Contact தொடர்பு

உலகமக்கள் நன்மைகருதி சித்தர் சுவடிகள்

Sunday, 7 May 2017

குருநாதர் உபதேசம்

அரங்கர் அருளிய அருளுரைகள்



இந்த கலிகாலத்தில் உண்மைப்பொருள் உணர்ந்த அகத்தியர் சன்மார்க்க சங்கத் தொண்டர்கள் அகத்தியர் சன்மார்க் சங்கத்தை தலைமை தாங்கி நடத்தி வருவதால் அங்கே வருகின்ற மக்களுக்கு பசியாற்றவும் வாய்ப்புள்ளது. அதேசமயம் உண்மைப்பொருள் அறிந்து கொள்ளவும் வாய்ப்புள்ளது. மற்றமற்ற இடத்தில் எல்லாம் ஆன்மீகம் என்ற பெயரில் உயிர்பலி கொடுத்தலும், வீண் ஆரவார சடங்குகளும் மற்றும் ஊர்ஊராக சுற்றவும் சொல்வார்கள். அகத்தியர் சன்மார்க்க சங்கத்தில்; மட்டும் பசியாற்றி வைத்தல் மற்றும் ஆசான் அகத்தீசர்தான் கடவுள் என்று அகத்தீசனை பூஜை செய்யச் சொல்வார்கள். மேலும், ஜீவகாருண்யமாகிய மனிதாபிமானம், மனித நேயம் போன்ற கொள்கைகளை சொல்வார்கள். ஜீவகாருண்யம் அல்லது மனித நேயம் அல்லது மனிதாபிமானம் இல்லாத வழிபாடுகள் எல்லாம் நெல்லில் பதறுபோன்று பயனற்றுப் போகும்.



ஓம் அகத்தீசாய நம, ஓம் நந்தீசாய நம, ஓம் திருமூலதேவாய நம, ஓம் கருவூர்தேவாய நம ஆகிய இந்த நான்கு மகான்களின் நாமத்தை, தினமும் சொல்லி வந்தால் எல்லா நன்மைகளும் உண்டாகும். காரணம் இந்த நான்கு மகான்களும் மரணிமில்லா பெருவாழ்வு பெற்ற முனிவர்கள் ஆவார்கள். இவர்களை தினமும் நினைத்தால், அக்கணமே வந்து அஞ்சேல் மகனே என்று அருள் செய்யும் வல்லமை இவர்களுக்கு உண்டு. ஆகவே, இவர்களின் நாமங்களை சொல்வோம். அருளாசி பெற்று நலமுடன் வாழ்வோம்.



மனிதர்கள்தான் ஆறறிவு படைத்தவர்கள் ஆவார்கள். அவர்கள்தான் கடவுளை அறியவும், அடையவும் முடியும். மேலும் கடவுளும் ஆகலாம். அதற்கு நல்ல மனம் வேண்டும். நல்ல மனம் வேண்டுமென்றால் நல்லவரும் வல்லவருமாகிய ஆசான் அகத்தீசனை "ஓம் அகத்தீசாய நம" என்று நாமஜெபம் செய்தால் தீய எண்ணங்களும், தீய பழக்க வழக்கங்களும் சிறிதுசிறிதாக நம்மைவிட்டு விலகிவிடும். விலகினால்தான் நல்ல மனம் வரும். நல்ல மனமும் அருள்பலமும் வேண்டுமென்றால் மாதம் ஒருவருக்காவது அன்னதானம் செய்ய வேண்டும். அப்படி செய்ய வாய்ப்பில்லை என்றால் விருந்தை உபசரிக்கலாம்.



அறப்பணி செய்வதற்கு குடும்பத்தில் உள்ளவர்கள் ஆதரவு வேண்டும். ஆதரவு வேண்டுமென்றால்,  குடும்பத்தில் உள்ளவர்கள், அவர்கள் மனம் மகிழும்படி நடந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் நாம் மேற்கொள்ளும் விருந்து உபசரித்தல், அன்னதானம் செய்தல் போன்ற காரியங்களுக்கு அவர்கள் துணையாக இருப்பார்கள். குடும்பத்தார்கள் ஆதரவு இருந்தால் இல்லறமும் சிறப்பாக நடைபெறும். நாம் மேற்கொள்ளும் ஞானவாழ்வும் வெற்றி பெறும். "ஓம் அகத்தீசாய நம" என்போம் குடும்பத்தார்கள் போற்றும்படி வாழ்வோம்.

