முருகனை வணங்கிட :
காமத்தினால் பல ஜென்மங்களிலே நாம் பலபெண்களை கெடுத்த பாவங்களையும், கற்பழித்த பாவங்களையும், தூயநெறி நடக்கும் கற்புடைய பெண்களை கெடுத்த பாவங்களையும், கோபத்தால் பல உயிர்களுக்கு நாம் செய்த பாவங்களையும், பொறாமையால் பலருடைய வாழ்வை கெடுத்ததால் உண்டான பாவங்களையும், பேராசையால் பிறர் சொத்தை அபகரித்ததினால் உண்டான பாவங்களையும், மற்றவர்மீது புறஞ்சொல்லி பிறர் வாழ்க்கையை கெடுத்ததினால் உண்டான பாவங்களையும், செய்நன்றி மறந்ததால் உண்டான பாவங்களையும், உதவி செய்தோருக்கே இடையூறு செய்த கொடும் பாவத்தினால் உண்டான பாவங்களையும் உயிர்க்கொலை செய்ததினால் உண்டான பாவங்களையும் உணரச் செய்து அந்த பாவவினைகள்தான் இச்சென்மத்திலே நம்மை நோயாக, வறுமையாக, பகையாக, பல்வேறு வகையான பிரச்சனையாக இப்போது நம் வாழ்விலே குறுக்கிடுகிறது என்பதையும் உணரச்செய்தும், இப்படி நாம் செய்த பாவங்கள்தான் நமக்கு துன்பங்களாக மாறி நம்மை தாக்குகின்றது என்பதை முருகனை வணங்க உணர்ந்து இவையாவும் நாம் செய்ததினால் வந்ததுதான் என்பதையும் இப்பாவ வினைகளிலிருந்து நாம் மீண்டு வரவேண்டுமே அன்றி பாவங்களின் போக்கிலே போகாது அவற்றை ஏற்று அனுபவிக்க வேண்டுமே அன்றி பாவத்தினால் உந்தப்பட்டு மேலும் மேலும் பாவியாகாது நம்மை காத்துக் கொள்ள முருகன் திருவடியே துணை என்பதையும் உணர்ந்து முருகனது திருவடியை தீவிரமாக பற்றி பூஜிப்பான்.
முருகனது திருவடியை பூஜிக்க பூஜிக்க பூஜிக்க பாவவினைகளின் தன்மையை ஆழமாக உணர்வான். நாம் செய்த பாவங்கள் நம்மை மேலும் மேலும் பாவங்களை செய்யத் தூண்டி நம்மை நரகத்தில் தள்ளி எடுத்த இந்த அற்புதமான மானுட பிறப்பினின்று இழிநிலை பிறப்புகளை உண்டாக்கிவிடும் என்றும், பாவம் மிகுதியாக மிகுதியாக நாம் நாயாக, பன்றியாக, சொறிபிடித்த நாயாக, நொண்டி பன்றியாக, கழுதையாக, பாம்பாக மாறிமாறி நமது பாவவினை நம்மை பிறக்கச் செய்து இறுதியில் மலத்தில் நெளியும் புழுவாகவும் பிறக்கச் செய்துவிடும் என்பதையும் உணர்ந்து பாவத்தினால் வருகின்ற துன்பங்களை ஏற்றுக் கொள்வான் முருகபக்தன்.
முருகனை வணங்கா விட்டால் இந்த பாவங்கள் நம்மை சூழ சூழ பாவபுண்ணியத்தின் மீது நம்பிக்கை இல்லாதுபோய் பலவிதமான இழிபிறவிக்கு ஆளாவோம் என்பதை தெளிவாக உணர்ந்து முருகனை மேலும் மேலும் வணங்கிட, செய்த பாவவினைகள் செய்தவைதான், செய்த பாவங்களுக்கு மன்னிப்பு என்பது இறைவனிடத்தும் இல்லை, இயற்கையிடத்தும் இல்லை. நாம் செய்தவை நமக்கு அப்படியே திரும்பித்தான் வரும் என்பதையும் முருகன் அருளால் பாவவினைகளின் வேகத்தை குறைத்து மெதுமெதுவாக முருகன் அருள் துணையால் அனுபவித்து நீக்கி கொண்டும், முருகனருளால் மேலும் பாவங்களை செய்யாதிருக்க முருகன் துணையுடன் தானதருமங்களைச் செய்தும் தனது ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ள வேண்டுமென்றும் உணர்வான்.
நாம் செய்த பாவங்கள் நம்மை நோயாக தாக்கும்போது நாம் வணங்கிய முருகன் நமக்கு மருந்துவனாக வருவதையும், நோய் நீங்க மருந்தாகவும் அவனே வருவதையும், நோய் நீக்க தேவையான பொருளாக அவனே வருவதையும் தெள்ளத்தெளிவாக உணர்வதோடு பாவத்தின் தீவிரம் முருகன் அருளால் கடுகி விரைந்து குறைவதையும் காண்பான் முருகபக்தன்.
பாவத்தை உணரச்செய்வதும் முருகனின் கருணையே!
பாவத்தை அனுபவிக்க செய்வதும் முருகனின் கருணையே!
பாவத்தை அனுபவிக்க துணையாய் இருந்து காப்பதும் முருகனின் கருணையே!
ஆதலில் அருள்நிறை கருணையே வடிவான காத்தருள் புரிகின்ற எல்லாம்வல்ல இறைவனாம் முருகப்பெருமானின் திருவடிகளை மனம் உருகி பயபக்தியுடன், “ஓம் முருகப்பெருமான் திருவடிகள் போற்றி! போற்றி!!” என்றோ “ஓம் சரவண ஜோதியே நமோ நம!” என்றோ “ஓம் சரவண பவ” என்றோ முருகனது திருநாமங்களை தொடர்ந்து சொல்லி சொல்லி மந்திர உரு செய்ய செய்ய முருகப்பெருமான் நம்மை சார்ந்து நமது பாவங்களான உயிர்க்கொலை செய்து புலால் உண்கின்ற பழக்கத்திலிருந்து முதலில் விடுவிக்கின்றான்.
முன்செய்த பாவங்களிலிருந்து மீள, நம்மை புண்ணியவானாக்கும் பொருட்டு வணங்கினோர்க்கு தேவையான பொருளாதாரத்தை கொடுத்து ஏழை எளியோர்க்கு அன்னதானங்கள் செய்ய தூண்டி அன்னதானங்களை செய்ய செய்து புண்ணியவானாக மாற்றி மேல்நிலையை அடையச் செய்கின்றான். ஜீவதயவினை உணரச் செய்து நம்மை ஜீவதயவுடையோராக ஆக்கி தூயநெறியிலே நடந்திடச் செய்து நம்மை பெரும் புண்ணியவான்களாக ஆக்கி இறுதியில் மரணமிலாப் பெருவாழ்வு என்கிற பெறுதற்கரிய பெரும் பேற்றினையும் தந்தருளி நம்மையும் அவனைப் போலவே ஆக்கிக் கொள்கின்றான் முருகப்பெருமான் எனும் பெருங்கருணை தாய்.
...................
மகான் ஆறுமுக அரங்கமகாதேசிகர் சுவாமிகள்
No comments:
Post a Comment