Contact தொடர்பு

உலகமக்கள் நன்மைகருதி சித்தர் சுவடிகள்

Saturday, 20 August 2016

ஞானம் பெறுதல் மிகமிக நீண்ட பயணம்

முருகா என்றால் :


அன்னதானமும் பூஜையும் அவரவர் ஆன்மலாபத்திற்காக தன்னலமற்று பிரதிபலன் பாராது செய்கின்ற புனிதச் செயல்களாகும் என்றும், அவற்றை பிரதிபலன் கருதி செய்வதினாலே பலனில்லை என்ற உண்மையையும் உணரப்பெறுவார்கள்.


ஒரு மனிதன் காலை எழுந்து உடலில் உள்ள கழிவுகளை காலத்தே வெளியேற்றி பசித்தபோது உடல் வளர்க்க உணவினை உண்டு, உடல்தனை ஆரோக்கியம் கெடாமல் உடம்பிற்கு என்னென்ன வேண்டும்? எது நல்லது? எது கெட்டது? என்று பார்த்து பார்த்து செய்வது போலவே அவனது ஆன்மாவிற்கு என்ன செய்கின்றான் என்றால் ஒன்றுமில்லை.


உடல் காக்க ஏதேதோ செய்து செய்து காக்கும் அவன் அவனது ஆன்மாவிற்கு ஆக்கம் தருகின்றது எவை எவை என்றே தெரியாமல் வெகுபேர் தடுமாறுகின்றனர்.


முருகப்பெருமானை வணங்க வணங்க முருகன் அருள்கூடி அருள் பெறும் அன்பர்தாம் அவரவர் செய்த செயல்களிலே கர்வம் கொள்ளாது அவர்தம்மை ஆறுமுகன் காப்பான். உடல்காக்க உணவு உண்டு மருத்துவம் செய்வது என்ற பலவழிதனிலே உடலை காத்து வரும் மனிதன் ஆறுமுகனார் அருள்கூடிட பல ஞானிகளுக்கு அறிந்தோ அறியாமலோ செய்திட்ட தொண்டின் பலனினால் அவன்தன் ஆன்ம அறிவு தூண்டப்பட்டு உடல் வளர்த்தல் மட்டுமே வாழ்வன்று, உடம்பின்கண் உறையும் ஆன்மாவையும் ஆக்கம் பெறச் செய்ய வேண்டுமென்ற அருளுணர்வு மேலோங்கும்.


அவனின் அந்த அருளுணர்வு ஆறுமுகனாம் முருகப்பெருமான் அவனுக்களித்த அருள் பிட்சையாகும். அந்த அருள் பிட்சையே அவன் அவனது பிறப்பினிலே மனிதனாய் பிறந்ததின் பலன்தனை பெறும் பயனாம். அருள்பிட்சை பெற்றவன் உயிர்க்கொலை தவிர்த்தும், புலால் மறுத்தும் வாழ்ந்து, உயிர்க்கொலை பாவத்திலிருந்து தப்பிக்கின்றானோ அதுவே அவன் தனக்கு ஆண்டவன் ஆறுமுகன் செய்கின்ற அளவிலாத கருணையாகும். பிறர் தமக்கு அன்னதானம் செய்திட வேண்டுமென்ற உணர்வே உயிர்க்கொலை தவிர்த்தால்தான் வரும். உயிர்க்கொலை தவிர்த்தது முருகனின் அருள்பிட்சை.


அன்னதானம் செய்திட வேண்டும், புண்ணியம் சேர்க்க வேண்டும், பூசை செய்திட வேண்டும், இறையருள் பெற்றிட வேண்டுமென்ற உணர்வு வருவதே பரப்பிரம்மம் முருகன் அளவிலாத கருணைக்கொண்டு அவனுக்கு அளித்திட்ட பிட்சையாகும். பிட்சைபெற்ற நாம் அருளாளன் முருகன் திருவடியை மனமுருகி பூசித்திட வேண்டுமே அன்றி பூசை செய்துவிட்டோம் அன்னதானம் செய்துவிட்டோம் என்று வியப்பது தன்னை வியந்து பாராட்டிக் கொள்வது இவை தம்மால் செய்யப்பட்டது, தனது ஆற்றலால், தனது பணத்தால், தனது உழைப்பால், தனது செயலால், தனது அறிவால் செய்தோம் என்று எண்ணுவதே தலைவன் அருள் அவன்பால் குறைகின்றது என்பதை உணர்த்துவதாகும்.


முருகன் போட்ட பிட்சையால் வாழும், பாவம் சூழ்ந்த மனிதவர்க்கம் நமக்கு ஏதோ போனால் போகிறது என்று அருட்பெருஞ்சோதி ஆண்டவன் முருகன் நமக்கு நல்லதை சொல்லித் தந்தான். பிரம்மாண்ட ஞானத்தில் அணுவளவே அன்னதானம் செய்தும் பூஜை செய்தும் தயவை அடையலாம் என்ற உண்மை, அதை தெரிந்து கொண்டு பெரிய பெரிய விஷயங்களை தெரிந்து கொண்டதாக எண்ணி சிலபேர்க்கு அன்னதானம் செய்துவிட்டு ஏதோ சிறிது பூசை செய்துவிட்டு பெரியதாக இறைவனை மகிழ்வித்து விட்டதாக மனதினுள் கற்பனை செய்து கொண்டு நான் அன்னதானம் செய்தேன், மனமுருகி பூசை செய்தேன், ஒன்றுமே நடக்கவில்லை என எதிர்பார்ப்பது மலையை உடைக்க சிறுகடுகை தெளித்துவிட்டு மலை உடையும் என எதிர்பார்ப்பதை போலானதாகும்.


