Contact தொடர்பு

உலகமக்கள் நன்மைகருதி சித்தர் சுவடிகள்

Saturday, 13 May 2017

சித்தர்கள் வரலாறு - பாகம் 1

சித்தர்கள் பற்றிய தகவல் தரும்
மகான் சுப்ரமணியர் ஆசிநூல்




1. அருள்பலம் கொண்ட பாரதமே
ஆக்க சக்தி கொண்ட கலியுகமே
பொருள்பல வளமோடு புண்ணியபலமும்
பூவுலகில் குறைவில்லா காக்கும்


2. காக்கும் இயற்கை மகா சக்திகளே
கார்த்திகை மைந்தன் சுப்ரமணியன் யானும்
ஆக்கமுடன் ஆசிதந்து வளமுற
அரங்கமகா ஞானி சித்தர்கள் பூசை


3. பூசை செய்து சித்தர்கள் பெருமையை
பூவுலக வாசிகள் அறிய வேண்டி
பூசைவழி அரங்கன் வேண்டி கேட்க
புகலவந்தேன் சித்தர்கள் பற்றிய விபரம்தன்னை


4. தன்னிலே ஆசி விளக்கமாக
தாமுரைக்க வந்தேன் விஜய மிதுனதிங்கள்
முன்னிலை பெற்ற திருமூலனும்
மொழிகுவேன் சிவன் நந்தி உபதேசம்கண்டு


5. கண்டுமே எண்ணாயிரம் திருமந்திரம்
கலியுக மக்களுக்கு விளம்பியே
தொண்டாற்றி நங்கை திங்கள் அவிட்டமீன்
தில்லை நடனசிற்றூர் முக்திதானே



6. தானுரைக்க எந்தன்பால் தமிழ்கற்று
தலைமை முனி ஆன கலசமுனி
ஞானமுள மித்ராவருணர் வீரியத்தில்
நற்குடம் தோற்றமென எடுத்துரைப்பேன் 


7. உரைக்கவே எந்தன் நிலை கும்பமுனி
உயர்வான சாபதிங்கள் ஆயில்யமீன்
குறைவில்லா கும்பகோணம் முக்தி
கோடி மேலான சீடர்கள் கொண்ட குருவப்பா



8. அப்பனே பதஞ்சலி முனிவர்தானும்
அதிக யுகம் கண்ட யோகியப்பா
காப்பான அவுசதம் ரசவாதம்
கருணைபட சாஸ்திரம் தந்த ஞானியப்பா


9. அப்பனே சேல் திங்கள் மூலமீனில்
அவதரித்து முக்தி ராமேச்சுவரம்தானே
காப்பாக திருப்பட்டூரும் ஒருயுகம் கணக்கே
கமலமுனி குறிப்பும் தொடரக் கேளும்


10. கேளுமே உயர்ஞான உபதேசம்
குறைபடா மக்களுக்கு விளம்பிய
ஞாலமதில் உயர் ஞானியப்பா
நாட்டிட விடை திங்கள் பூசமீனில்


11. மீனதுவும் ஆரூரில் முக்திசொல்ல
மேலான குதம்பைசித்தர் குதம்பைஅணிகலன்அணிய
ஞானம் பெற்றார் அத்திமர பொந்தில் தவமியற்றி
நல்லொழுக்கம் நல்விரத வழிமுறை விளக்கி


12. விளக்கி ஞானவழி சித்தியை
வினவிடுவேன் நள்ளிதிங்கள் விசாகமீனில்
கலக்கமிலா மாயவரம் சித்தி
கண்டுரைப்பேன் கோரக்கர் தானும்


13. தானுமே மச்சமுனி சீடனப்பா
தவசித்தி முறை ஞான விளக்கம்
ஞானமூலிகை படைத்து சித்திகண்ட
நாளதும் தேள்திங்கள் அவிட்டம் மீனப்பா


14. அப்பனே பேரூர் சித்தி எல்லை
அடுத்துமே தன்வந்திரி விளக்கம்கேள்
காப்பான ஞானம் அவுசத வகை
கடைத்தேறிய உயர் ஞானியப்பா


15. அப்பனே துலைதிங்கள் புனர்தமீனில்
அவதரித்து புல்லிருக்கும் வேலூர்முக்தி
ஒப்பில்லா சுந்தரானந்த சித்தரும்
ஓதிடுவேன் ஆலவாய் எல்லை சித்தி


16. சித்தியதும் யாளிதிங்கள் கடைமீனில்
சிவயோக ஞானபலம் கொண்டவர்
உத்தமமாய் உலகோர்க்கு விளம்பிய
உயர் ஞானம் யாவும் அறிவோமே


17. அறியவே கொங்கணர் குறிப்புகேளும்
அவதரிப்பு கொங்குநாடு யாதவ குலம்
தெரிவிக்க தோன்றி ஞானம்பட
திருமூலர் போகரிடம் சித்தியோகம் கற்று


18. கற்றுமே தகர் திங்கள் உத்திராடமீனில்
கண்டுரைப்பேன் ஏழுமலை இவன்முத்தி
பற்றறுத்த சட்டமுனி குறிப்பு கேளும்
பாடிடுவேன் சிங்கள வகுப்பு தோற்றம்


19. தோற்றமே வைணவ சைவ பேதகமகற்ற
தெளிவு ஞானம் தந்த ஞானி
உற்றதொரு மேருபல கண்டு சேவைசெய்து
உயர்வான வேங்கை திங்கள் சீரிடமீன்


20. மீனின் காலம் திருவரங்கம் முக்தி
மேலான வால்மீகி வேடர்குலம்
ஞானம்பெற நன்நூல்கள் தந்துமே
ஞாலமதில் நங்கைதிங்கள் அனுசமீன்


21. மீனுமே ஐயாறில் சித்தி என்போம்
மேருவெனும் அழகர் மலையதும்
ஞானமுள ராமதேவர் சித்திதானே
நாட்டிட விஷ்ணு குலம் தோற்றமே


22. தோற்றமே சால் திங்கள் பூரமீனில்
தொடர்ந்து கடை முக்தி இதுவே
ஏற்றமிகு நந்தீஸ்வரர் குறிப்பு கேள்
இராமனின் சீதாபோல் பூமியில் வரமாய்கிடைத்தார்


23. கிடைத்தாரே சிலாத மகரிஷி சித்ரவதிக்குசேயாய்
குறையில்லா ஞானம் பெற்று இவரும்
சோடைபோகா ரேசகபூரக சூரியசந்திர காரி
சுத்தபூசை வீதி ஞானம் அருளியே


24. அருளியே விடைதிங்கள் விசாகமீன்
அறிவிப்பேன் காசியில் முக்தி
அருளாளன் இடைக்காடர் தானும்
அறிவிப்பேன் இடைக்காட்டூர் செனித்து


25. செனித்திட நங்கை திங்கள் ஆதிரைமீன்
செப்பிட இடையர்குலம் தோற்றம்
கணித சோதிட வான சாஸ்திரவழி
காணவே சித்தி கண்டு நன்கு


26. கண்டுமே உலக நலம்கருதி
காலபருவமதில் நவகிரக இடமாற்றம்
உண்டான அமைத்து உயர்ந்தவர்
உலகத்தில் தீதலம் இவர்முக்தி


27. முக்தி கண்ட மச்சமுனி தானும்
மொழிகுவேன் மச்சம்வழி தோற்றம்
பக்திபட சிவ உபதேசம் கேட்டுசெனிக்க
பாருலகில் புகழுள்ள கோரக்கர் இவர்சீடனப்பா


28. சீடனால் மாயை வென்று சிறந்தவர்
செப்பிட நள்ளிதிங்கள் விமானமீனில்
திடம்பெற திருப்பரங்குன்றம் முக்திதானே
தெரிவிப்பேன் தேசம்பல கடந்துமே


29. கடந்துமே ஞானவழிமுறை பரப்பிய
கண்டுரைப்பேன் ரசவாதம் வென்ற
இடர் போக்கி காக்கும் ஆற்றலுள்ள
என்ரூபம் படைத்த போகர் விஸ்வகர்மாகுலம்தானே


30. தானவர் விடைதிங்கள் பரணிமீன்
தவசித்தி முக்தி கனி வேலவன்கோட்டம்
ஞானப்பால் உண்ட கருவூரார் தானும்
நாட்டிட கன்னர் குலம் தோற்றம்


31. தோற்றம் தகர் திங்கள் அஸ்தம்மீன்
தொண்டு உயர்உலோகவழி சிவம்படைத்து
ஏற்றமுள பக்திவழி பாசுரம் பாடியே
ஈடில்லா போகர் சீடன் இவர்என்று கேளும்


32. கேளுமே கரூரில் சிவமோடு சித்தி
கேட்டிடுவாய் பாம்பாட்டிசித்தர் குறிப்பும்
காலமதில் திருக்கோகர்ணம் ஜோகிபிரிவு தோன்றி
கண்டுரைப்பேன் குண்டலிஎனும் பாம்பின்ஞானம்



33. ஞானம் விளக்கி மக்களுக்கு
நல்சேவை செய்து மருதமலை அருள்பெற்று
ஞானமுடன் சங்கரன்கோவில் தன்னில்
நாட்டிடுவேன் தேள்திங்கள் சீரிடமீனில்சித்தி


34. சித்திபெற்ற புலிப்பாணி வேடர்குலம்
செனிப்பு நங்கைதிங்கள் சுவாதிமீனில்
முக்தியதும் கனிவேலவன்கோட்டம் சார்பு வைகாவூரே
மொழிகவே புலத்தீசர் புலன் ஒடுக்கம் ஞானம்


35. ஞானம் தனை உலகியலுக்கு விளக்கி
நற்பேரு கண்ட சித்தரப்பா
ஞானம்பெற யாளிதிங்கள் அனுசமீன்
நல்முத்தி பாபநாசம் எல்லைதானே


36. தானுரைக்க தேரையர் விபரம்
தட்டாத சீடனப்பா கலசமுனிக்கு
ஞானமுடன் கபாலநலி மன்னனுக்கு போக்க
ஞானமூலம் குருவருளால் கண்டு


37. கண்டுமே கபாலம் தங்கிய தேரையை
கலச ஜலம் வைத்து அகற்றிய மகிமை
தொண்டுபல செய்து பேருபெற்ற
தெரிவிப்பேன் வாகட சாஸ்தி ஆசானே


38. ஆசானிவர் பிரம்மகுலம் தோற்றம்
அறிவிக்க சேல்திங்கள் மூலமீனில்
நேசமுள இவர் முக்தி தோரணமலை
நிலைபெற சிவவாக்கியரும் சங்கரகுலதோற்றம்


39. தோற்றமே கலைதிங்கள் மகமீனில்
தெளிந்து ஹரிசிவம் ஒன்றென ஓதி
பற்றுமக்கள் உயர் உலோகவழி கொள்வதுகண்டு
பதறி கலங்கி உபதேசித்த சித்தரப்பா


40. அப்பனே இவர்முக்தி கும்பகோணம்
அடுத்துமே ரோமரிஷி புலன் கேளும்
காப்பாக தேகமெல்லாம் ரோமம் இருக்க
கண்டுரைக்க ரோமரிஷி எனும் நாமம் கொண்டவர்


41. இவர்தானும் புசுண்ட மகரிஷி சேய்
இயம்பிட மிதுன திங்கள் கார்த்திகை மீன் தோற்றம்
அவனியிலே அற்புத சித்தர் இவர் என்பேன்
அறிவிக்க கயிலை இவர் முக்தி என்பேன்


