அரங்கனே கலியுக காப்பாளன், உண்மை குருநாதன், உலகாளும் ஞானவான், சற்குரு, சொற்குரு, ஞானகுரு
சிவராஜ ஞானியே அரசா போற்றி
சிவராஜ மகா தவசியே போற்றி
சிவராஜ யோகம் வென்ற சித்தே போற்றி
அப்பனே அன்னதனால் மக்கள்
அறுமுகன் ஆளும் குடிலை
ஒப்பு கொண்டு வந்து வணங்கி
உயர் சேவை புரிதல் வேண்டும்
வேண்டியே ஆசான் புகழை
விரும்பி ஆசான் தொண்டர்கள்
தொண்டுபட உலகமெங்கும் பரப்பி
தெரிவிப்பேன் சேவைகள் புரிய
புரியவே ஆசான் பெருமைகள்
புரிய புரிய இந்த லோகமதும்
அறிவில் சிறந்து மெய் ஞானம்
ஆன்மீக வழி வந்து ஞானலோகம்
ஞானலோகம் ஆவது உறுதி
ஞானிகள் பல தேசமும் பெருகி
ஞானவான் அரங்கன் அருளால்
ஞானசபை பெருகுவது உறுதி
உறுதிபட ஆசான் வழி வரும்
ஒவ்வொருவரும் இனி பிறவா நிலை
கருதியே ஞானசித்தி பெறுவார்..
எங்கு பார்த்தாலும், போட்டி, பொறாமை, வஞ்சனை, சூழ்ச்சி, அராஜகம், அடக்குமுறை, கொள்ளை, களவு என்றே உலகெங்கும் தீய குணங்களே வெளிப்பட்டு அதனதன் தீய சக்திகளெல்லாம் மிகமிகப் பெருகி அமைதியற்ற சூழ்நிலை உலகெங்கும் பரவி மக்களெல்லாம் தடுமாறுகின்றனர். உலகமெலாம் ஒற்றுமையுடன் உலக சமாதானம் பெற்று உலகெங்கும் உயர்வான பண்புகள் பெற்று உலகெங்கும் ஞானம்பெருகி எங்கு பார்த்தாலும் அமைதியான சூழ்நிலை நிலவி மக்களெல்லாம் அமைதிபெற வேண்டியே ஆறுமுகனார் தாமே நேரினில் தோன்றி இவ்வுலகினில் நடக்கின்ற அராஜகங்கள், தீயசக்திகள், அநீதிகளையெல்லாம் அப்புறப்படுத்தி அமைதி ஏற்படுத்திடவே அவதரித்தார் அரங்கன் வடிவினிலே.
ஆறுமுகன் சக்தியாக அரங்கன் தோன்றியே ஞானஅரசாய் வெளிப்பட்டு அளவிலாத யோகமும் தவமும் செய்து வெற்றிகள் பெற்றதோடு உலகநலம் கருதியே தாம் பெற்றிட்ட தவயோக சக்திகளோடு உலகினை காத்திட ஆறுமுகன் அகத்தியரின் பெயரினாலே அளவிலாது உலகை காக்க தவமும் செய்தும் அரும்பெரும் தருமங்களையும் செய்து செய்து பிரம்மாண்டமான தர்ம, தவஆற்றலை உண்டாக்கினர்.
அதன் தொடர்ச்சியாகவே உலக நலம் கருதி உலக ஞானிகளெல்லாம் ஒன்று கூடியே உலகமாற்றம்தனை அற்புதமாய் நிகழ்த்திடவே சித்தர்கள் ஞானிகள் பெயரினிலே சித்தர்கள், ஞானிகளது அருளை உலகம் பெற்று கடைத்தேறிடவே சித்தர் ஞானிகள் விழாவாம் சித்தர் சிறப்பு பூசைகளை மாதந்தோறும் நடத்தி வருகின்றார்.
அவ்விதமே மாதங்கள் வருடங்கள் என பல கடந்து தொடர்ந்து விழா நடத்தி வருகின்றதனாலே விழா பயனாய் இவ்வுலகினில் மேலை நாடுகளும், கீழைநாடுகளும் என்றே உலகின் எல்லா தேசங்களும் தங்களுக்குள் உண்டான பகைமைகளெல்லாம் ஒழிந்து மனமாற்றம் ஏற்பட்டு நட்புடன் நடந்து உலகமே ஒன்றுபட்டு ஒற்றுமை ஏற்பட்டு இந்த பூமியே அமைதி காணுமப்பா.
