Contact தொடர்பு

உலகமக்கள் நன்மைகருதி சித்தர் சுவடிகள்

Friday, 22 March 2019

குரு என்றால் யார்? குரு வழிபாடு என்றால் என்ன?


திருச்சி மாவட்டம், துறையூர், ஓங்காரக்குடிலாசான், சிவராஜயோகி, பரமானந்த சதாசிவ சற்குரு தவத்திரு ஆறுமுக அரங்கமகாதேசிகர் சுவாமிகள் அவர்கள்

கருணை கொண்டு 09.06.2011 அன்று அருளிய ஆன்மீக உபதேசப் பேட்டி பேட்டி கண்டவர் - திரைப்பட இயக்குநர் திரு. யார் கண்ணன்

யாரொருவன் காமத்தை வென்றானோ, அவன்தான் குரு. காமம் என்பதற்கு காரணம் மும்மலக்குற்றம். மல ஜல சுக்கிலம் அல்லது ஆணவம், கன்மம், மாயை என்று சொல்வார்கள். ஆணவம், கன்மம், மாயை என்றால் புரியாது. ஆண்களுக்கு மல, ஜல, சுக்கிலம். பெண்களுக்கு மல, ஜல, சுரோணிதம். இந்த மூன்றுதான் மும்மலக்குற்றம்.

மும்மலக்குற்றம்தான் ஒரு மனிதனுக்கு மாயையை உண்டு பண்ணும். இதை ஜெயிக்க வேண்டும். அதை எப்படி ஞானிகள் செய்கிறார்களென்றால் உடம்பைப் பற்றி அறிவாங்க, உடம்பு முன்னே வந்ததா? உயிர் முன்னே வந்ததா? என்று கேட்பார்கள்.

உடம்பும், உயிரும் சேர்ந்துதான் வந்தது. எப்படி வந்தது என்று கேட்டான். ஒரு பெண்ணோடு ஆண் கூட நினைக்கும்போது சிந்தனையாக இருந்தான். அப்படி கூடும்போது சுக்கில சுரோணிதமாக மாறுவான். சுக்கில சுரோணிதமாக மாறும்போது பத்து மாதம் தீட்டு வெளியாகாமல் இந்த கரு உற்பத்தியாகும். கரு உற்பத்தியானவுடன் இந்த உடம்பு என்ன செய்யும்?

இந்த தேகம் அசுத்த தேகம், பத்து மாதம் தீட்டும் அசுத்தம், சுக்கிலமும் அசுத்தம். பெண்ணுடலின் சுரோணிதமும் அசுத்தம். இதன் காரணமாகத்தான் மாசு இருக்கும், மனமாய்கை இருக்கும்.

இந்த மாய்கையை வெல்வதற்கு ஒரு உபாயம் இருக்கிறது. எப்படி வெல்கிறார்கள் என்று கேட்டால், இடது பக்கம் வருகின்ற சந்திர கலையையும், வலது பக்கம் வருகின்ற சூரிய கலையையும் சேர்த்து புருவ மத்தியில் செலுத்துகிறார்கள். அப்படி செலுத்தினால் உள்ளே உடம்பில் கனல் ஏறும். உள்ளே கனல் ஏற ஏற ஏற இந்த மும்மலக் குற்றங்களெல்லாம் விலகிப் போகும்.

மும்மலக் குற்றம் விலகினால் மனதில் தெளிவான அறிவு உண்டாகும். தெளிவான அறிவு உண்டானால், அவனுக்கு நரை திரை இருக்காது. அவர்கள்தான் ஐந்தொழிலையும் செய்வார்கள். படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஐந்தொழில் செய்யும் வல்லமை அவர்களுக்கு உண்டு. அவர்களைத்தான் வணங்க வேண்டும். அவர்கள் யாரென்றால் திருஞானசம்பந்தன், திருமூலதேவன், காலாங்கிநாதர், போகமகாரிஷி, அருணகிரிநாதர், அகத்தீசர், ஆசான் ஞானபண்டிதன். அவர்தான் இந்த உண்மையைக் கண்டுபிடித்தார்.

ஏன் மனிதன் சாக வேண்டும்? சாவதற்கு உடல் குற்றமா? உயிர் குற்றமா? உடல் குற்றமும், உயிர்குற்றமும் சேரும்போது மனமாசை உண்டுபண்ணும். மாய்கையை உண்டு பண்ணும். அப்போ மும்மலக் குற்றத்தை நீக்கினவன் எவனோ? அவன்தான் ஞானி. அப்படி மும்மலக்குற்றத்தை நீக்கிய முதல் தலைவன் ஆசான் சுப்பிரமணியர்தான்.

ஆசான் சுப்ரமணியருடைய சீடர்தான் அகத்தீசர். அவர்தான் ஊர்ஊராக சென்று ஒன்பது கோடி மானுடர்களை ஞானியாக்கியவர். அவர்தான் உலகத்திற்கே தலைவர். அவருடைய ஆசியில்லாமல் ஒருவரும் கடைத்தேற முடியாது. ஆக குரு என்று சொன்னாலே அவன் குற்றமற்றவன். மும்மலக் குற்றம் அற்ற உடனேயே காமம் அற்றுப்போகும். காமம் அற்றவுடனேயே பசியற்றுப் போகும். பசியற்றவுடன் நரை திரை மூப்பு இருக்காது, பரிணாம வளர்ச்சி இருக்காது. பரிணாம வளர்ச்சிக்குக் காரணம் மும்மலக் குற்றமே.

மும்மலக்குற்றமுள்ள தேகத்திற்கு பரிணாம வளர்ச்சி உண்டு. ஆனால் இந்த உடம்புக்குள்ளேயே சூட்சும தேகம் ஒன்று இருக்கிறது. அந்த தேகத்திற்கு நரை திரை மூப்பு கிடையாது. அவன் குரு. அப்படிப்பட்ட குருநாதரை வணங்கனும். எப்படி வணங்கவேண்டும்?

திருஞானசம்பந்தரை வணங்கினாலும் சரி! ஆசான் அருணகிரிநாதரை வணங்கினாலும் சரி! ஆசான் பதஞ்சலி முனிவரை வணங்கினாலும் சரி! எல்லாமே ஒரே தன்மையுள்ளவர்கள்தான். இத்தனைபேரும் எப்படி முன்னேறினார்கள்? அத்தனைபேரும் ஆன்மாவைப் பற்றி அறிந்து கொண்டார்கள். ஆன்மா இந்த உடம்பில் இருக்கும்போது, ஏன் மாசுபட்டதென்றால், உடல் மாசு காரணமாக உயிர் மாசு வந்தது.

உடல் மாசு என்றால் என்னவென்று கேட்டான்? மல, ஜல, சுக்கிலம். மல, ஜல, சுக்கிலம் எப்படி வந்தது? பசி. பசிக்கு என்ன காரணமென்று கேட்டான்? மூச்சுக்காற்றின் இயக்கம். நாளொன்றுக்கு 21,600 முறை வந்து போகின்ற மூச்சுக்காற்று. இந்த மூச்சுக்காற்றே பசிக்குக் காரணம். பசிக்கு உணவு தந்தால் அது சத்து அசத்தைப் பிரிக்கும். அசத்தாகிய மல, ஜலத்தை வெளியே தள்ளும். பிறகு 72000 நாடி நரம்புகளை முறுக்கேற்றும். அப்படி முறுக்கேற்றினால் மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐம்புலன்களும் வேலை செய்யும்.

