முருகா என்றால்,
மும்மலக்குற்றத்திற்கு காரணமானதை அறிந்து மும்மலக் குற்றத்தை முருகன் அருளால் நீக்கி அறயாமையினின்று விடுபட்டு தெளிந்த அறிவை பெற்று நிலையற்ற தொடர்பிறவியை வென்று நிலையான மரணமில்லாப் பெருவாழ்வை பெறலாம் என்று உணர்வான்.
நாம் காணும் அனைத்தும் நிலையற்றவைதான். இந்த நிலையற்ற பொருளெல்லாம் ஒரு கால பரியந்தத்தில் அதனதன் தன்மைக்கேற்ப அழியத்தான் போகிறது என்ற உண்மையை உணர்ந்திடுவான் முருகனை போற்றும் முருகபக்தன்.
ஆயினும் நிலையற்ற எல்லா பொருள்களும் கண்டிப்பாக நிலையான ஒன்றிலிருந்துதான், தோன்றியிருக்க வேண்டும் என்றும் நிலையான ஒன்றிலிருந்து தோன்றிய அவையெல்லாம் அதனதன் தன்மைக்கேற்ப செயல், வினை வடிவமாகி பல்வேறு சூழ்நிலைக்கு ஆட்பட்டு அதனதன் சூழ்நிலைக்கேற்ப காலத்தின் மாற்றத்தினால் படிப்படியாக தோன்றியது போலவே தேய்ந்து மறைந்தும் பின் தோன்றுகின்றன என்பதையும் அறிகின்றான்.
முருகா! முருகா! முருகா! என்றே சிந்தையெல்லாம் முருகனின் திருநாமம்தனை ஏற்றி தொழுது தொழுது வழிபட வழிபட தோற்ற இரகசியமும் அவனுள்ளே முருகனே தோன்றி உணர்த்திட அறியப்பெறுவான்.
எது என்றும் அழிவில்லாத பொருளாய் இருக்கின்றதோ அதுவே நிலையானது என்றும், அதுவே பரம்பொருள் என்றும் அறிகின்றான். நிலையான அந்த பொருள் சிற்றணுவாகிறது, சிற்றணுவாகிய அதுவே ஆன்மா என்றே பெயர் பெற்று பரம்பொருளாய் ஆதி வஸ்துவினின்று பிரிந்திட அது தனக்கென்று ஒரு அணுக்கூட்டத்தை தனது கவர்ச்சியினால் தோற்றுவிக்கிறது. நிலையான அந்த ஆன்மா நிலையற்ற அணுக்களால் ஆன ஒரு கூட்டினை தனது ஈர்ப்பினால் கட்டுகிறது. அதற்கு உண்டான அனைத்து கட்டளைகளும் அந்த ஆன்மாவின் உள்ளேயே புதைந்துள்ளது என்பது இதுவரை யாரும் அறியமுடியாத அறிவிற்கும் எட்டாததொரு மிக பிரம்மாண்டமான சூட்சுமமாகும்.
அப்படி தோன்றிய ஆன்மாவானது மீண்டும் மீண்டும் தோன்றுகின்ற கூட்டினை ஸ்திரப்படுத்தி தம்மோடு அந்த கூட்டினை நிரந்தரமாக தக்க வைத்துக் கொள்ள முடியாமல் அந்தந்த தேர்ந்தெடுத்த உருவாக்கிய கூட்டின் தன்மைக்கேற்ப கால வித்தியாசங்களில் ஆன்மாவிற்கும் கூட்டிற்கும் உள்ள தொடர்பு அறுபட்டு போவதால் கூட்டைவிட்டு ஆன்மா பிரிகிறது. ஆன்மா பிரிந்த உடனே அதுவரை ஆன்மாவால் ஈர்த்து வைக்கப்பட்ட அந்த கூடு ஈர்ப்பு மையம் விலகியதால் நெறிப்படுத்தும் கட்டளை கேந்திரம் விலகியதால் ஒன்றுடன் ஒன்று இணைய இயலாத அணுக்களெல்லாம் அவைஅவை பிரிந்து பிரிந்து எங்கிருந்து கூடியதோ அங்கேயே பிரிந்து செல்கின்றன.