42. என்கவே காகபுஜண்டர் தானும்
 எடுத்துரைப்பேன் சேல்திங்கள் உத்ரமீன்
இன்புற செனித்து ஞானம்பயில
இவர் உரையின் விளக்கம் கேளும்


43. கேளுமே சேதமொன்றுமில்லாமல் மவுனமுற்று
கேட்டிட சிறப்பாக எத்தனையோ யுகங்களை
ஞாலமுடன் வேதமென்ற பிரம்மத்திலடங்கிக் கொண்டு
நன்மைபட வெகு கோடியுகங்கள் வரை இருந்திட்டேனே என்று


44. என்றுவிளம்ப காக ரூபில் இவரும்
எல்லா சித்தியும் பெற காகபுஜண்டர் ஆனார்
நன்றுபெற பங்குனி ஆயில்யமீன் முக்தி
நாட்டுதற்கு சிரபுரம் உறையூர் எல்லைதானே


45. ஆனதொரு அக்னிகுல தோற்றம்
அடுத்த யுகம் தொன்பொன்பரப்பி
ஞானசித்தி கண்ட ஒரு எல்லை
நாட்டிட அழுகண்ணிசித்தர் புலன்கேள்



46. கேளுமே நங்கை திங்கள் அனுசமீன் தோற்றம்
கேட்டிடுவாய் ஞானம் பெற்று
ஞாலமதில் கண்ணீர்மல்க இறைபதிகம்பாட
நாட்டிடுவேன் இவை நாமம் கொண்டார்


47. கொண்டதொரு வைத்ய ஞானவழி சிறந்து
கூறிடவே நாகப்பட்டினம் சித்தி
உண்டான நாரதர் புலன்கேள்
உயர்ஞான வேத வல்லமை கொண்ட


48. கொண்ட ஞானி பிரம்ம குலம்
குறிப்பாக நங்கைதிங்கள் விசாகமீன் தோற்றம்
கொண்டுரைக்க திருவிடைமருதூர்
கருவைநல்லூர் இவர் முக்திதானே


49. தானுரைக்க காசிபர் ஞானவானும்
தாமுரைக்க யாத்திரை பலகண்டு
ஞானம் பெற்று உலக மக்களுக்கு
நன்மை செய்து மிதுன திங்கள் சித்திரைமீன்


50. மீனில் ருத்கிரி தடம் முக்திதானே
மேலான வரதரும் தென்மலை
ஞானசித்தி கண்டவரென்பேன்
நாட்டிட சாபதிங்கள் உத்திராட மீனில்தானே



51. தானுரைக்க புண்ணாக்கீசர் தானும்
தவழ்ந்த குலம் கன்னடியர் தானே
ஞானமுடன் விடைதிங்கள் சித்திரைமீனும்
ஞானசித்தி சென்னிமலை எடுத்துரைக்க


52. உரைக்கவே கண்ணிச்சித்தர் புலன்கேள்
உயர்வான கண்ணிகள் நிறைந்த செய்யுள்
மறை ஒத்த ஞானங்கள் தந்துமே
மண்ணுலகில் கண்ணிச்சித்தர் ஆனாரப்பா


53. ஆனதொரு பங்குனிதிங்கள் நவமீனில்
அறிவிக்க பெருங்காவூர் சித்திதானே
ஞானமுள கடுவெளிச்சித்தர் புலனும்
நாட்டிடுவேன் உலகத்தை சுத்தவெளிஆகக்கருதி



54. கருதியே ஆனந்தக் களிப்பு
காண்பவர்க்காக பாபம் செய்யாதே மனமேநாளை
உறுதியிலா கோபம் செய்தே யமன் கொண்டாடிபோவான்
உரைத்துமே மக்களை நல்வழிப்படுத்தி


55. வழிநடத்தி ஞானவழிச் சென்று
வையத்துள் கலைதிங்கள் சுவாதிமீன்
தெளிவுபட காஞ்சிபுரம் முக்திதானே
தெரிவிக்க விசுவாமித்திரர் புலன்கேள்



56. கேளுமே விசுவமோடு மித்திரனென்றால்
கேட்டிடுவாய் விளக்கம் உலக நண்பனென
ஞாலமதில் தவ வேள்வி தன்னை
நன்மைபட மக்களுக்காய் செய்து உயர்ந்த


57. உயர்ந்த ஞானி இவர்தானப்பா
உலகத்தில் சித்திரை திங்கள் பரணிமீனில்
நேயமுடன் காசி எல்லை சித்தி
நிலமதனில் கௌதமரும் ஞானவான்


58. ஞானவானாய் உலக மக்களுக்கு
நல் உபதேசம் எளிய வகைகூறி
ஞானசித்தி மிதுனம் மூலமீனில்
நாட்டிட திருவருணை திருவிடைமருதூர் சித்திதானே



59. சித்திகண்ட சுந்தரரும் சிவனருட்செல்வர்
செப்பிட நால்வருள் ஒருவரப்பா
உத்தமமாய் வாரிட்சம் திருவாரூர் முக்திதானே
உலகத்தில் காலாங்கி நாதர்தானும்


60. தானுமே தகர் திங்கள் முதல் மீனில்
தாமுரைக்க மயன் குலம் தோற்றம்
ஞானம்பெற்று ரசவாதம் தேறியே
ஞானசித்தி திருக்கடவூர் திருப்பனந்தாள் என்பேன்


61. என்கவே அகப்பை சித்தர் தானும்
இயம்பிட வேங்கை திங்கள் பூரமீன்
இன்புற நாயனார் குலம் தோன்றி
இன்னவரும் மனமாகிய பேயை வென்ற ஞானம்


62. ஞானம் போதித்து இவை பேருபெற்றார்
ஞானசித்தி இவர்க்கு ஐயாறுதானே
ஞானவான் பட்டினத்தார் புலன்கேள்
நல் வணிகன் குலம் தோன்றி


63. தோன்றியே சீமானாய் வாழ்ந்திட
தனக்கு சேயில்லா இல்லறத்தில்
நன்றாக இறைவனே சேயாய் வந்து
ஞானம் போதித்த விளக்கம் கேள்



64. கேளுமே காதற்ற ஊசியும் வாராதுகாண் கடைவழிக்கே
குறையிலா கண்டு வாசித்ததும் பற்றறுத்து
ஞாலம் வாழ்வை வெறுத்துமே அக்கணமே
ஞானியாகி உலகமக்கள் நலம் கருதி



65. கருதி அலைந்து கவி பொழிந்து
கருணைபட மக்கள் மனநிலை மாற
உறுதிபட இறைத்தன்மை விளக்கி
வொற்றியூரில் இவரும் முக்திதானே


66. முக்திபெற்ற அத்திரி மகரிஷியின்
மேலான புலன் விளக்கம் கேளும்
பக்திமிகு பிரம்மஞானிகளுள் சிறந்தமகரிஷி
பதிவிரதை அனுசுயா காந்தனப்பா


67. அப்பனே ருக்ஷம் மலைமேல் தவம்செய்து
அறிவிப்பேன் யோகாக்கினி மூண்டு
காப்பில்லா மூவுலகும் பெருகி அழிக்க
கண்டு இரங்கி மும்மூர்த்திகளும் அருளி


68. அருளியே தவசக்தியாய் மூவரும் சேயாய் தவழ்ந்தார்
ஆற்றல்பட கங்கையை ஊற்றெடுக்க வைத்தஞானி
அருள்பட ஆவணிஅவிட்டமீனில் சித்தி
அடக்கமும் கயிலை சார்பென உரைப்பேன்


69. என்கவே வசிஷ்டர் புலனுரைப்பேன்
இயம்பிட கல்பம் பல கண்டவர்
இன்புற ஒவ்வொருகல்பமும் ஒவ்வொரு தோற்றம்
இன்னவரும் சூரியவம்சம் புரோகித குலம் தோற்றம்



70. தோற்றமதும் துலை பரணி மீனில்
தெரிவிப்பேன் ஞானம் மிக்கவர்
ஏற்றமிகு அணிமா முதலான சித்திகளை
இனிதே கைவரப் பெற்றவரப்பா


71. அப்பனே ராமபிரான் குலகுருவாய் நின்று
அருந்தவத்தால் நந்தினி காமதேனு பெற்று
காப்பாக உலக தரும சேவை செய்து
கௌசிகருக்கும் உபதேசித்த ரிஷியப்பா


72. ரிஷியவரும் சிலை திங்கள் விமானமீன்
உலகத்தில் கயிலையில் சித்திதானே
வசிஷ்டருக்கு பத்தினி அருந்ததி என்பேன்
வையகத்தில் தொடர்ந்து வியாசர் புலனுரைப்பேன்

73. உரைக்கவே வேதங்களை நான்காய் பிரித்ததால்
உலகத்தில் வேதவியாசர்எனும் பெயரும்பெற்றார்
குறையிலா பராசர் சத்யவதி சேயுமாவார்
குவலயத்தில் நேபாள சந்திரகுலம் பிறப்பு


74. பிறந்திட பிரம்ம சூத்திரம் மஹாபாரதம்
பேருலகும் வியக்க வல்ல நூலீந்தவர்
துறந்துமே பைலருக்கு ரிக் வைசாம்பாயருக்கு யசூரும்
தொடர்ந்து ஜைமினிக்கு சாமவேதமும்


75. வேதமதும் ஸமந்துவுக்கு அதர்வணவும்
வினவிட ரோமஹர்சருக்கு இதிகாசமும் போதித்தார்
பூதலத்தில் ஆவணி கேட்டைமீன் தோன்றி
புகலுவேன் மார்கழி நவமீனில் சித்திதானே


76. தானுரைக்க கயிலையில் முக்திதானே
தரணியிலே தொடர்ந்து பிருகுபுலன்கேள்
ஞான பிரம்மாவின் மானச புத்திரருள் ஒருவர்
ஞாலமதில் சப்தரிஷிகளுள்ளும் ஒருவர் என்பேன்


77. என்கவே மக்களை படைக்கும் ஆற்றலுள்ளவர்
இவரும் தக்ஷரின் மகள் க்யாதியை மணந்து
இன்புற தாதா விதாதா ஸ்ரீ எனும் மக்களுடன்
இயம்பிடுவேன் ஸஞ்சீவினி வித்தை கற்ற


78. கற்றதொரு சுக்ரரையும் ஈன்றவரப்பா
கணக்காக சாத்விகம் சோதிக்க
உற்றதொரு பகவான் மார்பிலுதைக்க
உலகத்தில் பகவானும் மகிழ்ந்து


79. மகிழ்ந்து ஸ்ரீவத்ஸம் எனும் அடையாளம்
மண்ணுலகில் காட்சிதர அறிவீர்
அகிலமதில் சித்திரைதிங்கள் பரணிதோன்றி
அறிவிப்பேன் மார்கழி உத்ராடம் முக்திதானே


80. முக்தியுடன் முன்னறிந்த நாரதர் தொடர்விளக்கம்
மொழிகுவேன் தேவரிசியும் பகவான் உள்ளமும் இவர்
சக்திமிகு தத்துவஞானி பிரேமை மிக்கவர்
சார்ந்து பிரகலதன் த்ருவன் அம்பரீஷன் போன்றவர்க்கு


