கள், காமம், களவு, கொலை, பொய்கூறல் என்ற ஐந்து பெருங்குற்றங்களும் பஞ்சமாபாதகங்கள் என்றும் இப்பாவங்களை செய்திட்டால் அது மனிதனை விடுபடமுடியாத வகையினிலே நரகத்தில் தள்ளிவிடும் என்பதையும் உணர்த்துவார்.
இந்த பஞ்சமாபாதகங்களும் அவரவர் முன் ஜென்மங்களிலே அவரவர் செய்திட்ட பாவங்களினாலேதான் இச்சென்மத்திலும் தொடர்கின்றதென்றும் அவை அவை அவரவர் செய்திட்ட பாவத்தினால் இச்சென்மத்திலும் தொடர்ந்து அவர் தம்மை மீண்டும் மீண்டும் மீளா நரகத்தில் ஆழ்த்திட முயற்சிக்கின்றது. ஆதலின் பாவவினைக்கு உட்பட்டவர்கள் முருகனருளால் உணர்ந்து மீண்டும் பாவத்தின் போக்கில் செல்லாமல் அதிலிருந்து விடுபட வேண்டுமென்ற உண்மை அறிவும் மிகும்.
முன்சென்மங்களிலே யாரும் அறியவில்லை என்றே நம்மை நாமே வியந்து ஏமாற்றிக் கொண்டு பிறர் அறியா வண்ணம் இரகசியமாக அவர்களது பொருளை கவர்தல், பொய்யான தகவல்களை கூறி ஏமாற்றி வஞ்சித்தல், பொருள் பறித்தல், அதிகவிலை உள்ள பொருளையோ, நிலத்தையோ, பிறர் வறுமையைப் பயன்படுத்தி தர்மத்திற்கு புறம்பான வழியிலே சென்று அவர்தம் பலகீனமான சூழ்நிலையை தக்க சந்தர்ப்பமாக எண்ணி பயன்படுத்தி வஞ்சனை செய்து சொத்தை அபகரித்தல், பொருளை அபகரித்தல் என்றும் தமக்கு உள்ள சக்தி, பணபலம், ஆள்பலம், அதிகாரபலம் போன்றவற்றை பயன்படுத்தி மிரட்டி பிறர் பொருளை வஞ்சனையாக அபகரித்தல் போன்ற மாபாதக செயல்களை செய்தவரெல்லாம் இச்சென்மத்திலே தன்னை தானே மயக்கும்படியான பொருள் கொடுத்து தீமையை விலைக்கு வாங்கி மயக்கம் உண்டாக்கி மனிதனை மரணத்தில் தள்ளவல்ல மதுவினை அமிர்தமாய் எண்ணி உண்டு தன்னைத்தானே மயக்கிக்கொண்டு அறிவு கெட்டு, புத்தி மழுங்கி, குணப்பண்புகளெல்லாம் தம்மிடமிருந்து விடுபட தன்னிலை மறந்து தன் தகுதி மறந்து மயக்கமுற்று பிறரை வஞ்சித்த பாவத்தின் தாக்கம் அதிகமாக அதிகமாக தன்னைத்தானே மயக்கமுறச் செய்து மயங்கி மதுவிற்கு அடிமையாகி மீளமுடியாமல் செத்தும் போவான். இவன் மானம் கெட்டு சாவது மட்டுமல்ல தன்னை சார்ந்த குற்றத்தினால் அவனது குடும்பத்தினரையும்
நடுத்தெருவில் நிறுத்திவிட்டு அவமானப்படும்படியான சூழலை உண்டாக்கி விட்டு அடுத்த ஜென்மத்திற்கும் குடும்பத்தினரால் வருகின்ற சாபத்தினையும் சேர்த்தே வாங்கி செல்வான் பாவி.
இந்த உண்மையை உணர்ந்திடப் பெறுவார்கள் முருகனருளால். உணர்ந்து யாரும் அறியவில்லை ஆனால் கடவுள் இருக்கின்றான், தர்மம் உள்ளது, முருகன் இருக்கின்றான், தர்மநெறி தவறிவிட்டால் தண்டிக்கப்படுவோம், பாவபுண்ணியத்திற்கு பயப்பட வேண்டும் என்று உணர்ந்து இச்சென்மத்திலாவது பிறரை ஏமாற்றாமல் வாழவேண்டுமென்ற உண்மை அறிவினை பெறுவார்கள்.