இப்படி ஆன்மா பரமாணுவினின்று தோன்றி தனக்கென இதுவரை ஒரு கூடு கிடைக்காமல் அலைந்து அலைந்து பல்வேறு கூடுகளிலே கட்டி தஞ்சம் புகுகிறது. ஆனால் எங்கும் நிரந்திர கூடு கிடைக்கவில்லை என்பதையும் ஒரேஒரு அணுத்திரளில் மட்டுமே ஒரே ஒரு அணுக் கூட்டமைப்பில் மட்டுமே ஆன்மாவும் அந்த அணுக்கூட்டமைப்பின் அணுக்களும் ஒன்று கூடுவதற்கான வாய்ப்பை உள்ளதை உணர்கிறது. அந்த கூட்டமைப்பே மனித தேகம் என்ற பெயர் பெற்றது.
இப்படி இயக்கமற்ற ஒன்றிலிருந்து தோன்றிய ஆன்மாதான், பல்லாயிரங்கோடி ஆண்டுகளாக எடுத்த பலப்பல தேகத்தின் செயல்பாட்டினால் அது அத்தேகத்தின் வாயிலாய் தோன்றி செயல் பதிவுகளையும் (வினைப்பதிவு) தன்னுடனே எடுத்து செல்வதால் அடுத்த அணுக்கூட்டமான தேகத்தை அமைத்திட சார்ந்திடும்போது அந்த ஆன்மா பெற்ற வினைப்பதிவும் தேக அணுக்களை சார்ந்து தேகத்தின் அணுக்களிலும் தன்வினைப்பதிவை பதிப்பதால் எக்காலத்தும் அணுக்கூட்டமும் ஆன்மாவும் ஒன்றிணைய வாய்ப்பே இல்லாமல் போகிறது.
ஆன்மாவின் செயல்களால் பிற ஆன்மாக்கள் பட்ட துன்பங்களினால் பிற ஆன்மாக்களிலிருந்து வெளிப்பட்ட பதிவுகளெல்லாம் இந்த ஆன்மாவை தாக்குவதால் பதிவுகளில் குற்றம் ஏற்பட்டு ஆன்மாவை மாசுள்ளதாக்கி தொடர்ந்து தொடர்ந்து வருவதினாலே ஆன்மா மும்மலக்குற்றம் எனும் சிறையினுள் அகப்பட்டு மீள முடியாமல் தவிக்கிறது. அதுவே ஒரு தேகத்தினோடு ஆன்மா இரண்டற கலக்க முடியாமல் அறியாமையில் மூழ்கி, கலக்க வழி தெரியாது தடுமாறுகின்றது.
இப்படி தடுமாறுகின்ற ஆன்மாக்கள் முற்றுப்பெறுவதற்கான இரண்டற கலப்பதற்கான ஏதுவான மனிததேகத்தினுள் பிரவேசித்து அந்த அணுதிரள்களிலே அணுவுக்கு அணுவாய் கலந்துள்ள மும்மலக் கசடை நீக்கிட ஒரு உபாயம்தனை அற்புதமான வேதியியல்தனை அதிசூட்சா சூட்சுமம் மிக்கதொரு வழிமுறையை கண்டு பிடித்து சேராத தேகத்தை ஆன்மாவுடன் சேர்த்து வெற்றி கண்டான் ஆதித்தலைவன் முருகப்பெருமான் என்பதையும் முழுதும் தன் அறிவினால் உணர்கிறான் முருகனின் ஆசி பெற்ற முருகபக்தன்.
பிறஉயிர்களுக்கு செய்திட்ட தீயசெயல்களே வினைப்பதிவுகளாக மாறி, நிலையான ஆன்மாவில் பதிந்திட அந்த ஆன்மா மாசுபடுகிறது. அதனால் மாசு மிகுந்த தேகமே அமைகிறது. ஆதலின் மாசுபட்ட ஆன்மாவை சுத்தி செய்தால் தேகமும் சுத்தியாகும் என்பதை உணர்த்திடுவான் ஆதிதலைவன் முருகப்பெருமான்.
