திருச்சி மாவட்டம், துறையூர், ஓங்காரக்குடிலாசான், சிவராஜயோகி, பரமானந்த சதாசிவ சற்குரு தவத்திரு ஆறுமுக அரங்கமகாதேசிகர் சுவாமிகள் அவர்கள் வழங்கிய அருளுரை
மனம் என்ற மன்னன், மெய், வாய், கண், மூக்கு, செவி என்று சொல்லப்பட்ட புலன்கள் வழியே செல்லுகிறான். அறிவு என்ற அமைச்சன் மனம் என்ற மன்னனைப் பார்த்து, “மெய், வாய், கண், மூக்கு, செவி என்று சொல்லப்பட்ட திருடர்கள், கயவர்கள், வேடர்கள் இவர்களின் பேச்சைக்கேட்டு நீ அவர்களின் போக்கில் போகாதே” என்று அறிவு என்ற அமைச்சன் சொன்னாலும், மனம் என்ற மன்னன் கேட்க மாட்டான்.
மனம் என்ற மன்னன் பொறி, புலன் வழியே செல்கிறான், அங்கு அறிவுரை எடுபடவில்லை. பொறி ஐந்து, புலன் ஐந்து ஆகும். கண் என்பது ஒரு பொறி. கண்களில் பார்த்து ஒரு பொருள் புலப்பட்டால் அது புலன். செவி என்பது பொறி. ஒரு செய்தியை, செவியால் சேகரிக்கப்பட்டு அதைப்பற்றி சிந்தித்தால் அது புலன். நாவு என்பது கருவி. சாப்பிட்ட பொருள்களின் சுவையை அறிந்தால் அது புலன். மூக்கு என்பது பொறி. மகிழம்பூ வாசனை, நெய் வாசனை, தக்காளிசாத வாசனை, சோம்பு வாசனை என வாசனைகளை இனம்பிரித்து காட்டும். இது புலன். மெய் என்பது உடம்பு. குளிர்ச்சியாகவும் வெப்பமாகவும் உள்ளதை உடம்பின் மூலமாக தொடு உணர்ச்சியால் அறியும் அனுபவத்தை புலன் என்று சொல்வார்கள்.
மனம் என்று சொல்லப்பட்ட மன்னன், அறிவு என்ற அமைச்சன் சொல்லுகின்ற கருத்தை கேட்காமல், பொறிபுலன் வழியே செல்கிறான். ஆக இவர்கள் இரண்டுபேரும் இப்படி முரண்பட்டு இருக்கிறார்கள். ஆக, மனது என்ற மன்னன், அறிவு என்று சொல்லப்பட்ட அமைச்சன் பேச்சை கேட்கவேண்டும்.
மனது என்ற மன்னன், புலன் வழியே செல்கிறான். புலன் வழியே, மனம் என்னும் மன்னன் செல்வதால், அங்கே ஒரு நெறி இருக்காது. புலன்களை நெறிப்படுத்த முடியாது. மனம்தான் அவற்றை கட்டுப்படுத்த வேண்டும். புலன் வழியே மனம் என்ற மன்னனும், அறிவு என்ற அமைச்சனும் செல்வதால், அங்கே ஒரு நெறி இருக்காது.
இப்படி இருக்கும்போது உடம்பு என்று சொல்லப்பட்ட அரண்மனையை அல்லது கோட்டையை எப்படி இவர்களால் காப்பாற்ற முடியும்? இப்படிப்பட்ட ஒரு நிலையில் உடம்பு என்று சொல்லப்பட்ட அரண்மனையின் ஒரு பகுதியிலே ஒரு சத்தம் கேட்குது. இந்த ஆன்மாவுக்குரிய பலகோடி வினைகள் காரணமாக பலகோடி ஜென்மங்கள் எடுத்திருக்கு. பலகோடி ஜென்மங்களாக ஒவ்வொரு உடம்பிலும் ஆன்மா தங்குவதும், அதனால் உடம்பும் உயிரும் சேர்ந்து செய்கிறபாவம் உயிரைச் சார்ந்து விட்டது. இது மனம் என்கிற மன்னனுக்கும், அறிவு என்ற அமைச்சனுக்கும் தெரியாது.