81. அவனியிலே பக்தி வழிகாட்டியவர்
அறிவில் சிறந்தவர் சங்கீத விற்பன்னர்
புவனமதின் கல்பம் முடிவில்
புகலுவேன் பகவானுள் கலந்த ஞானியப்பா



82. அப்பனே தொடர்ந்து ஞானிகள் புலனில்
அருணகிரிநாதரை பற்றி கூறுவேன்
ஒப்புடனே திருவண்ணாமலைதனில்
உயர்வான ஆனி மூலமீனில் தோற்றம்


83. தோற்றமுள ராஜநாத கவி அத்தன்
தெரிவிக்க அபிராம நாயகி அன்னை
ஏற்றமுள காச்யப கோத்ர தோற்றம்
இளமை மது மங்கை தீவழி சென்று


84. சென்றுமே கோபுரமேல் இருந்து வீழ்ந்து
சீவனை திருத்தி மாய்க்க எத்தணிக்க
நன்றென சுப்ரமண்யர் யானும்
நாட்டிட மீட்டு அருளீந்து காக்கவே


85. காக்கவே அருள்நிலை பெருகி
கந்தன் என்அருளால் திருப்புகழ்பாடி
ஊக்கமுடன் சைவ வைணவத்துக்கு
உயர் பாலமிட்ட ஞானி என்பேன்


86. என்கவே வயலூரில் அருள்பெற்று
இனிதே அறுபடை வீடும் சென்றுபாடி
இன்புற மன்னன் கண்ணொளிக்கு
இவரும் கிளியாய் அவதாரம் எடுத்து


87. எடுத்து பாரிஜாத மலரைத்தர
இதனால் மன்னனோடு மற்றாரும்
இடர் விலகி கண்ணொளி பெற
இவரும் ஆனிமூலமே கிளிரூபில் முக்திகண்டார்


88. கண்டுரைக்க தொடர்ந்து நன்கு
கண்டுரைப்பேன் சுந்தரானந்தர்
உண்டான சித்தரின் புலன் பெருமை
உலகத்தில் அகமுடையார் குலம் தோற்றம்


89. தோற்றம் கிஷ்கிந்தை நவகண்டரிஷி பேரென் என
தெரியவே ஆவணி ரேவதி தோற்றம்
உற்றதொரு சட்டைமுனி இவர்குரு
உலகத்தில் மதுரையில் தோற்றம் ஆகும்


90. ஆகவே இறைவன் அருள் பெற்று
ஆணை பெண்ணை இரும்பை தங்கமாயும்
வகைபட ஜாலம்பல புரிந்தவர்
வல்லப சித்தர் என்றும் அழைக்கபடுபவர்


91. அழைக்கவே அபிஷேக பாண்டியன் காலத்தவர்
அகத்தியர் பூஜித்த லிங்கம் தன்னை
பிழையற பிரதிட்டை சதுரகிரி செய்து
பூஜித்து பெரும் பேறு பெற்றவர்



92. பேறுபட மன்னன் ஞானம்பெற
பேதமற கல்யானையை எழுப்பி
கறும்புண்ணச் செய்த ஞானி
கண்டுரைக்க ஆலவாய் அன்னை கோட்டம்


93. கோட்டமதில் சித்தி கண்டவர்
குவலயத்தில் ஆவணி உத்திராட்டாதி
கோட்டமதில் முக்திதானே ஞானிக்கு
கூறிடுவேன் தொடர்ந்து ஞானிகள் விபரம்


94. ஞானிகளின் விபரமதை தொடர்ந்து
நாட்டிடுவேன் பிரம்மமுனி விளக்கமாக
ஞானிகளுள் பிரம்மமுனி தானும்
நாட்டிடுவேன் பிரம்மரிஷி தேசம்தனில் வந்ததால்


95. வந்ததால் இவை நாமம் கொண்டார்
வகைபட கோரக்கர் இவர்தானும்
சிந்தைபட இரட்டைச்சித்தர் போல
சீரிய உறவு கொண்டவர் என்பேன்


96. என்கவே பிராமண குலம் தோற்றம்
இவர் ஞானம் வழி கஞ்சாபுகையிலை
இன்புற கற்ப மூலிகைகள் உருவாயின
ஈடுஇல்லா அட்டமா சித்து கண்டவரப்பா


97. அப்பனே தண்டகம் வாகடம் ஞானம்வழி
அரிய நூல்கள் தந்த ஞானியப்பா
காப்பான இவர்செனனம் பங்குனி மிருகசீரிடம்
கடைத்தேற்றம் பங்குனி ஆயில்ய மீன் என்பேன்


98. என்கவே யூகிமுனிவர் புலன்கேள்
இன்னவரும் தேரையரின் மாணாக்கர்
இன்புள தமிழ் இனத்தவர் ஆகும்
இவரும் வாகடத்தில் சிறந்த யோகி


99. யோகியும் கலசமுனி முன்னில்
உருவாக்கி வீரசுண்ணம் வாகடத்தை
வாகுடனே காகமதற்கு ஊட்டியே
வெண்மை நிறமாக்கி பரிச்சயிக்க


100. பரிச்சயிக்க கண்டு பாராட்டியே
பாருலகில் தலைமை முனி அகத்தியரும்
தெரியமகனுக்கு சூட்டிய நாமமே யூகிமுனி
தானிவர் ஆவணி பூசம் செனனம்


101. செனனமுற்ற இனம் குறும்பர்பிரிவு
செப்பிட ஆவணி ஆயில்யம் முக்தி
ஞானம்பெற வாகட கற்பம் வைத்திய சிந்தாமணி
நாட்டிட பன்னீர காண்டம் நூலீந்த ஞானியப்பா


102. அப்பனே அல்லமாபிரபு புலன்கேள்
அறிவிப்பேன் சித்திரை சதயம் தோற்றம்
காப்பான இயற்கைகளும் பட்சிகளும்
கண்டுரைப்பேன் இவர் ஆற்றலுக்கு


103. ஆற்றலுக்கு இசைந்து கொடுக்கும்
அற்புதம் படைத்த ஞானியப்பா
ஏற்றமிகு இயற்கை பரிணாமம் அறிந்திட்ட
இயம்பிடுவேன் ஞானியப்பா என்று


104. என்றுரைக்க தவ தியானத்தில்
இவர் தேகத்தை ஆற்றல் பெருக்கி
நன்றிலா ஆயுத வழி தாக்கினாலும்
நலிவுறா தேகபலம் கொண்டவர்அப்பா


105. அப்பனே கோரக்கர் மெச்சிய ஞானி
அறிவீரே பிரபுலிங்கலீலை வரலாற்றில்
மூப்புகாணா உயர்சித்தி ஐப்பசி திங்கள்
மொழிகுவேன் பரணிமீனில் இவர்க்கு என்று


106. என்றுரைக்க குருராஜர் புலன்கேள்
இன்னவரும் திருமூலர் சீடரப்பா
நன்றான வைகாசி விசாகம் செனனம்
நன்மை கருதி திருமூலர் பரகாய பிரவேசத்தில்


107. தன்னிலே திருமூலர் உடலை காத்து
தக்க குருசேவை புரிந்தவரப்பா
இன்னவரும் நந்திதேவர் மறைபொருள் கவி
இயம்பிட சுந்தரானந்தரின் கவிகள்


108. கவிகளுடன் கமலமுனி ஈந்திட்ட
கண்டுரைப்பேன் எதிர் மறை சூதகவிசயம்
கவி கலைந்து எளிய வழிமுறையில்
கண்டுரைக்க வெளிப்படையாக ஈந்தஞானி


109. ஞானியை சினமுற்று இவர்கள் தாக்க
நல்அம்பிகை வழிபாட்டில் சமாதானப்படுத்தி
ஞானியும் திருமந்திரமுடன் அறுநான்கு நூல்களை
நன்மைபட காத்து ஈந்து ஆவணிமூலம் இவர்முக்திதானே


110. தானுரைப்பேன் திருநாவுக்கரசர் வரலாறும்
தரணியிலே திருமுனைப்பாடி தேசம்
ஞானவான் திருவுடையவூர் தோன்றி
நல் ஈன்றோர் புகழனார் மாதினியார்தானே


111. தானிவன் திலகவதி மூத்தோளிருக்க
தக்க பின்னவனாய் தோன்றியே
ஆணிவன் மருள் நீக்கியார் நாமமுற்றான்
ஆனதொரு ஈன்றவரை இளமைஇழந்து


112. இழந்து அறத்தொண்டுவழி ஏகி
இணைந்தாரே தருமசேனராய் சமணத்தில்
கலந்து இவருள் சூலைநோயாய்
காத்து மீட்டார் இறைவன் சைவநெறிக்கு


113. நெறிக்கு வந்து நாவுக்கரசராகி
ஞானசம் பந்தரால் அப்பர் ஆக்கப்பட்டார்
சிறக்கும் பதிகம் பல பாடியே
சிவத்தில் சதுர் பஞ்ச ஆறாம் திருமுறை


114. முறை ஓதி சிறந்த ஞானி
முக்தி திருப்புகலூர் சித்திரை சதயம்தனில்
உரைதனில் தொடர்ந்து சம்பந்தரை
உலகறிய புலன் உரைத்திடுவேன்


115. உரைத்திட சிவபாத இருதயர் பகவதிக்கு
உயர்தவத்தால் சீர்காழி செனித்தவர்
குறையிலா சூலவாம் அகவையில்
கூறிடுவேன் தோணியப்பர் கற்பகாம்பாள்அருள்பட


116. அருள்பட பிரம்மதீர்த்தம் அருகே
அமுதெனும் ஞானப்பால் உண்டவர்
இருள்போக்க பொற்றாளம் முத்துசிவிகை
இணையிலா மணிக்குடை இறைவனிடம் பெற்றவர்


117. பெற்றுமே மக்கள் குளிர்காய்ச்சல் அகல
பூமிதனில் வெப்பமகல அரவுவிடமகல
உற்ற மங்கை மரித்து உயிர்த்தெழவும்
உழவார தருமப் பணிகள் கருதி


118. கருதியே வாசிதீரவே காசு நல்குவீர் என
கருணைபட பதிகம்பல பாடியே
உறுதிபட அனல்வாது புனல்வாது செய்தும்
உலகினில் சைவம் காத்தவர் வளர்த்தவர்


119. வளர்த்து நாம்பாண்டார் சேயவளை
வையத்துள் மணக்கும் நாளில்
தளர்விலா யாவருக்கும் சிவஜோதி
தந்து முக்தி வைகாசி மூலம் நல்லூரில்தானே


120. ஆனதொரு கபிலர் புலன்கேளும்
அப்பனிவர் கர்தமர் மஹாயோகி தேவஹீதிக்கு
ஞானமுள சேயாய் தவழ்ந்தவர்
ஞானவான் கூட்டத்து தலைவர்


121. தலைமைபட சாங்கிய சாஸ்திரகாரர்கள் போற்றுபவர்
தர்மம் ஐஸ்வர்யம் அழியா ஞானமுடையவர்
மலையெனும் ஊத்துமலை எல்லையில்
மகாதவம் இயற்றி ஸ்ரீசக்கரம் பதித்தவர்


122. பதித்து ஜமதக்னி உபதேசம்பட
பாருலகில் பங்குனி உத்திரம் மீனில்
சாதித்து எந்தனருள்பட ஊத்துமலை முக்திதானே
சாற்றிட தொடர்ந்து குருதட்சணாமூர்த்தி புலன்கேள்


