Contact தொடர்பு

உலகமக்கள் நன்மைகருதி சித்தர் சுவடிகள்

Sunday, 22 April 2018

ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கத்திற்கும், அரசியலுக்கும் என்ன தொடர்பு?

முருகப்பெருமான் துணை

அருட்பெருஞ்சோதி! அருட்பெருஞ்சோதி!! தனிப்பெருங்கருணை! அருட்பெருஞ்சோதி!!

ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கத்திற்கும், அரசியலுக்கும் என்ன தொடர்பு? ஏன் சங்கம் அரசியலில் ஈடுபட வேண்டும்? ஆட்சி பொறுப்பில் ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கம் வருமா?



மகான் சுப்பிரமணியர் அருளிய ஆசி நூல் 07.04.2018, சனிக்கிழமை




அருள் நிறைந்த வாக்குதனை கந்தனே சொல்வேன்
அரங்கனுக்கு எடுத்துரைப்பேன் இந்த நாளில்
கருணையாய் சொல்ல வந்தேன் ஆசி தன்னை
கந்தன் யான் வெளிப்படும் காலமப்பா
காலத்தில் உலகத்தில் ஆட்சி மாற்றம்
காண்பதுவும் நியதிதான் மாற்றமில்லை
ஞாலமதில் ஞானத்தோர் ஆள்வார் என்றேன்
ஞானமிலான் அரசியலும் செய்யலாகா
ஆகவதால் என்னவென்றால் ஞானசித்தர் காலம்
ஆட்சி செய்ய துவங்குதப்பா இதுதான் உண்மை
மோகமற்ற ஆசையற்ற ஞானத்தோர்கள்
மாநிலத்தை ஆள வேண்டும் இது என் ஆணை
ஆணைப்படி உலகமதில் உன் சங்கம் மட்டும்
ஆன்மீகம் அரசியலும் இரண்டும் செய்யும்
வீணரெல்லாம் இனி ஆள முடியாதப்பா
வேலன் என் அருள் பெற்றால் ஆள முடியும்
ஆளுகையை ஒருவன்தான் செய்ய வேண்டுமென்றால்
அரங்கன் ஆசி பெற்றிருந்தால் மட்டும் முடியும்
ஆளுகைக்கு வர வேண்டும் என்றால் ஒருவன்
அகத்தியரை சித்தர்களை வணங்க வேண்டும்
வணங்குதற்கு உன் குடில் வரவே வேண்டும்
வந்து உன் ஆசி பெற்றால் ஆண்டு நிற்பான்
குணமானோர் ஞானத்தோர் ஆளுவாரே
குவலயமே குமரன் என் ஆளுகைக்கு
ஆளுகைக்கு வருதப்பா வரவழைப்பேன்
அரைகணமும் போதுமப்பா எந்தனுக்கு
ஆளுவோரை சங்கம்தான் தீர்மானிக்கும்
ஆளுவோர்கள் சங்கத்தினராய் இருக்க வேண்டும்
இருக்க வேண்டும் எதனால் என்று கேள்வி கேட்டால்
இவ்வுலகம் அமைதியாக இருப்பதற்கு
இருக்க வேண்டும் ஆசையற்று உலகத்தை ஆள
இருக்க வேண்டும் துறவிகளும் ஆளுகையில் தான்
தானதனால் மட்டுமே ஞானம் தழைக்கும்
தயவு கொண்டோர் ஆட்சி செய்தால் தர்மம் ஓங்கும்
ஆனதொரு உலகத்தில் பசி இருக்காது
அவரவரும் வேண்டுவது அவரவர்க்கும் கிட்டும்
கிட்டுதற்கு சன்மார்க்க சங்கத்தோர்கள்
கீர்த்தியாய் உலகத்தை ஆளுவார்கள்
சட்டப்படி சன்மார்க்க சங்கமே தழைக்கும்
சண்முகன் என் ஆளுகையில் உலகம் வருமே
உலகத்தோர் அச்சமின்றி வாழ்வார் என்றோம்
உலகத்தில் சச்சரவின்றி வாழ்வார் என்றோம்
உலகத்தில் மதச்சண்டை இல்லாமல் போகும்
உலகத்தில் பேரிடர்கள் இல்லாமல் போகும்
போகுமப்பா மதவாதம் சன்மார்க்கம்தான்
பொருந்திய கொடிகட்டி கொள்ளுமென்பேன்
வாகுடனே இதுதானே ஞானசித்தர் காலம்
வருதப்பா ஞானசித்தர் காலம் தானே
தானதற்கு குமரன் யான் துணை இருப்பேன்
தவசீலர் அகத்தியரும் ஆட்சி செய்வார்
ஆனதொரு அரசியலும் ஆன்மீகமாகும்