அவனவன் செய்திட்ட பாவம்தான் எவ்வளவு எவ்வளவு. அவனவன் செய்திட்ட பாவச்சுமையின் அளவு கணக்கிலடங்காது. அவ்வளவு பாவச்சுமைகள் இருக்கும்போது சிறிதளவு புண்ணியம் செய்துவிட்டு சிறிதளவு பூசை செய்து விட்டு பெரும் பலனை எதிர்பார்ப்பது தவறு என்ற உண்மை உணர்வு முருகப்பெருமானை பூசை செய்வதால் வரும்.


உணர்வு வந்துமே ஆறுமுகன் திருவடியே கதியென்று பற்றினால் அன்றி நாம் செய்திட்ட பாவத்திலிருந்து விடுபட முடியாது என்றும் உடம்பை வளர்க்க உணவு உண்பதும் உடம்பின் நலன் பெற கழிவு நீக்கமும் அவசியமான கடவுளின் கட்டளை என்பதைப் போலவே. ஆன்ம பெருக்கம் ஆன்ம வளர்ச்சிக்கு புண்ணியமும் அருளும் தேவை என்பதினாலே அன்னதானம் செய்து புண்ணியம் பெருக்கி ஆன்மபலத்தையும் முருகப்பெருமான் திருவடியைப் பற்றி பூசித்து அவனருள் பெற்று ஆன்ம விளக்கம் பெறுதலும் நித்திய கடமைகள் என்ற உண்மை உணர்வு மிகுந்து அன்னதானமும் பூசைகளும் பிரதிபலன் எதிர்பாராது செய்திட வேண்டுமென்ற உள்ளுணர்வு மிகும்.


அன்னதானமும் பூசையும் ஆன்மலாபம் பெறுவதற்காக முருகப்பெருமானால் உமக்கு அளிக்கப்பட்ட அருள் பிட்சையாகும். அந்த அருள்பிட்சை பெற்றிட்ட நாம் ஞானத்தில் வெகுதொலைவு சென்றதாக கற்பனை பண்ணாமல் மேலும் மேலும் முருகன் திருவடியைப் பற்றிட வேண்டுமென்ற தன்னடக்கமும் நான் செய்ததோ என்றில்லாமல் ஆண்டவ உனது அருளால் சிறிது செய்தேன் ஏற்றருள் புரிவாய், நாயிற் கடையேனாகிய எமது பாவங்களையெல்லாம் ஒழித்து திருவடி பற்றிட அடியேன் எம்மை வழிநடத்துவாய்
ஞானத்தலைவனே என்றே அவனது திருவடியைப் பற்றி உண்மை ஞானம் பெற தூண்டும் ஆறுமுகன் அருள். உணவு உண்பது உடம்பின் நித்திய கடமைகள் போல பூசை செய்வதும், அன்னதானம் செய்வதும் ஆன்ம நித்திய கடமை என்றே உணர்ந்து செய்திடும் பக்குவம் வரும்.


அவரவர் பசிக்கு ஏற்றார்போல உணவு உண்பது போல, அவரவர் தகுதிக்கேற்றார்போலதான், தானதருமங்கள் செய்திட முடியும் என்றும், பசிக்கு ஏற்றார் போலத்தான் உணவு உண்பதைப் போல பக்தியும் ஓரளவிற்குத்தான் செய்திட முடியும்.


அதைவிடுத்து ஓயாமல் பக்தி செய்கிறேன் பேர்வழி என்று தொடர்ந்து மனம் ஓய்ந்து போகுமளவிற்கு பக்தி என்ற பெயரில் பிடிவாதம் முரட்டுத்தனமும் கொண்டு செய்திட்டால் வெறுப்பு ஏற்படுமே அன்றி மனஉருக்கம் ஏற்படாது என்றும் உணர்வார்கள்.


ஞானம் பெறுதல் மிகமிக நீண்ட பயணம் அதில் பொறுமையாக, நிதானமாக, பார்த்து பார்த்து செல்ல வேண்டும். திக்கு தெரியாத காட்டில் நடப்பது போலாகும்.


நாம் எந்த நிலை உள்ளோம், நாம் செய்த பாவபுண்ணியம் எவ்வளவு? நாம் நல்ல வழியில் சென்று கொண்டுள்ளோமா? என்றெல்லாம் ஒன்றுமே நமக்கு தெரியாது. ஆதலால் மனதினுள் போட்டு குழப்பிக் கொள்ளாமல் முருகா உன்னடி சரணடைந்தேன். நான் சரணாகதி அடைந்தது உண்மையோ பொய்யோ தெரியாது. என்னை ஏற்றருள் புரிந்திடுங்கள்.


எம்மை வழிநடத்துங்கள் என்றே ஞானத்தலைவன் முருகன் திருவடியை இறுகப் பற்றிக் கொள்வதை தவிர வேறுவழியில்லை என்ற உணர்வினை அந்த முருகனே உணர்த்த உணரப்பெறுவார்கள்.


முருகா! முருகா! முருகா! என்றே மனம் உருகி அழைத்திடுங்கள் அழைத்த அக்கணமே வந்தருள் புரியும் முருகன் அருள் பெற்று முற்றுப்பெற விழையுங்கள்.
..............


மகான் ஆறுமுக அரங்கமகாதேசிகர் சுவாமிகள்

No comments:

Post a Comment