123. கேளுமே கவுண்டர் குலம் தோன்றிட
கூறிட ஆவணி அவிட்டமுன் தோற்றம்
காலமதில் சிவபதம் போற்றி
கருணைமிகு இறை தொண்டு செய்து


124. செய்துமே உலக நலம் கருதி
சேவை ஆற்றி சித்தருள் சித்தராய்
மெய்பட ஆரூர் மடப்புரம் ஆவணி
மொழிகுவேன் மீனதும் ஆயில்யம் முக்திதானே


125. மேலான யாகோபு சித்தர் புலன் கேள்
மேதினியில் வைத்திய நிகண்டு நூலீந்தஞானி
ஞாலமதில் ஆடிபூரமதில் செனனம்
நாட்டிட பேரூர் பங்குனி பூராடத்தில் முக்தியென்பேன்


126. என்கவே தொடர்ந்து வள்ளல்பெருமான்
இராமலிங்க சுவாமிகள் வரலாறுரைப்பேன்
தன்னை அறிந்து இன்புற வெண்ணிலாவே
தக்கதொரு தந்திரம் நீ சொல்லவேண்டும் வெண்ணிலாவே


127. வெண்ணிலாவே என திருஅருட்பா திரட்டு
விரும்பி பாடியே வேதாந்தம் சித்தாந்தம்
உன்னத வடதென்மொழி நூல்களுள்
உயர் புலமை தெளிவு கண்ட ஞானி


128. ஞானியே இராமையா சின்னம்மாவிற்கு
ஞானசேயாய் மருதூரில் தோற்றம்
தானிவன் இளமை அத்தனையிழந்து
தன் துணைவன் சபாபதி வளர்ப்பில்


129. வளர்ப்பில் முருகனருள் அடைந்து
வாழ்வு கண்டு பற்றற ஏகியே
தளர்விலா வடலூரில் சத்திய தருமசாலை
தன்பணியாய் சத்ய ஞான சபை திருக்கோயில்


130. கோயில் கொண்டு தொடர் தருமம்
குறையிலா தனிப்பெருங்கருணை வடிவாய்
நேயமுள திருஅருட்பா மனுமுறை கண்டவாசகம்
நிலமதனில் ஜீவகாருண்ய ஒழுக்கம் தந்து


131. தந்துமே தன்பாடலை ஆறாம் திருமுறையாக
தரணியிலே நன்னெறிக்கு காட்டி
சிந்தை குளிர தைபூசம் வடலூரில் சோதிகலந்தார்
செப்பிடுவேன் கணபதிதாசர் புலனை


132. புலனதும் உள்ளொளி விளக்கும் முகமாக
புகன்றாரே மின்மினி பூச்சி தன்னுள் மெய்யொளி கண்டாற்போல
சலனமற உன்மனம் ஒடுங்கியே உன் உள்ளொளிகண்டார் பின்னை
சாற்றவே சென்மமுமில்லை அந்த சிவத்துள்சேர்வாய்


133. சேர்வாயென தன் நெஞ்சறி விளக்கம் நூலில்
சில உண்மை தத்துவம் விளக்கி உலகோரை
சோர்விலா நாகைநாதர் திருவடிசேர வகை
செய்திட்ட ஞானியும் ஆனிமூலம் நாகை முக்திதானே


134. தானுரைப்பேன் பீர்முகமது புலனை
தரணியிலே ஆதிக்கும் முன்னும் அநாதியும் என்னடிசிங்கி
ஞானமுள அந்தக் கருக்குழி முந்த இருளறை சிங்கா
நாட்டியே ஞானரத்ன குறவஞ்சிநூல் இயற்றியவர்


135. இயற்றியே அரேபியத் தொடர்பினால்
இனிதே தமிழ் சித்த மூலிகை முறைபெருகி
நேயமுள ரூமி முதலிய இஸ்லாமிய சூபிகள்
நிகழ்வும் போக்கும் தமிழ்சித்தர் பாடல்களில் வளம் தந்திட


136. தந்திட துலை திங்கள் பரணிமீன் முக்திதானே
தாமுரைப்பேன் வியாக்ரமர் வரலாறுதனை
சிந்தைபட பதஞ்சலி மகானின் முதன்மை
சீடர் என்று எடுத்துரைப்பேன்


137. உரைக்கவே உயர் வேதசா°திரம்
உயர்வான பதஞ்சலி சூத்திரம்கற்று
குறைபட குருவைகாண திரைவிலக்க
குவலயத்தில் மாண்ட சீடர்கள் பலருள்


138. பலருள் பரிபக்குவம்பட பதஞ்சலியின்
பரிபூரண ஆசிகண்டு பிழைத்தவர்
சலனமற அனைத்து வித்தை தேறி
சாற்றிட ரசவாதம் பல வென்று


139. வென்று புலிக்கால் சித்தரெனவும்
வினவி அழைக்கப்பட்ட ஞானியிவர்
நன்றான தை பூசமீன் பட்டூர்முக்தி
நாட்டிடுவேன் திருமாளிகைத்தேவர் புலன் தன்னை


140. தன்னிலே போகரின் சீடரப்பா
தத்துவ ஞான போதம் கொண்டவர்
எண்ணம் மாறா குரு தொண்டில்
இவரை மிஞ்சிட வேறு எவரப்பா


141. அப்பனே சாதகம் செய்வதில் வல்லவர்
அனைத்து சாதனைமுறை சமயதீட்சை
காப்புடன் நிர்வாண தீட்சை கொங்கணருக்கு அருளியவர்
காணவே மரித்தவரை எழுப்பி விழிப்புதந்தோர்


142. தந்திட உலக மக்கள் தனக்கு
தத்துவமாய் நாசியின் வலம் சிவமாய்
சிந்தைபட இடம் சக்தியாய் விளக்கி
சனி கதிர் குசன் வாரம் சிவத்துளை சுவாசமும்


143. சுவாசமும் களங்கன் புந்தி புகர்வாரம்
சக்திதுளை வழிவெளிப்படமும்
அவணியிலே குருவாரம் வளர்பிறையில்
அப்பனே சக்திதுளை தேய்பிறை சிவத்துளை


144. துளைவழி சுவாசம் வெளிப்படவே
தேகசுத்திக்கு விளக்கமளித்தவர்
சளைக்காது சேவை ஆற்றியே
சாற்றிட ஆனி ஆதிரை திருவாடுதுறைமுக்தி


145. முக்திபெற்ற வரரிஷி புலன்கேள்
மொழிகுவேன் கள்ளர் பிரிவுதோற்றம்
சக்தி கூட்டி உயர் ஞானம்சிறந்து
சதுரகிரி பலபொருப்பு தவசித்தி கண்டஞானி


146. ஞானியிவர் காகபுசண்டருக்கே
நல் சந்திரகுலம் தோன்ற சபித்தவர்
ஞானிகள் பலபேர் பரிச்சயம் கூடி
நல்உபதேசம் வழிவகை நடத்தி


147. நடத்தியே சித்திரை அசுவனிமீனில்
ஞானசித்தி கயிலை கண்டவரப்பா
மடமையிலா தொடர்ந்து தாயுமானசுவாமி
மகானவர் வரலாறுதனை உரைப்பேன்


148. உரைக்கவே கேடிலியப்பிள்ளை மைந்தனிவர்
உயர்ஞானம்பட வளர்ந்து இன்னவரும்
சிரபுர மன்னன் விஜயரெங்க சொக்கநாதர்
செயல்பாட்டில் தலைமை கணக்கர் பதவிகண்டு


149. கண்டுமே பணியாற்ற விருப்பமிலா
களிப்புற்றார் சிவஞான போதம் வகை
உண்டான மன்னரும் இசைந்து அனுப்ப
உயர் மௌனகுரு தேசிகர்பால் தீட்சைஏற்று


150. ஏற்றுமே அருளாற்றல்படவே
இவரும் மனமுருகிப்பாட இராமேசுவரத்தில்
உற்றதொரு மழைபொழியக்கண்டு
ஊராரும் புகழ்ந்து நின்றனர்


151. புகழ்பட மட்டுவார்குழலி மங்கையை
பூவுலகில் மணந்து கனகசபாபதி எனும் சுதன்கண்டு
அகத்தவள் மௌணம் பின் பூரணமாய்
அனுகி குருவழி நிர்வாணதீட்சை துறவுகண்டார்


152. கண்டுமே சிவராச யோகம் தேறி
காட்டூரணி எனும் தடம் கடுந்தவம் புரிந்து
உண்டாச்சு தேகமிளைத்து சருகுமூட
ஊரார் மரித்ததாய் எண்ணி அனல்மூட்ட


153. அனலால் தவம் கலைந்த இவரும்
அக்கினியில் எழுந்து சோதி கலந்து
வானவர் போற்ற தை விசாகமீனில்
வரம் வழி வெளிப்பட்டிணம் சார்பு சித்தி


154. சித்திபெற்ற மார்கண்டேயர்புலன்
செப்பிடுவேன் திருமூலர் அருள் பெற்றவர்
இத்தரையில் வறுமை கடன் நீங்கி
யுகமக்கள் செழுமை வளம்காண



155. காணவே திருச்சேறை எல்லை தவமியற்றி
கலியுகமக்கள் பயனடைந்திட
பேணவே ரிண விமோசன லிங்கம்படைத்து
பெரும் யோக யாகம் கண்டவர்


156. கண்டுரைக்க ஈசனருள் பெற்று
காணவே சாகா வரம் பெற்றவர்
உண்டான யோகியர்கள் துணைபட
உயர்வான சேவைகள் செய்து


157. செய்துமே ஆனி திருவாதிரையில்
சிவமுக்தி கருவைநல்லூர் என்பேன்
மெய்பட தொடர்ந்து மிருகண்டரிஷி
மகானவர் புலனை உரைப்பேன்


158. உரைக்கவே மகா யோகியப்பா
உலகத்தில் மார்கண்டேயர் இவர் சேயப்பா
குறையிலா சதுரகிரி எல்லை தவமியற்றி
குவலயம் நலம் கருதி திருச்சேறை எல்லை


159. எல்லையில் ரிண விமோசனலிங்கம் படைத்து
யுகமக்கள் ருண நிவாரணம் கருதி
வல்லமைபட யோகம் புரிந்தவர்
வையகத்தில் திருக்கோவலூர் எல்லை


160. எல்லையில் சகசித்தர்களும் வேண்ட
இவரும் தவமியற்ற மாலவன்தானும்
சொல்லவே வாமன அவதாரம்காட்டி
சுருதிபடி ரட்சித்து நிலை அப்பனே


161. அப்பனே சிலைதிங்கள் தன்னில்
ஆதிரைமீனில் சதுராசல முக்திதானே
காப்புடனே ஜமதக்னி புலன் கேள்
கண்டுரைப்பேன் மகாரிஷி தானப்பா


162. அப்பனே வான சஞ்சாரம் செய்யும்
ஆற்றல் மிக்க ஞானி அப்பா
ஒப்புடனே ஊத்துமலை எல்லை
உயர்ஞான ஏழுமுனிவர்கட்கு போதித்து


163. போதித்து கும்பனோடு லோபமுத்ரா
புகழ்தரும் யாகத்தில் கலந்து
ஆதிநாதன் ஸ்ரீசக்கரம் பதித்து
அறுமுகன் அருளை பெற்ற ஞானியப்பா