அரங்கனின் சீடரெல்லாம் அதிகாரம் பெறுவர்
அதிகாரம் பெறுவதனால் அகிலம் சுத்தமாகும்
அகிலமே அமைதியாய் நிலவுமப்பா
சதிபகைகள் சாய்ந்து விடும் சன்மார்க்கம் தழைக்கும்
சச்சரவு இல்லாத உலகத்தை பார்ப்பாய்
பார்ப்பதற்கு உந்தனுக்கு ஆசி உண்டு
பாங்காக வருகின்ற தேர்தலில்தான்
சேர்வோர்கள் உன் ஆசி பெற்று? இருப்பார்
செப்புகிறேன் வருகின்ற தேர்தல் காலம்
காலத்தில் என் சங்கம் போட்டி இடாது
கண்டிப்பாய் உன் ஆசி பெற்றோர் இருப்பர்
மேலான சிலர்க்கு யான் வாய்ப்பளிப்பேன்
மேன்மையாய் சங்க அன்பர் ஆசி பெற்று
ஆசி பெற்று தேர்தலிலே நிற்கலாமே
அரங்கனின் ஆட்சியது இவ்வாறு துவங்கும்
மாசில்லை உன் சங்கம் அரசியல் செய்யும்
மைந்தனே அதற்குரிய காலம் உண்டு
காலத்தில் உலகம் தழுவி அரசியல் தன்னை
கண்டிப்பாய் சங்கத்தோர் செய்து நிற்பார்
மேலான அரங்கன் ஆட்சி உலகமெங்கும்
மேன்மையாய் நடக்கும் என கந்தன் வாக்கு
வாக்குபடி ஞானசித்தர் காலம் தன்னில்
வழுத்துகிறேன் அரசியலில் பல திருப்பம்
யோக்கியமும் இல்லாவிட்டால் விலக நேரும்
யோகநெறி அறிந்தோர்கள் ஆண்டு நிற்பார்
நிற்கவே குடில்தானே உலகத்தை ஆளும்
நிச்சயமாய் குடில்தானே அரசு செய்யும்
கொற்றவனை குடில்தானே தீர்மானிக்கும்
குவலயத்தை குடில்தானே காத்து நிற்கும்
நிற்கவே ஜீவகாருண்ய வழியில்
நிச்சயமாய் உலகத்தை குடிலும் மாற்றும்
உற்றதொரு ஜீவதயவு இருந்தால் மட்டும்
உயர்வான அரசியலும் செய்ய முடியும்
செய்வதற்கு சித்தர்களும் புறப்பட்டு விட்டார்
சித்தர்படை உலகமெங்கும் செல்லுதப்பா
மெய்யாக சித்தர்களும் தேர்ந்தெடுப்பார்
மாந்தர்களின் உணர்வில் சென்று மாற்றி நிற்பார்
மாற்றத்தை வேலவன் யான் செய்து நிற்பேன்
மாமன்றம் எந்தனுக்கு உலகமப்பா
சாற்றுகிறேன் அரசாட்சி எந்தன் கீழே
சண்முகனை நினைத்தோர்க்கும் வணங்கியோர்க்கும் ஆசி
ஆசியால் அரசியலும் சித்தியாகும்
அகிலத்தில் முருகா என சொல்லுவோர்கள்
பேசுகிறேன் பெரும் நிலையை அடைந்து நிற்பார்
பேசட்டும் முருகா என அருள்வேன் அப்போ
அருள் வழங்கி அக்கணமே காத்து நிற்பேன்
அறுமுகன் என் அருள் பெற்றோர் அரசியல்வாதி
அருளாட்சி செய்திடுவார் அரசியல் மூலம்
அரசியலும் சுத்தமாகும் ஆன்மீகத்தால்
ஆன்மீக நிலையிலே ஆட்சி மாற்றம்
அகிலத்தில் நிகழுமென்று சொல்லி விட்டேன்
காண்பதற்கு அதிசயங்கள் பலதும் உண்டு
கந்தன் என் அவதார அரங்கனைக் கண்டு
கண்டுதான் அரசியலைச் செய்வோர்க்கெல்லாம்
கந்தன் என் அருள் கிட்டும் அரசியல் செய்வார்
கண்டுரைத்த நூலதனை துணிந்துதானே
கண்டிப்பாய் வெளியிடலாம் அச்சமில்லை
அச்சமில்லை அரசுதனால் ஆபத்து இல்லை
அரசின் மேல் உன் சங்கம் நன்மதிப்பு கொண்டு
மெச்சும்படி இருக்குதப்பா அஞ்சாதே நீ
முருகன் யான் உந்தனுக்கு துணையும் இருப்பேன்
துணை நின்று துன்பமெலாம் காத்து நிற்பேன்
தொடர்ந்து தான் சங்கத்தை வழிநடத்த
துணை வருவேன் வேலவனும் ஆசி சொன்னேன்
துணிந்து நீ உரையாற்று வெற்றி காண்பாய் முற்றே.
-சுபம்

