Contact தொடர்பு

உலகமக்கள் நன்மைகருதி சித்தர் சுவடிகள்

Saturday, 4 August 2018

உண்மையான ஆன்மீகவாதியை எப்படி அறிவது?

உண்மையான ஆன்மீகவாதியை எப்படி அறிவது? மகான் ஆறுமுக அரங்கமகாதேசிகர் சுவாமிகள்



பொல்லா இருளகற் றுங்கதிர் கூகையென் புட்கண்ணினுக்
அல்லா யிருந்திடும் ஆறொக்கு மேஅறி வோருளத்தில்
வல்லார் அறிவார் அறியார் தமக்கு மயக்கங் கண்டாய்
எல்லாம் விழிமயக் கேயிறை வாகச்சி ஏகம்பனே.
- மகான் பட்டினத்தார் - திருஏகம்பமாலை - கவி எண் 17.

ஆசான் பட்டினத்தார் காஞ்சிபுரத்தில் இருந்தார். அவரைப் பார்க்க ஒருத்தன் வந்தான். இவரது எளிமையைப் பார்த்து இவரெல்லாம் சாமியாரா என்று சொல்லிவிட்டான். அவர் கூட இருந்தவர்கள் எல்லாம் என்ன உங்களை இப்படி பேசுகிறான் என்று சொன்னார்கள். அதற்கு அவர், “அவன் கோட்டான் மாதிரி”என்றார்.

கூகை என்றால் கோட்டான். பகலில் அதற்கு கண் தெரியாது. ஆனால் பிரம்மாண்டமான சூரியன் பகலில் இருக்கு. ஆனால் கோட்டானுக்கு மட்டும் பகலில் கண் தெரியாது. இதை ஆசான் பட்டினத்தார் சொல்வார்.

பொல்லா இருளகற்றும் - அமாவாசை இருட்டு போல இருக்கும். ரொம்ப காரிருள் என்பார்கள். மழை மேகம் மூடியிருந்தால் காரிருளாக இருக்கும். அப்ப சூரியன் வந்தவுடன் வெளிச்சமாகிவிடும்.

பொல்லா இருளகற்றும் கதிர் - கதிர் என்றால் சூரியன். கூகையின் புண்கண்ணிற்கு - இந்த கோட்டானுக்கு பகலில் இருட்டாக இருக்கு என்று சொன்னார். அதுபோல உண்மை ஞானிகளான எங்களை கண்டுபிடிக்க முடியாது.

மேலும் ஆசான் பட்டினத்தார் சொல்லிலும் தெரிந்து கொள்ளலாம் என்பார்.
பொருளுடையோரைச் செயலினும் வீரரைப் போர்க்களத்துந்
தெருளுடையோரை முகத்தினுந் தேர்ந்து தெளிவதுபோல்
அருளுடையோரைத் தவத்திற் குணத்தில் அருளிலன்பில்
இருளறு சொல்லிலுங் காணத்தகுங் கச்சி ஏகம்பனே.
- மகான் பட்டினத்தார் - திருஏகம்பமாலை - கவி எண் 15.


இப்படியும் காஞ்சிபுரத்தில் பேசியிருக்கிறார் ஆசான் பட்டினத்தார். அப்போ அடிப்படை என்னவென்றால் ஞானிகளை சுலபமாக அறிந்துகொள்ள முடியாது. ஆனால் அவர்களுடைய பேச்சில் தெரிந்து கொள்ளலாம் என்பார்.

பொருளுடையோரைச் செயலிலும் - நிறைய பொருளிருந்தது என்றால் வாகனம் வாங்குவான், வீடு கட்டுவான். அதிலிருந்து அவனிடம் நிறைய பணம் இருக்குதென்று தெரிந்து கொள்ளலாம்.

வீரரைப் போர்க்களத்தும் - வீரமுள்ளவனை எங்கே பார்க்க வேண்டும்.போர்க்களத்தில் பார்க்க வேண்டும். இங்கே வாய்சவடால் அடிப்பான். போர்க்களத்தில் அவனவன் தலை உருண்டுக்கிட்டே இருக்கும். அங்கே போகும்போது பயந்துவிடுவான்.

தெருளுடையோரை முகத்தினுந் தேர்ந்து தெளிவதுபோல் – ஒருவனை பார்க்கும்போதே மிகத்திறமையான ஆள் என்று சொல்லிவிடுவார்கள்.

அருளுடையோரைத் தவத்திற் குணத்தில் அருளிலன்பில் இருளறு சொல்லிலுங் காணத்தகும் - ஞானிகள் தன்னுடைய பேச்சில் ஒருவனுக்கு மாயையை உண்டுபண்ண மாட்டார்கள். அவனுக்கு தெளிவான பாதையை காட்டுவார்கள். அப்படிப்பட்ட ஞானியை பார்த்துக் கொள்ள வேண்டுமென்று ஆசான் பட்டினத்தார் சொல்வார்.

அவர் பேச்சு அத்தனையும் மனிதகுலத்துக்கு ஒளிவிளக்காக இருக்கும். அப்படி பேசுபவரைதான் கண்டுபிடிக்க வேண்டும். ஞானிகளை அப்படித்தான் அடையாளம் காட்டுவார் ஆசான் பட்டினத்தார். ஒருவனுடைய பேச்சு மற்றவனை மடையனாக்கும்படி இருந்தால் அவன் அருளில்லாதவன். ஆனால் ஞானிகள் பேச்சு தெளிவாக இருக்கும். இதுதான் மார்க்கம். இதைக் கடைப்பிடி என்று சொல்வார்கள்

அரவ மாட்டேல்

முருகப்பெருமானின் அவதாரம் தவத்திரு ஆறுமுக அரங்கமகாதேசிகர் சுவாமிகள் மகான் ஒளவையாரின் ஆத்திசூடிக்கு அருளிய அருளுரை!