164. அப்பனே ஜெயனர் குல தோற்றம்
அய்ப்பசி திங்கள் புனர்பூசமீனில் சித்தி
காப்பான கயிலை எல்லைதானே
கண்டுரைப்பேன் கஞ்சமலைசித்தர் புலன்


165. புலனதுவும் காலாங்கியின் மறுஅவதாரம்
புகலுவேன் அழியாமை ஞானம் பெற்றவர்
சலனமற ஞான சூட்சுமம் அறிந்து
சாற்றிடுவேன் சேவைகள் பல ஆற்றி


166. ஆற்றியே சித்தர்கள் போற்றும்
அற்புத ஞானியாய் வாழ்ந்துமே
உற்றதொரு கார்த்திகை பூசமீனில்
உயர்வான சேலம் எல்லை முக்திதானே


167. தாமுரைப்பேன் பத்ரகிரியார் புலன்தனை
தானிவரும் உஜ்ஜயினி வேந்தனாகி
நேமமிலா களவு குற்றம் வழி கழுமரம்
ஞானி பட்டினத்தாரை ஏற்றி கழுமரம் தீப்பற்ற


168. பற்றவே இவரும் பணிந்து சீடனாகி
பாருலகில் மன்னர் மக்கள் துறந்து
ஏற்றுமே துறவு வழி உடன் தொடர
இணைந்துமே குருவுடன் திருவிடைமருதூரின்


169. மருதூரின் கோட்டமுன் வாயிலிலிருந்து
மண்ணுலகில் யாசகம் திருவோடு வைத்து
கருதியே பைரவர் துணைபட பெற்றுவர
கண்டுரைக்க குருவும் இல்லறத்தான் என சூட்சுமமாய்


170. சூட்சுமத்தால் பதறி திருவோட்டை வீசிட
சுருண்டு பைரவர் உடன் மடிந்து
மாட்சிமைபட காசி மன்னனுக்கு மகளாச்சு
மண்ணுலகில் காலங்கள் மேவிவர


171. வருகவே சேயவள் முன்னூழ் உணர்ந்து
வரசனிவரை அத்தன் என்று பகர
குருவாகி மருதூர் ஈசன் பால் சேயுடன்
குவலயத்தில் சேல் திங்கள் ஆதிரைமீனில்


172. மீனில் சோதியாக இறையோடிணைந்தார்
மேலான மௌனசித்தர் புலனை
ஞானம்பெற மக்களுக்கு உரைப்பேன்
நல்தருமபுரம் ஆதினம் உபதேசம் கண்டசித்தர்


173. சித்தரும் பலசேத்திரம் தரிசித்து
சிவயோகியாக சாரமாமுனிவர்மடம் தங்கினார்
உத்தமர் தாயுமானவரின் குருவாகும்
உயர் ஞான யோக முறைகளை தந்து தை சதயமீனில் சித்தி


174. தானுரைப்பேன் ஞானசித்தர்புலன்
தரணியிலே பண்டரிபுரம் தனில்
ஞானச்சிறுவனாய் இளமைதொட்டு
ஞானச்சித்தரும் பிரம்ம ஞானியாக விளங்கினார்


175. விளங்கிட சாங்கதேவரும் எனும் சித்தர்
விரும்பியே இவர்பால் தீட்சை பெற
கலக்கமுற்று வயதைகருதி வெற்றோலை அனுப்ப
காணாதே நிலை உணர்ந்த ஞானி


176. ஞானியோ வெற்றோலை அனுப்பியதேன்
நல் வழிபாடு இறைவன்பால் கொள்வதே
தானவர்க்கு பிறவிபிணி போக்கும் மருந்தென
தக்க மறு ஓலைஅனுப்பி வைக்க


177. வைக்கவே புலன்கண்ட தேவரும்
வெகுண்டு மாயப்புலியில் கருநாக சாட்டைகொண்டு
நோக்கிட பாலனோ அமைதிபட நோக்க
நிலமதனில் வெட்கி மாயம் போக்கி


178. போக்கியே அனுகி அமைதிபட
பிரம்ம ஞானியான ஞானசித்தரும்
ஆக்கமுற உபதேச சூட்சுமம் ஈந்து
ஆத்ம ஞான சம்பந்தம் விளக்கி அருளினார்


179. அருள்பட ஆனி ஆதிரை கயிலை முக்தி
அடுத்துமே வராகிமிகி புலன் கேள்
அருள்மிக சதுரகிரி எல்லைமேல் மலை
அருந்தவம் எவரும் அடையா வண்ணம்செய்து


180. செய்துமே சித்தர்களுக்கு சூட்சுமங்கள்
செப்பி யோகமுறை ஈந்த ஞானி
மெய்பட காலாங்கி நாதசித்தருக்கு
மேன்மை வழிகாட்டி அழியாமை பெற்றவர்


181. பெற்றுமே ஆவணி மூலம் தனில்
பேசிடுவேன் சதுரகிரி சித்திதானே
உற்றதொரு ஒளவையார் புலன் கேள்
உலகத்தில் முருகன் என்னருள் பெற்ற ஞானி


182. ஞானியிவர் உலக நெறிமுறைக்கு
நல் உபதேசம் ஞான வழிகாட்டி
இனிமைபட புலமை மிக்க ஞானி
இயம்பிடுவேன் முதன்மை பெண் ஞானி


183. ஞானியிவர் மேல் பற்றினாலே
நெடுநாள் வாழ்வருளும் நெல்லிக்கனியை
தானவன் அருந்தா அதியமான் மன்னன்
தரிவை ஞானிக்கு ஈந்த நிலை உண்டு


184. உண்டான பங்குனி உத்திரமீனில்
உயர்முக்தி ஒளவையார்க்கு என்பேன்
கண்டுரைப்பேன் திருவள்ளுவர் புலனை
காணவே ஆதிபகவன் சேயுமிவர்


185. இவர்தானும் ஞானவழி சிறந்து
இல்லறம் வாசுகிதானுடன் கொண்டு
அவனியிலே அறம் பொருள் இன்பம்
அற்புத முப்பிரிவு கொண்ட திருக்குறள்


186. குறள் எனும் உலகப் பொதுமறை
குவலயத்துக்கு ஈந்த தெய்வபுலவரப்பா
மறுமை காணா பேரின்ப கதி
மனைவியுடன் மயிலை எல்லை முக்தி


187. முக்தியதும் தை பூச மீன் தானே
மொழிகுவேன் மாணிக்கவாசகர் புலனை
பக்குவமுற அன்புடன் அழுதழுது
பாருலகில் என்புருக மணிவாசகம் பாடிய


188. பாடிய சைவ சமயக் குரவரிவர்
பாடிடுவேன் நால்வருள் ஒருவரென்று
நாடியே திருவாதவூர் செனனம்
நல் அரிமர்த்த பாண்டியன் தலைமை அமைச்சர்


189. அமைச்சராயினும் அருள் ஞானம் தேறி
ஆட்கொள்ளப்பட்டார் திருப்பெருந்துறை இறைவனால்
மெச்சவே திருவாசகம் திருக்கோவையாருமியற்றி
மேலான அட்டம திருமுறையாகக் கண்டோம்


190. கண்டுரைக்க ஆவுடையார் கோவில் எழுப்பி
கண்டாரே திருப்பெருந்துறை மாசி மகம் முக்தி
உண்டான கணநாதர் புலன்கேள்
உலகத்தில் சீர்காழி மறையவர் குலம் தோற்றம்


191. தோற்றமுதல் தோணியப்பருக்கு தொண்டு
தொடர்ந்து செய்த ஞானி ஆவார்
ஏற்றமுடன் தொண்டு புரியவும்
எல்லோரையும் தூண்டுதல் செய்தும்


192. செய்துமே திருநந்தவனம் திருக்கோவில்
செப்பிடுவேன் அமைத்தல் அலகிடுதல்
மெய்யறிவூட்டி மக்களை இறைதொண்டில்
மூழ்க வைத்து ஞானம் செறிந்தவர்


193. செறிந்த நல் ஞான சம்பந்தரிடம்
செப்பிட முக்காலமும் திருவடி பணிந்து
நெறி பிறழா ஆடி பூரம் மீனின் காலம்
நிலமதனில் தோணியப்பருடன் முக்திதானே


194. தானுரைப்பேன் வேதாந்தச் சித்தர் புலன்
தரணியிலே காஞ்சிபுரம் திருத்தண்கா எல்லை
ஞானவான் அவதரிப்பு சொல்ல
ஞானமுதிர்ச்சி கொண்ட இவர் தானும்


195. இவர் தானும் ஸ்ரீபாஸ்யகர சித்தாந்தம்
இனிதே போதித்து வந்தவர்
அவணியிலே ஞானிகள் பலரை சந்தித்து
அருள் பெருக்கம் செய்து கொண்டவர்


196. இவர் தானும் தேள் திங்கள் பரணிமீன்
இனிதே கயிலையில் முக்திதானே
அவணியிலே தூர்வாசமுனிவர் புலன்கேள்
அப்பனே துருவதேசம் வந்தவர்


197. இவர்தானும் உயர் ஞானம் பெற்று
இனிதே பிரம்மரிஷிகள் காலத்தவர்
அவணியிலே வல்லமைமிக்க இவர்
அறிவிப்பேன் இந்திரன் வேந்தன் முதல்


198. முதலாக நவகிரகங்கள் தனக்கு
மொழிகுவேன் சாபமிட்டு அவரவர்
பூதலத்தில் புகழ் சக்தி பெறச்செய்தார்
புகலுவேன் சிலை (சாப) திங்கள் பூராடம் தீதலம் சித்தி


199. சித்திகண்ட கதம்பமகரிஷி புலன் கேள்
சிறப்புள வேதசாஸ்திர பலம்
சக்தி அருள் யோகநிலை கொண்டு
சகலருக்கும் ஞானம் தந்த ரிஷியப்பா


200. அப்பனே உத்தமர் கோட்டமதில்
அறிவிப்பேன் மாலவன் காட்சி கண்டவர்
காப்பான ஞானவழி நடக்க
கலியுக மக்களுக்கும் வழி வகுத்தவர்


201. வகுத்தவரும் கயிலை சார்பில்
வழுத்திட மிதுன திங்கள் ஆதிரையில் முக்தி
வகுக்கவே பூசனை வழிமுறை
வரைமுறை வகுத்த ஞானியப்பா


202. அப்பனே அனுமன் மகான் புலன்கேள்
அகிலமதில் அழியா புகழ் பெற்ற
காப்பானே சிரஞ்சீவி இவரப்பா
கண்டுரைப்பேன் வாயு பகவான் அஞ்சனா தேவிக்கு


203. தேவிக்கு அவதரித்த ஞானியப்பா
தெரிவிப்பேன் கதிரவனை விளையாட்டாய்
அவணிவிட்டு ஏகி சிசு பருவமதில்
ஆற்றலால் தொட்டு ஆசி பெற்றவரப்பா


204. அப்பனே இராமபக்தன் புராண வழி
அரிய தத்துவ ஞானவானப்பா
காப்பாக இராமாயண நிகழ்வில்
கருணை விசுவாசம் தொண்டுநிலை


205. நிலை விளக்கி மக்களிடத்து
நிலைத்தன்மை பெற்ற ஞானி
ஞாலமதில் மார்கழி மூல மீனில்
நாட்டிடுவேன் மாலவன் உள்ளம் கலந்தவரப்பா


