அரங்கரைப் போல் ஞானிகள் இனிவருவது கடினம்
முற்காலங்களில் மக்களைக் காக்கும் பொருட்டு மன்னர்கள் பலவிதமான வேள்விகளை வளர்த்து, அந்த வேள்வியின் பயனால் மக்களைக் காப்பதை கூறுவர். அதுபோல மன்னர்கள் வெற்றி பெறுவதற்காகவும், பலவித யாகங்களும், வேள்விகளும் செய்து அதன் பயனாய் வெற்றி பெறுவார்கள்.
ஆனால் அரங்கமகாதேசிகர் முப்பத்தாறு ஆண்டுகளுக்கு மேலாக தவமியற்றி, தவமே வேள்வியாகச் செய்தார். ஆறுமுகப் பெருமானின் அவதாரமாகத் தோன்றிய அன்னல் மகான் அரங்கமகாதேசிகர் தமது வாழ்வையும், தவ ஆற்றலையும் உலக மக்கள் நலனிற்காகவே அர்ப்பணித்து பிறருக்கு தர்மம் செய்வதையும், தவம் செய்வதையுமே வேள்வியாக வளர்த்து அதன் பயனையும் உலக மக்களுக்கு அளித்து இன்புறும் பேராசானாவார்.
அப்படி தன்னலமற்ற ஞானி அரங்கமகாதேசிகரை காணவும், அவருடன் பேசவும், அவரது கரம் நம்மீது படவும், அவரது பார்வை படவும், அநேகம் கோடி தவங்கள் நாம் செய்திருந்தாலன்றி அவ்வளவு எளிதில் முடியாது.
மாஆற்றல் பொருந்திய அரங்கமகாதேசிகரின் அறப்பணிகளுக்கு தொண்டும், பொருளுதவியும் இடைவிடாது செய்து அரங்கமகாதேசிகரினை முழுமையாக நம்பி, தம்மை அர்ப்பணித்து பணி செய்தால் அவர்கள் சித்தர் லோகத்தில் ஒருவராக மாறுவார் என்கிறார் மகான் அர்ச்சுனர்.
முப்பத்தாறு ஆண்டுகளுக்கு மேலாக தவமியற்றவும், தடைபடாத அறப்பணிகள் மூலம் தர்மம் செய்யவும், அதற்கு தேவையான எல்லா ஞானிகளின் ஆசியும், பெரும் ஆற்றல் பெறவும், அரங்கமகா தேசிகர் கடைப்பிடித்த கொள்கைகளே அரங்கமகா தேசிகருக்கு உறுதுணையாக இருந்தது. ஜாதி, மத, இன, மொழி, ஏழை பணக்காரன் என்ற பாகுபாடற்று எல்லோரையும் ஒரு தாய் பிள்ளைகளாக எண்ணியதும், அவர்களிடம் பாரபட்சம் பாராமல் அன்பு காட்டியதும், தம்மை நாடியவர்களையும், தொண்டு செய்பவர்களையும் தம்மைப்போல் எண்ணி அன்பு காட்டியதாலும் இவ்வித பெருந்தவத்தையும், தருமத்தையும் செய்ய முடிந்தது. பொதுவாகவே ஒருவருக்கு ஞானம் பெற வேண்டுமாயின் சில அடிப்படை கொள்கைகளை கடைப்பிடிக்க வேண்டும்.
இத்துறையின் அடிப்படை கொள்கையான தொண்டருக்கு வருகின்ற இன்பதுன்பம் தனக்கு வந்ததாக எண்ணி அவற்றை ஏற்றுக் கொள்பவராகவும், இதை வாழ்வின் இலட்சியமாக கொண்டவர்தான் அரங்கமகாதேசிகர்.
கிடைத்ததற்கரிய குருநாதன் கிடைத்தும் இனியும் காலம் தாழ்த்தாது திருவடி பணிந்து பெறுதற்கரிய பெரும்பேற்றை பெற வேண்டும்.
ஓங்காரக்குடிலாசான் அரங்கமகாதேசிகரின் அறப்பணிகள் எல்லையின்றி விரிவடைந்து வருகின்றது. ஆரம்பத்தில் ஐந்து நபர்கள், பிறகு பத்து நபர்கள், ஐம்பது நபர்கள், ஆயிரம் நபர்கள், பத்தாயிரம் நபர்கள் மேலாகவும் அன்னதானம் நாளுக்கு நாள் விரிவடைந்து கொண்டு வருகிறது. இதுவரை சுமார் 2784 இலவச திருமணங்களை நடத்தி வைத்துள்ளார். குடிநீரில்லாத கிராமங்களுக்கு குடிநீர் அளித்துள்ளார். கண்சிகிச்சை முகாம்கள் நடத்தி கண்பார்வை அளித்துள்ளார்கள். இன்னும் சொல்ல சொல்ல இவை விரியும். இவ்வளவு அறப்பணிகளும் உண்மையும், அன்பும், பணிவும், முன்ஜென்ம தொடர்பும் உடைய தொண்டர்கள் உதவியினால்தான் செய்ய முடிந்தது.
இதுவே அவர்கள் செய்த தவப்பயன் என்பதை உணர்ந்து எக்காலத்தும் தொண்டரின் தொண்டினை மறவாமல் போற்றும் ஞானவானாக திகழ்கின்றார் அரங்கமகாதேசிகர்.
தலைவனே அவதாரமாக வந்துதித்தபோதும், சாதாரண தொண்டனிடத்தும் நேரிடையாக மனம்விட்டு பேசி அவனையும் மதித்து எந்த ஏற்றதாழ்வும் பார்க்காது அவரையும் தம்மைப்போலவே எண்ணி வாழ்த்தும் உயரியகுணமும், அன்பும் இவ்வுலகில் வேறெங்கும் எந்த சங்கத்திலும், எந்த இடத்திலும் காண இயலாது. அது ஓங்காரக்குடிலில் மட்டுமே காணமுடியும்.
அதை அரங்கர் மட்டுமே செய்ய முடியும். இதை வேறு யாராலும் செய்ய முடியாது. நன்றி மறவாமையை தன் உயிராக போற்றி பாதுகாப்பவர்கள் ஞானிகள் என்பது அரங்கரின் இச்செயல்களே சாட்சியாக கொள்ளலாம். அத்தகு ஞானியை, சற்குருவை முழுமையாக நம்பி தொண்டு செய்து வரவிருக்கின்ற பெரும் அறப்பணிகளில் தம்மை அர்ப்பணித்து ஞானிகளின் ஆசியும், அரங்கமகாதேசிகரின் ஆசியும் பெற்று ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ளுங்கள்.
No comments:
Post a Comment