முன்சென்மங்களிலே தன்னை நம்பிய பெண்ணை காதலித்து தக்க சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அவளை வஞ்சித்து சுகம் பெற்று பின்னர் தனது அதிகாரம் மற்றும் பணத்தின் பலம் போன்றவற்றை பயன்படுத்தி அவளை மிரட்டி ஏமாற்றுதல் பெண்ணிடம் பொய் சொல்லி கற்பை சூறையாடுதல், பெண்ணை திருமணம் செய்வதாக வாக்களித்து கெடுத்து பின் கைவிடல், விரும்பாத பெண்ணை வலுவினில் சென்று அபகரித்தல், பெண்ணை கற்பழித்தல் போன்ற பெண் கொடுமைகளும், வேலைக்கு வருகின்ற பெண்களின் வறுமையைப் பயன்படுத்தி தமது காம இச்சைக்கு அவர்களை பலியாக்குதல் அல்லது வேலைக்கு வந்த பெண்களை பயமுறுத்தி இச்சைக்கு பணிய வைத்தல் போன்ற வெளியில் சொல்ல முடியாத பெண் பாவங்களை செய்தவர்கள் எல்லாம் இச்சென்மத்திலே பெண் மயக்கமுற்று பெண்நினைவாகவே அலைந்து திரிந்து காமவயப்பட்டு விலைமகள் தொடர்பினை நாடி தீராத காமத்தினால் உந்தப்பட்டு நோய்களையும், அவமானங்களையும் பெற்று பாவியாவார்கள்.
அவர்களெல்லாம் முருகனருளைப் பெறபெற இவையெல்லாம் நம் முன்சென்மத்தில் செய்த பாவங்கள் என்றே உணர்ந்து அவையெல்லாம் முருகனருளால் மாற்றிட கூடும் என்றுணர்ந்து முருகனருளைப் போற்றி போற்றி முருகனருளைப் பெறுவார்கள்.
அதுபோலவே களவு செய்வோர்களும், களவின் வெளிப்பாட்டினால் கொலையும், இவையனைத்தையும் மறைத்திட நீதியின் தண்டனையிலிருந்து தப்பித்திட அடாது பொய் சொல்லியும் இவ்வாறாக ஒரு குற்றம் தொடர்ந்திட அதன் தொடர்ச்சியாய் பலபல குற்றங்களை தொடர்ந்து தொடர்ந்து செய்து கடைசியில் முடிவற்றதாய் குற்றங்கள் பெருகி நம்மை என்றென்றைக்கும் மீள ஒட்டாமல் நரகத்தில் தள்ளிவிடும் என்றுணர்ந்து இவற்றினின்று விடுபட முருகா உனதருளினால் தான் முடியும் என்று உணர்ந்து முருகன் திருவடியைப் இறுகப் பற்றிட தூண்டும்.
முருகன் திருவடியைப் பற்றி உருகி உருகி பூசித்திட பூசித்திட இப்பாவங்களின் தன்மையும் அதன் பாவவினைகளின் விளைவுகளை அனுபவித்து தீர்க்கும் தைரியமும் அதனின்று விடுபட முருகன் அருள் பெற்று தர்மம் செய்தால் விடுபடலாம் என்ற தர்மசிந்தையும் பெருகி தக்க ஆசானை நாடி, வினை நீக்கம் செய்திட துணிவும் ஆசான் துணையும் முருகனருளால் பெற்றிட பெறுவார்கள்.
தக்க சொற்குரு வழிகாட்டலினால் முன்சென்ம பஞ்சமாபாதக வினைக் குற்றங்களிலிருந்து விடுபட்டு ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்வார்கள்.
இவையனைத்தும் முருகனருள் கூடினாலன்றி நடந்திடலாகாது. முருகா! முருகா!! முருகா!!! என்போம். பாவபுண்ணியம் பற்றி அறிந்து பாவம் நீக்கி புண்ணியம் பெருக்கி பண்பாளனாய் ஆகி முருகனடிக்கே அடிமைகளாகி முருகன் அருள் பெற்று ஞானமும் அடைவோம்.
...........
மகான் ஆறுமுக அரங்கமகாதேசிகர் சுவாமிகள்
Related Articles
2000 வருடங்களுக்கு முன் தமிழ்ச்சித்தர்கள் வகுத்த உயிரியல் (Biology)
Nathan Suryahttp://thamilsiddhas.blogspot.co.uk/2017/05/biology.html