தனி உடம்பு பாவம் செய்யாது. உயிரும் உடம்பும் செய்யக்கூடிய பாவம், உடம்புக்கு நலிவு வந்து, நோய் வந்து உடம்பு இறந்துவிடும். ஆனால் உயிருக்கு நலிவு இல்லை, நோயில்லை, பரிணாம வளர்ச்சி இல்லை. ஆனால் செய்த வினையை மட்டும் உயிர் வாங்கி வச்சுக்கும். இப்படி பலகோடி ஜென்மங்களில் பலகோடி உடம்பெடுத்து பாவம் செய்ததினாலே ஆன்மா நலிவுற்றுக் கிடக்கு. அதற்கு ஒரு வீர உணர்ச்சி இல்லை, தெம்பில்லை, நோய்வாய்ப்பட்டு கிடக்கு.
ஆன்மா, “நீங்க ரெண்டு பேரும் என்னை கவனிக்கவே இல்லை. நான் இந்த உடம்பிற்கு வந்து நாற்பத்தைந்து வருஷம் ஆச்சு. நாற்பத்தைந்து ஆண்டுகளாக என்னை நீங்க கவனிக்கல. அதனால நான் நலிந்து இருக்கிறேன்” என்று இப்படி ஆன்மா, மனதையும் அறிவையும் பார்த்து சொல்லுது. மனம் என்ற மன்னன் அறிவு என்ற அமைச்சனைப் பார்த்து “இவருக்கு (நலிந்த ஆன்மா) என்ன செஞ்சா சரியா வரும்? என்ன வைத்தியம் செய்றது?” என்று கேட்டான்.
அதற்கு அந்த நலிந்த ஆன்மா “எனக்கு உங்களால் எதுவும் கொடுக்க முடியாது. என்னால் எதுவும் சாப்பிட முடியாது. எனக்கு அருளும், புண்ணியமும்தான் வேணும். நான் சாப்பிடும் உணவு அருளும், புண்ணியமும்தான். புண்ணியமும், அருளும் இருந்து கொடுத்தீங்கன்னா ரொம்ப தெம்பா இருப்பேன்” என்று ஆன்மா, மனம் என்ற மன்னனையும், அறிவு என்ற அமைச்சனையும் பார்த்து சொன்னது.
மனம் என்ற மன்னன், “நம்மிடம் உள்ள வசதிக்கு நாம என்ன புண்ணியம் செய்ய முடியும்” என்று அறிவு என்ற அமைச்சரிடம் கேட்கிறான். அதற்கு அறிவு என்ற அமைச்சன், “இப்ப இருக்கிற மூலதனத்தைக் கொண்டு நாம எந்த புண்ணியத்தையும் செய்ய முடியாது” என்று சொல்லுகிறான். “இருக்கக்கூடிய பொருளைக் கொண்டு புண்ணியத்தை செய்து ஆன்மாவுக்கு உணவு தருவோம். புண்ணியமும் அருள் பலமும்தான் ஆன்மாவுக்கு உணவு. அருள்பலம் ஆன்மாவுக்கு நல்ல உணர்ச்சியைத் தரும். அந்த அருளை எப்படி சேகரிப்பது என்று” மனம் என்னும் மன்னன், அறிவு என்ற அமைச்சனைப் பார்த்து கேட்கிறான்.
அப்ப ஒரு சத்தம் வருகிறது “என் திருவடியைப் பற்றுங்கள்” என்று உள்ளே இருந்து ஒரு சத்தம் வருகிறது. “அறிவு என்ற அமைச்சனும், மனம் என்ற மன்னனும், ஆன்மாவும் இருக்கும்போது, என் திருவடியைப் பற்றுங்கள் என்று உள்ளே ஒரு ஓசை கேட்கின்றது” இந்த மூவரும் இவ்வாறு சொல்வது யார்? என்று பார்க்கும்போது அகத்திய முனிவர் இவர்களைப் பார்த்து ஏளனமாக சிரிக்கிறார்.
“அருள் பெறுவதற்கு வேறு இடம் தேவை இல்லை. என் திருவடியைப் பற்றுங்கள்” என்றார் அகத்திய முனிவர். மன்னன் என்ற மனம், அன்னதானம் செய்தது, அகத்தீசன் திருவடியை பூஜை செய்தது. இருவரும் சேர்ந்து கொண்டார்கள்.