பிறகு மனம், புத்தி, சித்தம், அகங்காரம் ஆகிய அந்தகரணங்களும் வேலை செய்யும். ஆக பொறி ஐந்து, புலன் ஐந்து இதெல்லாம் தத்துவங்கள். இந்த உடம்பு என்பது காமதேகம். இந்த காமதேகத்திற்கு காரணம் மும்மலக் குற்றம்தான். மும்மலக்குற்றத்தை ஆசான் துணை கொண்டு மூலக்கனலை எழுப்பினால், மும்மலக்குற்றம் அற்றுப்போகும். மும்மலக்குற்றம் அற்றுப்போகும்போது அவன் மரணமிலாப் பெருவாடிநவை பெறுவான். அப்படி பெற்றவன்தான் குரு. இது போன்ற வாய்ப்பை பெற்றவர்கள் நவகோடி சித்தர்கள். அதில் ஆசான் அகத்தீசர்தான் முதன்மையானவர். இதற்கெல்லாம் தலைவன் ஆசான் ஞானபண்டிதன். உலகத்திற்கே தலைவன் முருகன்தான். ஆசான் ஞானபண்டிதன் ஆசியில்லாமல் முடியாது. முருகா என்று சொல்வதற்கே மூன்று கோடி தவம் செய்திருக்க வேண்டும்.

“முருகா எனவோர்தர மோதடியார்
முடிமேல் இணைத்தாள் அருள்வோனே
”
என்று சொல்கிறார் ஆசான் அருணகிரிநாதர்.

முதற்தலைவன் சுப்ரமணியர். அவரை வணங்கினாலும் குருவின் ஆசியில்லாமல் ஒருவன் கடைத்தேற முடியாது. ஆக குரு என்று சொல்லப்பட்டவன் மும்மலக்குற்றம் அற்றவன். பொருள் பற்று அற்றவன், ஜாதி துவேசம் அற்றவன். உண்மைப் பொருள் தெரிந்தவன். எதையும் செய்வான். ஆணைப் பெண்ணாக்குவான். பெண்ணை ஆணாக்குவான். எல்லா வல்லமையும் அவர்களுக்கு உண்டு. அவர்கள்தான் குரு.

ஞானத்திருவடி- வைகாசி 2013

“ஓம் சரவண ஜோதியே நமோ நம”

முருகா என்றால்:

முருகப்பெருமான்தான் ஞானத்தலைவன் என்பதை அறியலாம். முருகனது ஆசி பெற்றிட உகந்த வழியும் புலப்படும். தினசரி மறவாமல் அதிகாலை 4.30 மணிக்குள் எழுந்து முகம் கழுவி காலைக் கடன்களை முடித்துவிட்டு முடிந்தால் குளித்துவிட்டும் இயலாவிட்டாலும் பரவாயில்லை அவரவர் வீட்டினிலே பயபக்தியுடன் வீழ்ந்து வணங்கி ஒரு அடிக்கு மிகாத உயரத்திலே ஒரு நெய் தீபமோ அல்லது நல்லெண்ணெய் தீபமோ ஏற்றி வைக்க வேண்டும்.

தீபம் ஏற்றும்போதே 
“ஓம் சரவண ஜோதியே நமோ நம”
“ஓம் சரவண ஜோதியே நமோ நம”
“ஓம் சரவண ஜோதியே நமோ நம” என்று
தொடர்ந்து ஆறுமுறையேனும் கூறி தீபம் ஏற்ற வேண்டும்.

தீபம் ஏற்றி தீபத்தின் முன் தீபத்தினிலே அருள்மிகு ஆறுமுகனான முருகப்பெருமானே தோன்றி ஜோதி வடிவமெடுத்து நமக்கு விளங்குவதாய் எண்ணி ஜோதிதனை முருகப்பெருமானாய் பாவித்து வீழ்ந்து வணங்கி பின் எழுந்து சரவண ஜோதியின் முன் அமர்ந்து பயபக்தி விசுவாசத்துடன் பணிந்து ஜோதியே முருகனின் தோற்றமாய் தம்முன் முருகன் தோன்றி அமர்ந்திருப்பதாக பாவித்து,
“ஓம் சரவண ஜோதியே நமோ நம”ˆ
“ஓம் சரவண ஜோதியே நமோ நம”
என்று மனம் ஒன்றி தொடர்ந்து 1008 முறைகள் கூறிவர வேண்டும்.

இவ்விதம் நாள் ஒன்றுக்கு குறைந்தது 1008 முறையேனும் மந்திரம்தனை ஜோதியேற்றி சரவணஜோதி வழிபாடுதனை பக்தியுடன் செய்து வரவர, செய்கின்றோர்க்கு உண்டான துன்பங்கள் நீங்கி அவர் வாழ்வினிலே அவர் தம்மைப் பற்றிய பொருளாதார பிரச்சனைகள் நீங்கி வாழ்வின் வறுமை ஒழியும். வழிபாடு செய்வோர் அசைவ பழக்கம் உள்ளவராக இருந்தால், அவர் உண்ணும் உணவு உயிர்க்கொலை செய்த பாவத்தால் வந்தது, இது பாவச்செயலாகும் என்று உணர்ந்து அசைவ பழக்கத்திலிருந்து விடுபடுவார், சுத்த சைவ உணவு பழக்கத்தை மேற்கொள்வார், தீய நட்புகள் விலகி தகுதியுள்ள நட்புகள் அமையப் பெறுவார்கள், பூஜையை தொடர்ந்து செய்திட ஏதுவான சுகாதாரமான அமைதியான சுற்றுபுறமும் பூஜைக்கு ஏற்ற தக்க சூழ்நிலையும் அமைந்து மனம் ஒன்றி பூஜை செய்திட ஏதுவான சூழ்நிலை அமையும்.

தொடர்ந்து சரவண ஜோதி பூஜைதனை மந்திர ஜெபம் செய்யசெய்ய யோக அறிவு உண்டாகி யோகத்தினை செய்வதற்கான தகுதிகளும் பெருகி யோகத்திற்கான செய்முறைகளும் முருகன் அருளால் அவர் தமக்கு உணர்த்தப்படுவதோடு அவரது புண்ணியபலமும் ஆன்மபலமும் பெருகி அற்புதமான சுகமான வாழ்வைப் பெற்று உயரலாம் என்பதை அறிவார்கள்.

Friday, 15 March 2019

அகத்தியப் பெருமான் அருள் வாக்கு

அகத்தியப் பெருமான் அருள் வாக்கு



ஒரு ஆத்மா, உடலோடு இருந்தாலும், உடலற்று இருந்தாலும், அதனுடன் இருப்பது பாவங்களும், புண்ணியங்களும்.

எனவே, ஆத்மா நித்திய சந்தோஷமாக, நித்திய நிம்மதியாக, இருக்கவேண்டும் என்றால், புண்ணியம், புண்ணியம், புண்ணியம், புண்ணியம், புண்ணியம், சதா சர்வகாலம் மனிதன் புண்ணியத்தை தேடித்தான் ஆகவேண்டும்.

ஒரு விலங்கு புண்ணியத்தை சேர்க்க இயலாது. பாவத்தையும் செய்ய இயலாது. அது செய்த பாவத்தை அந்த விலங்கு உடலுக்குள் அந்த ஆத்மா புகுந்து செயல்பட்டு, அந்த விலங்காகவே வாழ்ந்து, அந்த பிறவியை முடிக்க வேண்டும் என்பது விதியின் கட்டளை. ஆனால் மனிதன் நினைத்தால், புண்ணியத்தை சேர்த்துக் கொள்ள முடியும். இந்த சுதந்திரம் மனிதனுக்கு இறைவனால் கொடுக்கப்பட்டிருக்கிறது. கொடுத்த சுதந்திரத்தை மனிதன் என்றுமே சரியாக பயன்படுத்தியதாக சரித்திரமில்லை. சரியாக பயன்படுத்தினால் இறைவனருள் தொலைவில் இல்லை. ஆசிகள்.

