Contact தொடர்பு

உலகமக்கள் நன்மைகருதி சித்தர் சுவடிகள்

Thursday, 24 October 2019

எல்லாம் வல்ல தெய்வம் எம்பெருமான் முருகன்!


முருகப்பெருமானை வணங்கிட :


உலக வாழ்விற்காக கற்ற கல்வியின் துணை கொண்டே பரவாழ்வாகிய  மோட்ச லாபத்தை அடைவதற்கான பரவாழ்க்கை கல்வியை கற்க வேண்டும்  என்பதை அகத்தீசர் அருளால் அறிந்து கொள்ளலாம்.



இக வாழ்க்கையில் இருந்து கொண்டே இகவாழ்வின் கடமைகளை செய்து  கொண்டு இகவாழ்வின் துணை கொண்டு ஆனால் இகவாழ்வினில் ஆழ்ந்து  போகாமல் தண்ணீர் இலை தாமரை போல வாழ்ந்து பரவாழ்க்கைக்கான  முயற்சிகளை தவறாது செய்து செய்து வெற்றி கண்டவன் தான்  முருகப்பெருமான் என்பதையும், எந்த தேகம் காமத்திற்கு காரணமாக அமைகிறதோ இகவாழ்விற்கு துணையாய் அமைகிறதோ அந்த காமதேகமே  பரவாழ்வாகிய ஞானத்தை அடையவும் காரணமாக அமைவதை அறிந்து  காமக்கசடுடைய தேகமதை வெறுக்காமல் அந்த காமதேகத்தினை  காமத்திற்கு பயன்படுத்தாமல் யோகத்திற்கு பயன்படுத்தியதோடு  தேகத்தினுள் காமத்தீயை ஏற்படுத்தி தேகத்தை அழித்து பிறவி எடுக்காமல் யோகத்தீயை உண்டாக்கி தேகத்தை சுட்டு கசடு நீக்கி தூய்மையாக்கி  ஞானதேகமாக மாற்றி, வெற்றி கண்டவன்தான் முருகப்பெருமான்.


அத்தகை  வாய்ப்பினை மனித வர்க்கம் அறியாமல்  மும்மலக் குற்றத்தின்  வயப்பட்டு முன் வினை பாவங்கள் உந்தித் தள்ள காமமெனும் நரகக்குழியில் வீழ்ந்து பெற வேண்டிய பெரும் பேற்றை பெறாமல் வீணில் வாழ்வை  வீணாக்குகின்றோம் என்பதையும் உணரலாம்.


எல்லாம் வல்ல தெய்வம் எம்பெருமான் முருகன் அருளினால் அவனது  திருவடியைப் பற்றி மனமுருகி பூசித்தும் உயிர்க்கொலை தவிர்த்தும், புலால்  மறுத்தும் சைவ உணவை மேற்கொண்டும் மாதம் ஒருவருக்கேனும் பசித்த  ஏழைகளுக்கு பசியாற்றிவித்தும் தினம் தினம் மறவாமல் காலையில் ஒரு  பத்து நிமிடமும் மாலையில் ஒரு பத்து நிமிடமும் முடிந்தால் இரவு பத்து  நிமிடமும், முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி, ஓம் முருகப்பெருமான்  திருவடிகள் போற்றி!” என்றோ ஓம் சரவண பவஎன்றோ ஓம் சரவண  ஜோதியே நமோ நம!” என்றோ முருகனது திருமந்திரங்களை நாமஜெபமாக  சொல்லி சொல்லி அவனது அருளைப் பெற வேண்டும்.


எல்லாம் வல்ல முருகனது அருளைப் பெறாமல் எந்த விதத்திலும் நாம் ஞானத்துறையில் அணுவளவும் முன்னேற முடியாது என்பதையும் உணரலாம்,  உணர்ந்ததும் முருகனது திருவடிகளிலேஎன் உள்ளம், உடல், பொருள், ஆவி  அனைத்தும் முருகா உனது திருவடிக்கே அர்ப்பணிக்கிறேன்.