அரவ மாட்டேல்



அரவம் என்பது பாம்பாகும். பாம்பு என்னும் உயிரினமானது தமது வாயில் நச்சுப்பற்களோடு நஞ்சை வைத்துக் கொண்டுள்ளது. அது கொடுமையான உயிரினம். அத்தகைய கொடிய உயிரினத்தோடு யாரும் விளையாடமாட்டார்கள்.

பாம்பென்றால் படையும் நடுங்கும் என்பது பழமொழி. மிகப்பெரும் வீரர்கள் கொண்ட படையில் பாம்பு புகுந்துவிட்டால் அந்த வீரர் படை தம் வீரத்தை மறந்து நடுங்கும், அந்த அளவிற்கு கொடியது பாம்பாகும். இது அனைவருக்கும் தெரிந்ததே.

ஞானமார்க்கத்தில் குரு சீடர் பாரம்பரியமாக பலப்பல இரகசியச் சொற்களை ஞானிகள் பயன்படுத்தி வந்தனர். அப்படி பயன்படுத்திய சொற்களில் ஒன்றுதான் “அரவம்” என்கிற சொல்லாகும். ஞானமார்க்கத்தைப் பற்றி அறிந்தவர்களுக்கு இது தெரியும்.

அரவம் என்றால் பாம்பு என்ற பொருள் இருந்தாலும் அரவம் என்பது ஞானமார்க்கத்தில் யோகநிலையில் ஒரு ஞானி வாசிப்பயிற்சியாகிய வாசி யோகத்தின் போது மூச்சுக்காற்றினை “அரவம்” என்ற இரகசிய வார்த்தையால் குறிப்பிடுவார்கள். இடது நாசியில் வருகின்ற காற்றை கருஞ்சாரை (கருநாகம்) என்றும் வலது பக்க நாசியில் வருகின்ற காற்றை வெஞ்சாரை (வெண்நாகம்) என்றும் குறிப்பிடுவார்கள்.

இத்தகைய வாசிப்பயிற்சியானது மும்மலதேகத்தின் மும்மலக் குற்றத்தை நீக்குதல் பொருட்டு ஆசான் ஞானபண்டிதன் உடனிருக்க ஞானிகள் துணையோடு காலம்காலமாக சிறிது சிறிதாக கணப்பொழுதும் நினைவினின்று வழுவாது காலநேரம் பாராது சதாசர்வகாலமும் மிகுந்த கவனத்துடன் செய்ய வேண்டிய ஒரு யோகப்பயிற்சியாகும்.

இத்தகைய யோகப்பயிற்சியானது வழிவழி வருகின்ற தொண்டர் கூட்டத்திற்கு குருமுகாந்திரமாக குருநாதர் உடனிருந்து உடற்தகுதி, உணவு முறை, சூழ்நிலை, தட்பவெப்பம் போன்றவற்றிற்கேற்பவும் தவத்தின் தன்மைக்கேற்பவும் அளந்து அளந்து சொல்லி தரப்பட்டு கவனத்துடன் அதிநுட்பமாக செய்கின்ற ஒரு பயிற்சியாகும்.

இந்த பயிற்சி செய்கின்றவர் இல்லறத்தில் ஈடுபடக் கூடாது. அவ்வாறு ஈடுபட்டால் அவரது யோகமும் தவமும் பாழ்பட்டு, ஏன் சமயத்தில் இறந்துவிடவும் கூடும். ஒரு துறவு நிலை கொண்டவரானாலும் ஆசான் துணையின்றி செயல்பட்டால் அடுத்து என்ன செய்வது? எனத் தெரியாமல் உள்ளே சென்ற காற்றானது வெளியேற முடியாமல் அவனைக் கொன்றுவிடும்.

அதுமட்டுமல்ல இல்லறத்தார்கள் மிகமிக ஆற்றல் வாய்ந்த இந்த வாசியோகப்பயிற்சியினை செய்யக்கூடாது. ஏனெனில் வாசியோகப்பயிற்சியின் அளவு, காலம், எவ்வளவு காலம் செய்ய வேண்டும் என்றெல்லாம் தெரியாமலும் அதன் தன்மை தெரியாமலும் செய்வார்களேயானால் இறுதியில் இறந்து விடுவார்கள். வாசியோகப் பயிற்சியின் போது நம் உடம்பிலுள்ள மூலக்கனலே எழும்பி அளவிலாத உஷ்ணத்தை கொடுக்கும். இல்லறத்தானுக்கு ஞானக்கனலும், அவனிடமுள்ள காமக்கனலும் சேர்ந்து உடம்பில் அளவில்லாத வெப்பத்தை உண்டாக்கி கடுமையான மலச்சிக்கல் முதல் பலப்பல நோய்களை உண்டாக்கி கடைசியில் அவனை இறந்துவிடும்படியான ஒரு சூழ்நிலையை உண்டாக்கிவிடும்.