206. அப்பனே மெய்கண்டதேவர் புலன் கேள்
அச்சுத களப்பாரர் சேயப்பா
காப்பாக திருக்கோவலூர் தோற்றம்
காணவே அரசனாக இருந்த போதும்


207. போதுமென்ன சிவநாட்டம் பட இருந்து
புகழ் தரும் சிவ அடியார்கட்கு
ஆதரவாய் நடந்து அரும்தொண்டு
அறச்சேவை அருள் ஞானம் பெற்ற ஞானி


208. ஞானியரால் சிவஞானபோதம் படைப்பு
நானிலத்தில் சிவவேடமிட்டு சத்ரு
தானிவரை மாய்த்த சூழ்ச்சியில்
தவவேடம் காக்க தக்க துணைசெய்ய


209. செய்யவே இறைவன் இறங்கி
சிவத்துள் சோதி செய்தார் கோவிலூர் தன்னில்
அய்யமற தேள் திங்கள் பூர மீனில்
அப்பனிவர் முக்தி பலன் என்பேன்


210. என்கவே அருள்நந்தி சிவாச்சாரியார்
இயம்பிடுவேன் புலன் விளக்கம்
மாண்புற ஞானவிளக்கம் தேடி
மகேசன் பேரருள் கண்ட ஞானி


211. ஞானியிவர் பல மேரு அலைந்து
ஞானபலம் கொண்டு சேவை
தானுரைப்பேன் சித்தர்கட்கும் சேவை
தரணியிலே தன்வழியில் செய்து


212. செய்துமே திருத்தெலூர் தனிலே
செப்பிட நங்கை திங்கள் பூரமீனில் முக்தி
மெய்பட ஜனகர் புலன் கேளும்
மிதிலை வேந்தன் சத்ய கீர்த்தியப்பா


213. அப்பனே அன்னை சீதையை தவத்தால்
அடைந்து ஹரி அவதார ராமனுக்கு
ஒப்புகொண்டு மணவிழா செய்தும்
உலகறிய நடத்தி நல்காவியம் தந்த ஞானியப்பா


214. அப்பனே கலைத்திங்கள் பூச மீனில்
அறிவிப்பேன் திருவல்லம் தன்னில்
காப்பான விசுவநாதருக்கு எதிரில் முக்தி
கண்டுரைப்பேன் அசுவினிதேவர் புலன்


215. புலனறிய வானவர்கள் மெச்சும்
புகழ்வாய்ந்த தேவருள் ஒருவரப்பா
சலனமற திருக்கச்சூர் மருந்தீஸ்வரர்
சார்ந்து அவுசத மூலிகை சித்தி கண்டவர்


216. கண்டுரைக்க அவுசத வானசாஸ்திர
கண்டுரைப்பேன் வல்லமை தேர்ந்து
தொண்டாற்றி ஆவணி அவிட்ட மீனில்
தெரிவிப்பேன் சதுராசலம் முக்திதானே


217. தானுரைக்க அம்பிகானந்தர் புலன் கேள்
தன்னலமிலா பக்தி வழி சிறந்து
ஞானமுடன் தொண்டர்க்கு அருளி
நங்கை திங்கள் விசாக மீன் கயிலை முக்திதானே


218. தானுரைக்க ராமானந்தர் புலன் கேள்
தத்துவ ஞான சித்து பல தேறி
ஞானவானாய் சேவை பல செய்து
ஞானிகளுள் ஒருவரான மகானிவர்


219. இவர்தானும் மதபேதமில்லா உபதேசம்
எளிய வகை தத்துவம் கூறி
அவணியிலே சிரபுரம் அரங்கமான் எல்லை
அறிவிப்பேன் சாபதிங்கள் பூராடம் முக்திதானே


220. தானுரைக்க உமாபதி சிவாச்சாரியார் புலன்கேள்
தரணியிலே சிவநாம செபத்திலிருந்து
ஞானம் பெற்று தொண்டுகளாற்றி
ஞானசித்திக்கு வழிவகை உலகோர்க்கு செய்த


221. செய்த ஞானி இவர் தானும்
சித்திரை திங்கள் அஸ்த மீனில்
மெய்ஞான சித்தி சிதம்பரம் அண்ணாமலை நகரில்
மேலும் தொடர்ந்து விளக்கிடுவேன்


222. கேளுமே கடைப்பிள்ளை சித்தர் புலன் கேள்
கேட்டிடுவாய் கடுவெளி சித்தன் போல
ஞாலமதில் நல் ஞானவளம் பெற்று
ஞாலமதை கடைத்தேற்றும் சூட்சுமம்


223. சூட்சுமம் பல கூறி சுத்த ஞானமீந்த
சித்தனிவர் நள்ளி திங்கள் பூர மீனில்
சூட்சுமம் கொண்ட உயர் மேரு சித்தி
சுருதிபடி கண்ணானந்தர் புலன் கேள்


224. கேளுமே இறைவனே கண்ணன் என
குறையிலா கண்மலர் ஈந்த பூசை
ஞாலமதில் செய்ததால் வந்த நாமம்
ஞானமுள்ள கண்ணானந்தர் தானும்


225. காணுமே விழி ஈந்து பக்திகாட்ட
தானிவர்க்கு கண்ணானந்தர் நாமம்
ஞானம்பெற பக்தி வழி ஏதுமறியா
ஞானசித்தி கொண்டு சிறந்து


226. சிறந்துமே காளகத்தி எல்லை
சித்தியதும் தைத்திங்கள் ஆதிரை மீனில்தானே
சிறந்ததொரு கல்லுளிச்சித்தர் புலன் கேள்
செப்பிட மெய்ஞான அறிவு கூடி


227. கூடியே மதபேதம் களைந்து
குறையிலா எளிய ஞான விளக்கம்
தேடி குருவழி கண்டடைந்து
தொண்டாற்றி சேவை ஞான வழி


228. ஞானசித்தி ஆனி மூலம் மீனில்
நாட்டிடுவேன் ஊத்துமலை தானே
ஞானவான் கலைக்கோட்டு முனிவர் புலன்கேள்
ஞாலமதில் கலைகள் பல தேறி


229. தேறியே மெய்ஞானம் போதித்து
தெளிவுதனை மக்களுக்கு ஊட்டி
நெறிபிறழா வாழ்ந்து வழி காட்டி
நிலமதனில் ஆலவாய் எல்லை முக்திதானே


230. தானுரைக்க கவுபாலச்சித்தர் புலன் கேள்
தானிவர் கவுடர் குலம் தோற்றம்
ஞானவானாகி நற்குரு வழியில்
நம்பிக்கைபட சிவ அடியவர்கட்கு தொண்டாற்றி


231. ஆற்றி அவதார மூர்த்திகளை வணங்கி
அருள்கூடி இறையோடு கலந்தது
உற்றதொரு கொங்கு நாடு ஆடிபூரம் தானே
உலகத்தில் கணராமர் புலன் கேள்


232. கேளுமே குருஅருள் கூடி வர
குறையிலா இளமை ஞானம் கண்டு
ஞாலமதில் பல கோட்டம் திரிந்து
நல் உழவார தொண்டாற்றி


233. ஆற்றியே சமய பேதமிடரில்லா
அரிய வழி சித்திகளும் புரிந்து
தேற்றம் நங்கை திங்கள் விசாகம் மீனில்
தெரிவிப்பேன் காசி எல்லை தானே


234. தானுரைப்பேன் குகை நமச்சிவாயர் புலன்
தரணியிலே பிறவி தொடர்பாலே
ஞானம் பெற்றார் இளமை தனில்
நமச்சிவாயம் கூறி இவர் தானும்


235. இவர் தானும் பஞ்சாட்சர செபத்தால்
இனிதே செபித்து உலகறிய
அவணியிலே மகத்துவம் விளக்கி
அடைவும் தீதலத்தில் மாசி ஆதிரை நாளில்


236. நாளதுவாய் குறும்பைச்சித்தர் புலன்
நாட்டிடுவேன் குறும்பர் இனமப்பா
கோளதின் ஆய்வு மேன்மை ஞானம்
குருவருளால் இளமை கண்டு தேறி


237. தேறியே உலக மக்கள் தனக்கு
தெளிவு ஞானம் ஜீவதயை வழி
தெரிவித்து கொங்கு மேரு எல்லை
தியானித்து துலைத் திங்கள் பரணிமீன் சித்தி


238. சித்தி கண்ட கூர்மானந்தர் புலன் கேள்
செப்பிடுவேன் இளமை தொட்டே
உத்தமரும் மெய்யறிவு கொண்டு
உலகோர் மெச்ச கூர்ம ஞானம் கொண்டும்


239. கொண்டுமே மெய்ஞானம் போதித்து
குவலயம் காத்த ஞானி இவரப்பா
தொண்டாற்றி தகர் திங்கள் அவிட்ட மீனில்
தெரிவிப்பேன் பாண்டி எல்லை சித்திதானே


240. தானுரைப்பேன் கவுசிக முனிவர் புலன்
தரணியிலே மன்னராய் விளங்கி
ஞானம் கருதி மக்கள் சேவை கருதி
ஞானிகளிடம் சத்சங்கம் பரீட்சித்து


241. பரீட்சித்து கடுந்தவ வேள்வி கொண்டு
பலன்கிட்டி இறையருளால் பூரணமாய்
தெரிவிக்க உலக நலம் கருதி
தொண்டாற்றி திருவாடுதுறை சித்திரை  பரணியில் சித்தி


242. சித்திபெற்ற சண்டிகேசர் புலன் கேள்
செப்பிடுவேன் மறையவர் குலம் தோற்றம்
உத்தமி பவித்திரை யட்ச தச்சன் ஈன்றோர்
உலகத்தில் விசார சருமர் நாமம்பட தோற்றம்


243. தோன்றியே இளமை தொட்டு ஞானம்
தெரிவிக்க கோவின் பால் சேவை
நன்றுபெற சிவபூசை அனுதினம்
நல்அபிஷேகம் செய்து வழிபட


244. வழிபாட்டை அத்தனும் தட்டி வதைக்க
வளனும் சினந்து அத்தனை மடிக்க
தெளிவுள்ள இவன் பக்தி கண்டு மெச்சி
தில்லை அம்பலத்தானும் அம்மையோடு அருளி


245. அருளியே தன் சேனாதிபதி ஆக்கி
அளித்தார் சண்டீகம் ஆயுதம் பல
அருளியே கலைத் திங்கள் உத்திர மீன்
அப்பனிவர் திருசேய் நல்லூர் முக்திதானே


246. தானுரைக்க சத்தியானந்தர் புலன்
தரணியிலே சோழ வள நாட்டில்
ஞானவான வேளாளர் குலம் தோன்றி
நமசிவாயன் பால் அளவிலா பக்தி கொண்டு


247. கொண்டுமே சிவ அடியவர்கட்கு
குறையிலா பாதுகாப்பு ஈந்துமே
தொண்டுவழி இறைவழி நிந்தனை
தெரியவே எதிர்மறை செயல் புரிபவர்க்கு


248. அவணியிலே தண்டனை தந்து மீட்டு
அதிபக்தி பட விரிஞ்சியூர் தன்னில்
இவர்தானும் துலைத் திங்கள் பூசமீன் சித்தி
இயம்பிடுவேன் சங்கமுனி சித்தர் புலன்கேள்


