால் அனைத்தும் கூடும் என்பதை உணரலாம்.



முருகனடியைப் பற்றிடுங்கள். முருகனருளை பெற்று முக்திவழி நடந்திடுங்கள்.
..............



மகான் ஆறுமுக அரங்கமகாதேசிகர் சுவாமிகள்

No comments:

Post a Comment