எனவே இத்தகைய தகுதியில்லாத செயலை இல்லறத்தான் செய்தல் ஆகாது என்பதினாலேயே அரவ மாட்டேல் (காற்றுடன் விளையாடாதே, வாசிப்பயிற்சியை விளையாட்டாகச் செய்யாதே) என மறைபொருளாக கூறி வைத்தார் மகான் ஒளவையார்.

அற்பமா மூட ரறியாமல் யோகம்
சொற்பமா யெண்ணிச் செய்தே மரித்தார்
கற்பமில் லாட்டால் காணுமோ ஞானம்
அற்பர்செய் யோகம் அழிம்பிது பாரே.
-மகான் சட்டமுனிவர் அருளிய குரு சூஸ்திரம் 21 - கவி எண் 17.


மகான் ஆறுமுக அரங்கமகாதேசிகர் சுவாமிகள்

Saturday, 14 July 2018

“ஓம் சரவண ஜோதியே நமோ நம” எனும் செபத்தால் கிட்டும் பயன் குறித்த மகான் போகமகாரிஷி அருளிய ஆசி நூல்

முருகப்பெருமான் துணை
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி

“ஓம் சரவண ஜோதியே நமோ நம” எனும் 

செபத்தால் கிட்டும் பயன் குறித்த

மகான் போகமகாரிஷி அருளிய ஆசி நூல்



10.07.2018, செவ்வாய்க்கிழமை
பிரணவ சக்தியே முருகா
பிரணவ சித்தியே குமரா
சரவண ஜோதியே நமோ நம எனும்
செபதபத்தால் உலகோர்க்கு கிட்டும்
கிட்டும் பயனாக போகமகாரிஷியும்
கூறிடுவேன் அரங்கமகான் கேட்க
திட்டமுடன் ஆறுமுகனார் சூட்சும
தேசிகனார் வெளிப்பாடு உறுதி காண
காணவே இந்தவித நாமசெபம்
கட்டாய செபமாக தொடர்ந்து ஒலிக்க
ஞான சக்தி ஏழாம் படை வீட்டில்
ஞான ஒளியாக வெளிப்படக் கூடும்
கூடவே அரங்க மகானிடத்தில்
கூறியே பாதங்களை பிடித்து
திடமுற தொண்டு செய்திட
தேசிகனுள் இந்த நாம ஒலி பரவ
பரவவே ஆறுமுகனார் சக்தி

பரவி அரங்கனுக்கு தேக திடம்
தரணியிலே கரம் கால்கட்கு உரமாகி
தண்டாயுதன் துணைபட நடை வெளிப்பாடு

வெளிப்பாடு சடுதி காணும்
வினவிட ஞான சக்தி கூடும்
தெளிவுபட செபதப பலம்
தேசிகன் அவதார சூட்சுமம் வெளிப்படுத்தும்
வெளிப்படுத்த அரங்கனே முருகனெனும்

வானவர் கண்ட சூட்சுமம் உறுதிபடும்
தெளிவுபட இவை செபதபத்தை
தொடரும் தொண்டர்கள் வாழ்வில்
வாழ்வில் காரிய வெற்றி காணும்

வந்த நோக்கங்கள் மலரும்
ஊழ் அறுக்கும் தூண்டலாக
உயர் தொண்டும் செபமும் வழி வகுக்கும்
வகுக்கவே ருண ரோகமிடர்
வஞ்சம் ஏவல் சூழ்ச்சி விலகும்
வகைபட அரங்கனோடு இருந்து
வலுவான சேவை செபதபம் காண
காணவே ஞான பலமுடன்

கருணையும் பக்குவமும்

ஞானவான்கள் ஆகிட ஆசியும் அருளும்
ஞானிகளாகவே ஆகும் வாய்ப்பு கிட்டும்
கிட்டவே சரவணஜோதியே நமோ நம என
குறைவில்லா எண்ணிக்கை செபிக்க
கட்டநட்டம் எதிர்முறை குணம் விலகும்
கருணை தயவு பாதுகாப்பு பெருகும்

ஆகவே நாமசெபம் ஒலிக்க
அடியவர் என வந்தவர் எல்லாம்
யுகமாற்ற பங்களிப்பில் இடம் பெறுவர்
உலகை ஆளும் தகுதியும் பெறுவர்
பெருமைபட அகிலத்தவர்களும்
பிரணவம்பட இவை செபம் செய்ய
வறுமை விலகி தன் நிறைவும்
வசதி வளம் நல்பாதுகாப்பும் அடைவர்
அடைவர் அறிவும் பலமும்
அடைவர் சிந்தை தெளிவு திடமும்
சோடையான உலக மாயை வென்று
சுப்பனால் ஞான வாழ்வு பெறுவர்
வாழ்வினில் முருகனே தலைவன்
வையகம் காக்கும் இறைவன் எனும்
தாழ்விலா உண்மை அறிவர்
தக்க செபதபம் தொடர
தொடர உலக அழிவினின்றும்
துன்பமான வாழ்வினின்றும் மீள்வர்
இடரை வென்று காக்க வந்த
எங்கள் அரங்கனே முருகன் எனும்
எனும் சூட்சும அறிவு பெறுவர்

இந்தவித செபதபம் தொடர
ஞான உணவு சைவமே என்றும்
ஞானிகள் பூசையே உயர் பூசை எனும்
எனும் பக்குவம் திடம் பெறுவர்
எக்காலமும் செபதபம் செய்பவர்
ஞானவான்கள் தயவு பெற்றுமே
ஞானயுக வாழ்வும் ஞானியாகும் நிலை அடைவர்