.
காப்பான கருவூரார் போகநாதர்
கருணையுள்ள அகத்தீசர் சட்டைநாதர்
மூப்பான கொங்கணரும் பிரம்மச்சித்தர்
முக்கியமாய் மச்சமுனி நந்திதேவர்
கோப்பான கோரக்கர் பதஞ்சலியார்
கூர்மையுள்ள இடைக்காடர் சண்டிகேசர்
வாப்பான வாதத்திற்கு ஆதியான
வாசமுனி கமலமுனி காப்புத்தானே.


ரோமரிஷி பூஜாவிதி 7ல் கவி-2.


மேற்கண்ட பாடலில் 14 மகான்களின் நாமம் உள்ளது. இந்த பாடலை எழுதி வைத்துக்கொண்டு, தினமும் படித்து வந்தால், வறுமை தீரும், செல்வம் பெருகும், குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும். திருமணம் தடைப்பட்ட பிள்ளைகளுக்கு திருமணம் நடைபெறும். என்ன விவசாயம் செய்தால் லாபம் உண்டாகுமோ அதை நமக்கு ஞானிகள் உணர்த்துவார்கள். எனவே, இவர்களை பூஜிப்போம், அனைத்து நலனையும் பெறுவோம்.


..
அகத்திய மாரிஷி நமா என்றென்றோது
அஷ்ட சித்துதனை ஈவார் குளிகை ஈவார்
அகத்தியரே காஷாய வேட மீவார்
அப்போது சித்தரெல்லாம் கைக் கொள்வார்கள்
அகத்தியரைத் தெண்டனிட்டு மேரு செல்ல
யாருக்கும் தடையில்லை அரசே யென்பார்
அகத்தியர் தாம் எக்கியத்தில் பிறந்த யோகி
ஆயிரத்தெட்டு அண்டமெல்லாம் ஆணையாச்சே.

-கொங்கணர் கடைக்காண்டம் 500ல் 76


நாம் பலபிறவிகளில் ஆள்பலத்தால், அதிகாரபலத்தால், யான் என்ற கர்வத்தால் பலபாவங்கள் செய்திருப்போம். அந்த பாவங்கள் தீரவேண்டுமென்றால் தினமும் காலையில் 10 நிமிடமும், மாலையில் 10 நிமிடமும் "ஓம் அகத்தீசாய நம" என்று நாமஜெபம் செய்தால் பல பிறவிகளில் செய்த பாவங்களெல்லாம் பொடிப்பொடியாகிவிடும். ஆகவே தினமும் பூஜை செய்வோம், பல நன்மை பெற்று நீடு வாழ்வோம்.



நாம் மனைவிமீது சந்தேகப்பட்டு கொடுமைகள் செய்வோம். இதற்கு காரணம் அருள்பலமும், புண்ணியபலமும் இல்லாமையே ஆகும். அருள்பலமும், புண்ணிய பலமும் இருந்தால் எதிலும் திடீரென்று முடிவெடுக்காமல் ஆழ்ந்து சிந்தித்து முடிவெடுக்க வேண்டுமென்ற சிறப்பறிவு உண்டாகும். எந்த பாவத்தையும் செய்துவிட்டால் மீண்டும் அதை மாற்ற முடியாது. பாவம் செய்வதற்கு முன்னே புண்ணியவானாகிய அகத்தீசனை "ஓம் அகத்தீசாய நம" என்று நாமஜெபம் செய்தால், பாவம்செய்வதற்கு முன்னே தடுத்து ஆட்கொள்வார்கள்.


நமக்கு தக்க சமயத்தில் உதிவ செய்யக்கூடிய நண்பர்கள் மீது சந்தேகப்படுவோம். உண்மையாக தொண்டு செய்யும் வேலையாட்கள் மீது சந்தேகப்படுவோம். இந்த சந்தேகமே வெகு குடும்பத்தையும், நல்ல நட்பையும் கெடுத்துவிடும். நமது வாழ்க்கையையும் பாழ்படுத்திவிடும். சந்தேகம் என்ற நோய் கொடிய நோயாகும். இந்த நோய் தீர வேண்டுமென்றால், தினமும் "ஓம் அகத்தீசாய நம" என்று நாமஜெபம் செய்ததால் எது உண்மை, எது பொய் என்று அறிந்து கொள்ளலாம். நீடிய ஆயுளும் உண்டாகும். மன அமைதியும் வரும்.