-சித்தன் அருள்

Saturday, 15 September 2018

தற்காலம் ஆன்மீகவாதிகளின் செயல்பாடுகளும் அறிவுரை ஆசியும் மகான் சுப்பிரமணியர் நடைமுறை அறிவுரை ஆசி நூல்

முருகப்பெருமான் துணை


அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி


தற்காலம் ஆன்மீகவாதிகளின் செயல்பாடுகளும் அறிவுரை ஆசியும்
மகான் சுப்பிரமணியர் நடைமுறை அறிவுரை ஆசி நூல்

12.09.2018, புதன்கிழமை


அருட்கனலை கொண்டிட்ட அரங்கனுக்கு
ஆறுமுகன் வாக்குதான் ஆசியோடு
ஒருமனதாய் அரங்கன் வாழ நடைமுறை ஆசி
உலகத்திற்கும் மக்களுக்கும் ஆசி சொல்வேன்


சொல்லுகிறேன் கலியுகத்தில் மெய் ஆன்மீகம்
சொல்லும்படி இல்லையப்பா பிழையே கண்டேன்
நல்லதொரு ஞானம் சொல்லா பிழைகளை சொல்லி
நாள்நாளும் பிழை செய்து வாழ்கின்றார்கள்


வாழ்கின்றோர் மத்தியில் வந்துதித்த
வள்ளல் நீ அரங்கன் நீ வாழிய என்றேன்
ஊழ்வினையால் உழன்றிட்ட மக்களுக்கு
உன்னுடைய வழிகாட்டல் தெளிவு தந்து


தந்ததப்பா ஞானத்தில் நிலைத்திருக்க
தரணியிலே குரு யார் என அறிய வேண்டும்
சுந்திரனே குருவால் மட்டும் தெய்வத்தை காணலாம்
சுத்த ஞானம் குருவால் மட்டும் காணலாகும்


காணவே கு என்றால் வெளிச்சம் ஆகும்
கண்டுரைக்க ரு என்றால் அறிவும் ஆகும்
காணுவாய் குருவைக் கண்டால் அறிவும் ஜோதி
காணாவிட்டால் அவனுக்கு முக்தி ஏது?


முக்தி பெற வழி சொல்வான் முனை திறப்பான்
மூர்க்கத்தை அழித்துதான் வாழ வைப்பான்
சக்திதனை தந்திடுவான் சன்மார்க்கம் தந்திடுவான்
சாகாக்கலை என்னவென்று எடுத்துரைப்பான்


உரைத்திடுவான் மரணமற்ற வாழ்வு தன்னை
உரைத்திடுவான் சிவத்தினை அறிவதற்கு
உரைத்திடுவான் சிவத்தோடு சிவமுமாக
உரைத்திடுவான் சிவநிலையை அடையும் மார்க்கம்


மார்க்கத்தை சொல்பவனே மகா குருவும் ஆகும்
மாந்தர்களும் குருபதத்தை பிடிக்க வேண்டும்
சார்ந்திருத்தல் அவசியமே குருஅடி தன்னை
சன்மார்க்க நிலைமாறா சார்ந்திருக்க வேண்டும்


சார்ந்திருத்தல் எளிதல்ல கடினமப்பா
சஞ்சலங்கள் இடையிடையே வந்து ஆட்டும்
பார்க்க வேண்டும் குருபதத்தை இறுக்கமாக
பாங்காக குருவாக்கை அறிய வேண்டும்


அறிந்துதான் தர்மத்தினை செய்திட வேண்டும்
ஆசானை ஈசனாய் அறிய வேண்டும்
அறிவதுடன் தெளிந்துதான் நிற்க வேண்டும்
ஆசானே சிவவடிவம் என்று உணர வேண்டும்


உணர்ந்து உணர்ந்து வணங்கியோரே உயர்நிலை கண்டார்
உத்தமமாய் குருதேகம் பார்ப்பது நன்று
குணவான்கள் பார்த்தவுடன் பணிந்து கொள்வார்
குருதொண்டை சிவதொண்டாய் கருதி நிற்பார்


நிற்க வேண்டும் அரங்கனை ஆறுமுகனாய் எண்ணி
நிர்மலம் ஆனதொரு சண்முகன் என்று
அற்புதமாய் எண்ணிதான் வணங்க வேண்டும்
அரங்கனும் சுப்பிரமணியரும் வேறல்ல என்றேன்


என்றுமே குருவழி நடக்க வேண்டும்
இல்லையென்றால் அஞ்ஞானம் பற்றிக் கொள்ளும்
நன்றான குருநாமம் சொல்ல வேண்டும்
நாள்நாளும் ஜெபமும் செய்ய நமனும் இல்லை


நமனேது துன்பமேது அவர்தமக்கு
நாள்நாளும் அவர் அடைவார் பேரின்பத்தை
சுமையேது குருநாமம் சொல்வோர்க்குத்தான்
சுப்பிரமணியம் சுப்பிரமணியம் என்று உரைக்கும்போது


உரைக்கும்போது சிவத்தின் அருள் கிட்டும்
ஓங்காரக்குடில் ஆசான் வாழ்கவென்றால்
குறையேது அவன் வாழ்வில் அவனே ஞானி
குடில் பெருமை பேசுவதே தொண்டர் சேவை


தொண்டர்களுக்கு இது எந்தன் கட்டளையாகும்
தொண்டர்களை கேட்கின்றேன் என் மகன் பெருமை
கண்டு பேசல் குற்றமோ சொல்லுங்கள் இப்போ
கந்தனின் பெருமையை குடில் வந்து பார்ப்பீர்


பார்க்கவே ஆசானை சுப்பிரமணியமாய்
பாங்கான அரங்கன்தான் என் வடிவமாகும்
சார்ந்துதான் இருக்கின்றேன் சண்முகம் அரங்கனை
சஞ்சலங்கள் தீர்க்கத்தான் வாருங்கள் இங்கே


இங்கு வந்து குடில் பெருமை குடில் உணவைப்பற்றி
எடுத்துரைக்க வேண்டுமே சேவையாக
இங்கு வந்து ஓங்காரக்குடில் பெருமை அறிந்து
இவ்வுலகம் அறியவே எடுத்துரைக்க வேண்டும்


உரைக்க வேண்டும் குடில் உணவு மருந்து என்று
உரைக்க வேண்டும் குடில் உணவு அருள் உணவு என்று
உரைக்க வேண்டும் குடில் தொண்டு மகேசன் தொண்டு என்று
உரைக்க வேண்டும் குடில் தொண்டு வள்ளல் தொண்டு என்று


வள்ளல்பின் மாந்தர்கட்கு அன்னம் தன்னை
வழங்கியது யாரப்பா? நீதான் அரங்கா
வள்ளலும் அருள்கின்றார் இக்கணத்தில்
வாழ்கவென்று உன்னையும் வாழ்த்துகின்றார்


வாழ்த்தை நீ பெற்றுவிட்டாய் இக்கணம் தொட்டே
வள்ளலையும் அகத்தியரையும் என்னையும் கண்டாய்
ஊழ் அகல உனைக் காண வேண்டுமப்பா
ஒவ்வொரு தொண்டர்கட்கும் கட்டளையாய் சொல்வேன்


சொல்கின்றேன் குடில் தொண்டை செய்யுங்கள் என்று
சுத்த சேவை செய்யும்போது சுப்பிரமணியர் சேவை
பொல்லாத வினை அகல புண்ணிய சேவை
பொருந்தியே செய்வோர்க்கு புண்ணியம் கிட்டும்