அடையநல் இந்தவித செபதபம்
அளவிலா அனுதினம் செய்ய
சோடை வெல்வது அறமே எனும்
சுத்த தருமமே கருமம் போக்குவது எனும்
எனும் அரங்கன் தருமத்தின்

எல்லையிலா சக்தியை உணர்வர்
தானதரும வழியை கடைப்பிடித்து
தவராசன் தண்டாயுதன் துணைபட வாழ்வர்
வாழ்வினில் ஆபத்து இடைகண்டம்
வாராத எமபயம் விலகி
தாழ்விலா நெடிய ஆயுளும்
தானவர்கள் இனி பிறவா கதி பெறுவர் ஆசி நூல் முற்றே.
-சுபம்-

முருகப்பெருமான் துணை
மகான் போகமகாரிஷி அருளிய ஓம் சரவணஜோதியே நமோ நம எனும் செபத்தால் கிட்டும் பயன் குறித்த ஆசி நூலின் சாரம் :
ஓங்கார சக்தியே முருகப்பெருமானே ஓங்காரத்தின் வெற்றியே குமரப் பெருமானே “ஓம் சரவண ஜோதியே நமோ நம” எனும் ஜெபத்தினால் உலகோர்க்கு கிடைத்திடும் பயன்களையெல்லாம் அரங்கன் கேட்க போகமகாரிஷி யானும் ஆசி நூலாக விளம்பி வருடம் ஆனி மாதம் 26ம் நாள் 10.07.2018, செவ்வாய்க்கிழமையான இன்றைய தினமதனிலே உரைக்கின்றேன் என்கிறார் மகான் போகமகாரிஷி.
உறுதியாக குறித்த சமயத்தில் முருகப்பெருமானின் சூட்சுமமான அரங்கமகா தேசிகன் வெளிப்பாடு உறுதிபட நடந்திட வேண்டுமாயின் இத்தகைய வல்லமைமிக்க மந்திரமான ஓம் சரவண ஜோதியே நமோ நம எனும் மந்திரம் ஜெபமாக தொடர்ந்து ஒலித்திட ஞானசக்தி ஏழாம் படை வீடு தன்னிலே ஞானஒளியாக வெளிப்படுமப்பா.
ஆறுமுக அரங்கனை வணங்கி பணிந்து அரங்கன் முன்னிலையில் ஓம் சரவணஜோதியே நமோ நம என்று தொடர்ந்து ஜெபித்துமே அரங்கனின் கால் பாதங்களை பிடித்து திடமுற தொண்டுகளை செய்து வரவர, தேசிகனாருள் சரவணஜோதி மந்திர ஒலி பரவி முருகப்பெருமானின் சக்தி பரவி, ஆறுமுக அரங்கனுக்கு தேகதிடம் பெருகி அரங்கனின் கரம்கால்கள் உரமாகி முருகப்பெருமானின் துணைபட அரங்கனும் எழுந்து நடந்து தவஅறையினின்று வெளிப்பட்டு உலக மாற்ற செயல்பாடுகளுக்காக வெளியே வருவார்.

இத்தகைய வெளிப்பாடு விரைந்து நடந்திட சரவணஜோதி மந்திரத்தின் செபதப பலம் கூடிட விரைந்து வெளிப்பாடு காணும், ஞானசக்தி கூடி நிற்கும், செபதப பலத்தால் தேசிகனாரின் அவதார சூட்சுமம் வெளிப்படுத்தும்.
சரவணஜோதி மந்திர பலமானது அரங்கனின் அவதார சூட்சுமம் தன்னை வெளிப்படுத்திட ஆங்கே அரங்கமகா தேசிகப்பெருமானே முருகப்பெருமானாக உள்ள உண்மை தேவர்களும் ஞானிகளும் கண்ட உண்மையை தொண்டர்களும் கண்டு ரசிப்பார்கள்.

இப்படிப்பட்ட உயர்வான வல்லமைமிக்க ஜெபதபத்தை தொடர்ந்து சொல்லும் தொண்டர்களின் வாழ்வினிலே உள்ள காரியத் தடைகள் எல்லாம் விலகி காரிய வெற்றி காணுமப்பா. அவர்கள் இந்த பூமியில் எதற்காக பிறவி எடுத்தார்கள் என்பதையும் முன்ஜென்ம நோக்கங்களையும், தொடர்பையும் அறிந்து பிறவியின் நோக்கங்கள் நிறைவேறும். முன்ஜென்ம பாவங்களான ஊழ்வினையை உணர்ந்து ஊழ்வினை அறுத்து விடுபடும் முயற்சியாக ஊழறுக்கும் சக்தியாக முருகப்பெருமானின் உயர் மந்திரமாகிய ஓம் சரவணஜோதியே நமோ நம எனும் மந்திரம் உள்ளதை உணர்ந்து அதை தவறாது ஜெபித்திட அவர்களது இந்த ஜெபதபமும் உயர் தொண்டும் ஊழறுக்கும் வல்லமை தந்திடும்.
ஊழ்வினையை அறுத்து வெற்றிதரவல்ல சரவணஜோதி மந்திர ஜெபமதை தொடர்ந்து செய்து வர, அவரவரைப் பற்றிய கடன் துன்பங்கள் தீர்ந்திடும், அவரவர்க்கு உண்டான வஞ்சனைகள் விலகும், ஏவலும் சூழ்ச்சிகளும் செயலிழந்து அவர்களை விட்டு விலகி ஓடும்.
உத்தம மகா ஞானி முருகப்பெருமானின் அவதாரம் ஆறுமுக அரங்கனின் திருவடி நிழலே கதியென தஞ்சமடைந்து திருவடி நிழலில் தங்கி அரங்கனோடு உடனிருந்து வலுவாய் தொண்டுகளையும் ஜெபதபங்களையும் தவறாது செய்து வந்தால், அவரெல்லாம் ஞானபலம் தன்னை பெறுவதுடன் அரங்கனின் கருணையையும், பரிபக்குவத்தையும், அவரெல்லாம் ஞானவான்களாக ஆகிட எல்லா ஞானிகளின் ஆசியும் அருளும் பெற்று ஞானிகளாகவே ஆகும் வாய்ப்பையும் பெறுவார்கள்.
சரவணஜோதியே நமோ நம என்று குறைவின்றி நிறைவாக அதிக அளவில் ஜெபித்து வரவர, கஷ்டங்களும் நஷ்டங்களும் விலகும். எதையெடுத்தாலும் எதிர்மறையாக சிந்திக்கும் வக்கிர குணம் விலகும், எதிர்பதமான சிந்தனைகள் விலகும், அவர் தம்முள்ளே கருணையும் அருள் பாதுகாப்பும் தயவு உணர்வும் பெருகி நிற்கும்.

