சாதாரண மனிதனுக்கு அவனுள் இருக்கின்ற சத்தையும், அசத்தையும் பற்றி அணுவளவும் தெரியாது. முருகப்பெருமானின் தயவையும், அருளையும், ஆசியையும் பெற்றாலன்றி சத்தைப் பற்றியோ, அசத்தைப் பற்றியோ அறிய முடியாது. முருகனது அருளைப் பெற பெற, சத்தையும் அசத்தையும் பற்றி அறியலாம். முருகனது அருளைப் பெற பெற அவனது அருள்பலம் கூடிட சத்தையும் அசத்தையும் பிரிக்கின்ற உபாயமதனை பெறுவது எப்படி? என்பதை அறியலாம்.
ஆதி ஞானத்தலைவனே அச்சீடன்பால் மனமிரங்கி சீடனது காமதேகத்தினுள் பிரவேசித்து அச்சீடனை முழுமையாக சார்ந்து சத்தையும் அசத்தையும் பிரித்து தந்தாலன்றி வேறெந்த முயற்சியாலும் ஒருபோதும் சத்தும், அசத்தும் பிரியாதென்றும், அதை விடுத்து வேறு வேறு உபாயங்களை கையாண்டு சத்தையும் அசத்தையும் பிரிக்க முயன்றால் மரணமே பரிசாக கிடைக்கும் என்பதையும் உணர்ந்து அதன் இரகசியங்களை கைவரப்பெற்று முருகப்பெருமானை தம்முள் சார்ந்திடும் உபாயமதை செய்வான்.
முருகப்பெருமான் பெருங்கருணை கொண்டு நம்முள் அவ்வளவு எளிதாக பிரவேசிக்க மாட்டான். சதகோடி சூரியபிரகாசமுள்ள அருட்ஜோதி தனிப்பெருங் கருணையே வடிவான பொன்னார் மேனியுடை முருகப்பெருமான் அவ்வளவு எளிதாக காரிருள் கொண்டிட்ட கசடான நாறும் மும்மல தேகத்துள் பிரவேசிக்க ஒருபோதும் விரும்ப மாட்டான்.
அப்படிப்பட்ட தூய்மையான முருகனும் அன்பர் தம் பக்திக்கு இரங்கி அவனை சாரும் வாய்ப்பு ஒன்று மட்டுமே உள்ளது. ஆதலின் முருகன் நம்மை சார்ந்திட என்ன செய்ய வேண்டும் என்பதையும் அந்த முருகப்பெருமானே பக்தியுடைய சீடனுக்கு உணர்வால் உணர்த்துவார்.
எத்தனை எத்தனை பாவம் செய்திருந்தாலும் சரி, இன்று முதல் மாறி முருகா உமது திருவடிக்கே எமது உள்ளம், உடல், பொருள், ஆவி அனைத்தும் அர்ப்பணிக்கிறேன் என்றே முருகனது திருவடிகளிலே முழுச் சரணாகதியினை முதலில் அடைதல் வேண்டும்.
அதைவிட முக்கியம் பாவியாகாதிருக்க வேண்டும், அதனினும் முக்கியம் உயிர்க்கொலை பாவமதனை எந்த ஒரு நொடியிலும் செய்தலாகாது. உயிர்க்கொலை தவிர்த்து, புலால் மறுத்து, சுத்த சைவ உணவை முதலில் மேற்கொள்ள வேண்டும். தினம்தினம் மறவாமல் காலை 10 நிமிடமும், மாலை 10 நிமிடமும், இரவு 10 நிமிடமும் முருகனது திருவடி பற்றி “ஓம் முருகா” என்றோ “ஓம் சரவண பவ” என்றோ “ஓம் முருகப்பெருமான் திருவடிகள் போற்றி” என்றோ “ஓம் சரவணஜோதியே நமோ நம” என்றோ நாமஜெபமாகிய பூஜையை மனமுருகி செய்திடல் வேண்டும். மாதம் ஒருவருக்கேனும் பசித்த ஏழைகளுக்கு பசியாற்றுவிக்க வேண்டும் என்கிற மிக முக்கியமான அடிப்படையான தகுதிகளை முதலில் வளர்த்து கொண்டு செயல்பட செயல்பட, முருகனது அருள் கூடும்.
முருகனருள் கூட கூட, அனைத்து இரகசியங்களும் முருகனருளால் அவர் தமக்கு விளங்கி அசுத்த தேகமதை தூய தேகமாக மாற்றிட வழிவகை கிடைத்து, முருகன் அவனது தேகம் சார்ந்து சுத்தி செய்ய செய்ய, இறுதியில் ஒளி பொருந்திய தேகமாக இவனது தேகமும் மாறி தானும் தலைவனும் ஒன்றென ஆகுமாறு தயாநிதி தனிக் கருணை தெய்வம் முருகப்பெருமானின் பெருந்தயவினாலே, கருணையாலே இவனும் தலைவனும் ஒன்றாகி அருட்பெருஞ்ஜோதி வடிவினனாகி அற்புதமான நிலையையும் எய்துவான். முருகன் கருணையே கருணை! முருகன் கருணையே கருணை!! முருகன் கருணையே கருணை!!!