பிறகு அறிவுக்கும், மனதிற்கும், ஆன்மாவுக்கும் அகத்தீசர் போதிக்கிறார். அன்னதானம் செய்வது நல்லதுதான் என்று கூறி, மேலும் “என் திருவடியைப் பற்றுங்கள். என் திருவடியைப் பற்றினால் உங்களுக்கு நான் அருள் செய்வேன்” என்றார்.
“ஆன்மா நலிந்துவிட்டால், ஆன்மா கோட்டையை (உடம்பை) விட்டு போய்விட்டால், ஆன்மா இல்லாத உடம்பிற்குள், மன்னனாகிய உனக்கும் (மனம்) வேலையில்லை. அமைச்சனாகிய அறிவுக்கும் வேலை இல்லை. ஆசானாகிய எனக்கும் இங்கு வேலை இல்லை” என்றார்.
இதைக்கேட்ட மனம் என்ற மன்னன், ஆசான் அகத்தீசரை பூஜை செய்கிறார். மகான் அகத்தீசரை பூஜை செய்யசெய்ய, அறிவு என்று சொல்லப்பட்ட அமைச்சன் தெளிவு அடைகிறான். இருவரும் பூஜை செய்கிறார்கள். மனம் என்று சொல்லப்பட்ட மன்னனும், அறிவு என்று சொல்லப்பட்ட அமைச்சனும் சேர்ந்து ஆசான் திருவடியைப் பூஜை செய்கிறார்கள்.
மனமும் அறிவும் சேர்ந்து, ஆசான் திருவடியை பூஜை செய்கிறார்கள். பூஜை செய்ய பூஜை செய்ய அறிவும் மனமும் சிறப்படையும், ஆன்மாவும் ஆக்கம் பெற்றது. ஆன்மாவுக்கு ஆக்கம் தேடிக்கொள்ள வேண்டும். ஒருவர் எடுத்துச் சொல்ல வேண்டும். மனம் என்ற மன்னன் மடையனாக இருந்தால், அறிவு என்ற அமைச்சனால் ஒன்றும் சொல்ல முடியாது.
மன்னனின் (மனதின்) லோபித்தனத்தைக் கண்டு அமைச்சர்(அறிவு) வருந்துவார். ஆக ஆன்மாவுக்கு ஆக்கம் தேடிக்கொள்ள வேண்டும். ஆன்மா நலிவடைந்தால் இந்தக் கூட்டைவிட்டு போய்விடும். கூட்டை விட்டு போகும் முன்னே “கூடலி முன்னே கதி கொள்ள வேண்டும்” என்பார்.
இந்த உடம்பு அழிவதற்கு முன்னே ஆன்மாவுக்கு ஆக்கம் தேடிக்கொள்ள வேண்டும். ஆன்மாவுக்கு ஆக்கம் தேடுவதற்கு அன்னதானம்தான் செய்ய வேண்டும். அன்னதானம் செய்வதற்கு அறிவு வேண்டும். ஆசான் அகத்தீசரை பூஜை செய்தால், பொல்லாத வறுமை தீரும், செல்வம் பெருகும். அதேசமயம் அருளையும் தருவார். அருள் பெருகினால் அறிவு சிறப்பாக வேலை செய்யும், லோபித்தனம் இருக்காது, சீலமும் பெருகும்.
ஒவ்வொருவருடைய உடம்பு என்ற கோட்டையில் மனம் என்ற மன்னன் இருக்கிறான், அறிவு என்ற அமைச்சன் இருக்கிறான். ஆன்மாவும் இருக்கு. மூவரும் தெளிவில்லாமல் இருக்கிறார்கள். ஞானிகளை வணங்கினால் நமக்கு உணர்த்துவார்கள்.
இப்ப நாம அகத்தீசாய நம, அகத்தீசாய நம, அகத்தீசாய நம என்று சொல்லுகிறோம். தினமும் அகத்தீசனை வணங்குங்கள், அகத்தீசனை வணங்குங்கள் என்று பேசுறோம். ஏனயா வணங்கனும்? என்று கேட்டால் ஆன்மா நலிந்து கிடக்கு. ஆன்மா நலிந்தால் இந்த கோட்டையிலே (உடம்பிலே) நீடித்து இருக்க முடியாது. இந்தக் கோட்டையை காப்பாற்ற வேண்டும். அதற்கு ஆன்மா, ஆக்கம் பெற வேண்டும். அதுக்குத்தான் அகத்தீசனை வணங்க சொல்றோம்.