ஆதலினால் “ஓம் சரவணஜோதியே நமோ நம” என்றே நாமஜெபத்தை ஒலிக்கும் அடியவர்கள் எல்லோரும் யுகமாற்ற பங்களிப்பில் இடம் பெற்று சிறப்படைவார்கள், இந்த உலகை ஆளும் தகுதியும் பெறுவார்கள்.
உலக மக்களெல்லாம் ஓங்காரனாம் முருகப்பெருமானின் ஆசியுடன் ஓம் சரவணஜோதியே நமோ நம என்றே தொடர்ந்து ஜெபதபங்களை செய்து வரவர, அவரவரைப் பற்றிய வறுமை விலகி தன்னிறைவு காணும், நல்ல வசதியும் வளமும் நல்பாதுகாப்பும் பெற்று சிறப்படைவார்கள், சிறந்த அறிவு பலமும் சிந்தை தெளிவும் மனோதிடமும் பெற்று குற்றமுள்ள துன்பமயமான உலக மாயையை வென்று சுப்பனாம் முருகப்பெருமானால் ஞானவாழ்வை பெறுவார்கள்.
வாழ்வினில் அவரவரும் உறுதியுடன் முருகப்பெருமானே எமக்கு தலைவன், அவனே இந்த பிரபஞ்சத்திற்கும் தலைவன். இவ்வுலகைக் காக்கும் இறைவன் எம்பெருமான் முருகப்பெருமானே என்கிற அற்புதமான பேருண்மையையும் அறிந்து தெளிவார்கள்.
தகுந்த விதத்தில் முறையுடன் நாமஜெபங்களை ஜெபதபமாக தொடர்ந்து செய்திட அவரெல்லாம் உலகின் இயற்கை பேரிடர்களிலிருந்தும் மீள்வார்கள், துன்பமயமான உலக வாழ்வினிலிருந்தும் மீள்வார்கள். மக்களின் துன்பங்களை வென்று காத்திடவே வந்துதித்த எங்கள் அரங்கமகா ஞானியே முருகப்பெருமான் எனும் சூட்சும அறிவையும் பெறுவார்கள்.
இப்படிப்பட்ட உண்மையான ஆற்றல் பொருந்திய சரவணஜோதி திருமந்திரத்தை மந்திர ஜெபமாக தொடர்ந்து ஜெபித்து உருவேற்றினால் ஞானத்தினை அடைய தகுந்த உணவு சைவமே என்பதும், ஞானஉணவு சைவம்தான் என்றும், உயிர்க்கொலை தவிர்த்து புலால் மறுத்து சுத்த சைவ உணவை மேற்கொண்டாலன்றி ஞானத்திற்கு உரிய அறிவையோ, உணர்வையோ, ஞானத்தையோ ஒருபோதும் பெற முடியாது என்பதையும் அறியலாம். ஞானிகளை வணங்குவதுதான் உயர் பூஜை என்பதையும், மற்ற மற்ற சிறுதெய்வ வழிபாடுகளும், செத்து பிறந்த மனிதர்களை வணங்குவதும், மேன்மையடைய செய்யாது என்பதையும் தெளிந்து உணர்ந்து பக்குவம் பெறுவர். ஆக ஞான உணவு சைவமே என்றும், ஞானிகள் பூஜையே உயர்ந்த பூஜை எனும் பரிபக்குவம் மனோதிடமும் பெற்று சிறப்படைவார்கள்.

