Contact தொடர்பு

உலகமக்கள் நன்மைகருதி சித்தர் சுவடிகள்

Saturday, 6 May 2017

சொற்குரு யார்? சற்குரு யார்?

முருகா என்றால் சற்குரு சார்ந்திட்ட அவர் தாமே சொற்குருவும் சற்குருவுமாய் ஆகி நம்முள்ளே சற்குருவாம் முருகப்பெருமானை நம்முள் உணர்த்துவர்.



உண்மையை உணரலாம். எது உண்மை? உண்மை என்பதற்கு மெய் என்ற பொருளும் ஒன்று உண்டு. மெய் என்றால் உடம்பு என்றொரு பொருளும் உண்டு. மெய் எனப்படும் மனிததேகம் தன்னிலே மெய் மட்டுமன்று, பொய்யும் உள்ளது. இந்த தேகம் பொய்யும் மெய்யுமாக கலந்து உள்ளது. அதுவே அசத்தும், சத்துமாக உள்ளது. ஏனெனில் அன்னத்தால் ஆன இந்த தேகத்தில் உணவில் உள்ள சத்தும் அசத்தும் கலந்த உடம்பு உட்கிரகித்ததால் சத்தும் அசத்தும் உடம்பில் தோன்றியது.


அப்படி தோன்றிய சத்தும் அசத்தும் இவ்வுடம்பின்கண் சேர்ந்திட, சேர்ந்திட்டதில் அசத்து களிம்பாக மாறியே இவ்வுடம்பினுள் தொடர்பிறவிக்கு காரணமான காமத்தையும், அறியாமையையும் தூண்டி மெய்யறிவாகிய செம்பொருள் அறிவாம் ஞானம்தனை அடைய ஒட்டாது தடுத்து நின்றது.


இவ்விதம் தடுத்த களிம்பின் தன்மை உணர்ந்து சத்து, அசத்து அறிந்து அசத்தை நீக்கி சத்தை பெருக்கி நிலைப்படுத்தி உடம்பினுள் சத்தை மட்டும் நிலைநிறுத்தி பொய்யாகி அழிந்த இந்த தேகத்தை அழியாத மெய்யாகிய ஞானதேகமாக மாற்றி உயிர், உடல் நீங்கா நிலையடைந்து தோற்றம் மறைவிற்கு அப்பாற்பட்டு பிறப்பு இறப்பற்று என்றும் மாறா இனிமையுடன் ரூப, அரூபசாத்தியத்துடன் ஒளி பொருந்திய சோதிதேகம் பெற்றுயர்ந்தனன் ஞானத்தலைவன் முருகப்பெருமான். இதை பெறுதலே ஞானம் ஆகும்.



ஆதலின் ஞானம் என்பது உண்மையறிதல் ஆகும். அதாவது சத்தை நிலை நிறுத்தலாம். இதை அறிந்த ஒரே ஒருவன் அந்த ஆதி ஞானத்தலைவன்
முருகப்பெருமான் மட்டுமே. அசத்தை நீக்கி சத்தை முழுமையாக தரவல்லவன்.


ஆழ்கடலையும், கம்பத்தால் அசைத்து, கலக்கி, கலங்கிட செய்துவிடக்கூடிய ஆற்றலை ஒரு சமயம் பெற்று கடலை கலக்கிட இயலும். ஆனால் கந்தனாம் முருகனின் திருஅருளை பெறுதல் என்பது நடவாத காரியம்.


நடவாத செயல்கள் எல்லாம் நாயகராம் குருநாதர் தயவிருந்தால் நடக்கும் அன்றோ? சொற்குருநாதன் தயவை பெற்றுவிட்டால் சற்குருநாதன் தயவு தானே வரும். சொற்குருநாதன் அசையாத அந்த பரம்பொருளை ஞானத்தலைவனை அசைத்து அசைத்து தம்முள் வரச்செய்து ஐக்கியமாக்கி கொள்வதிலே வெற்றி பெற்றவன்.


சொற்குருநாதனே கடவுள் என்றும் அவனே நமது வழிகாட்டி என்றும் நம்பியே உள்ளம், உடல், பொருள்,  ஆவி அனைத்தையும் அவன்தன் திருவடிகளிலே முழுமையாக சரணாகதியாக ஒப்படைத்து, “எனதென்று  ஒன்றுமில்லை! தயவே யானறியேன்! யாதொன்றையும் ஞானமோ ஞானத்தலைவனோ யானறியேன்! சத்தோ,  அசத்தோ யானறியேன்! கருணை, தயவு, அன்பு, பண்பு, நல்லது, கெட்டது, தீயவை, உகந்தது, ஒவ்வாதது என்று ஏதொன்றும் அறியா பாவி நான்! எம்மை புறந்தள்ளாதே! தகுதியற்ற பாவி எம்மை ஏற்றுக் கொள்! ஏற்றுக் கொள்! என்றே அந்தரங்கத்திலே சொற்குருநாதரின் திருவடிகளிலே மானசீகமாக உருகி உருகி உருகி, மனம் கசிந்து கசிந்து, ஊற்றெழும் கண்ணீர் ஆறாய் பெருகிட அரற்றி அரற்றி, புறத்தில் யாரும் அறியா  வண்ணமே சிந்தை முழுதும் சொற்குருவை தியானித்தில் இருத்தி புறக்கடமைகளையும் தவறாது  பிழையின்றி எந்த குறைபாடுகளும் இன்றி செய்துவர செய்துவர, சொற்குருநாதன் மனம் மகிழ்ந்து யாருக்கும்  எட்டாத அந்த ஞானமாம் சற்குருநாதன் தன்மையை அவனது சாமீபத்தை அவனது திருவடிப் பெருமையை உன்னுள் உள்ளாக உணர்த்தி உணர்த்தி உம்மை சேயாய் தழுவி கடைத்தேற்றிட துணிவன்.