ஆன்மா ஆக்கம் பெறாமல், உடம்பு மட்டும் ஆக்கம் பெற்று என்ன பயன்? இந்த உடம்பு நல்ல திடமாக இருக்கும்போது ஆன்மாவுக்கு ஆக்கம் தேடிக்கொள்ள வேண்டும். ஆன்மா உரம்பெற்று இருக்க வேண்டும்.
ஆன்மா பலகோடி ஆண்டுகளுக்கு முன்னே தோன்றியது. ஆனால் உடம்போ அவரவருக்கும் முப்பது வருஷம், நாற்பது வருஷம், ஐம்பது வருஷம், அறுபது வருஷம், எழுபது வருஷம், எண்பது வருஷம் போல ஒரு குறுகிய காலத்தில் வந்தது இந்த உடம்பு. ஆக குறுகிய காலத்தில் வந்த, இந்த உடம்பு இருக்கும்போதே உயிருக்கு ஆக்கம் தேடிக்கொள்ள வேண்டுமென்ற அறிவுரையை ஒருவர் சொல்ல வேண்டும்.
இயல்பாக எதையும் அறிவுக்கு உணர்த்த முடியாது. நல்வினை இருந்தால், ஆன்மாவுக்கு ஆக்கம் தேடிக்கொள்ள வேண்டுமென்று அறிவுக்கு யாரேனும் ஒருவர் உபதேசிப்பார்கள். ஆன்மலாபத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள். ஆன்மாவுக்கு ஆக்கம் தேடிக்கொள்ளுங்கள். இதற்கு என்ன உபாயம் என்றால், முற்றுப்பெற்றவன் திருவடியை பூஜை செய்ய வேண்டும். அடுத்ததாக ஏழைஎளிய மக்களுக்கு பசியாற்ற வேண்டும். இதுபோன்ற செயல்களால்தான் ஆன்மா ஆக்கம் பெறும். ஆன்மா ஆக்கம் பெற்றால் அறிவு வேலை செய்யும். மனமென்ற மன்னனும் தெளிவடைவான். இதையே மகான் திருவள்ளுவர்,
ஈதல் இசைபட வாழ்தல் அதுஅல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு.
- திருக்குறள் - புகழ் - குறள் எண் 231.
ஈதல் - கொடுத்தல், இசைபட வாழ்தல் - புகழ்பட வாழ்தல். ஊதியம் - அன்னதானம் செய்வதால் ஆன்மாவுக்கு ஊதியம் வரும், புகழும் உண்டாகும். ஆன்மாவுக்கு ஆன்ம இலாபம் உண்டாகும்.
ஆன்மாவுக்கு ஆக்கம் வரும். அது அல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு - உயிர்க்கு ஆக்கம் தேடிக்கொள்ள வேண்டும்.
ஏன் உயிர்க்கு ஆக்கம் தேடிக்கொள்ள வேண்டும். உடல்மாசு காரணமாக உயிர்மாசுபட்டு இருக்கு. இந்த காமதேகத்தின் காரணமாக இந்த தேகத்தில் உள்ள உயிருக்கும் மாசு இருக்கும். உயிருக்கு மாசு வந்தால் அறிவு மங்கிவிடும். மனம் தெளிவடையாது. ஞானிகள்மீது செலுத்தும் பக்தியாலும், தானதவம் செய்வதாலும் உயிருக்கு ஆக்கம் தேடிக்கொள்ளலாம்.
இந்த உயிர் ஆக்கம் பெறபெற மனம் என்ற மன்னனும், அறிவு என்ற அமைச்சனும் தெளிவடைவார்கள். இதனால், ஆன்மா தெளிவு அடையஅடைய உடம்பைப்பற்றிய உணர்வு வரும். உடம்பை காப்பாற்றிக் கொள்ள வேண்டும், உடம்பை காப்பாற்றிக் கொள்வது நல்லது என்ற உணர்வு வரும். அப்ப உடம்பை எப்படி காப்பாற்றிக் கொள்வது? அசைவ உணவு கொடுத்து உடம்பை காப்பாற்றிக் கொள்ள முடியுமா? நிச்சயம் முடியாது.
