Contact தொடர்பு

உலகமக்கள் நன்மைகருதி சித்தர் சுவடிகள்

Friday, 19 August 2016

முருகா என்றால் போலி ஆன்மீகவாதிகளிடம் சென்று வீழ்ந்து விடாமல் காப்பாற்றுவான்

முருகா என்றால்,

முருகப்பெருமான் அருளைப் பெற்று போலி வேடதாரிகளை இனம் கண்டு தெளிவடையுங்கள்.

உங்கள் வீட்டு பூசைஅறையில் முருகப்பெருமான் படம் ஒன்றை வைத்து நெய் அல்லது நல்லெண்ணெய் தீபமேற்றி காலை 4.30 மணி முதல் 6.00 மணி வரையிலான பிரம்ம முகூர்த்தத்தில் “ஓம் சரவணபவ” என்ற சடாட்சர மந்திரமாகிய முருகனின் நாமத்தை குறைந்தது 108 முறைகளாவது மனம் உருகி மந்திர உரு ஏற்றுதல் (ஜெபித்தல்) வேண்டும்.

அப்படி தொடர்ந்து ஜெபிக்க ஜெபிக்க உண்மை ஆன்மீகவாதிகளது தன்மைகளையும், போலி ஆன்மீகவாதிகளின் தன்மைகளையும் அறிந்து கொள்வார்கள்.

முருகா முருகா என்றே உளம் உருகி பூசிக்க பூசிக்க முருகன் அருள் அவனுள் பெருகி உண்மை ஆன்மீகவாதியின் உயர் பண்புகளை தெரிந்து கொள்வான். போலி ஆன்மீக வாதிகளின் இழிச்செயல்களை வெட்ட வெளிச்சமாக முருகன் அருளால் கண்ணாரக் கண்டு உணர்வால் உணரப்பெறுவான்.
முருகா முருகா என்றே உருகி உருகி செபித்திட யோகமும் ஞானமும் முருகன் அருள் பெற்றவர்க்கே கைகூடும் என்றும் யோகமும் ஞானமும் முருகனே நம்மை சார்ந்து நடத்திக் கொடுத்தாலன்றி தன்முயற்சியாலோ, பிறிதொருவர் தூண்டுதலினாலோ, பயிற்சியினாலோ, செய்முறைகளினாலோ, மருந்துகளை உட்கொள்வதாலோ கண்டிப்பாக அடைய முடியாது என்றும் உணர்வான் முருகன் நாமத்தை ஜெபித்த முருகபக்தன்.

முருகன் அருளினால் ஒருவர் மனம் உருகி முருகப்பெருமானை வணங்கி வணங்கி சற்குரு வழிகாட்டலினால் உடனிருந்து வழிநடத்தி செல்ல, முருகன் அருள் துணைவர சற்குரு உபதேசத்தினால் முருகப்பெருமானை தம்முள் வரச்செய்திட ஏராளமான தவங்களும் கணக்கிலடங்காத தானங்களும் செய்து செய்து, உலக உயிர்க்கெல்லாம் உபகாரமாய் செய்து ஜீவதயவினை பெருக்கி ஜீவதயவே வடிவினனாகிய பின்னரே சற்குரு வழிகாட்ட முருகனின் அருள்கூடி மலக்குற்றமுள்ள தேகமானது சுத்தி செய்தல் பொருட்டு யாவருக்கும் எட்டா முருகனது அருள், சற்குரு வேண்டுதலினால் இரங்கி அவனது பாவபுண்ணியத்திற்கேற்ப அவன்தன் தேகத்தினுள் பிரவேசித்து அதன் பின்னரே யோகம் நடத்தித் தரப்படும் என்ற உண்மையை உணர்வான்.

முருகா முருகா என்றே தொடர்ந்து மனம் உருகி செபித்திட செபித்திட பெரும் புண்ணிய பலமும் அருள் பலமும் கொண்டு செய்யக் கூடிய இந்த யோக நெறியை ஒன்றும் அறியாத மூட, கபட வேஷதாரிகள் எல்லாம் தாம் ஏதோ கற்றது போல நடித்து காசிற்கு ஞானத்தை எச்சரிக்கை எச்சரிக்கை போலி வேடதாரிகள் விற்கின்றார்கள் பாவிகள், என்பதை உணர்வான். பொருளாசையற்ற நிலையில் அடையும் யோகத்தை பொருள் பற்றுள்ளவன் எப்படி நமக்கு கற்றுத்தர முடியும். இப்படி காசிற்கு யோகமும் ஞானமும் சொல்கிறேன் என்பவன் கடவுள் பெயரால் மக்களை ஏமாற்றுகின்ற கள்வன் என்பதை அறிந்து கொள்வான். அப்படிப்பட்ட பிழைப்பிற்காக, தான் வசதியாக வாழ வேண்டும் என்பதற்காக சற்றும் ஈவு இரக்கமின்றி பொதுமக்களின் அறியாமையை, இல்லறத்தானின் பலகீனத்தை பயன்படுத்தி பணம் பறிக்கின்ற இவர்களெல்லாம் வழிப்பறி செய்கின்ற கள்வரை போன்றவர்கள். இவர்களைக் கண்டாலே பாவம், இவர் சொல் கேட்டாலே பாவமென்று உணர்ந்து போலி ஆன்மீகவாதிகளை பார்க்கவே கூச்சப்பட்டு விலகிவிடுவான்.

அவர்கள் சொல் கேட்கவே வெட்கப்படுவான். பாவிகளது சொல்லை தம் காதால் கேட்கமாட்டான். அந்த பாவிகளை பார்க்க விரும்ப மாட்டான் உண்மை முருகபக்தன்.