கிட்டுமென்றே சுப்பிரமணியர் சொல்லி விட்டேன்
கூறுகிறேன் தேகத்தில் கனல் கூடி நிற்குதப்பா
சட்டென்று தேகத்தில் வலி தோன்றுமப்பா
சஞ்சலமே வேண்டாம் விலகிப் போகும்


விலகிவிடும் முருகன் என் அருள் பலத்தால்
விளம்புகிறேன் அகவல்தனை பாடிக் கேளு
நலமடைவாய் என்றுதான் வாக்குரைத்தேன்
நானிலத்தில் சுத்த ஞானக் குடிலமைத்து


அமைத்துதான் மாந்தர் சேவை செய்யும் உனக்கு
அருளோடு பொருள் தருவார் வாழ்வார் வாழ்வார்
சுமை நீங்க குடிலிற்கு தனம் தருவீர்
சுப்பிரமணியன் அருள் பெறவே தனம் தருவீர்


தனம் தந்து அருள் பெறுவீர் அழைக்கின்றேன் வேலன்
தவசியான அரங்கனை வந்து காண்பீர்
மனம்மகிழ ஞானம் பெற வந்து காண்பீர்
மாந்தர்களை அழைக்கிறேன் வேலவன் இன்றே


வேலனும் அரங்கனும் ஒன்றுதானே
வேறல்ல ஈசனும் அரங்கனும் ஒன்றே
மேலான குருஅரங்கன் ஈசன் அவதாரமாகும்
மேன்மையாய் நடைமுறையில் குருசேவை செய்ய வேண்டும்


குரு சேவை கோடி புண்ணியம் தந்திடும்தான்
குருதீட்சை பிறவியை அளித்திடும்தான்
குருவாக்கு விதியையே மாற்றி நிற்கும்
குரு ஆசி பெறுவதற்கு அழைக்கின்றேன் வேலன்


அழைக்கின்றேன் வாரீர் வாரீர் மக்களே இன்று
அரங்கர் மூலம் கண்டுதான் செய்வீர் இங்கே
அழைக்கின்றோம் நடைமுறையை சொல்லி விட்டேன்
அரங்கனே வாழிய வாழிய என்றேன் முற்றே.
-சுபம்-



முருகப்பெருமான் துணை


மகான் சுப்பிரமணியர் அருளிய தற்கால ஆன்மீகவாதிகளின் செயல்பாடுகளும் உண்மை ஆன்மீகவாதிகளுக்கான நடைமுறை அறிவுரையும் ஆசியும் சிறப்பு நூல் :


ஞானம் அளிக்கும் யோகக்கனலாம் அருட்கனலை கொண்டிட்ட ஆறுமுக அரங்கமகா தேசிகனுக்கு முருகப்பெருமான் யான் ஆசிகளோடு சொல்லும் அருள் வாக்குதான் இதுவப்பா. ஆறுமுக அரங்கனும், அவர்தம் தொண்டர்களும், உலகோரும் ஒற்றுமையுடன் சிறப்பாய் வாழ்ந்திட கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகளை ஆசி அறிவுரை நூலாக கூறுகிறேன் முருகப்பெருமான் யானுமே எனக் கூறுகிறார் மகான் முருகப்பெருமான். (நூல் வாசித்தளித்த நாள் விளம்பி வருடம் ஆவணி மாதம் 27ம் நாள் 12.09.2018, புதன்கிழமை). தற்காலம் இவ்வுலகினில் உண்மை நெறிப்படி நடந்து கொள்கின்ற உண்மை ஆன்மீகமும் உண்மை ஆன்மீகவாதிகளும் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. யாவரிடத்தும் குற்றம் உள்ளது எங்கு பார்த்தாலும் பிழையாகத்தான் இருக்கிறதப்பா. நல்ஞானம்தனை உண்மை ஞானம்தனை, தம்மை நம்பி வரும் அன்பர்களுக்கு சொல்லித்தராமல் அவரவரும் பிழைப்பிற்காக பிழையான ஆன்மீகத்தைச் சொல்லிக் கொடுத்து பிழையான ஆன்மீகவாதிகளாக ஆகி பிழைபட்ட ஆன்மீகத்தைதான் வளர்த்து வருகின்றார்கள்.


இப்படிப்பட்ட பொருள் பற்றும், காமுக எண்ணம் உடைய ஆன்மீகவாதிகள், பிழையான பொய் ஆன்மீகவாதிகளுக்கு மத்தியில் உண்மை ஆன்மீகம் போதித்து மக்களை வழிநடத்திடவே அவதாரமாக அவதரித்திட்ட வள்ளல் ஞானி ஆறுமுக அரங்கனே உம்மை முருகப்பெருமான் யானும் வாழ்த்துகின்றேனப்பா.


ஊழ்வினைகள் காரணமாக மனஉளைச்சலிற்கு ஆட்பட்டு, ஊழ்வினை துன்பங்களால் அவதியுறும் மக்களுக்கு அரங்கா உமது வழிகாட்டல்கள் தெளிவு தந்து காத்திடும். உமது வழிகாட்டல்கள் மக்களுக்கு ஞானத்தை தந்ததப்பா. இவ்வுலகினில் ஞானத்தில் நிலைத்திருக்க வேண்டுமாயின் முதலில் குரு என்பவர் யார் என்பதை அறிந்து கொள்ள வேண்டும் அன்பர்கள் எல்லாம். ஏனெனில் குருவினால் மட்டுமே, குருவின் மூலமாக மட்டுமே தெய்வத்தைப் பற்றி அறியவும், காணவும் முடியும். குருவின் துணையால் மட்டுமே சுத்த ஞானத்தை அறியவோ உணரவோ முடியுமப்பா.


குரு என்பது யார்? குரு என்றால் என்ன? எனில் குரு என்ற சொல்லில் உள்ள ‘கு’ என்ற எழுத்து வெளிச்சம் என்பதை குறிக்கும் எழுத்தாகும். ‘ரு’ என்ற எழுத்து அறிவினைக் குறிப்பதாகும். ஆக குரு என்பது பிரகாசமான அறிவு என்பதாகும். அதாவது ஜோதி வடிவான அறிவு அல்லது அறிவும் ஜோதியும் என்பதாகும். குருவை தரிசனம் செய்தால் அவனது அறிவு ஜோதி வடிவாக, அதாவது அறிவு விளக்கம் பெற்று செம்பொருள் அறிவாகும். குருவை காணாவிட்டால் அவனது அறிவு மலஅறிவாக மூடஅறிவாகப் போய் அறியாமைக்கு உள்ளாகி முக்தி அடையும் பேற்றினை இழந்து விடுவான். குரு இல்லையேல் முக்தி என்பது இல்லையப்பா.


குரு என்பவர் என்ன செய்வார்? குரு எனப்படும் அறிவுச் சுடரானவர் தம்மை நம்பி குருவாய் ஏற்று பணிந்தவர்க்கு அவர்தம் வினைகளை போக்கி முக்தியை அடையும் வழியை உணர்த்தி வழி நடத்துவார். பத்தாம் வாசலாகிய புருவமத்தியை திறந்து அவனை வாசிவசப்படச் செய்து வாசி நடத்திக் கொடுப்பான். அவனுக்கு வாசி நடத்திக் கொடுத்து அவனுள் இருக்கும் ஆன்ம குற்றமாகிய மூர்க்கத்தனத்தை, தான் எனும் ஆணவத்தை, மும்மலக்குற்றத்தை நீக்கி அவனை மனிதனாய், தேவனாய், தெய்வமாய் வாழ வைப்பாரப்பா குருவெனும் பெருந்தாய்.