உடம்புக்கு சைவ உணவைக் கொடுத்து காப்பாற்ற வேண்டும். உடம்பு இருக்கும்போதே உயிருக்கு ஆக்கம் தேடிக்கொள்ள வேண்டும், என்ற எச்சரிக்கை உணர்வு வரும். உயிர் என்பது மூச்சுக்காற்று இயக்கம். மூச்சுக்காற்று வந்து போய்கிட்டு இருக்கும். உடம்பு என்ற கோட்டை அல்லது அரண்மனை, திடமாக இருந்தால்தான் மூச்சுக்காற்று இயல்பாக வந்துபோகும். உடம்பு என்ற கோட்டை நலிந்தால் நிச்சயமாக வந்து போகின்ற காற்று நின்றுவிடும். வந்து போகின்ற காற்று நின்றுவிட்டால், ஆன்மா உடம்பை விட்டு பிரிந்துவிடும்.
ஆன்மா மாசுபட்டால், ஆன்மா நலிந்தால், ஆன்மா மெலிந்தால், அறிவு மாசுபட்டுவிடும், அறிவு மங்கிவிடும். மனமும் தெளிவடையாது. ஆன்மாவிற்கு ஆக்கம் தருவது பக்தியும், புண்ணியமும்தான். அதை விரைவாக செய்து கொள்ள வேண்டும் என்பது ஞானிகளின் கருத்து. நேற்று நல்லபடியாக இருந்த ஒருவன், இன்று இல்லை. இப்படித்தான் வாழ்க்கை அமைந்துள்ளது என்பார் ஆசான் திருவள்ளுவர். இதை,
நெருநல் உளன்ஒருவன் இன்றுஇல்லை என்னும்
பெருமை உடைத்துஇவ் வுலகு.
- திருக்குறள் - நிலையாமை - குறள் எண் 336.
என்பார்.
நெருநல் உளன் ஒருவன் - நேற்று நல்லபடியாக உள்ள ஒருவன் இன்று இல்லை என்னும் பெருமை உடைத்தது இவ்வுலகம். நேற்று நல்லபடியா, திடகாத்திரமாக இருந்தார், இன்று இல்லை, என்று ஒருமாசம் இரண்டு மாசம் பேசுவார்கள். அப்புறம் மறந்தே விடுவார்கள்.
இப்படி கோடானுகோடி மக்கள் பிறப்பார்கள், இறப்பார்கள். புகழ் வாய்ந்தவர்கள் என்றால், அவர்களின் புகழ் பத்து வருஷங்களுக்கு இருக்கும். சிலபேருக்கு நூறு வருஷங்கள் வரைக்கும் அவரோட புகழ் இருக்கலாம். இதை ஆசான் திருவள்ளுவர்,
நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப்
போற்றாது புத்தேள் உலகு.
- திருக்குறள் - புகழ் - குறள் எண் 234.
உலகமெல்லாம் புகழ்பட ஒருவர் வாழ்ந்தால், அவர்கள்தான் பெருமைக்கு உரியவர்களாக இருப்பார்கள். நிலையில்லாத வாழ்க்கையை பெற்றிருக்கிறோம். அதற்குள் நிலையான காரியங்களை செய்துகொள்ள வேண்டும், என்பார் ஆசான் திருவள்ளுவர். பத்தாம் வாசலாகிய புருவமத்தியில் அந்தக்கல்லை வைத்து வழியை அடைக்க வேண்டும். இவ்வாறு செய்வதற்கு ஞானிகள்தான் அருள்செய்ய வேண்டும். மேலும் ஆசான் திருவள்ளுவர்,
நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை
மேற்சென்று செய்யப் படும்.
- திருக்குறள் - நிலையாமை - குறள் எண் 335.
நாச்செற்று - நாவடங்கி, விக்குள்மேல் - சிலருக்கு ஆன்மா பிரியும்போது விக்கல் வரும். மூலாதாரத்திலிருந்து அந்த ஆவி பிரியும்போது விக்கல் வரும். எந்த மனிதனும் நான் இத்தனை ஆண்டுகள் இருப்பேன் என்று சொல்ல முடியாது. நம்மை நோக்கி எமன் வந்துகொண்டே இருக்கிறான்.
அறியாமையாகவும், வறுமையாகவும், பகையாகவும், பல்வேறு பிரச்சனைகளாகவும் எமன் வருகிறான்.