சொற்குருநாதன் தயவை பெற்றிட சொற்குருநாதனை உணரவே ஒருவன் மிகுந்த பாடுபட வேண்டும். ஏனெனின் அவரவர் செய்த பாவமே சொற்குரு யாரென்பதையும் அவரது தன்மையையும் உண்மையுடன் உணரவிடாது தடுக்கும்! சொற்குருநாதனை உணர வேண்டுமோ! உயிர்க்கொலை தவிர்த்து புலால் மறுத்து ஜீவதயவுடன் நடந்து மாதம் ஒருவருக்கேனும் மனமுவந்து அன்னதானம் செய்யுங்கள். நீங்கள் மனமுவந்து செய்கின்ற அந்த சிறுஉபகாரமே செய்தவர் உள்ளத்து எழும் ஜீவதயவினால் அவனது ஆன்மாவில் ஒரு சிறுபிரகாசத்தைத் தரும். அந்த பிரகாசமே சொற்குரு உம்முள் ஞானம் தூண்ட ஏதுவாக இருக்கின்ற ஒரு ஒளியாம்.


ஆதலின் ஜீவதயவு இல்லையேல் ஞானம் என்ற ஒன்றின் எந்த நிலையையும் எப்படி எப்படி சொன்னாலும் அவனால் உணரவோ அடையவோ முடியாது இது சத்தியம். சொற்குருநாதன் என்றே சொல்லப்பட்ட, ஞானம் பெற்று நம்முடன் வாழ்ந்து நம்மை வழிநடத்தி செல்கின்ற உத்தம ஞானியர் தம்மை காணுதல் வேண்டும். இது அவசியமானதாம்.


ஆதலின் சொற்குருவின் தன்மை யாதெனின் பொய் பேசாதிருத்தலும், பொருள் பற்றற்று இருத்தலும், காமவிகாரமற்றவராயும், எவ்வுயிர்க்கும் இரங்கி இதம் புரிபவராயும், சற்குருவை தம்முள் கொண்டவராயும் இருத்தலாம்.


சற்குரு சார்ந்திட்ட அவர் தாமே சொற்குருவும் சற்குருவுமாய் ஆகி நம்முள்ளே சற்குருவாம் முருகப்பெருமானை நம்முள் உணர்த்துவர்.



ஆதலின் சொற்குருவின் பாதம் பணிந்து அவர் தம்மையே காக்கும் தெய்வமாக வணங்கி வணங்கி போற்ற போற்ற அவர் தம்முள் உள்ள சற்குருவாம் முருகப்பெருமானே, அருள் செய்து வணங்கும் சீடன் தமக்கு, சொற்குரு வடிவினிலே சற்குருவாய் அருளி அவன்தன் ஆன்மாவினை எழுப்பி ஆன்ம ஒளி ஏற்றி, உடல் சுத்த அசுத்தம் உணர்த்தி சத்தை அறிவித்து சன்மார்க்கம் கொணர்ந்து ஜீவதயவு பெருக்கி சிந்தையுள் சார்ந்து ஞானம் அளித்து உடன்வந்து உணர்த்தி உணர்த்தி கடைத்தேற்றுவர்.


அசையாத பெரும் ஆற்றல் ஞானத்தலைவனை அன்பினால் அசைத்திடல் இயலும். மனமுருகி பூசை செய்வதுடன் உயிர்க்கொலை தவிர்த்து புலால் மறுத்து பிறஉயிர்படும் துன்பம் உணர்ந்து ஜீவதயவில் நடந்து மாதம் ஒருவருக்கேனும் அவரது பசித்துன்பம் உணர்ந்து மனம் மகிழ உணவளித்து மகிழ்வித்திட அந்த உபகாரத்தினால் அவனுள் எழும் ஜீவஒளியினால்தான் ஞானத்தலைவனை எளிதிலே அசைத்திடலாம். ஜீவதயவின் ஒளியினாலே முருகனை அசைத்திடல் எளிதாம்.


வணங்குவோம் முருகப்பெருமானை! ஜீவதயவினால் முருகனை நம்முள் வந்திடச் செய்வோம்!

செய்வோம் பசிப்பிணி ஆற்றலை! பெறுவோம் முருகனருளை!


மகான் ஆறுமுக அரங்கமகாதேசிகர் சுவாமிகள்

     

Related Articles

2000 வருடங்களுக்கு முன் தமிழ்ச்சித்தர்கள் வகுத்த உயிரியல் (Biology)

Nathan Surya
http://thamilsiddhas.blogspot.co.uk/2017/05/biology.html





No comments:

Post a Comment