நம்பிய பக்தனுக்கு சகலமும் தந்து கடைத்தேற்றிக் கொள்ளும் சக்தியும் தந்து கடைத்தேற்றுவான். சகமார்க்கமாகிய எவ்வுயிரையும் தம்முயிர்போல் எண்ணி இரங்கி இதம் புரியும் சன்மார்க்க நெறியினை போதித்து சாகாக்கலை எனும் மரணமிலாப் பெருவாழ்வைப் பற்றியும் அதை அடைந்திடும் முறையையும் உணர்த்திடுவான்.


மரணமிலாப் பெருவாழ்வை கூறி அதை அடைய துணை புரிந்து சிவத்தினை அறிவதற்கும், சிவத்தோடு தம்மை நம்பிய சீடனையும் சிவமாக ஆக்கிய சிவத்தோடு சிவமாக குருவே ஆகி உரைத்திடுவான், சிவநிலையை அச்சீடன் அடையும் வழிமுறைகளை. இப்படிப்பட்ட வல்லமை மிக்கவரும் சிவத்தை அடையும் மார்க்கத்தை தெள்ளத்தெளிவாக சொல்பவனே உண்மை குரு ஆவார். அவனே மகா குருவும் ஆவார்.


அப்படிப்பட்ட வல்லமையுள்ள மகா குருவின் திருவடிகளைப் பற்றி சரணடைந்தால் ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ளலாம். அப்படிப்பட்ட உண்மை குருவை அவசியம் ஆன்மீகவாதிகளும் இல்லறவாசிகளும் துறவு மேற்கொள்பவர்களும் சார்ந்திருக்க வேண்டுமப்பா.


உண்மை குருவின் திருவடி பற்றினோர் குரு உபதேசிக்கும் உபதேசமாகிய சன்மார்க்க நெறியினின்று வழுவாமல் நடந்திட வேண்டுமப்பா. ஒரு மனிதன் சன்மார்க்க நெறியினில் வழுவாது நடப்பது என்பது அவ்வளவு எளிதல்ல, கடினமான செயலாகும். ஏனெனில் கலியுகத்தின் மாமாயையினால் அந்த சீடனோ, அன்பரோ ஆட்பட்டு சஞ்சலங்களுக்கு ஆளாகிட நேரிடும். இடையிடையே தாம் செல்லும் பாதை சரியானதா? தவறா? என தடுமாற்றமும் உண்டாகும். அப்படிப்பட்ட சூழ்நிலைகளில் தாம் ஏற்ற உண்மை குருவின் திருவடிகளை மானசீகமாகப் பற்றிக் கொண்டு மனம் உருகி பிரார்த்தனைகள் செய்திட வேண்டும்.


“எம்பெருமானே குருநாதா நான் பாவிதானப்பா, சந்தேகம் என்னை ஆட்கொண்டு வாட்டுகிறது. இந்த பாவி மீது இரக்கம் காண்பித்து எம்மையும் ஒரு பொருட்டாக மதித்து ஏற்றுக் கொள்ளுங்கள்” என குருவடி பணிந்து மனம் உருகி பிரார்த்தனைகள் செய்து குருவினை விட்டும், சன்மார்க்கத்தை விட்டும் நீங்காமல் தொடர்ந்து முயற்சிகள் செய்து குருவையும் குருவின் தன்மையையும், சன்மார்க்கத்தையும் அறிந்து செயல்பட வேண்டும்.


உங்களைத் தடுக்கும் மாயையினின்று விடுபடவும், வினைகளின் துன்பங்களில் இருந்து விடுபடவும், நீங்கள் புண்ணியவானாக இருக்க வேண்டும். ஆதலினால் உங்களது புண்ணியத்தை பெருக்கும் வகையிலே தானதருமங்களை தளராது தொடர்ந்து செய்தால்தான் நீங்கள் செய்திட்ட தர்மபலன் உங்களை இந்த இக்கட்டான சூழ்நிலையில் இருந்து விடுவித்து நற்கதியில் செலுத்தும். புண்ணியங்களையும், பூஜைகளையும் குருமுகாந்திரமாக தொடர்ந்து செய்து செய்து ஆசானாகிய குருவை ஈசனாக அதாவது சிவமாக அறிந்து கொண்டு தெளிவடைய வேண்டும். “குருவே சிவம்” என்பதையும் ஆசானே சிவம், சிவமே ஆசான் என்பதை உள்ளார்ந்து உண்மையுடன் உணர வேண்டும்.


குருவே சிவமென உணர்ந்து உணர்ந்து வணங்கி வருபவர்களே உயர்நிலையை அடைவார்கள். குருவின் திருமேனியை காண்பதே நன்மை தரும் என்பதை உணர்ந்து குருவினை பார்த்தவுடன் பணிந்து நிற்பார்கள். பண்புள்ளவர்கள் குருவிற்கு செய்யும் சேவைகள் அனைத்தையும் சிவதொண்டாக அவரெல்லாம் கருதி தொண்டினை திறம்பட செய்து வருவார்கள் பண்புடையோர்.


ஆதலினால் ஆறுமுக அரங்கமகா தேசிகனை முருகப்பெருமானாக எண்ணி வணங்கி வர வேண்டும். மும்மலக்குற்றம் அற்ற நிர்மலனாகிய சண்முகப்பெருமானே அரங்கன் என்றே அற்புதமாய் எண்ணி வணங்கி வர வேண்டும். ஆறுமுக அரங்கமகா தேசிகனும் சுப்பிரமணியராகிய யானும் ஒன்றன்றி வேறல்ல என்பதை உணர்ந்திட வேண்டும்.



எனவே உலக மக்களே நீங்கள் என்றுமே குருவின் திருவடிகளைப் பற்றி குரு உபதேசத்தின் வழியினைப் பின்பற்றி நடந்திட வேண்டும். இல்லையெனில் அவர்களை அஞ்ஞானம் ஆகிய அறியாமை பற்றிக் கொள்ளும். நன்மையே தருகின்ற குருவின் நாமங்களை பயபக்தியுடன் நாமஜெபமாக நாளும் சொல்லி வருவதுடன் பணிந்து வணங்கி வர அவர்களை எமனாகிய மரணமும் தீண்டாது விலகிப் போகும். அவர்களுக்கு எமபயம் இல்லை, அவர்கள் என்றும் மாறா பேரின்பத்தை அடைவர், குருவின் திருநாமங்களை சொல்வோர்க்கு சுமைகள் ஏதும் இல்லையப்பா.


சுப்பிரமணியம் சுப்பிரமணியம் என்று உரைக்கும்போது அவர்களுக்கு சிவத்தின் அருள் பூரணமாக கிடைத்திடும். ஓங்காரக்குடிலாசான் வாழ்க வாழ்க என்று சொல்லிட அவர்களது வாழ்வினில் குறைகள் ஏதும் வராது. அவர்கள் ஞானிகளாகவும் ஆகிடும் வாய்ப்பை பெறுவர்.


உத்தம மகா ஞானி ஆறுமுக அரங்கமகா தேசிகனின் பெருமைகளையும், ஏழாம் படை வீடு அரங்கன் வாழும் ஓங்காரக்குடிலின் பெருமையையும் பேசுவதே தொண்டர்களின் முக்கிய தொண்டாகும். இது  முருகப்பெருமான் யான் தொண்டர்களுக்கு கூறும் கட்டளையாகும்.