ஆதலினால் மக்களெல்லாம் ஆறுமுகனார் அருளாட்சி புரிகின்ற உலகின் பொது ஞான மையமாம் துறையூர் ஓங்காரக்குடிலினை யுகமாற்ற கேந்திரமாகவும் யுகமாற்ற தலைவன் ஆறுமுகனார் திருஅருள் ஆலயமாகவும், ஞானிகள் ஞானசபையாகவும் எண்ணியே அவரவரும் குடில்தான் இவ்வுலகை மாற்ற வந்த திருக்கூட்ட மரபினர் கூடிட்ட திருவளர் ஞானாலயம் என்றே சந்தேகமின்றி மனதினில் ஐயங்கள் தெளிந்து ஒப்புக்கொண்டு மனம் மகிழ பயபக்தியுடன் குடிலிற்கு வருகைதந்து வணங்கி உலக மாற்றத்திற்கான தன் பங்காக பணிந்து பயபக்திபட தொண்டுகள் புரிந்திடல் வேண்டும்.
உத்தம மகாஞானி அரங்கன் குடிலை முழுமனதாக நம்பி வருகையுற்று உலகமாற்றம் வேண்டி தொண்டுகள் செய்திட செய்திட அவர்களெல்லாம் அவரவர் தம் பிரச்சனைகள் தீர்ந்து உண்மை ஞானமும் யோகமும் பற்றிய தெளிவான அறிவைப்பெற்று ஜென்மத்தைக் கடைத்தேற்றும் மார்க்கத்தை அறிவதோடு ஆற்றல்மிகு அரங்கமகா ஞானதேசிகர் தம் ஆற்றல்களை அவர்களெல்லாம் உணர்ந்திடுவர்.
உணர்ந்திட்ட அவரவரும் உணர்ந்த அரங்கன் பெருமைகளையும், ஞானிகள் பெருமைகளையும், சித்தர்கள் பெருமைகளையும், ஓங்காரக்குடிலின் தன்மையையும் அதன் பெருமைகளையும், ஜீவகாருண்யத்தின் தன்மை, ஆற்றல் பெருமைகள் என்றே உலக மக்களிடத்து கூறிகூறி இவையனைத்தும் ஒருங்கே பெற்றிட்ட அரங்கனை முன்னிறுத்தி அரங்கனே உலகை காக்க வந்திட்ட இரட்சகர் அவர்தாம் ஆறுமுகனின் அவதாரம் அவரே கலியுக இடர் நீக்க வந்திட்ட அவதாரபுருஷர். அவர்தாம் மக்களின் இடர் களைய வந்து உதித்திட்ட கலியுக காப்பாளன். அவரே கடைத்தேற்ற வல்லவர். அவரே துயர் துடைக்க உற்ற துணை. மக்களுக்கு அரங்கன் திருவடியே ஞானமளிக்கும். அரங்கன் உபதேசமே நன்னெறிப்படுத்தும்.
அரங்கர் காட்டும் பாதையே நம்மை நல்லோராக்கும் அரங்கனின் பாதுகாப்பே நமக்கு அறவேலி, அவர்தரும் காப்பே ஞானவேலியாம். அரங்கர்தம் துணையே நமக்கு இக்கலியுகத்தின் மிகஉயர்ந்த வரம் என்றெல்லாம் அன்பர்களும் தொண்டர்களும் அவரவரும் குடில் சார்ந்து தாம் பெற்ற அற்புதங்களையும் தாம் அரங்கனை வணங்கி பெற்றிட்ட மாற்றங்களுடன் இணைத்து உண்மையாக உள்ள உண்மைகளை அரங்கனின் புகழை அனைவரும் அறிய உரைத்து உலகோர் தம்மை தூயநெறியாம் அரங்க மார்க்கமதனில் வருகையுறச் செய்து அவர் தம்மையும் ஞானிகள் திருவடிக்கே ஆளாக்கி அவர்களை காத்து கலியுகத்தின் யுகமாற்றத்தின் பயனை அவர்கள் அடைந்து கடைத்தேறிடவே தொண்டர்களும் அன்பர்களும் தன்னலமற்று மனம் விரும்பி உள்ளமெல்லாம் அன்பு மேலோங்க உலகோர் தம் குற்றம் மறந்து அவர்தம்மை நல்லோர்களாக்கிட தியாகத்துடன் கூடிய சிறப்பான தொண்டினை அற்புதமாய் செய்திடல் வேண்டும்.
அன்பரும் தொண்டர்களும் உண்மையுடன் மனம் விரும்பி அரங்கர் பெருமைகளை உலகிற்கு அவர்கள் விரும்பி, பின்பற்றுகின்ற வண்ணமே அரங்க நெறிகளை சொல்ல சொல்ல உலக மக்களும் அரங்கர்தம் வழிக்கே வருகையுற்று ஞானியர் வழிபாடுகளை செய்வர்.