அஞ்சேல் என அருள் புரியும் அகத்தியர்

அகத்தீசா என்றால் :



அகத்தீசா! அகத்தீசா! என்ற முதுபெரும் ஞானத்தலைவன் அகத்தீசன் அருள்கூடி வணங்குவோர் தம் குறைகள் படிப்படியாக விலகி ஞானம்தனின் தன்மையுணர்ந்து ஞானவழி சென்று கடவுள் இன்பத்தை நுகர்வான் பக்தன். தான் பெற்ற அந்த கடவுள் இன்பத்தை நல்வழியை பிறரும் அறிய வேண்டுமென்றே மனம் விரும்பி பிறரும் அகத்தீசன் திருவடி பற்றிட தூண்டுவான் அகத்தீசன் அருளால்.

அகத்தியரை வணங்க வணங்க அகத்தீசனை வணங்காதோரும் வணங்கிட தூண்டும் அவனுக்கு. மக்களிடம் குறைகள் இருப்பது இயல்பே, அது அவரவர் செய்திட்ட பாவத்தினால் வந்தது அது. அகத்தீசனை வணங்கவணங்கதான் தீரும் என்பதை உணர்ந்து அவர்தம்மை அகத்தீசன் திருவடிக்கே ஆளாக்கிடவே அன்பர்குறை கூறல் தவிர்த்து அவர்தம் நன்மைகளை புகழ்ந்து கூறி அவர்தம்மை மகிழ்வித்து பிறகு நயமாக அவர் தம்மிடம் உள்ள ஞானம் அடைய தடையான குணக்கேடுகளை மென்மையாக சுட்டிக் காண்பித்து அக்குணக்கேடுகளை நீக்கிக் கொள்ள இன்முகத்தோடு அறிவுறுத்துவான் அகத்தீசன் பக்தன். 


இவ்விதமே அகத்தீசனை வணங்கிய பக்தன், தான் வணங்கியதோடு பிறரையும் அகத்தீசனை வணங்கிட தூண்டி தூண்டி தனது குணப்பண்பினால் பிறரையும் ஏற்று அவர்தம் குற்றம் குறைகளை மறந்து பிறர்தமக்கு செய்யும் இடர்களையும் பொருட்படுத்தாது பிறரையும் அகத்தியரின் பக்தர்களாக ஆக்கிடவே தன்னலம் பாராது தொண்டாற்றுவான் அகத்தியர் அருள் பெற்றோர்.

