Contact தொடர்பு

உலகமக்கள் நன்மைகருதி சித்தர் சுவடிகள்

Friday, 19 August 2016

முருகா என்றால் தானதருமங்கள் செய்வதன் பலனை அறியலாம்

முருகா என்றால்,

நாம் பெற்றுள்ள இந்த வாழ்வானது முருகன் அருளினால்தான் பெற்றோம் என்றும் இன்று நாம் சுகமாகி வாழ்வதற்கு காரணம் நாம் முன் ஜென்மங்களிலே செய்திட்ட பூஜையும் புண்ணியமுமே காரணம் என்றும் அதன் அடிப்படையிலேதான் முருகன் அருள் கூடி நமக்கு இன்று இந்தவிதமான வாழ்வு கிடைத்திருக்கிறது என்பதையும் உணர்வான்.

முருகா முருகா என்றே பக்தி சிரத்தையுடன் முருகன் திருவடியைப்பற்றி தவறாது தொழுது வணங்கி வரவர முருகன் அருள்கூடி ஒருசிலர் இப்பிறப்பிலே செல்வம் மிகுதியாக பெற்றிருந்தும் அந்த செல்வத்தை தமது முயற்சிகளினாலே தமது திறமையாலே தமது அறிவினாலே சம்பாதித்தது என்றே தம்மை வியந்து போற்றுகின்றனர். தாம் சம்பாதிப்பதை தாம் சுகமாக வாழ வேண்டுமென்று அளவிற்கு அதிகமாக ஆடம்பரமாக வாழ பொருளை செலவழித்து மாயையுள் ஆட்பட்டு தமக்கு உற்ற புண்ணியபலத்தையெல்லாம் ஒரு காலத்தில் மொத்தமாக இழந்துவிடுவதோடு மாயையின் வயப்பட்டதால் பாவங்களை ஏராளமாகச் செய்து பாவிகளாகி பெரும் பாவத்தைதான் சம்பாதித்து கொள்கின்றனன்.

இறைவன் நமக்கு பொருள் அளித்ததே புண்ணியத்தால் வந்த பொருளைக் கொண்டு தமக்கு உற்ற அடிப்படை தேவைகளுக்கு போக மிகுதி உள்ளவற்றை துன்பப்படுகின்ற, இயற்கை கடவுளால் தோற்றுவிக்கப்பட்ட தமது சகோதர உயிர்களுக்கு உதவி செய்தும், தானமளித்தும், உணவளித்தும் என்றே நற்காரியங்களை வாழ்நாள் முழுதும் பொருள் உள்ளபோதே காலம் உள்ளபோதே செய்து கொண்டு புண்ணியத்தை மேலும் பெருக்கிக் கொள்வதற்குதான் என்ற பேருண்மையை மெல்லமெல்ல உணர்வான் முருகபக்தன்.

மேலும் முருகனை வணங்க வணங்க தாம் பெற்ற பொருளை தமக்கு உற்ற தேவைகள் போக தம் வாழ்க்கைக்கு எதிர்காலத்திற்கென்று மயங்கி ஏராளமாய் பொருளை பெற்றும் பொருள் பற்றினால் யாதொருவருக்கும் ஈயாமல் பதுக்கி அந்த பொருளை யாருக்கும் பயன்படாது செய்கின்றவர்களெல்லாம் இறைவன் அளித்த வாய்ப்பை பயன்படுத்தாமல் போன பாவத்திற்கு ஆளாவதோடு பாசத்தின் வயப்பட்டு பொருள் பற்றின் மயக்கத்திற்கு உட்பட்டு பாவிகளாகி பெறுதற்கரிய மானுடப்பிறப்பினை பெற்றும் மானுடத்திற்கே உரித்தான பகுத்தறிவு இன்றி வாழ்ந்ததினாலும் ஜீவதயவின்றி வாழ்ந்ததினாலும் இச்சென்மம் முடிந்து அடுத்த சென்மத்தினிலே மனித பிறப்பினின்று கீழிறங்கி விலங்காக, அதுவும் பன்றியாயும் நாயாகவும் பிறந்து இந்த சென்மத்திலே பொருள் பற்றினாலோ தம்மை நாடினோரையெல்லாம் எப்படி விரட்டினானோ தருமம் கேட்டபோதெல்லாம் எப்படி புறக்கணித்தானோ அப்படி விலங்காய் பிறந்திட்ட அச்சென்மத்திலே உண்ண உணவின்றி அதைச் சொல்லக்கூட வாயின்றி அல்லலுற்று நம்மை நாடினோர் தவித்தது போலவே யாதொரு உதவியும் இன்றி ஊரெங்கும் அலைந்து திரிந்து ஒருவேளை பசியைக் கூட போக்கிக் கொள்ள முடியாத வகையினிலே பன்றியாயும் நாயாயும் அலைந்து அலைந்து திரிந்து திரிந்து கடும் வேதனையும் துன்பமும் அடையது விலங்காகவே மாண்டும் போவார்கள்.

இது அவர்களுக்கு இறைவன் அளித்த வாய்ப்பை தவறவிட்டதனால் கிடைத்த தண்டனை என்றும், என்று அந்த ஆன்மா ஆண்டவன் முருகன் திருநோக்கத்தில் வரப்பெறுகிறதோ அன்றுதான் அதன் பாவம் தீர்ந்து விமோசனம் அடையும் என்றே உணர்ந்து, அதுபோன்று வினைகள் காரணமாக இச்சென்மத்திலே அல்லலுற்று அலையும் உயிர்களை காணும்போதும் மனிதர்களை காணும் போதும் அந்த உயிர்படும் துன்பத்திற்கு காரணமான இந்த வினைக் குற்றங்கள் மனதினுள் முருகனருளால் தோன்றிட ஜீவதயவு பெருகி தம்முன் துன்புறும் உயிர்கள் இடர்களை களைந்திட தம்மால் ஆன முயற்சிகளை செய்திடல் வேண்டுமென்ற ஜீவதயவின் முதல் நிலை படிகள் மனதினுள் தோன்றி தமக்குற்ற பொருளை தானதருமங்கள் செய்து ஜீவதயவை பெருக்கி ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ள வேண்டுமென்ற உண்மை ஞான அறிவை முருகன் அருளால் பெறுவான் முருகபக்தன்.


ஜீவதயவினை பெருக்கிட முருகனை வணங்குவோம்.
ஜீவதயவின் தலைவன் முருகன் அருளை பெறுவோம்.

-சுபம்-

No comments:

Post a Comment