தொண்டர்களே உங்களை முருகப்பெருமான் யானும் கேட்கிறேன் என் மகன் அரங்கன் பெருமைகளை உலகறிய பேசுவது குற்றமோ? சொல்லுங்கள் தொண்டர்களே! அரங்கன் புகழை அறிய வேண்டுமாயின் முருகப்பெருமானின் பெருமையை குடிலிற்கு வந்து பாருங்கள் கண்டு கொள்வீர்கள்.


ஓங்காரக்குடிலிற்கு வந்து பாருங்கள் உலக மக்களே ஆங்கே வீற்றிருக்கும் குடில் ஆசான் அரங்கமகா தேசிகனை சுப்பிரமணியராய் பாருங்கள். அரங்கனே நான்தானப்பா, அரங்கனே என் வடிவமப்பா, அரங்கனை சண்முகம் யானும் அற்புதமாய் சார்ந்துள்ளேனப்பா.


ஆன்மீக தொண்டர்களே, அன்பர்களே வாருங்கள் ஓங்காரக்குடிலிற்கு உங்களது சஞ்சலங்களை குடில் வந்து தீர்த்துக் கொள்ளுங்கள். குடிலை நாடி வந்து குடில் பெருமை உணர்ந்து குடில் உணவின் அற்புதம் உணர்ந்து சொல்லுங்கள் உலகிற்கு, உலகறிய எடுத்துரையுங்கள் குடில் பெருமையையும் குடில் உணவின் அற்புதத்தையும். தொண்டர்களே அன்பர்களே உலகமெலாம் அறியவே உரக்க கூறிடுங்கள், குடில் உணவு நோய் தீர்க்கும் மருந்து என்று, குடில் உணவு அருள் தரும் அருள் உணவு என்று சொல்லுங்கள். குடிலில் செய்யும் தொண்டு மகேசனுக்கு செய்யும் தொண்டு என்று சொல்லுங்கள். குடிலில் செய்யும் தொண்டு வள்ளல் தன்மையுடையது என்று, வள்ளல் பெருமான் ராமலிங்கசுவாமிகளுக்கு செய்யும் தொண்டு என்று சொல்லுங்கள்.


இவ்வுலகினில் வள்ளல் ராமலிங்கசுவாமிகளுக்கு பின் அன்னதானத்தினை இவ்வுலகினில் சிறப்புடன் வழங்கியது யார்? வள்ளலுக்கு பின் அன்னதானத்தினை அற்புதமாய் வழங்கியது அரங்கமகா தேசிகா நீதானப்பா. வள்ளல் பெருமான் ராமலிங்கமும் அன்புடன் அருள் செய்து அரங்கா உம்மை வாழ்த்துகின்றாரப்பா. வாழ்த்தினை பெற்றுவிட்டாய் அரங்கா நீயும், வள்ளல் ராமலிங்கத்தையும், அகத்தியம்பெருமானையும் முருகப்பெருமான் எம்மையும் கண்டுவிட்டாய் அரங்கா இக்கணம் முதலாய். உலகினில் உள்ள தொண்டர்களே முருகப்பெருமான் யானும் உங்களுக்கு கட்டளையாய் சொல்லுகின்றேன் இப்போது, உங்களது ஊழ்வினைகளை அகற்றிக் கொள்ள வேண்டுமாயின் அவசியம் அரங்கமகா தேசிகனை காண வேண்டும். அரங்கனை கண்டு பயபக்தியுடன் பணிந்து அரங்கன் ஆற்றும் தானதரும பணிகளுக்கு தொண்டுகளை செய்திடுங்கள். தூய்மையான தொண்டுகள் செய்திட அது சுப்பிரமணியர் எனக்கு செய்யும் சேவையாக மாறிடும். அது பொல்லாத வினைகளை புண்ணிய சேவையாக மாறிடும். பொல்லாத வினை அகற்றும் வல்லமைமிக்க அரங்கனின் சேவைகளை மனம் விரும்பி செய்வோர்க்கு புண்ணியங்கள் பலவாறாய் கிட்டுமப்பா.


அரங்கா சுப்பிரமணியர் யானும் உரைக்கின்றேன் இப்போ. இந்த காலச் சூழ்நிலையில் அரங்கா உமது ஞானதேகமதில் மூலக்கனல் பெருகி நிற்குதப்பா. ஆதலினால் தேகத்தினில் சட்டென்று வலி தோன்றுமப்பா. சஞ்சலப்பட வேண்டாம் அரங்கனே அது தானே விலகிப் போய்விடும். முருகப்பெருமான் எனது அருள்பலத்தினாலே அரங்கா உம்முள் தோன்றிய வலிகள் விலகிடும். வள்ளல் பெருமானாரின் அகவல் பாராயணத்தினை பாடிடக் கேட்டால் விரைந்து உமக்கு நலம் உண்டாகும்.


இவ்வுலகினில் உலக நன்மைக்காக உலகப் பெருமாற்றத்திற்காக முற்றுப்பெற்ற முனிவன் அரங்கனே நீ மீண்டும் அவதரித்து மக்கள் நலன் கருதி மக்கள் ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ள ஏதுவாக ஏழாம் படை வீடாய் ஓங்காரக்குடிலினை சுத்த ஞானக்குடிலாக அமைத்து உலகினர்க்கு சேவைகள் செய்து வருகின்றாய். உலகோர்க்கு தொண்டு செய்யும் உமது அறப்பணிகளுக்கு மனம் விரும்பி பொருள் தருகின்ற மக்களெல்லாம் வாழ்வாங்கு வாழ்ந்து வளம் பெறுவார்களப்பா.


ஆதலினால் மக்களே உங்களது பாவச்சுமை நீங்கிட குடிலிற்கு தானம்தனை அளித்து புண்ணியம் பெறுவீர் சுப்பிரமணியர் எனது அருளைப் பெற்றிட பொருளினை அளிப்பீர் அரங்கனுக்கு. பொருள் அளித்து எமது அருளை பெற்றிடவே அழைப்பு விடுகின்றேன் முருகப்பெருமான் யானுமே, உலகோரே எனது அழைப்பை ஏற்று ஏழாம் படை வீடு ஓங்காரக்குடிலினை நாடி வந்து அரங்கனை கண்டு தரிசியுங்கள். மனம் மகிழ ஞானம் பெற்றிட வந்து காணுங்கள் அரங்கமகா தேசிகனை. இன்றே உடன் வந்து காண அழைக்கின்றேன் உலகோரே, உங்களை அன்புடன் முருகப்பெருமான் யானுமே! மகா ஞானி அரங்கனும் முருகப்பெருமானும் யானும் ஒன்றுதானப்பா. ஈசனும் அரங்கனும் வேறல்ல ஒன்றுதானப்பா. மேன்மைமிக்க குரு அரங்கமகா தேசிகன் ஈசனின் அவதாரமாகும்.


ஆதலினால் பயபக்தியுடன் மேன்மையாய் குருவின் சேவைகளை தொண்டுகளை செய்து வர வேண்டும் தொண்டர்களே.

குருவிற்கு செய்யும் தொண்டு கோடி புண்ணியங்களை தந்திடும். 
குருவிடம் பெறும் தீட்சை உபதேசம் பிறவித் துன்பத்தை போக்கிடும். 
குருவின் வாக்கு உங்களது மாறாத விதியையே மாற்றி நிற்கும்.