ஒருசிலர் உங்கள் வீட்டில் செய்வினை செய்து வைத்துவிட்டார்கள் என்றும், இந்த செய்வினையை இரத்த கலப்பு உள்ளவர்கள் செய்தார்கள் என்றும், நண்பர்கள் செய்தார்கள் என்றும் சொல்லி விடுவார்கள். இந்த பேச்சை நம்பினால் உடன் பிறந்தவர்களின் பாசத்தையும் நட்பையும் கெடுத்துக் கொள்வார்கள். இதற்கு பரிகாரம் "ஓம் அகத்தீசாய நம" என்று நாமஜெபம் செய்தால் செய்வினை என்பது ஒரு மனப்பிரம்மையே என்று ஆசான் அகத்தீசர் நமக்கு உணர்த்துவார்கள்.


ஒருசிலர் மற்றவர்க்கு துன்பம் தந்து அதில் மகிழ்ச்சி அடையும் வன்மனம் இருக்கும். இதற்கு காரணம் பலஜென்மங்களில் செய்த பாவங்கள்தான். நம்மால் பிறர் துன்பப்பட்டால் அதை உணரக்கூடிய பக்குவம் வேண்டுமென்றால், தினமும் "ஓம் அகத்தீசாய நம" என்று நாமஜெபம் செய்தால், நம்மால் பிறர் துன்பப்படும்போது அதை உணரக்கூடிய அறிவு வரும். அறிவு வந்தால் அப்போதே அவன் கடவுளாகலாம்.


.
திருக்குறளை பார்த்தால் கடவுளை பார்த்ததாக அர்த்தம். திருக்குறளை தொட்டால் கடவுளின் திருவடிகளை தொட்டதாக அர்த்தம். திருக்குறளை படித்தால் கடவுளிடம் தொடர்பு கொண்டதாக அர்த்தம். திருக்குறள் படிப்பதை கேட்டால் கடவுளின் பெருமையை கேட்டதாக அர்த்தம். திருக்குறள் பரப்பிரம்ம சொரூபியான சிவபெருமானே இயற்றியதாகும். அதில் அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கும் தெளிவாக சொல்லியிருப்பதால் அதை பார்ப்பதும், தொடுவதும், படிப்பதும், படிக்க கேட்பதும் புண்ணிய செயல்களாகும். தெய்வத்தமிழில் சொல்லப்பட்டிருப்பதால் நமது பிள்ளைகளை தமிழை கற்க செய்ய வேண்டும். கற்றால் நமது பிள்ளைகள் கடவுள்தன்மை அடைவார்கள். எனவே, திருக்குறளை போற்றுவோம்! பூஜிப்போம்! வினைகள் நீங்கி வெற்றி பெறுவோம்!!



அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக்
குறுகத் தரித்த குறள்
-ஒளவையார்


கடுகைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக்
குறுகத் தரித்த குறள்
- இடைக்காடர்


தினமும் காலை, மாலை ஐந்து நிமிடமாவது "ஓம் அகத்தீசாய நம" என்று நாமஜெபம் செய்ய வேண்டும். பூஜை செய்ய தவறினால் எல்லா குணக்கேடுகளும் இருள்போல் நம்மை வந்து மூடிக்கொள்ளும். ஆகவே இதிலிருந்து விடுபடவேண்டுமென்றால் கட்டாயமாக சத்தியமாக "ஓம் அகத்தீசாய நம" என்று பூஜை செய்வோம்! புகழுடனும் பொருளுடனும் வாழ்வோம்!!.


நமக்கு துன்பம் வந்த காலத்தில், நாம் சொல்லாமலே குறிப்பால் அதை உணர்ந்து நமக்கு நல்ல மனதோடு உதவிகள் செய்திருப்பார்கள். அந்த உதவியை ஒருசிலர் மறந்து விடுவார்கள். அது குற்றமில்லை. நமக்கு உதவிகள் செய்தவர்கள் ஏதேனும் நம்மை கோபமாக பேசியிருந்தால் அவர் செய்த உதவிகளையும் மறந்துவிட்டு அவர்களுக்கு இடையூறு செய்தால் அந்த பாவத்தை நீக்க பரப்பிரம்மத்தாலும் முடியாது. எனவே நன்றி உணர்வோடு வாழ "ஓம் அகத்தீசாய நம" என்று நாமஜெபம் செய்வோம். நன்றி மறவாது நடந்து கொள்வோம்.


