Contact தொடர்பு

உலகமக்கள் நன்மைகருதி சித்தர் சுவடிகள்

Saturday, 4 August 2018

அரவ மாட்டேல்

முருகப்பெருமானின் அவதாரம் தவத்திரு ஆறுமுக அரங்கமகாதேசிகர் சுவாமிகள் மகான் ஒளவையாரின் ஆத்திசூடிக்கு அருளிய அருளுரை!

அரவ மாட்டேல்



அரவம் என்பது பாம்பாகும். பாம்பு என்னும் உயிரினமானது தமது வாயில் நச்சுப்பற்களோடு நஞ்சை வைத்துக் கொண்டுள்ளது. அது கொடுமையான உயிரினம். அத்தகைய கொடிய உயிரினத்தோடு யாரும் விளையாடமாட்டார்கள்.

பாம்பென்றால் படையும் நடுங்கும் என்பது பழமொழி. மிகப்பெரும் வீரர்கள் கொண்ட படையில் பாம்பு புகுந்துவிட்டால் அந்த வீரர் படை தம் வீரத்தை மறந்து நடுங்கும், அந்த அளவிற்கு கொடியது பாம்பாகும். இது அனைவருக்கும் தெரிந்ததே.

ஞானமார்க்கத்தில் குரு சீடர் பாரம்பரியமாக பலப்பல இரகசியச் சொற்களை ஞானிகள் பயன்படுத்தி வந்தனர். அப்படி பயன்படுத்திய சொற்களில் ஒன்றுதான் “அரவம்” என்கிற சொல்லாகும். ஞானமார்க்கத்தைப் பற்றி அறிந்தவர்களுக்கு இது தெரியும்.

அரவம் என்றால் பாம்பு என்ற பொருள் இருந்தாலும் அரவம் என்பது ஞானமார்க்கத்தில் யோகநிலையில் ஒரு ஞானி வாசிப்பயிற்சியாகிய வாசி யோகத்தின் போது மூச்சுக்காற்றினை “அரவம்” என்ற இரகசிய வார்த்தையால் குறிப்பிடுவார்கள். இடது நாசியில் வருகின்ற காற்றை கருஞ்சாரை (கருநாகம்) என்றும் வலது பக்க நாசியில் வருகின்ற காற்றை வெஞ்சாரை (வெண்நாகம்) என்றும் குறிப்பிடுவார்கள்.

இத்தகைய வாசிப்பயிற்சியானது மும்மலதேகத்தின் மும்மலக் குற்றத்தை நீக்குதல் பொருட்டு ஆசான் ஞானபண்டிதன் உடனிருக்க ஞானிகள் துணையோடு காலம்காலமாக சிறிது சிறிதாக கணப்பொழுதும் நினைவினின்று வழுவாது காலநேரம் பாராது சதாசர்வகாலமும் மிகுந்த கவனத்துடன் செய்ய வேண்டிய ஒரு யோகப்பயிற்சியாகும்.

இத்தகைய யோகப்பயிற்சியானது வழிவழி வருகின்ற தொண்டர் கூட்டத்திற்கு குருமுகாந்திரமாக குருநாதர் உடனிருந்து உடற்தகுதி, உணவு முறை, சூழ்நிலை, தட்பவெப்பம் போன்றவற்றிற்கேற்பவும் தவத்தின் தன்மைக்கேற்பவும் அளந்து அளந்து சொல்லி தரப்பட்டு கவனத்துடன் அதிநுட்பமாக செய்கின்ற ஒரு பயிற்சியாகும்.

இந்த பயிற்சி செய்கின்றவர் இல்லறத்தில் ஈடுபடக் கூடாது. அவ்வாறு ஈடுபட்டால் அவரது யோகமும் தவமும் பாழ்பட்டு, ஏன் சமயத்தில் இறந்துவிடவும் கூடும். ஒரு துறவு நிலை கொண்டவரானாலும் ஆசான் துணையின்றி செயல்பட்டால் அடுத்து என்ன செய்வது? எனத் தெரியாமல் உள்ளே சென்ற காற்றானது வெளியேற முடியாமல் அவனைக் கொன்றுவிடும்.

அதுமட்டுமல்ல இல்லறத்தார்கள் மிகமிக ஆற்றல் வாய்ந்த இந்த வாசியோகப்பயிற்சியினை செய்யக்கூடாது. ஏனெனில் வாசியோகப்பயிற்சியின் அளவு, காலம், எவ்வளவு காலம் செய்ய வேண்டும் என்றெல்லாம் தெரியாமலும் அதன் தன்மை தெரியாமலும் செய்வார்களேயானால் இறுதியில் இறந்து விடுவார்கள். வாசியோகப் பயிற்சியின் போது நம் உடம்பிலுள்ள மூலக்கனலே எழும்பி அளவிலாத உஷ்ணத்தை கொடுக்கும். இல்லறத்தானுக்கு ஞானக்கனலும், அவனிடமுள்ள காமக்கனலும் சேர்ந்து உடம்பில் அளவில்லாத வெப்பத்தை உண்டாக்கி கடுமையான மலச்சிக்கல் முதல் பலப்பல நோய்களை உண்டாக்கி கடைசியில் அவனை இறந்துவிடும்படியான ஒரு சூழ்நிலையை உண்டாக்கிவிடும்.

எனவே இத்தகைய தகுதியில்லாத செயலை இல்லறத்தான் செய்தல் ஆகாது என்பதினாலேயே அரவ மாட்டேல் (காற்றுடன் விளையாடாதே, வாசிப்பயிற்சியை விளையாட்டாகச் செய்யாதே) என மறைபொருளாக கூறி வைத்தார் மகான் ஒளவையார்.

அற்பமா மூட ரறியாமல் யோகம்
சொற்பமா யெண்ணிச் செய்தே மரித்தார்
கற்பமில் லாட்டால் காணுமோ ஞானம்
அற்பர்செய் யோகம் அழிம்பிது பாரே.
-மகான் சட்டமுனிவர் அருளிய குரு சூஸ்திரம் 21 - கவி எண் 17.


மகான் ஆறுமுக அரங்கமகாதேசிகர் சுவாமிகள்

No comments:

Post a Comment