பாவியாகிய  எனது அர்ப்பணிப்பையும் ஏற்று உமது தொண்டருள் ஒருவராய் எம்மையும்  ஏற்று அருள் செய்வாய் ஐயனேஎன்றும், எல்லாம் வல்ல முருகா எம்பெருமானே! தாயினும் தயவுடை தனிப்பெருங்கருணையே! தயாநிதியே!  தேவாதிதேவா! தேனே! தெள்ளமுதே! தெவிட்டா பேரின்பமே! என்றெல்லாம்  அவனது பெருமைகளை கூறி கூறி அவனது அன்பை பெற்று அவனது  பொன்னார் திருவடிகளே சரணாகதி என்றடைந்து சரணாகதி பெறுதல் வேண்டும்.


தாயினும் மேலான தயவுடை தெய்வமே முருகா! உனது அருளையெல்லாம்  நான் முழுமையாக பெறவேண்டும். அதற்கு நீரே அருள் செய்திட  வேண்டுமென்றே சகமார்க்க உரிமையினால் முருகனிடத்து வேண்டுகோள்  வைப்பதுடன் நீ நானாக வேண்டும், நான் நீயாக வேண்டும் என்று, எல்லாம்  அவனாக ஆக வேண்டுமென்றும் உயர்நிலை வேண்டுகோளை தவறாது  மனமுருகி முருகனது திருவடிகளே சமர்ப்பித்து தவறாது நாத்தழும்பேற  பூசித்து பூசித்து தொடர்ந்து வரவர முருகன் அருள் கூடி பலகாலம்  படிப்படியாய் ஞானம் நம்முள் தோன்றி ஒரு கால பரியந்தத்தில் நாமும் நம்  நாயகன் முருகனும் ஒன்றாகுதல் கூடும் என்பதையும் உணரலாம்.


 களைய முடியா கலியுக களையை
 களைவான் கந்தன் கருணை கொண்டே.

Thursday, 10 October 2019

தமிழ் ஞானமொழி


முருகப்பெருமான் துணை


மகான் ஆறுமுக அரங்கர் அருளுரைகள்


முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்....


முருகனே தமிழை உருவாக்கியவன், முருகனே ஞானத்தையும்  உண்டாக்கியவன், முருகனே அனைத்து கலைகளுக்கும் தலைவன், தமிழே  ஞான மொழி, தமிழ் கற்றால்தான் ஞானம் பெற முடியும் எனும் சிறப்பறிவை பெறலாம்.

உயிர்க்கொலை செய்து புலால் உண்பது பாவம்தான். ஆனால் அதைவிட பாவம் எதுவெனில் தெய்வத்தின் பெயரால் உயிர்க்கொலை செய்வது.  அதனினும் பெரும் பாவம் எதுவெனில் ஞானம் அளிக்கும் தமிழ் கற்றும்  தமிழனாக பிறந்தும் தமிழ் தலைவன் முருகனைப் பற்றி அறியாதிருப்பது  பெரும் பாவமாகும் என்பதை அறியலாம்.

தமிழ் கடவுள் முருகனே ஞானபண்டிதனாக இருப்பதையும்,  முருகப்பெருமான் திருவடி பற்றி மனமுருகி பூஜித்து வணங்க வணங்க  உயிர்க்கொலை செய்து புலால் உண்டதால்தான் நமக்கு ஞானம் தடைபட்டதை உணர்வார்கள்.

புலால் மறுத்து, சுத்த சைவ உணவை  மேற்கொண்டாலன்றி ஞானத்தில் முன்னேற முடியாது என்பதையும் அறிந்து, சைவ உணவினை மேற்கொண்டு முருகனது திருவடி பற்றி பூஜித்து எல்லா உயிர்களிடத்தும் நீக்கமற  நிறைந்துள்ள முருகனது ஆசிபெற மாதம் ஒருவருக்கேனும் பசித்த ஏழைக்கு  பசியாற்றுவித்தும், எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்தியும் ஆசியை  பெற்றால் ஞானம் பெறலாம் என்பதையும் அறிந்து முருகனது கருணையாலே ஞானவழிக்குரிய மார்க்கமும் அதற்குரிய தக்க துணையான  சொற்குருவையும், சற்குருவையும் முருகனருளால் பெறுவார்கள்.