அகத்தீசனை வணங்க வணங்க அகத்தியரின் பெருமைகளை அவன் உள்ளுணர்வால் உணர்ந்து பிறரையும் உணரச்செய்து ஒருபெரும் அகத்தியர் வழிவந்த பக்தர் கூட்டத்தை உருவாக்கி பெரும் புண்ணியவானாக ஆகி அகத்தியர் புகழ் உரைத்ததினால் அகத்தியரின் அன்பிற்கு பாத்திரமாகி ஞானியர் தம்மால் மெச்சும் சீடனாக ஆகிவிடுவான் அந்த அகத்திய பக்தன். அப்படி அகத்தியரின் அருள்தனை முழுமையாக பெற்ற அவனே முருகனின் அருள்பெற்றிட தகுதி உடையவனாகின்றான்.

மகான் ஆறுமுக அரங்கமகாதேசிகர் சுவாமிகள்



பாவபுண்ணியத்தை நம்புவோம்

முருகா என்றால்,



பாவபுண்ணியங்கள் மீது நம்பிக்கையையும் கடவுளின் மீது பக்தியையும் உண்டாக்குவதோடு ஜீவகாருண்யமே ஞானவீட்டின் திறவுகோல் என்பதை உணரச்செய்து பசித்த ஏழைகளுக்கு பசியாற்றுவித்து ஜென்மத்தைக் கடைத்தேற்றி கொள்ள வாய்ப்பை அருளி ஜென்மத்தைக் கடைத்தேற்றுவான் முருகப்பெருமான்.


கடவுள் நம்பிக்கை இல்லாமலும், பாவபுண்ணியங்கள் மீது நம்பிக்கை கொள்ளாமலும் உயிர்க்கொலை செய்து புலால் உண்டதால் அவ்வுயிர்கள் பட்ட வேதனையே அவர்களை தாக்கி இச்சென்மத்திலே முன்சென்ம பாவங்களெல்லாம் ஒன்று கூடியே இப்பிறவியில் தம்மை மாய்த்துக் கொள்ள வேண்டுமென்ற தற்கொலை எண்ணமும், அதற்குண்டான வகையினிலே அவர்தமக்கு இசைவான சூழ்நிலைகளும் தோன்றி தற்கொலை செய்து கொள்வார்கள்.

முற்பிறவிகளின் செய்த உயிர்க்கொலை பாவமே இச்சென்மத்தினில் விபத்தாக உருமாறி உயிர்பலி செய்தோரை உயிர்பலி வாங்கி கொன்று அகால மரணத்தை உண்டாக்கும். அதற்கான இசைவான சூழ்நிலைகளும் அவர்தம் வினையே ஊட்டும்.


முற்பிறவி உயிர்க்கொலை பாவமே இச்சென்மத்தினிலே கொடும் நோயாக, தீராத வியாதியாக தோன்றி உயிரைப் பறிக்கும் எமனாக அவருக்கு வந்து இச்சென்மத்தில் உயிரை இடைமரணம்தனை ஏற்படுத்தி அற்ப ஆயுளில் மரணிக்கச் செய்யும்.


ஒருவன் முன் சென்மங்களிலே செய்த பாவத்தை அதன் சம்பளமான ஊழ்வினையை தன் முயற்சியால் தன் அறிவால் பிற மனிதர்களின் துணையால் கண்டிப்பாக வென்று ஊழ்வினை குற்றத்தின் பிடியினின்று தப்பிக்க இயலாது.

தப்பிக்க முயற்சி செய்திட அவன் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு தடையாக அவனது வினையே அமைந்து புண்ணியங்களை செய்திட முடியாத வண்ணமே அவனை கொடும் வறுமைக்கு உள்ளாக்கி ஒருவேளை சோற்றுக்கே வழியற்றவனாக ஆக்கி பிறரிடம் யாசித்து சாப்பிடும்படியான சூழ்நிலையை உண்டாக்கிவிடும். மானத்தை காக்க உடைகள் ஏதும் இல்லாத கந்தல் அணியும் வறியவனாக மாற்றி, மாற்று உடைகூட இல்லாத கொடும் தரித்திரனாக மாற்றிவிடும்.