249. கேளுமே சகல ஞானம் தேறியே
கேட்டிடுவாய் இறை சிந்தை பட
ஞாலமதில் உலக மக்கள் உய்வுற
நல்வழிகாட்டி சேவை பல ஆற்றி


250. ஆற்றியே ஆனி மூலம் மீனில்
அப்பனிவர் கயிலை முக்தி தானே
உற்றதொரு சங்கர மகரிஷி புலன் கேள்
உலகத்தில் வானவர்கள் போற்ற


251. போற்றவே சாஸ்திர புலமையோடு
புகழ்தரும் அடயோகம் தேறி
ஏற்றமிகு வடயாத்திரை கண்டு
இறைகாட்சி கபிஸ்தலம் எல்லை சார்பு


252. சார்ந்து தொண்டுகள் புரிந்து
சங்கரனுடன் திருக்கயிலை ஆனி திருவாதிரை
நேர்ந்து கலந்து ஞானியப்பா
நிலமதனில் சங்கிலிச்சித்தர் புலன் கேளும்


253. கேளுமே தொண்டை நாடு வேளாளர் குலம்
கேட்டிடுவாய் தோன்றி வளர்ந்து
ஞாலமதில் இறைவழிபாடு குன்றா
ஞானம்பட வளர்ந்து சுந்தரரை மணந்து


254. மணந்து திருவொற்றியூரில் மகிழ்ந்து
மண்ணுலகில் ஞானவாழ்வு கொண்டு
இணக்கமுடன் ஆரூரார்க்கு தொண்டு
இறை உத்தரவுபட செய்து நன்கு


255. செய்துமே வொற்றியூர் தன்னில்
சிவகதி ஆவணி அவிட்ட மீன்தானே
மெய்பட சச்சிதானந்தர் புலன் கேள்
மேலான யோகஞானம் பயின்று


256. பயின்றுமே இறையன்பால்
பக்குவம் கண்டு தொண்டு வழி
நேயமிகுந்து ஞானம் பல தேறி
நிலமதனில் சத் சித் ஆனந்தம் உணர்ந்து


257. உணர்ந்து உலகோர்க்கு விளக்கி
உய்வு பெற்றார் ஞானசித்தர்களுள் ஒருவராய்
ஞானவானும் கலைத்திங்கள் வோண மீனில்
ஞானசித்தி கண்டார் என்பேன் கயிலைதன்னில்


258. தன்னிலே நந்தனார் புலனை கேள்
தானவர் ஆதனூர் சார்பு புலைபாடி
நன்னயமாய் தோன்றி வளர்ந்து
நாளைபோவேன் என எண்ணி வேண்டிட


259. வேண்டிட நாளைபோவார் எனும் நாமமுற்றார்
வினவிட ஊர்க்காவல் பணி கண்டு
உண்டான இறைவன்பால் நேசமுற்று
உண்மைபட வணங்கி பாடி வர


260. வருகவே இறைவனும் மனமிரங்கி
வழுத்தினார் மூவாயிரம் அந்தணர் கனவில்
கருதியே நந்தனை அந்தணராக்கவே
கண்டுமே முப்புரி நூல்பட மாற்றிட


261. மாற்றியே வேத ஞானம் உணர்ந்து
மண்ணுலகில் சாதி மத பேதமிலா
ஏற்றம்பெற ஞான சேவை புரிந்து
இயம்பிட தில்லையில் புரட்டாசி ரோகிணி மீனில் சித்தி


262. சித்திபெற்ற சிவயோக முனிவர் புலன் கேள்
செப்பிடுவேன் யோகமுறை பயின்று
உத்தமமாய் வாசியெனும் ஓட்டமதை
உயர்வான பன்னீரு அங்குலமாய் சிவாயென


263. எனமாற்றி திருப்பி யோக சித்தி
எல்லா வகையும் ஞானம் தேறி
ஞான உபதேசம் பலவாற் ஈந்து
ஞான சித்தி கயிலை நங்கை விசாக மீனில்தானே


264. தானுரைக்க சிவானந்தர் புலன் கேள்
தரணியிலே வேளாளர் குடி தோன்றி
ஞானம் கருதி இளமை தொட்டே
ஞாலமதில் சிவசிவ நாமசெபத்தில்


265. செபத்தில் இருந்து சிந்தை தெளிவு
சிவயோகம் கண்டு ஆனந்தம் திளைத்து
அபயமற அடியவர்கட்கு தொண்டும் ஆற்றி
அப்பனிவர் சதுராசலம் ஆனி மூலம் மீனில் சித்தி


266. சித்தி பெற்ற சுகபிரம்மர் புலன்கேள்
செப்பிடுவேன் ஞான யோகம் வாகடம்
உத்தம சோதிட சாஸ்திரம் வல்லமை
உயர்வுபட கண்டு உலகோர்க்கு அருளி


267. அருளியே அற்புதம் நிகழ்த்தும் ஞானி
அன்னவரும் சிலை திங்கள் பூராட மீன்
அருள்பெற திருக்கயிலை முக்திதானே
அறிவிப்பேன் சூத முனிவர் புலன்கேள்


268. கேளுமே சூட்சும ஞான விளக்கம்
குறைபட உலகறியா சூதகமாய்
ஞாலமதில் ஆழ்த்தி வந்த தகவல்களை
ஞானமதில் எளிதாக்கி மக்களுக்கு


269. மக்களுக்கு விளக்கி ஞான சேவை
மண்ணுலகில் புரிந்த ஞானியப்பா
ஊக்கமுடன் சதுராசல எல்லை
உத்திராட மீன் விடைத்திங்களில் சித்தி


270. சித்திகண்ட சூரியானந்தர் புலன் கேள்
செப்பிடுவேன் சூரிய குலம் தோற்றம்
உத்தமமாய் வளர்ந்து ஞானமுற்று
உயர் சூரிய சந்திர கலை பயின்று


271. பயின்று வாசி வென்று ஆனந்தம்
பரமனால் கண்டு ஞான விளக்கம்
தயவு கூட்டி உலகோர்க்கு அருளி
தானிவரும் வடதேசம் கார்த்திகை பரணிமீனில் சித்தி


272. சித்திகண்ட சூல முனிவர் புலன் கேள்
செப்பிடவே உமையப்பன் அருள்பட
இத்தரையில் வேளாளர் குடி செனித்து
இயம்பிடுவேன் குருஅருள்பட வளர்ந்து


273. வளர்ந்துமே மானச ஸ்தூல வழிபாடு
வகைபட ஞான சித்தி கண்டு
தளர்விலா தொண்டு சேவைகளை
தானிவர் செய்துமே இமயம் எல்லை விடைதிங்கள் விசாகம் முக்தி


274. முக்தி கண்ட சேதுமுனிவர் புலன்கேள்
மொழிகுவேன் மறவர் குடி தோன்றி
சக்திபட ஞானவழிகள் தேடி
சகலருக்கும் ஆன்ம ஞானம் ஊட்ட எண்ணி


275. எண்ணியே ஞானவான்கள் வழி
இனிதே பின்பற்றி பல எல்லை மேவி
திண்ணமுடன் சித்துக்கள் தேறியே
தடையற அம்பலத்தான் புகழ் பாடி


276. புகழ் பாடி பலருக்கும் போதித்து
புண்ணியனாய் கொங்கு எல்லையில்
வகைபட ஆடி பூர மீனில் சித்தி
வழுத்திடுவேன் சொரூபானந்தர் புலன் கேள்


277. கேளுமே சைவ குலம் தோன்றி
கேட்டிடுவாய் திருமேனி வழிபாட்டில்
ஞாலமதில் இறைசொரூபம் உணர்ந்து
நாட்டிடுவேன் ஆனந்தம் அடைந்து


278. அடைந்துமே அடியவர்கட்கும் சேவை
அற்புதங்கள்பட செய்து நன்கு
சோடை போகா சித்தி தில்லை எல்லை
செப்பிடுவேன் ஆவணி மூல மீனில்தானே


279. தானுரைப்பேன் ஜம்பு மகரிஷி புலன்கேள்
தரணியிலே ரிஷிலோக புருஷரான
ஞானவான் ஆசிரமம் கொண்டு பல
நல்சீடர்கள் உருவாக்கி உலகினில்


280. உலகினில் அற்புத சேவைகள்
உபதேசம் ஞானதத்துவமும் விளக்கி
ஞாலமதில் அயோத்தி எல்லை
நாட்டிட துலைத்திங்கள் பரணி மீனில் சித்தி


281. சித்தி கண்ட ஜனந்தனர் புலன் கேள்
செப்பிட ஜைன குடி தோற்றம்
உத்தமமாய் அருள் ஞானம் தேறி
உலகத்தில் மாலவன் வழிபாடும் கண்டு


282. கண்டுமே ஹரி அருள்படவே
காணவே வைகுந்த வாயிலர்களை
தொண்டுக்கு தடையாக சபித்து
தெரிவிப்பேன் நிவர்த்தி ஈந்த ஞானி


283. ஞானியவர் வேங்கடம் எல்லை
நங்கை திங்கள் விசாக மீனில் சித்தி
தானிவரை தொடர்ந்து நன்கு
தரணியிலே ஜனாதனர் புலன் கேள்


284. கேளுமே மகரிஷிகள் அருள் பட
கேட்டிடுவாய் மேல் ஞானமடைந்து
ஞாலமதில் தேவாதி தேவர்களும்
ஞானியாக மெச்சும் வண்ணம் உயர்ந்து


285. உயர்ந்துமே பல யாத்திரை சென்று
உலகறிய தெய்வீகம் உணர்த்தி
நேயமுடன் நாமக்கல் நரசிம்மர் கோட்டம்
நல்பூசை வழிபாடு கண்ட ஞானி


286. ஞானியவர் காளகத்தி எல்லை
நாட்டிடவே தேள் திங்கள் பரணி மீன் சித்தி
ஞானியாம் ஜனக்குமாரர் புலன் கேள்
நாட்டிட சந்திர குலம் தோற்றம் கண்டு


287. கண்டுமே ஞானவழி தேறியே
காணவே வானவர்கள் ரிஷிமார்கள்
உண்டான போற்று வண்ணம் சிறந்து
உயர்ஞானம் பெற்ற மகாஞானி


288. ஞானியரும் ஜனாதி சித்தர்களாவார்
ஞாலமதில் கயிலை முக்தி
ஞானியவர் சால் திங்கள் மகம் மீனில்தானே
நாட்டிடுவேன் ஜெகநாதர் புலன் கேளும்


289. கேளுமே சித்தாந்த வகை தேறி
குறையிலா உலகமெலாம் சைவநெறி போற்றி
ஞாலமதில் பூரி எல்லை முக்தி
நாட்டிடுவேன் சாப திங்கள் பூராட மீனில் என்பேன்


290. என்கவே ஜெயமுனிவர் புலன் கேள்
இயம்பிடுவேன் சூரிய குலம் தோற்றம்
இன்புற ஞானவழி பிரம்ம ஞானிகளிடம்
இனிதே தீட்சை பல ஏற்று


291. ஏற்றுமே ஜெயம் பல கண்டு
எண்ணற்ற சித்திகள் கூடியே
பற்றறுத்து பரமானந்த கதியை
பாடிடுவேன் காஞ்சி எல்லை தைப்பூச மீனில் முக்தி