சொற்குரு வழிகாட்டலினாலே சற்குருவை கண்டுகொண்டு ஞானவழிதனிலே  சென்று ஞானமும் பெறுவார்கள் என்பதை அறியலாம்.


.................
இன்பமாம் முருகனின் இணையடி போற்றிட
துன்பமும் இல்லை துணையாம் இணையடி.
தஞ்சமாம் முருகனின் தாளினை போற்றிட
வஞ்சகம் இல்லை வாழ்வும் செம்மையே.

“ஓம் முருகா” என்ற பெரு மந்திரம்

மகான் ஆறுமுக அரங்கர் அருளுரைகள்

அகத்தீசனை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்....

வினைவென்ற வேலன் திருவடி விரும்பியே பூசிக்க
துணையென்றே போற்றுவார் துறவோர்.


தேவர்களை தனித்தனியே பூஜை செய்து ஆசி பெறலாம், முப்பத்து முக்கோடி தேவர்களை பூசித்து ஆசி பெறலாம், நவகோடி சித்தரிஷி கணங்களையும் தனித்தனியாகவோ ஒன்றாகவோ பூஜித்து ஆசி பெறலாம், அஷ்டதிக்கு பாலகர்களை தனித்தனியே பூஜித்து ஆசி பெறலாம், நாற்பத்தி எட்டாயிரம் ரிஷிமார்களையும் தனித்தனியாகவோ, சேர்ந்தோ பூஜித்தும் ஆசி பெறலாம், ரிஷிகளின் ரிஷி பத்தினிகளையும் பூஜித்தும் ஆசி பெறலாம். பதினான்கு லட்சம் தேவதைகளையும் தனித்தனியே பூஜித்து ஆசியும் பெறலாம், நவக்கிரக நாயகர்களையும் பூஜித்து ஆசி பெறலாம், மற்றுமுள்ள அநேகம் அநேகம் உள்ள சக்தர்களையும், சக்திகளையும் பூஜித்து ஆசி பெறலாம்.

இவர்களையெல்லாம் பூஜித்து பூஜித்து ஆசி பெற யுகயுகமாய் பூஜித்து ஆசி பெற்றாலும் நமது பூஜை ஒரு முடிவிற்கு மேல் முடிவிற்கு வராது.

அப்படியே பூஜித்து ஆசி பெற்றிட்டாலும் அந்தந்த தெய்வங்களின் சக்திக்கேற்ப சிறிய சிறிய சத்திகளையே பெற முடியும் என்றும், அப்படி பெற்ற சிற்சக்திகளோ, யோக ஞான இரகசியங்களோ நமக்கு முற்றும் நிலையான சித்தியை தராது என்பதையும், முப்பத்து முக்கோடி தேவர்களையும், நவகோடி சித்தரிஷி கணங்களையும், நாற்பத்தெட்டாயிரம் ரிஷிமார்களையும், ரிஷி பத்தினிகளையும், பதினான்கு லட்சம் தேவதைகளையும், அஷ்டதிக்கு பாலகர்களையும், நவக்கிரக நாயகர்களையும் மற்றும் உள்ள சக்தர்களையும் சக்திகளையும் ஒன்றாய் பூசித்து பலனை தரவல்ல மந்திரம் ஒன்று உள்ளது.