உலகெங்கும் அரங்கன் வழிபாடு கூடகூட வழிபாடு செய்கின்றோர் தமக்கு அரங்கனின் புகழ், அரங்கனின் பெருமை, அரங்கனின் ஆற்றல், அரங்கனின் வடிவம், அரங்கனின் தோற்றம், அரங்கனின் அற்புதங்கள், அரங்கனின் செயல்பாடுகள் என்றே அனைத்தும் புரிய புரிய, புரிந்த அந்த அரங்க பக்தர்கள் தமக்கு ஆறுமுகனை வணங்கினாலும் சரி, அகத்தியனை அவர்கள் வணங்கினாலும் சரி, இன்னும் முற்றுப்பெற்ற முனிவர்கள், ஞானிகள், சித்தர்கள் என்று யாதொருவரையும் பக்தி சிரத்தையோடு வணங்கினாலும் சரி, வணங்கினோர்க்கெல்லாம் இக்காலம் இனிவருங்காலம் என்றே எக்காலத்திலும் யுகமாற்ற தலைவன் அரங்கனின் தோற்ற தேகவடிவினிலே அவரவர் பக்தியின் திறத்திற்கேற்ப உடன் அவர் முன் ரூபமாய் அரங்கர் வடிவினிலேதான் எல்லா ஞானிகளும் தோன்றி அருளுவார்கள்.
ஆதலின் அரங்கமகாதேசிகனே இவ்வுலகின் அனைத்தும் அவர்தம் சிந்தையினிலே இருந்த இடத்திலிருந்தே அறிபவர் ஆவார். ஒரே சமயத்தினிலே உலகினில் ஆங்காங்கு அன்பர்தமக்கு காட்சி தருகின்ற அரங்கமகாதேசிகர் இனி எண்ணிறந்த ஆயிரம் ஆயிரம் இடங்களிலே அவர்தம் வடிவினிலே அரங்கர் தம்மை உலகின் அனைத்து மக்களும் ஒரே சமயத்தினிலே தரிசிக்கின்ற காலமும் வெகு விரைவினில் கூடி வருகுதப்பா.
அப்பப்பா அந்த காலத்தின் அற்புதங்களை எங்ஙனம் சொல்வோம் ஞானிகள் நாங்கள். அற்புதம் அற்புதம் இந்த பூவுலகமே அநீதி மறைந்து நீதி பெருகி அராஜகம் அழிந்து அமைதிபரவி, பொய் கபட வேடதாரிகளெல்லாம் தன்னிலை மாறி தவச்சான்றோர்கள் வசம் அடைக்கலமாகி தன்னிலைதனை மாற்றிக் கொள்ளவும், பண்புள்ளோர் பயமின்றி வாழும் சூழலும் உருவாகி உலகமே சொர்க்க லோகமாக மாறி உலகமே அறிவினில் சிறந்து மெய்ஞானம் பெருகி மக்களெல்லாம் மெய்ஞான வழிதனக்கு வருகையுற்று உண்மை ஆன்மீகம்தனை வாழ்க்கை முறையாகக் கொண்டு உண்மை ஆன்மீக வழி நடந்து போலி ஆன்மீகம் ஒழிந்து உலகம் ஞானலோகமாகவே மாறி உலகெங்கும் ஞானமெனும் அருளொளி வீசி அற்புதமாய் ஜொலிக்க போகிறதப்பா.
இது கற்பனையல்ல. உலகமே ஞானலோகமாக மாறப்போவது உறுதி உறுதி. இது நாரதமுனியின் வாக்காகும் சந்தேகம் உறல் வேண்டாம். நம்புங்கள் மக்களே. ஞானிகள் எல்லாம் பல தேசங்களிலும் உருவாகி உலகெங்கும் ஞானிகள் பெருகி ஞானவான் ஞானயுகத்தலைவன் அரங்கன் அருளாலே இன்றுள்ள ஞானசபை இனிவரும் காலங்களிலே பெருகி பெருகி மிகப் பிரம்மாண்டமாவது உறுதி உறுதி இது நாரதன் வாக்கு.
ஆதலின் மனஉறுதியுடன் திட சித்தத்துடன் ஒவ்வொருவரும் அரங்கன் வழி வந்திடல் வேண்டும். அரங்கனே கலியுக காப்பாளன், உண்மை குருநாதன், உலகாளும் ஞானவான், சற்குரு, சொற்குரு, ஞானகுரு என்றே மனம் விரும்பியே ஏற்றுக்கொண்டு உறுதிபட அரங்கன் வழிதனிலே வருகையுறுகின்ற ஒவ்வொருவருக்கும் இனி பிறவா நிலைதனை பெற்றிடவே அவரவரும் தூயநெறி செல்லும் வாய்ப்பு ஏற்பட்டு அரங்கனருளால் ஞானசித்தியையும் பெறுவார்கள் என தமது ஞான சூட்சும நூல் மூலம் அன்பர் தொண்டர் கடமையுரைத்து ஞானலோகம் படைத்திட அழைப்பு விடுக்கிறார் மகான் நாரதமுனிவர்.
-சுபம்-
Related Articles
2000 வருடங்களுக்கு முன் தமிழ்ச்சித்தர்கள் வகுத்த உயிரியல் (Biology)
Nathan Suryahttp://thamilsiddhas.blogspot.co.uk/2017/05/biology.html