ஆதலின் பிற உயிர்களுக்கு செய்திட்ட துன்பங்கள் பாவினைகளாக பதிந்திட, பிறஉயிர்களுக்கு செய்கின்ற உபகாரம் தூயவினைகளாக நற்பதிவுகளாக பதியும் நற்பதிவுகள் எல்லாம் ஒன்று கூடிட ஜீவதயவினால் ஆனதொரு சாவி, அந்த ஆன்மாவிற்குள் கிடைத்திடும் ஆன்மகுற்றம் நீங்க நீங்க அந்த ஜீவர்கள் வாழ்த்துகின்ற வாழ்த்து எனும் இயற்கை சார்ந்த அடிப்படை நல்வினை பதிவுகளெல்லாம் நல்ல செயல்செய்யும் ஆன்மாவினை சாரச்சார ஆன்ம ஒளி பெற்று அதன் விளைவாய் அது பெற்ற தேகத்தினிலே அணுக்களை சேர ஒட்டாது தடுக்கின்ற மும்மலக்குற்றமெனும் கசடை நீக்கவல்ல ஒரு சாவியை, அதாவது அடிப்படை பதிவுகளை வெளிக் கொணர்கிறது.
ஒன்று கூடாத அணுத்திரளை ஆன்மாவுடன் ஒன்று கூட்டிட ஏற்கனவே ஒன்று கூடிட்ட ஆன்மா ஒன்றினது வழி நடத்தல் அவசியமாகிறது. அதன் மூலப்பிரதி தேவைப்படுகிறது.
அதுவே ஞானிகளின் ஆன்மாவாகும். அதுவே முற்றுப்பெற்றவர் தம் ஆன்மாவாகும். அந்த முற்றுப்பெற்ற ஞானிகளின் வழி நடத்துதலினாலே இந்த ஆன்மா சேராத அணுக் கூட்டத்தினின்று எப்படி கசடை நீக்குவது என்று கற்றுத்தெளிந்து படிப்படியாக படிப்படியாக பல்லாயிரமாண்டு சுமார் 27,000 வருடங்களாக பாடுபட்டு பாடுபட்டு மீள்வினைக்கு ஆளாகாமல் ஞானிகள் துணையுடன் வந்து வந்து தேக அணுக்கூட்டத்தில் உள்ள கசடை நீக்கி நீக்கி தூய்மையான அணுக்களால் கூடிய சுத்த தேகம்தனை இறுதியில் பெறுகிறது.
பின்னரே ஞானத்தலைவன் ஆறுமுகனார் ஒளி பொருந்திய அந்த பேரான்மா முன்னிலையிலே ஞானிகள் ஆன்மாக்களெல்லாம் ஒன்றுகூடி நிற்க, இந்த தேர்ந்தெடுக்கப்பட்ட ஆன்மாவினுள் பரமானந்த நிலைநிற்கும் ஆறுமுகனார் ஆன்மாவின் உட்பிரவேசத்தினால் ஆன்ம சுத்தி பெற்று அந்த ஆன்மா பெற்ற தேகக்கசடை முருகன் நீக்குவான்.
ஆறுமுகனார் தேகக்கசடை ஜீவகாருண்யமாகிய ஜீவதயவு எனும் பிற உயிர்கள் நமக்களிக்கின்ற மகிழ்வின் கூறுகளாய் ஆன நல்வினை பதிவுகளைக் கொண்டே இந்த கசடான தேகத்தை தூய்மைப்படுத்துவதினால் முதலில் களங்கப்பட்ட ஆன்மாவை சதா ஜீவதயவின் பெருக்கத்தை அளவிறந்து பெறுதற்காக ஏராளமான புண்ணியங்களை மிகுந்து செய்திட தூண்டி பிற உயிர்களின் ஆசிகளை பெறச்செய்து பெறச்செய்து ஞானவீட்டிற்கான திறவுகோலை பெற்றுத் தருவான் ஞானபண்டிதன்.