எல்லா காலத்தும் “ஓம் சரவண ஜோதியே நமோ நம” என்றே ஜெபதபம் செய்து வருகின்றவர்கள் ஞானவான்களின் தயவினை பெற்று ஞானயுக வாழ்வும் ஞானியாகும் நிலையையும் அடைவார்கள். சரவணஜோதி மந்திரத்தை ஒவ்வொரு நாளும் தவறாது அளவிலாது ஜெபதபம் செய்து வந்தால், நம்மைப் பற்றிய மும்மல குற்றங்களையும் வெல்வது அறமே என்றும், சுத்த தருமமே கருமமாகிய முன்ஜென்ம பாவங்களை போக்குவது என்றும், அதனாலேயே மக்களின் வினைபோக்கும் மாதரும செயல்களை ஆறுமுக அரங்கனும் செய்து அன்னதானத்தை விரிவாக நடத்துகிறார் என்பதையும் ஆறுமுக அரங்கனின் தருமத்தின் எல்லையில்லா சக்தியையும் உணர்ந்து தெளிவார்கள்.
தானதருமத்தின் வழியே சிறந்த வழி என்றே உணர்ந்து, தர்மத்தின் வழியை கடைப்பிடித்து தவராசன் அரங்கன் துணையுடனும் தண்டாயுதன் முருகப்பெருமான் துணையுடனும் வாழ்ந்து சிறப்படைவார்கள். அவர்களது வாழ்வில் ஆபத்துகள் ஏதும் வாராமல் இடைத்துன்பங்களும் வாராது நல்வாழ்வு வாழ்ந்து எமபயமாகிய மரணபயம் விலகி தாழ்விலாத நீடிய ஆயுளையும் பெற்று இனி பிறவாத கதியாகிய மரணமிலாப் பெருவாழ்வு எனும் பெருநிலையை பெற்று சிறப்படைவார்கள் என தமது ஆசி நூல் மூலம் உலகறிய உரைக்கின்றார் மகான் போகமகாரிஷி.
-சுபம்-

நக்கீரன் திருவடியை நாளும் போற்றிட
தக்க துணையென்றே சாற்றுவோர் நல்லோர்.
- மகான் ஆறுமுக அரங்கமகா தேசிகர்.

Tuesday, 29 May 2018

வைகாசி மாத ஞானத்திருவடி நூலிற்கு மகான் கருவூரார் அருளிய ஆசி நூல்



பிரணவ சக்தியே ஆறுமுகனே
பிரளயம் தனையும் தடுத்து காத்து
தரணியெங்கும் மகா சக்தியாக
தயவு காட்டி மக்களை நோக்கி

நோக்கியே பலகோடி சூட்சுமமாக
நீதிமான்கள் வழி வெளிப்பாட்டை
ஆக்கமுடன் செய்து அருளும்
ஆறுமுகனே கனிகிரி வேலவனே

வேலவனே கலிகாலம் தன்னில்
விளையாட்டை துவக்கி நன்கு
காலமதை நிர்ணயம் செய்து
கடுந்தவமியற்றி பலபிறவி தோறும்

பிறவிதோறும் தன்னை நோக்கி
பெருந்தவமும் தர்மமும் செய்து வந்த
துறவிதனை ஆறுமுகன் அனைத்து
தூயஅவதாரம் ஆக்கி இனிதே

இனிதே இந்த கலியுகத்தில்
ஏழாம்படை வீடு படைத்துமே
கனிவுமிக்க ஆறுமுக அரங்கனாக
கந்தனும் உயர்சேவை ஆற்றிவர

வருகவே ஆறுமுகன் சக்தியாக
வரமென வரும் ஞானத்திருவடி நூலுக்கு
கருவூரார் யானும் விளம்பி விடை திங்களில்
கண்டுரைப்பேன் ஆசிநூல் தன்னை

தன்னில் கலிகாலம் தன்
தகாத வலிமை பெருக்கி
இன்னலென மக்களை அழித்தாலும்
இடர்பாடுகள் இயற்கை சீற்றமென

சீற்றமென நிலநடுக்கம் சுனாமி
சிக்கலான மழைவள மின்மை
ஆற்றலான வெப்பக் கொடுமை
அநீதியான மக்கள் செயல்கள்

செயல்கள் மிகுந்து வந்தாலும்
செந்தில் வேலனார் கலியுகத்தை
தயவு கொண்டு தடுத்து காக்க
தவசியாக அரங்கனாக இறங்கி இருக்க

இருக்கவே எல்லா பாதுகாப்பும்
இந்த யுகத்தில் அடைந்து வாழ
கருத்தாக கலிவாழ் மக்கள்
கட்டாயம் அரங்கன் வடிவிலான ஆறுமுகனை

ஆறுமுகனை அணுகி வணங்கி
ஆற்றலான தீட்சை பெற்று
மாறுதலை வேண்டி உலகோர்
மனமுவந்து தான தருமத்தை

தருமத்தை ஏற்று செய்துவர
தட்டாது தொடரும் அரங்கனின்
தருமத்தில் பொருளுதவி செய்தும்
தன்னார்வ தொண்டர்களாக இணைந்தும்

இணைந்தும் அரங்கன் சேவையில்
எல்லா மக்களும் கலந்துவர
இணையில்லா சக்திபலம் கண்டு
இந்த உலகமே பாதுகாப்பு பெறும்

காப்புடனே மக்களின் தேவைகள்
கண்ணியமான வழியில் பூர்த்திபெறும்
ஒப்புக்கொண்டு நீர்நிலை கழனி
உயர்வு பெறும் தர்மம் வளரும்

வளரவிலா தடுத்து வரும்
வக்ரமான ஆளுமை கொடுமை
பலமிழந்து போக நேரும்
பாதுகாப்பான மழை வளமும்

வளமும் நீர்நிலை பெருக்கமும்
வஞ்சிக்கின்ற ஆளுமை மாறவே
பலமும் ஏற்றமும் உலகம் காணும்
பண்புடன் ஆளுமை மாந்தர்கள்