செபிக்க செபிக்க முருகனருளால் உண்மை ஆன்மீகவாதிகளை அறிந்து கடைத்தேறும் உண்மை மார்க்கம் செல்கின்ற முருகன் அருள் பெற்ற முருகபக்தன் தாம் அறிந்த உண்மையை பிறருக்கும் தம்மை சார்ந்தோருக்கும் சொல்லி அவர்களையும் முருகனது பக்திக்கு ஆளாக்கிட முனைவான் அந்த புண்ணியவான்.

போலி ஆன்மீகவாதிகளின் தீய குணங்களை, போலி ஆன்மீகவாதிகளின் பண்புகளை, இழிச்செயல்களை, அவர்களது குணக்கேடுகளை தாம் உணர்ந்ததோடு தம்மை சார்ந்தோர்க்கும் சொல்லி அவர்களையும் போலி ஆன்மீகவாதிகளிடத்து சிக்கி விடாமல் தம்மால் ஆனதை செய்வான் அந்த முருக பக்தன்.

முருகன் அருள் கூடிட, தொடர்ந்து முருகன் நாமம்தனை செபித்து வர செபித்து வர முருகபக்தனின் வேண்டுகோள் தன்னால் அவனும் அவனைச் சார்ந்தோரும் உண்மை உணர்ந்து சற்குருவை அடையாளம் கண்டு அனைவரும் சற்குரு பாதம் பற்றி, ஞானபண்டிதராம் முருகப்பெருமானின் திருவருளை பெற்றிட முருகனை முருகன் அருளால் உள்ளன்போடு வணங்கி துதித்து போற்றி, வணங்கி வணங்கி ஜீவதயவினை பெருக்கி தானதருமங்களை செய்து செய்து முருகன் அருளை சற்குரு துணையுடன் நல்வழி நடந்து பெற்றிடுவார்கள்.

முருகனை நெஞ்சம் நெகிழ உளம் கனிய உண்மையுடன் தொடர்ந்து பூசிக்க பூசிக்க இதுவரை தம்மை வழிநடத்தி வந்த சற்குரு வேறுயாருமல்ல, நாம் முருகன்மீது செலுத்திய பக்தி விசுவாசமே நமக்கு சற்குருவாய் வந்தது என்றும், சற்குருவே முருகன் என்றும், முருகனே சற்குரு என்றும், குருவே தலைவன் என்றும், தலைவனே குருவும் ஆனான் என்றும் உணர்ந்து, தமது உள்ளம், உடல், பொருள், ஆவி அனைத்தையும் முருகன் அருளால் தாம் கண்ட அந்த உண்மை ஞானகுருவிற்கு அந்த சற்குருவிற்கு அதுவரை தம்மைக் காத்த சொற்குருவின் திருவடிகளிலே சமர்ப்பணம் செய்து அவர்தம்மிடம் தம்மை முழுமையாக சரணாகதியாக ஒப்புவித்து திருக்கூட்ட மரபினருள் தம்மையும் ஒருவனாய் சேர்த்துக்கொள்ள குருநாதர் தம் திருவடிக்கே தம்மை கொத்தடிமையாக ஒப்புவித்து குருவின் கருத்தே குருவின் சொல்லே வேதமென்றும் அவர்தம் வார்த்தையே வேதவாக்கென்றும் அவரே தன் தலைவன் என்றும் அவரே நமக்குற்ற அனைத்தும் என்றும் யாதொன்றும் வேண்டாத நிலையடைந்து குருவே அனைத்துமாகி நிற்பான் அந்த யோகநிலை எய்தவல்ல குருபக்தி விசுவாசமிக்க முருகபக்தன்.

குருபக்தியே முருகபக்தியாகி முருகபக்தியே குருபக்தியாகி இரண்டும் ஒன்றிணைந்து இரண்டற கலந்திட குருவும் சீடனும் தான்வேறு அவன் வேறின்றி மனதால் ஒன்றிணைய ஜீவதயவு பெருகி காலபரியந்தம் தொடர்ந்திட்ட தொண்டால் குருபக்தி விசுவாசத்தால் தலைவன் மனமிரங்கி அருளிச் செய்திட யோகமும் ஞானமும் அடைந்து கடைத்தேறிடுவான் தூயசீடனான அந்த முருகபக்தன்.

முருகனை வணங்க வணங்க முருகனின் அம்சமாகவே முருகன் அருள் கூடியே ஆகிடுவர்.

இப்படி பக்தியினால் விசுவாசத்தினால் பெற வேண்டிய யோகமும் ஞானமும் காசுக்கு கிடைக்கிறது, கற்பதற்கு எளிமையாய் இருக்கிறது என்று எண்ணி போலி ஆன்மீகவாதிகள் அந்த கபட நாடகமிடுகின்றவர்கள் தோற்ற பொலிவு காண்பித்து நடிக்கும் வேடதாரிகளிடத்து சென்று வீழ்ந்திடாமல் முருகன் மீது பக்தி செலுத்துங்கள், அவனே உங்களுக்கு உண்மை குருவை அடையாளம் காண்பிப்பான்.

நெஞ்சில் துறவார் துறந்தார்போல் வஞ்சித்து
வாழ்வாரின் வன்கணார் இல்.
- திருக்குறள் - கூடா ஒழுக்கம் - கவி எண் 276.

என்று வள்ளுவப்பெருமான் கூறியதை போன்று இரக்கமற்ற அந்த பாவிகளை வாழ்வினில் இனி ஒருபோதும் காணமாட்டான் உண்மை முருகபக்தன்.

போற்றுவோம் முருகப்பெருமான் திருஅருளை!
பெறுவோம் உண்மை குருவின் உயர் நட்பை!
-சுபம்-

No comments:

Post a Comment