முருகா! முருகா! முருகா! முருகா! முருகா! முருகா! என்றே அயராது நாத்தழும்பேற நாமம்தனை சொல்லி சொல்லி ஜீவதயவின் சிகரம், ஆதிமூல தலைவன் முருகன் ஆசி பெறப்பெற ஜீவதயவுடை முருகன் அவன் தம்முள்ளே ஜீவதயவாகிய ஞானவீட்டின் திறவுகோல் கொண்டு ஞானமடையச் செய்து ஆன்மா சுத்தி பெறச் செய்து ஒரு சிறப்பான தனித்தன்மையுடைய வேதியியலால் இணையாத அணுக்கூட்டத்தை குற்றம் நீக்கி இணைத்திட துணைபுரிந்து இணைத்து ஆன்மாவை விட்டு மீண்டும் பிரியாத வகையிலே ஒன்று கூட்டி தருவான் ஞானபண்டிதன்.
ஜீவதயவின் அருள் கூடவே ஞானபண்டிதன் அருளைப் பெற்று அந்த ஆன்மாவும் ஆன்மாவிற்கு உண்டான அணுத்திரள் கூட்டமைப்பாம் தேகமும் ஒன்றென கலந்து ஆன்மா எந்த ஆதிவஸ்துவினின்று தோன்றியதோ அதைப் போன்றே பஞ்சபூதத்தினால் பெறப்பட்ட அணுத்திரள் கூட்டமான தூலதேகமும் அகதேகமாக அணுதேகமாக ஒளிதேகமாக மாறி ஆன்மாவைப் போன்றே அதுவும் ஆகினபடியால் அது மீண்டும் எக்காலத்தும் ஆன்மாவை விட்டு பிரியாது, தோன்றிய பஞ்சபூதத்தின் தன்மைக்கு அப்பாற்பட்டும் பஞ்சபூதத்துவினின்று விடுபட்டு ஆதி வஸ்துவாய் மாறுகின்றபடியாலே ஆன்மா தேகம் விட்டு பிரிதலான மரணம் என்ற ஒன்று அந்த ஆன்மாவிற்கோ அது பெற்ற உடலிற்கோ ஏற்படாமல் அந்த ஆன்மா என்றுமே அழியாத ஆன்மாவை விட்டு பிரியாத மரணமில்லா தேகத்தைப் பெற்று மரணமில்லாப் பெருவாழ்வை ஜீவதயவினால் மட்டுமே இறுதியில் அடைகிறது.
இப்படி ஆன்மா மரணமில்லாப் பெருவாழ்வை பெறுவதற்கு அதற்கு சாவியாக இருப்பதும் தேகக்கசடை நீக்க பயன்படுவதும் ஜீவதயவு எனும் ஜீவர்கள்பால் செலுத்துகின்ற பரிவே காரணமாய் இருப்பதினாலே அந்த ஜீவதயவே இறுதியில் மரணமில்லாப் பெருவாழ்வாக தூயதேகமாக ஆதிமூல வஸ்துவிற்கு அடிப்படையாக இருப்பதையும் அறிவான் முருகபக்தன்.
அறிய அறிய, தெளிய தெளிய முருகன்மீது பக்தி கூடி கூடி அந்த ஜீவதயவு என்பதே முருகனின் அருளாய் வெளிப்படுகிறது என்பதையும் உணர்வான் ஜீவதயவின் வடிவமே முருகன் என்றும் முருகனின் வடிவமே ஜீவதயவு என்றும் ஜீவதயவின் பேராற்றலே அருட்பெருஞ்சோதியாய் தோன்றுகிறது என்பதையும் உணர்ந்து ஜீவதயவைப் பெருக்கி கடைத்தேறுவான் முருகபக்தன்.
வேலனை போற்றுவோம்
காலனை வெல்லுவோம்.
-சுபம்-
மகான் ஆறுமுக அரங்கமகாதேசிகர் சுவாமிகள்
No comments:
Post a Comment