தற்பொழுது வெளிநாடு செல்ல வேண்டும், வெளிநாடு செல்ல வேண்டும் என்று சொல்கிறார்கள். ஆனால் வெளிநாடு சென்றவர்களோ, ஒரு சிலரைத் தவிர மற்றவர்கள் அத்தனை பேரும் இங்கே பட்ட துன்பத்தைவிட அதிகமாக துன்பப்படுகிறார்கள். வெளிநாடு சென்று திரும்பி வரும்பொழுது வெறுங்கையோடு வருகிறார்கள். இங்கே வாங்கிய கடனையும் கட்டமுடியாமல், சொத்தையும் இழந்து விடுகிறார்கள். எனவே "ஓம் அகத்தீசாய நம" என்று நாமஜெபம் செய்தால் உள்நாட்டிலேயே ஒரு வேலைவாய்ப்பு அமைந்து நல்லபடி வாழலாம். எனவே, அகத்தீசனை பூஜிப்போம்! ஆசிபெற்று வாழ்வோம்!!


சில பெண்கள் அதிக ஆடைகளை வாங்குவதும், நிறைய நகைகளை வாங்குவதும், தேவையில்லாத ஒன்றாகும். கையில் பணமிருந்தால் அதை வங்கியில் போட்டால் அதற்கு வட்டியும் கிடைக்கும். பணத்திற்கும் பாதுகாப்பு உண்டு. இந்த பணம் நாட்டிற்கும் நன்மை தரும், வீட்டிற்கும் நன்மை தரும். எனவே "ஓம் அகத்தீசாய நம" என்று நாமஜெபம் செய்தால் எது எது அவசியமோ அதில் மட்டும் கவனம் செல்லும், மற்றதில் கவனம் செல்லாது. எனவே, அகத்தீசனை பூஜிப்போம்! ஆசிபெற்று வாழ்வோம்!!.


ஒரு வீடு கட்டுவதற்கு முன், அதற்குத் தேவையான பணம் கையில் வைத்து கொண்டு எந்த அளவிற்கு வீடுகட்ட வேண்டுமோ அதை மட்டும் கட்டவேண்டும். அதிகமாக வீட்டை விரிவுபடுத்தினால் கடன் சுமை வரும். கடைசியில் வீட்டை விற்று கடன்கட்ட வேண்டிய சூழ்நிலைவரும். எனவே அகத்தீசனை பூஜிப்போம்! அளவறிந்து வாழ்வோம்!! நாம் குடியிருக்க வீடு கிடைக்காத கஷ்டத்தில் உருவர் நல்மனதோடு வாடகைக்கு வீடு கொடுப்பார். அவர் விரும்பும் காலத்தில் வீட்டை காலி செய்து கொடுப்பது நல்லதாகும். அதை தவிர்த்து காலி செய்து தரமாட்டேன் என்று அழிவழக்கு பேசுவது பாவமாகும். எனவே அகத்தீசனை பூஜிப்போம்! பண்புடன் வாழ்வோம்!!



பொய்சொல்லாதே, பொறாமைபடாதே, புறம்கூறாதே, பிறரைகோபமாக பேசாதே, பிறர்சொத்தை அபகரிக்க நினைக்காதே என்று சொன்னாலும் நமது அறிவுக்கு படாது. ஆகவே "ஓம் அகத்தீசாய நம" என்று நாமஜெபம் செய்தால் மேற்கண்ட குற்றங்களெல்லாம் நம்மால் உணரமுடியும். இல்லையென்றால் அறிவுரையெல்லாம் ஏட்டளவிலேயே நின்றுவிடும். எனவே அகத்தீசனை பூஜிப்போம்! பழியில்லா வாழ்வை மேற்கொள்வோம்!!

.
ஒரு சிலருக்கு கையில் நிறைய பொருள் வசதி இருக்கும். இந்த பொருளை அறப்பணிகளுக்கு செலவு செய்து புண்ணியத்தை பெருக்கிக் கொள்ள வேண்டுமென்ற எண்ணம் வராது. இதற்கு காரணம் கொடிய நோயான லோபித்தனம். இந்த லோபித்தனம் தீரவேண்டுமென்றால் அறக்கடவுளான ஆசான் அகத்தீசனை தினமும் பூஜை செய்து வந்தால் செல்வம் உள்ளபோதே அறப்பணி செய்து ஆன்மலாபம் பெற்று கொள்ளலாம்.


 மேற்கண்ட தத்துவங்கள் அத்தனையையும் படித்து உணரவேண்டும் என்றால் அகத்தீசனை பூஜை செய்தால் தான் உணரமுடியும்.

No comments:

Post a Comment