இவனுக்கு ஒருவேளை சோற்றுக்கு வழி இல்லை. எங்கே இவன் அன்னதானம் செய்து பிற ஜீவர்களின் ஆசியைப் பெற்று ஊழ்வினையை வென்று தமக்கு உற்ற ஊழ்வினை தோடத்திலிருந்து தப்பித்து, தமக்கு உற்ற மரண கண்டத்திலிருந்து தப்பிப்பான்? இவற்றிற்கெல்லாம் ஒரே விடிவு! ஒரே மார்க்கம் உண்டு.


அது உலகமகா ஞானத்தலைவன், இந்த அண்டபகிரண்டங்களிலேயே மிக உயர்ந்த புண்ணியவான், ஞானமெனும் மோனநிலை கண்ட முக்தனாம் ஆதி ஞானத்தலைவன் அருட்பெருஞ்சோதி ஆண்டவராய் விளங்கி அகிலமும் அண்ட பகிரண்டமும்தனை தமது சுட்டுவிரல் ஆணையில் வைத்து காத்து இரட்சிக்கின்ற மகாபேராற்றல் கொண்டவரும், சதகோடி சூரியபிரகாசமுள்ளவரும், பொன்னிற மேனியும் புனித ஞானமும், பொன்னடி கொண்டோரும் மலரினும் மெல்லிய திருவடிகளை உடையவருமான மகாதேவன் ஆசான் ஞானபண்டிதன் முருகப்பெருமான் திருவடிகள் துணையினால் அன்றி வேறொன்றால் அணுவளவும் ஆகாது என்பதை உணருங்கள்.


சோதி வடிவினனாகி ஐந்தொழில் புரியும் திறமும் இயற்கையை தமக்குள் உள்ளாக்கி இயற்கையையும் கட்டுப்படுத்தி இப்பிரபஞ்சத்தையே ஆட்டி படைப்பவனும் பரிணாமத்திற்கு அகப்படாதவனுமாகிய ஞானிகள்தம் ஞானத்தலைவனாம் முருகனை உளமார மனம் உருகி நெஞ்சமெல்லாம் நெகிழ பயபக்தியுடன் பணிந்து சிந்தையுள் முருகன் தன் திருவடிகளை ஏற்று சித்தமெல்லாம் முருகநாமமே ஓங்கிட முருகா! முருகா! முருகா! என்றே சரவணபவா! சரவணபவா! சரவணபவா! என்றே செந்தில்நாதா! சிங்காரவேலா! கார்த்திகை மைந்தா! கருணைக்கடலே! கருணாமூர்த்தியே! கற்பகவிருட்சமே! வேற்படைநாதா! வேதவித்தகா! எங்கள் குல மாணிக்கமே! என்றே மனம் நெகிழ பூசைகள்தனை செய்திட செய்திட முருகன் அருள்கூடி எந்நிலையில் பக்தன் இருப்பினும் அவன்தன் வினை தோஷங்களையெல்லாம் பொடிப்பொடியாக்கி, என் பக்தன் இவன், இவன் பாதுகாவலன் நான் அன்றோ! என்றே யாருக்கும் அசையாத அந்த பிரம்மாண்டமான சோதி, ஏழை பக்தன் பூசைகளினால் இறங்கி அவனுக்கும் அருள் செய்ய துவங்கிடும்.