ஆதலினால் மக்களே உடன் விரைந்து வாருங்கள் ஓங்காரக்குடிலிற்கு முருகப்பெருமான் அழைக்கின்றேன் அன்போடு, வாரீர் வாரீர் மக்களே இன்றே விரைந்து வாரீர். ஓங்காரக்குடில் நாடி வந்துமே அரங்கதரிசனம் பெற்று ஆசி தீட்சை ஏற்று குடில் அறப்பணிகளை சிரமேற்கொண்டு செய்து அரங்கனுக்கு உத்தம சீடர்களாக தொண்டுகளைச் செய்து ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ளுங்கள் என்றே வழிமுறை உரைத்திட்டேன் முருகப்பெருமான் யானுமே. எம் அவதாரமே ஆறுமுக அரங்கமகா தேசிகனே வாழிய வாழி எனக் கூறுகிறார் மகான் சுப்பிரமணியராகிய முருகப்பெருமான்.
-சுபம்-

Sunday, 26 August 2018

ஓம் அகத்தீசாய நம”



என்னுடைய பேர்ச்சொல்லில் கூட்டிக்கொண்டு 
இசைவான பொதிகையிலே யேறுவார்பார் 
உன்னுடைய திறங்கண்ட போதுதானே 
யுறுதியுள்ள சித்தனென்று பேருமீய்வேன் 
மின்னுடைய வொளிக்காட்டி யுறுதலமுங்காட்டி 
மெய்ஞ்ஞான வீடுபெற நிலையுங்காட்டி
பன்னுடைய சிதம்பரமு மேருபூசைப்
பாவிப்போ மஷ்டாங்கம் பரிந்துகாணே.

-அகத்தியர் பூரண சூத்திரம் 216

ஆசான் அகத்தியர் சொல்கிறார் என்னுடைய நாமத்தை சொன்னால் பொதிகை மலையாகிய புருவமத்திக்கு செல்லமுடியும். உன்னுடைய திறமையை அறிந்த பின்புதான் உன்னை சித்தன் என்று சொல்வேன் என்கிறார். அகத்தீசன் நாமத்தை சொல்ல சொல்ல நாம் அறியமுடியாத ஒன்றை பற்றி அறிய நமக்கு வாய்ப்பு கிடைக்கிறது. அதுவே வீடுபேறு அடையவும் உண்மை ஆன்மீகத்தை அறியவும் உதவுகிறது.


காலை எழும் போதே “ஓம் அகத்தீசாய நம” என்று அகத்தியர் நாமங்களை நாமஜெபமாக சொல்லிக் கொண்டே எழுந்திரித்தால் நவகோடி சித்தரிஷி கணங்களின் ஆசிகளைப் பெற்று மனஅமைதியான வாழ்வை பெற்று, மனஅமைதியுடன் வாழ்வார்கள்.

ஞானிகள் நாமங்களை சொல்லி பூஜித்து ஆசி பெறுகின்ற மக்களுக்கு முருகனருளால் உணவு, உடை, தங்குமிடம் மற்றும் தகுதியுள்ள நட்பும் அமையப்பெற்று நலமான வாழ்வை வாழ்வார்கள் என்பதை அறியலாம்.


பக்தியே பாலனாக்கும்

நான்பெற்ற இன்பம் பெறுகஇவ் வையகம்
வான்பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடின்
ஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரந்
தான்பற்றப் பற்றத் தலைப்படுந் தானே.
- திருமந்திரம் - திருமூலர் வரலாறு - கவி எண் 85.


நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று ஆசான் திருமூலதேவர் சொன்னார். ஆசான் ஞானபண்டிதன் வேறல்ல, மகான் அருணகிரிநாதர் வேறல்ல, எல்லாம் ஒருவர்தான். நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் நான் அடைந்த இன்பத்தை இவ்வுலகம் அடைய வேண்டுமென்று சொன்னார்.
மறைபொருள் எது என்று கேட்டான்? அது, ஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரம் என்றார் ஆசான் திருமூலதேவர். நீங்களெல்லாம் இந்த உடம்பைப் பற்றி அறிய முடியவில்லை. நான் அறிந்தேன் என்றார். இந்த உடம்புக்குள்ளேயே சொர்க்கம் இருக்கிறது. ஊன் என்ற இரண்டு சுழி ‘ன்’ போட்டிருக்கும். உடம்பு என்று அர்த்தம். அது ஊன் பற்றி நின்ற உணர்வுறு மந்திரம்.
தான் பற்றப் பற்றத் தலைப்படுந் தானே என்றார். இப்ப நாங்களெல்லாம் அடைந்த இன்பம் எது? நீ பார்க்கக்கூடிய உடம்பை இதுநாள் வரை நீ நம்பியிருப்பாய், நம்பி போற்றி வருகிறாய். நாங்களும் போற்றி வருகிறோம். ஆனால் உன்னால் காப்பாற்ற முடியவில்லை. நரைதிரைக்கு உட்பட்டு, நோய்க்கும் பிரச்சனைக்கும் உட்பட்ட உடம்பாக இருக்கும். நாங்கள் என்ன செய்தோம்? உள்ளே ஒரு ஒளிச்சுடரை அறிந்து, நோய்க்கும், பிரச்சனைக்கும், பசிக்கும், பிணிக்கும் காரணமான உடம்பை நீக்கி, என்றும் அழியாத ஒளி உடம்பை நாங்கள் பெற்றிருக்கிறோம். இதை உங்களுக்கு சொல்கிறோம்.
நீங்களும் அறிந்து கொள்ளலாம். நீங்கள் என்ன செய்கிறீர்கள்? இதுபற்றி ஒன்றுமே அறியாமல், வெறும் ஆரவார பூஜை சடங்குகளில் மட்டும் ஈடுபடுகிறீர்கள். முதுபெரும் தலைவன் சொன்னார். உன்னால் அறிந்து கொள்ள முடியாது. உன்னுடைய அறிவு ஒரு எல்லைக்கு உட்பட்டது. எங்கள் அறிவு எல்லை கடந்தது. ஈரேழு பதினான்கு உலகமும் சென்று வரக்கூடிய வல்லமை உள்ள அறிவு நாங்கள் பெற்றிருக்கிறோம். அந்த அறிவு எல்லாம்வல்ல இயற்கை எங்களுக்கு கொடுத்திருக்கிறாள். தாய்தான் தந்திருக்கிறாள். ஆகவே நீங்களும் அதை அறிந்து கொள்ளுங்கள் என்றார். ஞானிகள் இதைத்தான் சொல்லியிருக்கிறார்கள்.


என்னவே நீயழைக்க எனக்குமுன்னே
எதிரேறி முன்வருவாள் ஆத்தாள்வாலை
சொன்னபேர் அறிந்துநன்றாய் அழைத்துப்பாரு
சூட்சமிதை உனக்காகச் சொன்னோமப்பா
இன்னபேர் இன்னகுறி யெண்ணவேண்டாம்
ஏகமாய் அறிந்திருப்போம் அப்போநாமும்
முன்னமே அழைக்கையிலே மூமூவென்றால்
முத்திதரும் வாலைபதஞ் சித்தியாமே.
- மகான் திருமூலர் ஞானம் 84ல் கவி எண் 82

சித்தர்கள் எல்லோரும் ஞானிகள். ஞானிகளில் இவர் உயர்ந்தவர், அவர் தாழ்ந்தவர் என்ற பேதமில்லை. எல்லா ஞானிகளும் மானுட தேகம் எடுத்து அதன் பயனை அறிந்து அதிலுள்ள மும்மல கசடை நீக்கி ஒளி உடம்பை பெற்றவர்கள். களிம்பாகிய மும்மலத்தை போக்காவிட்டால் ஞானியாக முடியாது. அவர்கள் பலகோடி யுகம் வாழும் வல்லமை பெற்றவர்கள். மனிதனாக பிறந்தால் மோட்ஷகதி அடைய வேண்டும். நம்மை தோற்றுவித்த வாலை அன்னை எப்பவும் இளமையாக இருக்கிறாள். நாம் பரிணாம வளர்ச்சிக்கு உட்பட்டு இறந்து விடுகிறோம். ஞானிகள் அருள் இல்லாமல் இயற்கை அன்னையை அறிய முடியாது. ஆசான் திருமூலதேவரை தியானித்து அழைக்கவேண்டும் இல்லாவிட்டால் ஒரு முற்றுப்பெற்ற ஞானியை ஆசானாக ஏற்று பூஜித்து ஆசி பெற வேண்டும்.