மாந்தர்கள் கருணை கொண்டு
மண்ணுலகில் கழனி காக்காவே
சிந்தைபட கழனி மக்களை காக்கவே
சிரத்தையுடன் எற்காவிடில்

எற்காவிடில் ஆளுமை மாறும்
இயற்கை சீறும் கலி இடராக
எற்காவிடில் அஞ்ஞானவான்கள்
இருப்பிடம் தெரியா அழியநேரும்

நேர்மைபட ஞானிகளை வணங்கும்
நீதிமான்கள் தர்மவான்கள் எல்லாம்
ஆறுமுக அரங்கன் வழியில் தொடர
அறம்வழி எல்லாமக்களும் இணைய

இணையவே மக்களின் தேவைகளும்
இயற்கை வளங்கள் எல்லாம்
இணையிலா அளவில் பெருகியே
இறைவடிவான அரங்கனால் பூர்த்தியாகும்

ஆகவே அரங்கன் காட்டும்
அனைத்து அறவழிகளும்
வகைபட ஆறுமுகன் காட்டும் வழிகள் ஆகும்
வல்லமைபட ஞானவழிகளாகும்

ஆகவே ஞானயுகத்தை நோக்கி
அரங்கன் சேவை முடுக்கப்பட்டதால்
யுகமே நாடிவரும் சடுதி அரங்கனை
யுகமே தேறும் ஞானயுகமாக

ஆகவே அற்புத சேவைகளை
அரங்கன் சக்திகளை கொண்டுவரும்
யுக ஞான நூலாக வரும்
உயர் ஞானத்திருவடி நூலை

நூலை வைத்திருப்பவர்களும்
நித்தம் வாசித்து வருபவர்களும்
காலை மாலை என பூஜித்து
கரம்தனில் தொட்டு வணங்கி

வணங்கி வரும் மக்களுக்கும்
வாசிக்க கேட்டு வருபவர்களும்
இணங்கி முருகன் அருளுவான்
எக்காலமும் பெருந்துணை புரிவான்
ஞானத்திருவடி நூலுக்கு கருவூரார் ஆசிநூல் முற்றே.

-சுபம்-



மகான் கருவூரார் அருளிய விளம்பி வைகாசி மாத ஞானத்திருவடி நூலுக்கு ஆசி நூலின் சாரம்:


பிரணவமாம் ஓங்கார சக்தியே ஆறுமுகப் பெருமானே பிரளயத்தையும் தடுத்து மக்களை காத்து உலகம் எங்கும் மகா சக்தியாக தயவு காட்டி, உலக மக்களை ஆதரித்து அன்பு செய்து பலகோடி சூட்சுமமாய் நின்று அருள் செய்து, நீதிமான்கள் மூலமாக நீதியை வெளிப்படுத்தி உலகினில் நீதியை நிலைநிறுத்தி ஆக்கமுடன் அருள் செய்யும் ஆறுமுகனே, பழநி மலை வாழ் வேலவனே முருகா, கலிகாலத்தினில் உமது திருவிளையாடல்களை துவக்கியே அத்திருவிளையாடல்களை நிகழ்த்திட, தக்க காலமதை நிர்ணயம் செய்து அத்தகைய தருணமதில் பல்லாயிரம் ஆண்டுகள் தவமியற்றி பலபல பிறவிகள்தோறும் முருகப்பெருமானை நோக்கி பெரும்தவமும் செய்து வந்த துறவி ஆறுமுக அரங்கமகாதேசிகனை முருகப்பெருமானும் அனைத்து அருள் புரிந்து தூய அவதாரமாக மாபெரும் ஞானியாக ஆக்கி, இனிதே இக்கலியுகத்தினில் ஏழாம்படை வீடு படைத்து கனிவுமிக்க ஆறுமுக அரங்கமகாதேசிகனாக கந்தப்பெருமானும் உயர் சேவைகளை ஆற்றிவர, முருகப்பெருமானின் சக்தி வடிவமாக வரமாய் உலகோர்க்கு வந்து காத்தருள் புரியும் ஞானத்திருவடி நூலுக்கு, கருவூரார் யானும் விளம்பி வருடம் வைகாசி மாதம்தனிலே ஆசி நூல்தனை உரைக்கின்றேன் மகான் கருவூர்த்தேவர்.

கலிகாலம் தன்னுடைய சக்தியான தீயகுணங்களை, தீயசக்திகளை வலிமைகளை பெருமளவில் பெருக்கி மக்களுக்கு பலவாறாய் இன்னல்கள் தந்து மக்களை அழித்தாலும் இன்னலாய் இயற்கை சீற்றமாகவும், நிலநடுக்கங்களாகவும், ஆழிப்பேரலையாகவும், சிக்கல்மிகுந்த பருவமாற்றங்களினாலும், மழைவளயின்மையாலும், அதிகமழை வெள்ளத்தாலும், எல்லைகடந்த சூரிய வெப்பக் கொடுமைகளாலும் அராஜகம் புரியும் அநீதியான மக்களின் தகாத செயல்களினாலும் எல்லை கடந்து உலகில் பாவச்செயல்கள் மிகுந்து வந்தாலும், செந்தில் வேலன் முருகப்பெருமான் எண்ணிலா கருணை கொண்டுமே கலியுகத்தின் கோரச்செயல்களை இன்னல்களை அளவு கடக்காது தடுத்து காத்து அருள் செய்து மக்களை மீட்கவே மகாதவசியாக ஆற்றல்மிகக் கொண்ட மகாஞானியாக ஆறுமுக அரங்கமகாதேசிகனாக அவதாரமாய் இறக்கி இருப்பதினாலே உலகினில் எல்லா பாதுகாப்பும் அடைந்திட அவரவரும் அரங்கனை நாடுங்கள்.      