ஆதலின் மக்களே முருகன் திருவடியை காலம் தாழ்த்தாது பற்றுங்கள் நீங்கள். எத்துணை பாவங்கள் செய்தவராயினும் சரி, கவலையில்லை கடைத்தேற்றவல்ல தலைவன் திருவடியை இன்று முதலேனும் புலால் மறுத்து, உயிர்க்கொலை தவிர்த்து, தூயசைவநெறிக்கு வந்து மாதம் ஒருவருக்கேனும் அன்னதானம் செய்து முருகனின் நாமத்தை ஒரு நாளைக்கு இருவேளை குறைந்தது பத்து நிமிடமேனும் முருகன் திருவடியை மானசீகமாக மனதினுள் எண்ணி முருகா! முருகா! முருகா! என்றோ, சரவணபவ! சரவணபவ! சரவணபவ! என்றோ மனம் உருகி செபித்து வாருங்கள். முருகன் அருள் கூடி உங்கள் வினைகளையெல்லாம்
பொடியாக்கி உங்களுக்கு உற்ற ஊழ்வினை தோஷங்களிலிருந்து விடுபட்டு நலமான வளமான வாழ்வை முருகன் அருளால் பெற்று உயர்வடையுங்கள்.

-சுபம்-

முருகனைப் போற்றுவோம்
புண்ணியத்தையும் அருள்பலத்தையும் பெற்று இன்புறுவோம்.
பரமன் திருவடியை போற்றுவோம்
பாவபுண்ணியத்தை நம்புவோம்.


Sunday, 15 April 2018

ஜீவதயவு இல்லையேல் முருகன் அருள் இல்லை

முருகா என்றால்,



முருகப்பெருமானின் அருளைப் பெறலாம். முருகப்பெருமானை தூப தீபமேற்றி மலர் கொண்டு அலங்கரித்து அர்ச்சித்து சடங்குகளால் ஆன சடங்கு பூசைகளை அவரவர் மனதினில் தோன்றியபடியே புறச்சமயச் சடங்குகளால் இதுவரை வழிபட்டு வந்த நாம் அதையும் தாண்டி அகத்துள்ளே அதாவது மானசீகமாக எந்தவித ஆரவாரங்களும் இன்றி வணங்கிடுவதான ஒரு அந்தரங்க பூசைமுறையும் உள்ளது என்று அறிந்து கொள்வார்கள்.


முருகப்பெருமானின் நாமத்தை உச்சரிப்பதற்கே அவன் பல்லாயிரமாண்டு தவமும் அளவிலாத தருமங்களும் செய்திருந்தால் அன்றி அந்த ஆதித்தலைவன் ஆறுமுகன் நாமத்தை சொல்ல வாய்ப்பில்லை என்பதை உணர்வார்கள்.



உணர்ந்த புறச்சமய சடங்குகளில் உள்ளவர்கள் மேலும் மேலும் முன்னேற அவர்கள் உயிர்க்கொலை தவிர்த்து புலால் மறுத்து ஜீவதயவு கொண்டால்தான் நமக்கு இந்த வாய்ப்பு வந்தது என்பதையும் உணர்வார்கள்.


அதைவிடுத்து புலால் உண்டாலோ, பலியிடும் தெய்வங்களின் ஆலயங்களுக்கு சென்றாலோ, பலியிட்டு சிறுதெய்வங்களை வணங்கினாலோ, ஜீவர்கள்பால் கொண்ட தயவு குறைந்தாலோ ஞானத்தலைவன் நம் சிந்தையினின்று மறைந்து முதல் படியான புறச்சமய பூசையில்கூட முருகனின் நாமத்தை சொல்லவோ அவனது நாமத்தை எந்த வகையிலும் சொல்லவோ விடமாட்டான் என்பதையும் உணர்வார்கள்.


மேலும் அவர்கள் முருகனின் நாமத்தை தொடர்ந்து செபித்திட செபித்திட இதுவரை அவன் செய்திட்ட புறச்சமய சடங்குகளைப்பற்றிய உண்மை அறிவினை முருகன் அருளால் பெறுவார்கள். சமுதாயத்தில் ஒரு  சிலர் தருமங்களை மிகுதியாகச் செய்தும், புறச்சமயச் சடங்குகளை செய்து அகத்துள் இறைவனை காணாது  மக்கள் வியக்க ஆரவாரமாய் பக்தியில் ஈடுபடுவார்கள், நாட்டிற்கு நல்லவைகளை செய்து தியாகிகளாய்  இருப்பார்கள், நாட்டைக்காக்க தனது உயிரையும் கொடுத்து மாபெரும் வீரனாய் திகழ்வார்கள், நல்ல  நெறிநின்ற வாழ்வை வைராக்கியமாக வாழ்ந்து சமூகச் சான்றோனாய் திகழ்வார்கள், பெரும் புண்ணியவானாக இருப்பார்கள். ஆயினும் அவர்கள் இயற்கை நியதிக்கு உட்பட்டவரே. அவர்கள் இயல்பாக இறந்திடவோ அல்லது போரில் மடிந்தோ போவார்கள்.