இருள்சேர் இருவினை சேராமல் காக்கும் இறைவனே வள்ளுவபெருமான்

திருச்சி மாவட்டம், துறையூர், ஓங்காரக்குடிலாசான், சிவராஜயோகி, பரமானந்த சதாசிவ சற்குரு தவத்திரு ஆறுமுக அரங்கமகாதேசிகர் சுவாமிகள் அவர்கள் அருளிய அருளுரை


திருக்குறள் கடவுளால் செய்யப்பட்டது. மற்ற நூல்களிலும் அறத்தைப் பற்றியும், பொருளைப் பற்றியும், இன்பத்தைப் பற்றியும் பேசுவார்கள். இன்பம் என்பது ஆணும் பெண்ணும் கூடி வாழ்கின்ற வாழ்க்கை. அது இல்லறமாகும். உலக அறிஞர்கள் எல்லோரும் அன்பாக நடந்து கொள்ள வேண்டும், இனிமையாக பேச வேண்டுமென்று சொல்வார்கள்.
வீடுபேறு என்றால் மரணமிலா பெருவாழ்வு அல்லது மோட்சலாபம். மனிதனுக்கு மரணமிலா பெருவாழ்வு உண்டு என்பதை அறிந்தவர்கள் நமது ஞானிகள். மகான் இராமலிங்க சுவாமிகள் முதற்கொண்டு ஆசான் அருணகிரிநாதர் வரை மரணமிலா பெருவாழ்வு என்ற வாய்ப்பை பெற்றிருக்கிறார்கள்.
விஞ்ஞானமும், மெய்ஞானமும் இரண்டு கண்கள் போன்றது. ஒன்றை ஒன்று அவமதிக்கக்கூடாது. இதற்கும் அதற்கும் பகையில்லை, நட்புதான்.இந்த விஞ்ஞானம் உடம்பைப் பற்றி அறிகின்ற அறிவாகும். உடம்புக்கு நோய் வந்தால் விஞ்ஞானத்தால் குணமாக்கலாம் என்று சொல்லலாம். நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கலாம். ஆனால் இந்த விஞ்ஞானம் உடம்பை காப்பாற்ற மட்டும்தான் பயன்படும்.
விஞ்ஞானத்தால் தயாரிக்கப்பட்ட கருவிகளும், மருந்துகளும் மனிதவர்க்கத்துக்கு ஒரு சிறந்த வரப்பிரசாதம்தான். ஆனால் அது மனிதன் மட்டுமே அடையக்கூடிய மோட்ச லாபத்தை தர வேண்டுமல்லவா?
மோட்ச லாபம் என்பது உடம்புக்குள்ளே சூட்சுமதேகம் அல்லது ஒளி உடம்பு என்ற ஒன்று இருக்கிறது. அந்த ஒளி உடம்பைப் பற்றி அறியணும். ஒளியுடம்பை அறிவதற்கு பக்தி ஒன்றுதான் வழி. ஒளி உடம்பை பெற்றவர்கள் அதை வீடுபேறு, மோட்சலாபம், முக்தி அல்லது முக்திநெறி என்று சொல்லுவார்கள். அதைப்பற்றி அவர்கள் அறிந்திருக்கிறார்கள். அந்த ஒளிஉடம்பை பெற்றவர்களிடம் பக்தி செலுத்தணும், அவர்களிடம் அன்பு செலுத்தணும் என்பார்கள்.
பக்தி எதற்கு செலுத்த வேண்டும்? மோட்சலாபம் அடைவதற்கு. மோட்சம் அல்லது வீடுபேறு அல்லது முக்திநெறி அடையவேண்டுமென்றால் பக்தி செலுத்தணும். பக்தியை யாரிடம் செலுத்துவது?
நாம் செலுத்துகின்ற பக்தியெல்லாம் ஒரு வகையில் சிறுதெய்வ வழிபாட்டில் போகும். அவரவர்கள் அறிவுக்கு ஏற்ற மாதிரி பக்தி செலுத்துவார்கள். ஞானிகளெல்லாம், முற்றுப் பெற்றவனாகவும், எவன் மரணமிலா பெருவாழ்வு பெற்றானோ, எவன் எக்காலத்தும் அழியாது இருக்கிறானோ அவனுடைய ஆசி பெறுவதற்காக ஞானிகள் பக்தி செலுத்துவார்கள். அவர்களுடைய ஆசியை பெறணும்.

ஆசான் திருவள்ளுவர் முற்றுப்பெற்ற முனிவர். மரணமிலா பெருவாழ்வு பெற்றவர். அவர் எழுதிய நூல்கள் பிசிறு இல்லாமல் தெளிவாக இருக்கும். எந்த காலத்துக்கும் பொருந்தும். இந்த காலத்துக்குத்தான் பொருந்தும், இந்த காலத்திற்கு பொருந்தாது என்று சொல்ல முடியாது. எல்லா காலத்துக்கும் பொருந்தக்கூடிய நூலை எழுதியிருக்கிறார். என்ன காரணம் என்றால் அவர் வீடுபேறு அறிந்தவர், மரணமிலா பெருவாழ்வு பெற்றவர், அறியாமை நீங்கியவர். அறியாமை நீங்கியதால்தான் அப்படிப்பட்ட நூலை அவரால் எழுத முடிந்தது. அறம், பொருள், இன்பத்தைப் பற்றி எழுதியிருக்கிறார், வீடு பேறைப் பற்றியும் எழுதியிருக்கிறார். அதை சொல்லாமல் சொல்லியிருக்கிறார்.
மகான் திருவள்ளுவபெருமான் பிறவிக்கு காரணமானதை அறிந்தவர். பிறவிக்கு என்ன காரணம்? இந்த மும்மலமாகிய தேகம்தான் காரணம். அறியாமையை உண்டு பண்ணக்கூடிய இந்த தேகத்தை நீக்கினால் மரணமிலா பெருவாழ்வைப் பெறலாமென்ற இரகசியத்தை அறிந்தவர் ஆசான் திருவள்ளுவர்.
எனவேதான் எக்காலத்திலும், எந்த சக்தியாலும், எந்த விஞ்ஞானியாலும், எந்த அறிஞராலும் புறக்கணிக்க முடியாததாகவும், இது தேவையில்லை என்று சொல்லக்கூடிய நூலை அவர் எழுதவில்லை. 1330 குறளும் அப்பேர்ப்பட்ட முதுபெரும் தலைவனால் எழுதப்பட்டது. அவர் பிறவி நீங்கியவர் பிறவிக்கு காரணமாகிய பேதைமையை நீக்கினவர்.
ஆக இந்த தேகத்தை அறிந்து அதிலுள்ள மாசை நீக்க வேண்டும். இந்த தேகத்தில் இருக்கும் அழுக்கு, மாசு அல்லது மும்மலக்குற்றம் என்று சொல்லப்பட்ட ஆணவம், கன்மம், மாயை அல்லது மல, ஜல, சுக்கிலம் என்ற இந்த கசடை நீக்கியதால்தான் அவன் இனி பிறக்க மாட்டான். அவனே பேதைமை நீங்கியவன்.