உலகின் கொடுமையிலிருந்து மீண்டு எல்லா பாதுகாப்பும் இந்தயுகத்தில் அடைந்து வாழ கருத்துடன் கலியுகத்தினில் வாழும் மக்களெல்லாம் அவசியம் ஆறுமுக அரங்கமகாதேசிகனார் வடிவினில் இருக்கும் முருகப்பெருமானை நாடிச்சென்று பயபக்தியுடன் வணங்கி ஆற்றல் அளிக்கும் தீட்சை உபதேசங்களை அடைந்து உலகமாற்றம் நடந்திட வேண்டுகோள் வைத்து அவரவரும் தருமபலன் பெருகும்விதமாக தானதருமங்களை மனமுவந்து செய்து வரவேண்டும். ஆறுமுக அரங்கன் ஆற்றும் தானதருமப்பணிகளுக்கு தளராமல் தொடர்ந்து பொருளுதவிகளைச் செய்து அரங்கன் தேவைகளில் தன்னார்வத் தொண்டர்களாக ஆகி தொண்டுகள் செய்து அரங்கன் அருளால் இணையில்லா சக்தியை பெற்று இந்த உலகமே அரங்கன் அருளால் அருள் பாதுகாப்பை பெற்றிடும். அரங்கனின் அருள் பாதுகாப்பினால் உலக மக்களின் எல்லாத் தேவைகளும் கண்ணியமான முறையிலே பூர்த்தி அடையும், நீர்நிலைகளில் நீர் ஆதாரம் பெருகிடும், விவசாயம் சிறப்பாக நடந்து மேன்மை பெறும், நாட்டினில் தருமம் வளரும்.


மக்களின் வளர்ச்சியை தடுத்து வருகின்ற வக்ரமான ஆட்சிகளும், ஆட்சியாளர்களும் பலமிழந்து போக நேரிடும். மழையானது தவறாமல் பெய்து நாட்டில் வளம் பெருகும். நீர்நிலைகள் அதிகரிக்கும். மக்களை வஞ்சிக்கும் கொடுமையான ஆட்சியாளர்கள் முருகப்பெருமான் அருளினால் மாறிவிடுவார்கள். அதனால் நீதி பெருகி நாட்டில் பலமும் முன்னேற்றம் உண்டாகி நல்லுலகமாக ஆகிடும்.


ஆட்சி செய்வோர் பண்புடன் நடந்து கருணையோடு விவசாயத்தை காத்து அதிகமாக செய்திட விவசாயப்பெருமக்களும் அரசால் நன்கு பராமரிக்கப்பட்டு விவசாயிகளை அரசு காப்பாற்றவேண்டும். விவசாயிகளின் நலத்தினில் உடனடியாக கவனம் செலுத்தி விவசாயிகளை பாதுகாக்க வேண்டும், விவசாயிகளை காக்க மறந்தால் ஆட்சி மாற்றம் உண்டாகும், இயற்கையும் சீறும். கலியுகத்தின் மாயையினால் இதை ஏற்க மறுத்தால், இயற்கை சீற்றம் உண்டாகும். அவ்வித அஞ்ஞானவான்கள் இருந்த இடம் தெரியாமல் அழிந்து போவார்கள்.


நீதிநேர்மையுடன் தர்மத்தின் வழியிலே நடந்து முற்றுப்பெற்ற ஞானிகளை வணங்கும் நீதிமான்கள், தருமம் அளவிலான செய்திட்ட தர்மவான்கள் எல்லாம் ஆறுமுக அரங்கமகாதேசிகனார் வழியில் தொடர்ந்து சென்றிட, அரங்கனின் அறப்பணிகளில் கலந்து மக்களெல்லாம் இணைந்திட மக்களின் தேவைகள் இயற்கை வளமெல்லாம் பெருகி, இறைவடிவான ஆறுமுக அரங்கனால் பூர்த்தி பெறும்.


ஆகவே ஆறுமுக அரங்கமகாதேசிகனார் காட்டும் அனைத்து அறவழிகளும் முருகப்பெருமானின் அறவழிகளாகும், வல்லமைமிக்க ஞானவழிகளாகும்.


ஆகவே ஞானயுகத்தை நோக்கி அரங்கன் சேவை முடுக்கப்பட்டுள்ளதால் இந்த உலகமே விரைவில் அரங்கனை நாடி வரும். இந்தயுகமே ஞானயுகமாக தேறிடும்.

ஆதலினால் மிக அற்புதமான சேவைகளை ஆறுமுக அரங்கனின் சக்திகளை கொண்டிருக்கும் இந்தயுகத்தின் ஞானநூலாக வெளிவரும் உயர் ஞானத்திருவடி நூலை வைத்திருப்பவர்களும், தினம்தினம் பயபக்தியுடன் பூஜித்து வாசித்து வருபவர்களும், வாசிக்க கேட்கின்றவர்களும், ஞானத் தலைவன் முருகப்பெருமான் அருள் செய்து நிற்பான், எக்காலமும் பெருந்துணை புரிவான் என தமது ஞானத்திருவடி ஆசிநூல் மூலம் உலகறிய உரைக்கின்றார் மகான் கருவூர்த்தேவர்.

-சுபம்-