அந்த மந்திரமே இந்த சக்திகளையெல்லாம் தோற்றுவித்த மூலவனாம் ஞானத்திற்கும், பிரபஞ்சத்திற்கும் தலைவனாய் விளங்கி சதகோடி சூர்ய பிரகாசமும், பொன்னிறமும் உடையவனும் தயவே வடிவானவனும், கேட்டோர்க்கு இல்லையென்னாது வழங்குகின்ற வள்ளலுமான முருகப்பெருமானின் திருமந்திரமான “ஓம் முருகா” என்ற பெரு மந்திரமாகும் என்பதை அறிந்து கொள்ளலாம்.

முருகா என்று மனமுருகி அழைத்தால் அக்கணமே முருகனால் உருவாக்கப்பட்ட இந்த அத்துணை சக்திகளும் “யார் அழைத்தது எம் தலைவனை” என்றே உடன் விரைந்து முருகப்பெருமான் தோன்று முன்னரே அத்துணை சக்திகளும் அழைத்தவர் முன் தோன்றி அழைத்த அந்த அன்பர் குறை தீர்க்கும்.

அத்தகைய வல்லமை மிக்க முருகப்பெருமானின் நாமங்களை சொல்லி முருகனை அழைக்கும் வாய்ப்பு உயிர்க்கொலை தவிர்த்து, புலால் மறுத்து, சைவ உணவை மேற்கொண்டு, ஜீவதயவு பெருகி, எவ்வுயிரையும் தம்முயிர் போல் எண்ணுகின்ற, பேதா பேதமற்ற புண்ணியவான்களுக்கு மட்டுமே வாய்க்கும் என்பதையும் அறியலாம்.

ஒரு நொடிப் பொழுதில் அநேகம் அநேகம் கோடி சக்திகளை முருகனின் நாமங்களை அவனது திருவடி பற்றி மனமுருகி சொல்லி சொல்லி பெறலாம் என்பதை அறியலாம்.

வேதாந்த வித்தகன் விமலனாம் முருகனின்
பாதார விந்தம் பணிதலே பண்பாகும்.

கலியுகக் கடவுள் கந்தனைப் போற்றிட

முருகப்பெருமான் துணை

மகான் ஆறுமுக அரங்கர் அருளுரைகள்

கலியுகக் கடவுள் கந்தனைப் போற்றிட
நலிவில்லா வாழ்வு நண்ணும் முக்தியே.
பற்றற்ற முருகனின் பதத்தை போற்றிட
கற்ற கல்வியால் காணலாம் உண்மையே.

முருகப்பெருமான் திருவடிகளை பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்....


மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் அடுத்த நொடியினில் என்ன நடக்கும் என்பதை அறியமாட்டான். ஆனால் அளவு கடந்த கற்பனையில் வாழ்வை நிலையென்று நம்பி ஏமாறுவான், மரணம் என்ற ஒன்று எப்போது வேண்டுமானாலும் வரும் என்பதை அறியாமல் ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ளாமல் வீணாக காலத்தை கழித்துவிட்டு இறுதியில் செய்ய வேண்டியவைகளை செய்யாமல் செத்தே போய்விடுவான் ஞானிகளை அறியாத, ஞானிகளை வணங்காத, ஞானிகள் ஆசிபெறாத மனிதருள் பதரான அறிவிலாத மனிதர்கள் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

முருகப்பெருமான் திருவடிகளை வணங்க வணங்க முற்றுப்பெற்ற ஞானியர் கூறிய உபதேசங்களை கேட்கவும், அறியவும், படிக்கவும், உணரவும் வாய்ப்புகள் ஏற்படும்.

கோளறுபதிகம், மகான் மாணிக்கவாசகரின் சிவபுராணம், ஒளவையாரின் விநாயகர் அகவல் போன்ற நிலையாமையை உணர்த்தும் ஞானிகளின் ஞான நூல்களை கற்கும் வாய்ப்பு உண்டாவதோடு நிலைப்பெற்ற வாழ்வாகிய மரணமிலாப் பெருவாழ்வை அடையும் மார்க்கமும் புலப்படும்.