மெய், வாய், கண், மூக்கு, செவி என்று சொல்லப்பட்ட புலன்களும் நமக்கு பகைவன்தான். மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்று சொல்லப்பட்ட கரணங்களும் நமக்கு பகைவன்தான். பொறி ஐந்து, புலன் ஐந்து, கரணம் நான்கு ஆக கருவிகள் பதினான்கு. தத்துவம் தொண்ணூற்றாறில் இந்த பதினான்கு கருவிகள்தான் முக்கியம். எழுபத்தீராயிரம் நாடிநரம்புகளில் பத்து நாடி முக்கியமானது. அந்த பத்து நாடியிலும் ஒரு நாடிதான் மிக முக்கியமானது என்று, ஒளவையார் கூறுவார்.
இந்த பதினான்கு கருவிகளும் நமக்கு எமனாக உள்ளது. தத்துவங்களெல்லாம் நம்முடன் ஒத்துழைக்காது. தேகம் காமதேகம் என்பதாலும், தேகத்தில் கசடு உள்ளதாலும், பொறிபுலன்கள் நம்மோடு ஒத்துழைக்கவில்லை.
ஞானிகள் தேகபந்தம், காமவிகாரம் ஆகியவற்றை தலைவன் துணைகொண்டு நீக்கி விடுகிறார்கள். காமதேகம் நீங்கினால், ஆன்மா தெளிவடையும். ஆன்மா தெளிவடைந்தால் அறிவு தெளிவடையும். அறிவு தெளிவடைந்தால் சிந்தை சிறப்பாக செயல்படும். அறிவு, சிந்தை என்ற மனிதனின் எண்ணங்களுக்கு தெளிவை கொடுத்துக் கொண்டே இருக்கும். அதனால் சிந்தை சிறப்பாக செயல்படும்.
அறிவே அமைச்சன், மனமே மன்னன். அறிவு, மனம், ஆன்மா இந்த மூன்று பேரும் சேர்ந்தே, இந்த உடம்பை காப்பாற்ற வேண்டும். நாம் உலகத்தை காப்பாற்றுவதை பிறகு பார்த்துக்கலாம். முதலில் நமது உடம்பை காப்பாற்றிக் கொள்ள வேண்டும். ஆக நற்காரியத்தை விரைந்து செய்து கொள்ள வேண்டும். நற்காரியம் செய்து கொண்டால்தான் ஆன்மஜெயம் பெறலாம்.
நாம் நல்ல சிந்தனையை வளர்த்துக் கொள்ள வேண்டும். நல்ல சிந்தனையை வளர்த்துக் கொள்வது என்பது சாதாரண விஷயம் இல்லை. நம்முடைய வினைக்கு தகுந்தவாறுதான் நம் அறிவு வேலை செய்யும். முன்செய்த பாவம் மிகுந்து இருந்தால், நல்ல சிந்தனை இருக்காது. அங்கே கீழ்த்தரமான புத்திதான் இருக்கும். முன்செய்த பாவம்தான், பொல்லாத வறுமையாக இருக்கு. தேவையில்லாத பிரச்சனைகளை உருவாக்குதல், தேவையில்லாத பகையை உருவாக்குதல், தீர்க்கமுடியாத நோய், ஆழ்ந்து சிந்திக்க முடியாத மனநிலை போன்றவைகள் முன்செய்த பாவத்தால் வருபவை.
நல்வினை மிகுந்து இருந்தால், நல்ல சிந்தனை, தெளிந்த அறிவு, திடமான உடம்பு, எதைப்பற்றியும் அவசரப்பட்டு முடிவு எடுக்காத பண்புகள் எல்லாம் இருக்கும். அங்கு சினம் இருக்காது. நல்வினை மிகுந்து இருந்தால் கொடிய கோபம், நம்மை அடிமைப்படுத்த முடியாது. நல்வினை மிகுந்திருந்தால் பொறாமை உணர்வு இருக்காது. நமக்கு எமனாக இருப்பது கோபமும், பொறாமையும், பேராசையும்தான். பொல்லாத காமதேகமே நமக்கு எமனாக இருக்கு. தீவினை மிகுந்திருந்தால், பகை, பிரச்சினைகள் இருக்கும், மனதில் நிம்மதி இருக்காது. இவையெல்லாம் தேகத்தின் குற்றமல்ல.