292. முக்தி கண்ட வெற்றி முனிவரப்பா
மொழிகுவேன் டமாரானந்தர் புலன் கேள்
சத்தியுள மறவர் குலம் தோற்றம்
சாற்றிடுவேன் வேதாந்தம் யோகங்களும் தேறி


293. தேறியே தேவர்களும் போற்றும்
தெய்வீக சித்தர்களுள் ஒருவரப்பா
கூறிடுவேன் மார்கழி திங்கள் உத்திரட்டாதி மீனில்
குவலயத்தில் கொங்கு தேசம் முக்திதானே


294. தானுரைக்க தானந்தர் புலன் கேளும்
தரணியிலே சைவ குல தோற்றம்
ஞானம் வழி அடியவர்க்கு தொண்டு
ஞாலமதில் ஈதல் இல்லையென கூறா


295. கூறாது அறம் திருப்பணிகட்கு
குறையிலா இறை பூசைகட்கு
மீறாது பொன் பொருள் நிதியென
மேன்மைபட சேவை செய்த ஞானி


296. ஞானியவர் சித்திரை சதயம் மீனில்
நாகஎல்லை இவரும் முக்தி
ஞானியாம் திரிகோணசித்தர் புலன் கேள்
நாட்டிடவே வேளாளர் பிரிவு தோற்றம்


297. தோற்றமே திரிகோண கலை பயின்று
தேக சுத்தி காயகல்பம் தேறி
ஏற்றமுற சேவை பல செய்துமே
இனிதே திரிகோண மலை சித்தி


298. சித்தியதும் தை திருவோண மீன்தானே
செப்பிடுவேன் நாதாந்த சித்தர் புலனை
சித்திக்கான நாதாந்த தத்துவம்
செப்பிடவே பிறவி பயன்வழி தேறி


299. தேறியே குருஅருளால் சித்தி
தெளிவுறக் கண்டு உலகோர்க்கு
நெறிமுறை சிறப்புற விளக்கியே
நிஷ்டையில் இறைகதி கலந்தது


300. கலந்தது நங்கை திங்கள் விசாக மீன்
கயிலை எல்லை என்பேன்
சலனமிலா நொண்டிச் சித்தர் புலன் கேள்
சாற்றிடுவேன் தோற்றம் வழி இவை நாமம்


301. நாமம் கொண்ட இவர் தானும்
ஞானவழி சிறந்து யோகமவுனச் சித்தர்
நேமமுள்ளோர் காலம் என்பேன் மிதுனத் திங்கள்
நிலமதனில் கொல்லிமலை ஆதிரையில் முக்தி


302. முக்திகண்ட பரத்துவாசர் புலன்கேள்
மொழிகுவேன் உயர்குல தோற்றம்
சக்திபட பல்வேறு யாக யோகம்
சர்வ வல்லமை கொண்ட ரிஷியப்பா


303. அப்பனே ராம அவதார காலம்
அறிவிப்பேன் வனவாசம் தனில்
காப்பாக துவக்கம் இறுதி காலமும்
கருணைபட அருள் புரிந்தவரப்பா


304. அப்பனே சாபதிங்கள் உத்திராடமீனில்
அறிவிப்பேன் கைலாசமதில் முக்தி
ஒப்புடனே பரமானந்தர் புலன் கேள்
ஓதிடுவேன் வேளாளர் மரபு தோன்றி


305. தோன்றியே பரமன் அருளினால்
தெரிவிப்பேன் பரபிரம்ம ஞானம்
நன்றாகத் தேறி காஞ்சிபுரத்தில்
நண்டு திங்கள் பூரமீனில் சித்திஎன்பேன்


306. என்கவே திருமூலர் வழி அழியாமை
இனிதே பெற்ற ஞானி ஆகும்
நன்மை தரும் பராசரிஷி புலன்கேள்
நாட்டிடுவேன் உயர்குலம் தோன்றி


307. தோன்றியே அருள்ஞான யோக
தெரிவிப்பேன் குரு வழி தன்னில்
நன்றான சகல தீட்சை பெற்றும்
ஞானியாக உயர்ந்த சித்தரப்பா


308. அப்பனே மச்சகந்தி கலந்ததால் ஆன
அறிவிப்பேன் துர்கந்தம் பழியோடு
ஒப்புடன் முனிவர்கள் இகழ்வும் அகல
ஓதியே சீர்காழி பூஜித்து வந்த ஞானி


309. ஞானியும் பங்குனி உத்திரம் மீனில்
நாட்டிட தில்லைவனம் முக்திதானே
ஞானியாம் பிங்கள முனிவர் புலன்கேள்
நாட்டிடுவேன் ஞானவழி தேர்ந்து


310. தேர்ந்துமே இடபிங்கல சுழுமுனை
தெரிவிப்பேன் குண்டலினி யோகம்
தேர்ந்துமே குருமார்கள் வழி
தெரிவிக்க சமய துறவு தீட்சை


311. தீட்சை பல ஏற்று தெளிந்து
தெரிவிப்பேன் சேவை பல உலகுக்கு
மாட்சிமைபட விளக்கி இனிதே
மகேசனுடன் கலந்தது திருக்கச்சூர் எல்லை


312. எல்லையில் சாப திங்கள் மூலமீன் முக்தி
இவருடன் தொடர்ந்து பிடிநாகீசர் புலன்கேள்
சொல்லவே வேளாளர் குலம் தோன்றி
சூட்சும ஞானம்பல தேறி நின்று


313. நின்றுமே தவ தியான சித்தியுடன்
நிலைபட சிவபூசனை தொண்டும்
நன்றுபெற வாதத்தில் பலரை வென்று
ஞானமுதிர்ச்சி கொண்டு சைவம் நெறி


314. நெறிபட நாபிறழா சிவ அடியவர்க்கு
நிலமதனில் தொண்டுகள் ஆற்றி
தெரிவிப்பேன் முக்தி திருக்கச்சூர்
தெளிவுபட கலைத்திங்கள் பூராடம் மீனில் என்பேன்


315. என்கவே பூனைக்கண்ணார் புலன் கேள்
இன்னவரும் மறவர் பிரிவு தோற்றம்
இன்பமுற நேத்திர தோற்றம் வழியில்
இவை நாமம் கொண்ட ஞானியப்பா


316. அப்பனே ஞானவழி தேறி நின்று
அகிலமதில் எதிர்மறை எண்ணம்
காப்பில்லா பொல்லா சகுணம் ஒழித்து
கருணைமிகு தயவு ஜீவ விளக்கம்


317. விளக்கம் உலக நெறி போதித்து
வினவிட பிரம்ம ஞானிகள் அருள்பட
கலக்கமற பர்வதஎல்லை முக்தி
கண்டுரைப்பேன் நள்ளி திங்கள் ஆயில்யம் மீனன்று


318. என்றுரைக்க மஸ்தான் புலன் கேள்
இஸ்லாமியரான ஞானி இவரும்
நன்றாக தேவரிஷிகள் அருள்பட
ஞான இறை ஒளி கண்ட ஞானியப்பா


319. அப்பனே அரபு எல்லை சார்பு
ஐப்பசி பரணி மீனில் முக்தி
காப்பாக மயூரேசர் புலன் கேள்
கண்டுரைப்பேன் வேளாளர் குலம் தோன்றி


320. தோன்றியே சைவநெறி திளைத்து
திருவருளும் எந்தன்பால் அருளும்
நன்றாக கொண்டு ஞானம் மிகுந்த
நாட்டிடுவேன் மயூரங்கட்கு தொண்டு செய்து
321. செய்துமே எந்தன் அருள்பட
சிவகதி சென்னிமலை எல்லை
மெய்பட ஆடி கிருத்திகை மீனில்
முக்தி கண்ட ஞானி என்றுரைப்பேன்


322. உரைக்க வந்தேன் மாலாங்கன் புலன்
ஊத்துமலை எல்லை முக்தி கண்ட
திரைவென்ற மும்மல குற்ற சூட்சுமம்
தெளிவு ஞானமீந்த ஞானி அப்பனே


323. அப்பனே யாளி திங்கள் அவிட்டமீன் சித்தி
அகிலமதில் முத்தானந்தர் புலன் கேள்
காப்பான சைவர் குலம் தோன்றி
கருணைபட சிவதொண்டு குடி தன்னால்


324. தன்னிலே ஞானம் பல தேறி
தவசியாக தன்னுள் யோகமெனும் முத்தை
இன்னவரும் கண்டு தெளியவே
இவை பேறுபெற்ற ஞானியப்பா


325. அப்பனே அடியவர்கட்கு அமுதும்
அருந்தொண்டாற்றி இனிதே
காப்பான தில்லை வனம் சித்தி
கடக திங்கள் பூசம் மீனில் என்றுரைப்பேன்


326. உரைக்கவே யோகசித்தர் புலன்கேள்
உலகத்தில் முதல் குலம் தோன்றி
குறையிலா வேத ஞானம் தேறி
குவலயத்தில் யோகம் பல பயின்று


327. பயின்றுமே வானவர் மெச்ச
பாருலகில் சித்துக்கள் தேறி
தயவுபட தொண்டுபல ஆற்றி
தரணியிலே பிரம்ம ஞானிகள் அருள்பட


328. அருள்பட கயிலை எல்லையில்
அறிவிப்பேன் ஆனி திருவாதிரை முக்தி
பொருள்பட யோகானந்தர் புலன் கேள்
புகலுவேன் வேள்வி ஞானம் கொண்ட


329. கொண்ட உயர்குடி தோன்றி
குறையிலா உயர் யோக ஞானம்
உண்டான பயின்று சிறந்து
உலகத்தில் யோகத்தில் ஆனந்தம் கண்டு


330. கண்டுமே கயிலை எல்லை
காணவே வானவர் பூத கணங்கள்
தொண்டு வழி போற்ற இனிதே
தெரிவிப்பேன் சாப திங்கள் ஆதிரைமீனில் முக்தி


331. முக்தி கண்ட விளையாட்டு சித்தர் புலன்கேள்
மொழிகுவேன் சைவகுடி தோன்றி
சக்தி அறம் தருமநெறிப்பட வளர்ந்து
சாதகம் யோகம் ஏதும் செய்யா


332. செய்யாது பூர்வ தொடர்பால்
செப்பிட இயல்பான ஜீவதயையால்
மெய்யுடனே விளையாட்டாய் சேவைகள்
மேன்மையைக் கருதா செய்து வர


333. வருகவே சிவனாரும் இரங்கி
வரமீந்து ஞான சித்தி பெற்ற
கருதியே ஞானியிவர் வெள்ளிங்கிரி
காணவே மாசி திங்கள் மகமீனில் முக்தி


334. முக்தி பெற்ற ஞானிகள் புலனை
முருகன் யானும் அரங்கன் வேண்ட
சக்திபட ஞானவழி விளக்கினேன்
சாற்றிடுவேன் இன்று வாழும் ஞானி


335. ஞானி அரங்கன் மூலமாக
ஞாலமதில் அனைத்து ஞானிகளும்
ஞானபலமூட்டி அருள் புரியவே
ஞானிகளின் சபையென அறிவித்து


336. அறிவித்து துறையூர் அரங்கன் எல்லை
அலங்கரித்து ஆட்சி நடத்துகின்றோம்
தெரியவே வந்து கலந்து ஆசி பெற்று
தேவாதி தேவர்கள் அருளும் பெற்று உயர்வீர்
ஞானிகள் வரலாற்று அருளாசி நூல் முற்றே.
-சுபம்-

No comments:

Post a Comment