ஒருபோதும் அற்புதமான இந்த நிலையை அடைய சீடனது பாவம் விடாது. எப்படி முயற்சி செய்தாலும் தடுத்து அவனை மீண்டும் நரகத்திலே தள்ளும். ஆயினும் என் செய்வது? முருகனருள் பெற்று முற்றுப்பெற்ற ஞானியர் தம் திருவடித் துணையினாலன்றி முருகனை அணுவளவும் நெருங்க முடியாது. ஞானியரே முயற்சிப்பவன் வினை வரும் வழி அறிந்து அவனை வினையினின்று மீட்டு மீள்வினை சேராது பாதுகாப்பர்.
அந்தவிதமாய் ஞானியரும் அரூபநிலை நிற்கின்ற படியினாலே ஞானியர் பூசைகளே நமக்கு துணை. ஞானவர்க்கத்தினுள் உதித்த சற்குருவின் துணையும், சொற்குருவாய் உள்ள குருநாதரின் முழு பாதுகாப்பும், தயவும், கருணையும் இருந்தாலன்றி ஒரு அடி கூட ஞானத்துறையில் செல்ல முடியாது. அவரவர் செய்கின்ற பக்திக்கு உரிய பலன் கிடைக்குமே அன்றி சொற்குரு துணை இல்லாவிடினில் ஞானமடைவது எளிதன்று.
ஆயின் சொற்குருவை எப்படி காண்பது? எவரொருவர் ஜாதி, மத, இன, மொழி, தேச பாகுபாடற்றும், எவ்வுயிரையும் தம்முயிர்போல் எண்ணுகின்ற தாயுள்ளமும், பொருள் பற்றற்றும், காமவிகாரமற்றும், கோபம் அற்றவராயும், உலக நலனே தனது கொள்கையாக கொண்டு தன்னை அர்ப்பணித்து தலைவன் திருவடியே துணையென்று தூய நெறியிலே எவ்வுயிர்க்கும் தீங்கு நினையாத மனநிலையில், ஜீவதயவின் சிகரமாக விளங்கி நிற்கிறாரோ அவரே சொற்குரு ஆவார். அவர்தம் சீடராகி முருகனை, முருகனது அருளை, வடிவை, அன்பை, கருணையை சொற்குரு காட்ட காட்ட, அறிந்து அவர்தம் வழிகாட்டலில் நடந்து நடந்து நாமும் வெற்றி பெறலாம் என்பதையும் அறியலாம்.
இனி உலகெங்கும் சரவணஜோதி வழிபாடே நிலைபெறும் என்பதையும் அறம், பொருள், இன்பம், வீடுபேறடைய சரவணஜோதி வழிபாட்டைத் தவிர வேறு உகந்த மார்க்கம் ஏதுமில்லை என்பதையும் அறியலாம்.
இதுவரை இவ்வுலகம் கலியுகத்தின் மாயையுள் ஆட்பட்ட காரணத்தினாலே புறசமய சடங்குகளினாலே ஆட்பட்டது என்றும், தற்காலம் ஞானசித்தர் காலம் என்றும் அந்த ஞானசித்தர் காலத்திலேதான் ஆதி ஞானத்தலைவன் சுயஞ்ஜோதிபிரகாச அருள்ஜோதி வடிவினனான முருகப்பெருமான் நேரில் வெளிப்படுவான் என்பதையும் அறியலாம்.
முருகப்பெருமானை வணங்கி நேரில் தோன்ற, தரிசிக்க நமது இந்த தேகத்தினில் உள்ள சாதாரண கண்களுக்கு சக்தி இல்லையென்றும், சதகோடி சூர்ய பிரகாசமும் பொன்னிறமும் கொண்டு அந்தி செவ்வானம் போல் பட்டொளி வீசி மிளிர்கின்ற சதானந்த சாந்த சொரூப ஜோதி முருகனை இந்த புறக்கண்களால் பார்க்க முற்பட்டால் கண் பார்வை போய்விடும்.
ஆதலால் முருகன் நேரில் தோன்ற வாய்ப்பில்லை ஆதலினாலே அவரவரும் வீட்டினில் ஒரு நெய் தீபமோ, நல்லெண்ணை தீபமோ ஏற்றி முருகனின் தாரக மந்திரமான “ஓம் சரவணஜோதியே நமோ நம” என்றே தொடர்ந்து மனமுருகி ஜெபித்து வரவர, நாம் ஏற்றிய ஜோதியில் முருகன் தோன்றி நமக்கு அருள் செய்வான் என்பதையும், முருகனை தொடர்ந்து வணங்கி வணங்கி, அவன் ஜோதியில் தோன்றி அருள்வதையும் கண்டு ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ளலாம்.
-சுபம்
No comments:
Post a Comment