இந்த தேகத்தின் இயல்பை அறிந்து, அது கெடுவதற்கு முன்பே, அதற்கு நரை, திரை, மூப்பு வருவதற்கு முன்னே, ஈளை, இருமல் வருவதற்கு முன்பே, நாம் இந்த தேகத்தை காப்பாற்றி கொள்ள வேண்டும். பூஜை செய்தால்தான் உடம்பை காப்பாற்றிக் கொள்கிற பக்குவம் வரும். உடம்பை காப்பாற்றிக் கொள்கிறவன், உயிரை காப்பாற்றிக் கொள்ள அறிய வேண்டும். உயிரைக் காப்பாற்றிக் கொள்ள, மூச்சுக்காற்றைப் பற்றி அறிய வேண்டும். இதை மகான் இராமதேவர், நீ மூச்சுக்காற்றோடு பழக வேண்டுமென்பார். பிராணாயாமம் அல்லது யோகாப்பியாசம் செய்வதற்கு முன்னே மூச்சுக்காற்றின் இயக்கத்தைப் பற்றியும், அது என்ன செய்யும் என்பதைப்பற்றியும் ஆசான் இராமதேவர் சொல்லியிருக்கிறார்.
ஆன்மஜெயம் பெறுவதற்கு ஆன்மாவுக்கு ஆக்கம் தேடிக்கொள்ள வேண்டும். ஆக்கம் பெற்ற ஆன்மாதான் அறிவை தெளிவடையச் செய்யும். அப்ப ஆன்மாவுக்கு ஆக்கம் தர வேண்டும். ஆன்மாவுக்கு அருள்தர வேண்டும். ஆன்மா ஆக்கம் பெற வேண்டும். ஆக்கம் பெற்ற ஆன்மாதான் தெளிவான அறிவாக இருக்கு. அதே மனமாக இருக்கு. அப்ப ஆன்மாவுக்கு தெளிவை உண்டாக்க வேண்டும்.
ஆன்மா, காமம் என்ற இருட்டிலும், நரகம் என்று சொல்லப்பட்ட இந்த உடம்பிலும் இருக்கு. எனவே அந்த ஆன்மாவுக்கு ஆக்கம்தர வேண்டும். ஆன்மாவுக்கு ஊக்கம் தரவேண்டும். ஆன்மா தெளிவடைய வேண்டும்.
ஆன்மாவிற்கு ஒளிதர வேண்டும்.
எல்லா ஞானிகளும் சிறந்த பக்தியாலும், விடாமுயற்சியாலும் ஆன்மஜெயம் பெற்றார்கள். அவர்கள் ஆன்ம ஒளி பெற்றவர்கள், ஆன்ம ஒளியைக் கண்டவர்கள், ஆன்ம ஜோதியைக் கண்டவர்கள். அத்தகைய பெருமை மிகுந்த ஞானிகளின் திருவடியைப் பற்றும்போது ஆன்மா தெளிவடையும், ஆன்மா ஒளி பெறும். இதை ஆன்மஜோதி என்பார்கள்.
நாம் ஞானிகளை வணங்குகிறோம். வணங்கவணங்க, பூஜைசெய்ய, பூஜைசெய்ய, நாமஜெபம் செய்யசெய்ய, ஆன்மாவினுடைய மாசு தீரும். பக்தி செய்யசெய்ய, புண்ணியம் செய்யசெய்ய இருட்டில் கிடக்கிற ஆன்மா வெளிச்சத்துக்கு வரும். ஆன்மாவிற்கு சிறிது வெளிச்சம் கிடைத்தால் அறிவு தெளிவடையும்.
ஆன்மாதான் அறிவாகவும் இருக்கு, மனமாகவும் இருக்கு. புண்ணியம், பக்தி என்ற ஒளியை இருட்டில் கிடக்கிற ஆன்மாவுக்கு தருகிறோம். இதனால் நரகத்திலும், இருட்டிலும் கிடக்கிற ஆன்மா தெளிவடைகிறது. ஆன்மா தெளிவு அடைந்தால் அறிவு தெளிவடையும். அறிவு தெளிவடைந்தால் ஆன்மாவைப்பற்றி அறியும். ஆன்மாவுக்கு ஆக்கம் தந்தால், அறிவு தெளிவடையும். தெளிவடைந்த உயிர், தெளிவடைந்த அறிவு ஆன்மாவைப்பற்றி சிந்திக்கும்.
No comments:
Post a Comment