அகத்தீசா என்றால் :
சாதாரண மனிதர்களாய் பிறந்த எண்ணற்றோர் அகத்தீசர் நாமத்தை சொல்லி சொல்லியே ஒன்பது கோடி ஞானிகளாக உருவாகிவிட்டனர். நாமும் அகத்தீசன் நாமத்தை சொல்லி ஞானம் பெற வேண்டும் என்பதை அறியலாம். உலகில் ஞானம் அடைய முயன்ற கோடனு கோடி மக்களில் முதன் முதலில் ஞானம் அடைந்தவர் ஆதிஞானத்தலைவன் முருகப்பெருமானே ஆவார்.
முருகப்பெருமான் ஞானம் அடைய மேற்கொண்ட அனைத்து யோக ஞானதவங்களுக்கெல்லாம் உற்ற துணையாய் இருந்து தன்னலமற்று தொண்டுகள் செய்து ஊன் உறக்கமின்றி தொடர்ந்து முருகப்பெருமானாருடன் இருந்து தவம் முடித்து முருகப்பெருமான் ஜோதி வடிவினனாகிட உதவியாய் இருந்திட்டார் மகான் அகத்திய பெருமானார்.
ஜோதி நிலை அடைந்த முருகப்பெருமான் தாம் அடைந்த அந்த பேரின்ப நிலையை தம் தவத்திற்கும் தமது வெற்றிக்கும் காரணமாயிருந்த அகத்தியருக்கு உபதேசித்திடவே தமிழ் மொழியை தோற்றுவித்து அதன் வழி ஞானக்கருத்துகளை உபதேசித்து அருளினன்.
ஞானோபதேசம் பெற்றிட்ட அகத்தியரை வாசியோடு வாசியாக முருகனே கலந்து நின்று அகத்தியரை ஞானியாக்கினன் முருகப்பெருமான்.
ஆயினும் ஞானியாகி முற்றுப்பெற்ற அகத்தியருக்கு கட்டளை பிறப்பித்தனன் முருகப்பெருமான் உலகம் கடைத்தேறவே. அகத்தியரை ஜோதிவடிவினான் ஆகாது தடுத்து, இவ்வுலகினில் பல காலம் தங்கி முருகன் நான் அடைந்த இந்த பேரின்பநிலையை, நீ அடைந்த பேரின்பநிலையை உலகோரும் அடைந்து கடைத்தேற்ற பாடுபட வேண்டும் என கட்டளையிட, ஆசானும் சீடனும் ஒன்றெனக் கலந்த அகத்தியரும் முருகனது கட்டளையை சிரமேற்கொண்டு நாடெங்கும் கால்தேய சுற்றி சுற்றி ஞானவழிதனை கல்லாத பாமரருக்கும் கற்பித்து கடைத்தேற்றி ஞானியாக்கினன் பெருங்கருணை கொண்ட மகாஞானி அகத்திய பெருமானார்.
ஞானவர்க்கத்தினிலேயே யாரொருவராலும் செய்ய முடியாத பெரும் தியாகமாகும் இச்செயல்.
ஞானமடைந்து தாம் ஞானியாகாமல் உலகோரையெல்லாம் ஞானியாக்கிவிட்டு ஆசான் முருகனின் கட்டளைக்கு காத்திருந்தார் மகான் அகத்தியர். இப்படி பல்லாயிரம் ஆண்டுகளாய் பாடுபட்டு பாடுபட்டு பல்லாயிரக்கணக்கான ஞானிகளை உருவாக்கினார் மகான் அகத்தியர்.ஆதலினாலே அகத்தியரால் தொடங்கி வைக்கப்பட்ட அந்த திருக்கூட்ட மரபினர் அகத்தியரின் அருட்பெருங்கருணையினால் ஒன்பது கோடி ஞானிகளுக்கு மேல் பரந்து விரிந்து எல்லையில்லா பெருந்திருக்கூட்டமாய் விளங்கி நிற்கின்றது.

அகத்தியரே திருக்கூட்ட மரபினரின் மூத்தோன், அவரே குருமுனிவன், அவரே சித்தர்கோன் என்பதை அறிந்து அகத்தியர் அருள் பெற்றாலன்றி கடைத்தேறுதல் ஆகாது என்பதை உணரலாம்.
No comments:
Post a Comment