அவர்கள் அற்புதம் ஆயிரம் செய்து என்ன பயன்? அவர்களால் தங்கள் உயிரை தாங்களே காத்துக் கொள்ள முடியாத அளவிலேதான் உள்ளவர்கள். அவர்கள் நல்லவர்களே ஆனாலும் அருள் செய்கின்ற அளவிற்கு பெரியோர் அல்ல. அவர்கள் சாதாரணமானவர்களே யாவார். ஆயினும் அவர்கள் மீது கொண்ட விசுவாசத்தினால், அவனது தியாகத்தினால் அவனது நற்பண்புகளால் கவரப்பட்ட மக்களெல்லாம் அவனைப் பாராட்டி அவனது இறப்பிற்கு பின்னும் தம்முடன் உள்ளதாகவும் தம்மை அவன் இறந்தும் காக்கின்றதாக எண்ணி அவனை வணங்கிட துணிவார்கள்.


அது மக்கள் அவன்மீது கொண்ட விசுவாசமாகும். அதன் விளைவாய் இறந்தவனை வணங்க வணங்க இறந்தவனுக்கும் பிறவிகள் கிடைக்காமல் ஆன்மா சிறைப்பட்டு போவான், வணங்கியவன் ஆன்மாவும் சிறைப்பட்டு போகும்.


தன்னைத்தானே காப்பாற்றிக் கொள்ள முடியாமல் இறந்து போனவன் எப்படி நம்மை காப்பாற்றுவான் என்று உணராமல் அவர்களெல்லாம் தாம் செய்த பாவத்தினால் செத்து பிறக்கின்ற புண்ணியவான்களை, தியாகிகளை, சமூகச் சான்றோனை வணங்கி வீணில் காலம் கழிப்பர்.


ஒருசிலர் தமது மனதிற்கு தோன்றியபடி செய்து செத்துப்போனவன் வாழ்ந்தபோது செய்திட்ட செயல்களுக்கு ஏதுவாக அவனுக்குப்பிடித்ததை செய்கிறேன் என்று செத்துப்போனவன் பெயரில் இவன் உயிர்ப்பலி செய்து செய்து செத்து போனவனை பெரும் பாவச்சுமைக்கு ஆளாக்கி பல லட்ச வருடங்களுக்கு மீளமுடியாத நரகத்தில், வணங்குகிறேன் பேர்வழி என்று இவனே தெய்வமில்லாத ஒருவனை தெய்வமாக்கி உயிர்ப்பலியிட்டு ஆழப்புதைத்து விடுவான் பாவி. செத்தவனும் பாவியாகி விடுவான். செத்தவனுக்கு பலி இட்டவனும், பாவியாகிவிடுவான்.


இவை அனைத்தும் ஞானபண்டிதன் முருகனை வணங்காததால் வந்திட்ட கொடும் வினைகளாகும் என்பதையும் முருகனை வணங்குபவன் உணர்வான்.
























மேலும் முருகனை வணங்க வணங்க முருகனை வணங்கின நாம் மீண்டும் இந்தவித அசுத்த பூசைகள் செய்திடலாகாது, செய்திட்டால் நாமும் இந்த நரகக் குழியில் போய்விழ வேண்டும். வீழ்ந்தால் நம்மை இதுவரை காத்து வந்த மகாசன்னிதானம் இறைவன் முருகப்பெருமான் நம்மைவிட்டு விலகி விடுவான். அவன் நம்மை விட்டு விலகினால் அனைத்தும் சூன்யமாகிவிடும்.


மீண்டும் எப்போது அவன் அருள் கிடைக்கப் பெறுவோம் என்றே அறியாது, அறியாமையில் உழன்று பெரும் பாவிகளாகி விடுவோம் என்றே பயந்து உயிர்க்கொலை மீது மிகுந்த அச்சம் கொண்டு கொலை, பலி இடும் கோயில்கள் பக்கமோ கொலை செய்து வழிபடுபவனிடத்து நட்போ கொண்டால் அவன் செய்த பாவம் நம்மையும் சேர்த்து நரகத்தில் தள்ளிவிடும் என்று கொலை கோவில்களையும் கொலை பாதகர்களையும்

காணச்சகியாது உண்மை ஞானசூரியன் ஆதித்தலைவன் முருகனது திருவடியே கதியென்று வணங்கிட துவங்குவான்.


மேலும் மேலும் முருகனை உளமார உள்ளன்போடு வணங்க வணங்க, வணங்கின அவர் தம்முள்ளே உண்மை வழிபாடு தோன்றிடத் துவங்கும். அதுவரை அவன் இருந்த புறச்சமயச் சடங்குகள் எல்லாம் பக்தியை தருமே அன்றி அதன்மூலம் இறையருளை பெற முடியாது என்று உணர்வான்.



ஆதலின் இறையருளை பெற்றிட வேண்டுமாயின் அந்தரங்கத்திலே முருகநாமம் சொல்லியும்  அந்தரங்கத்திலே மனதுள்ளேயே முருகன் திருவடியை பூசித்தும் முருகன் பெருமைகளை சதா எண்ணிக்  கொண்டும் பிறருக்கு சொல்லியும் செய்துவர செய்துவர அவர்தம் உள்ளத்தே முருகன் அருள் கூடிட துவங்கி உண்மை ஆன்மீகம் அறிந்து உண்மை நெறிதனிலே கொண்டு செல்லும் முருகனருளால் நல்லோர் தொடர்புகளை மிகுந்து பெற்று நன்னெறி சென்று வாழ்வான்.



முருகன் நாமம்தனை செபிக்க செபிக்க ஜீவதயவு மனதினுள்ளே பெருகி எல்லா ஜீவனையும் தம்முயிர்போல் எண்ணி வாழ்தலே அந்த ஞானபண்டிதனின் அருளைப்பெற உறுதுணையாய் இருக்கும் என்றே உணர்ந்து ஜீவதயவினை தமது உயிர்மூச்சாகக் கொண்டு வாழ்ந்து கடைத்தேறுவான்.




ஜீவதயவு இல்லையேல் நம்முள் முருகன் நாமம் இல்லை
ஜீவதயவு இல்லையேல் முருகன் அருள் இல்லை
ஜீவதயவு இல்லையேல் பக்தி இல்லை
ஜீவதயவு இல்லையேல் எத்துணை வழிபாடு செய்தும் பயனில்லை
ஜீவதயவு இல்லையேல் எத்துணை புண்ணியம் செய்தும் பயனில்லை
ஜீவதயவு இல்லையேல் இன்னுயிர் நீத்து தியாகம் செய்தும் பயனில்லை
ஜீவதயவு இல்லையேல் உலகம் போற்ற வாழ்ந்தும் பயனில்லை



என்றெல்லாம் உணர்ந்து ஜீவகாருண்ய அருட்ஜோதி ஆறுமுகனை மனதினுள் வைத்து அளவிலாது அன்பு செலுத்தி முருகனை வழிபட்டு முருகனை ஜீவதயவே வடிவான அருட்பெரும் சோதியாக காணுகின்ற அற்புத நிலையையும் அடைவான் அந்த பக்தன்.



சண்முக துய்யமணியாம் சண்முகனை போற்றுவோம்

அவன் முகம் சைவமணியானதை உள்ளுணர்வால் உணர்வோம்
சைவமே முருகனாய் தோன்றி ஜீவதயவே வடிவாய் உள்ளதையும் உணர்வோம்.
-சுபம்-

மகான் ஆறுமுக அரங்கமகாதேசிகர் சுவாமிகள்