மரணமிலாப் பெருவாழ்வை அளித்து காக்க வல்லவன் முருகன்தான் என்பதையும் அறியவும் முடியும். முருகனை வணங்க வணங்க இப்பிரபஞ்சத்திலேயே அயராத தவமுயற்சியினால் கோடிக்கணக்கான ஆண்டுகள் அரும்பாடுபட்டு நமது உடலைப் பற்றியும், உயிரைப் பற்றியும், உயிர் உடம்பு இணைப்பும், பிரிவும் பற்றியும், பிறவியின் இரகசியம் பற்றியும், பிறவிக்கு காரணம் பற்றியும், பிறவியிலிருந்து மீள்வது பற்றியும், மரணம் பற்றியும், இனி பிறவாநிலை உள்ளது பற்றியும், மரணமற்ற வாழ்வு பற்றியும், மரணமிலாப் பெருவாழ்வை அடையும் முறை பற்றியும் ஆராய்ந்து அறிந்து தெளிந்து உணர்ந்து கொள்ள வேண்டும்.

பெறுதற்கரிய பெரும் பேறான இந்த மானுடதேகத்தின் கண் உள்ள அற்புதமான ஒளிதேகத்தை கண்டுகொண்டு அதை உண்டாக்கவல்ல பொறிபுலன் இயக்கமும் அறிந்து “தயவே மரணத்தை வெல்லும் ஆயுதம்” என்பதையும் அறிந்து, தயவின் துணையால் இயற்கையன்னையின் அருட்கொடையால் ஆன்மாவை பற்றிய மும்மலக்கசடை, தேகத்திலுள்ள காமக்கசடை நீக்கி நீக்கி தூய்மையாக்கி கரிய இருண்ட காமகசடான தூலதேகத்தை சதகோடி சூர்ய பிரகாச ஒளி பொருந்திய ஒளி உடம்பாக மாற்றி இறுதியில் மரணத்தை வென்று பெருஞ்சாதனையை, பேராற்றலை பெற்று என்றும் அழிவிலாத மரணமிலாப் பெருவாழ்வை அடைந்த முதல் ஞானியெனும் பெருமையையும் பெற்றான் முருகன் என்பதையும் அறியலாம்.

முருகனே மரணமிலாப் பெருவாழ்வை அளிப்பவன் என்பதை முற்றும் உணர்ந்து முருகன் திருவடிகளைப் பற்றினாலன்றி ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ள முடியாது என்பதையும் தெளிவாக அறியலாம்.

யுகம் பல கடந்த உத்தம வேலனை
அகம் மகிழ போற்றிட ஆனந்தமாமே.
போற்றுதற்குரிய புண்ணிய வேலனை
ஏற்றி ஏற்றி தொழுவோம் நாமே.
.................

Monday, 7 October 2019

இளமையில் கல்


திருச்சி மாவட்டம், துறையூர், ஓங்காரக்குடிலாசான், சிவராஜயோகி, பரமானந்த சதாசிவ சற்குரு தவத்திரு அரங்கமகா தேசிக சுவாமிகள் அவர்கள்

மகான் ஒளவையாரின் ஆத்திசூடிக்கு அருளிய அருளுரை




கல்வி என்பது ஒவ்வொருவருக்கும் தேவையான வாழ்வின் அத்தியாவசியமான ஒன்றாகும். அந்த கல்வியினை எப்போது வேண்டுமானாலும் கற்க முடிந்தாலும், தக்க தருணமாகிய இளமையில் கற்பதுதான் நன்மை பயக்கும்.


ஏனெனில் மனிதனின் பரிணாம வளர்ச்சிப்படி அவனது இளமைப் பருவமாகிய பதினாறு வயதிற்குள்தான் அவனது கற்றல் திறனானது அதிகமாக இருக்கின்றது. அதனினும் அவன் இளமையில்தான் உடல்சார்ந்த மற்றும் மனம் சார்ந்த பிரச்சினைகள் ஏதுமின்றி மிகத் தெளிவாக எளிமையான வகையில் அவனது சிந்தனையும் செயலும் தூய்மையானதாக இருக்கின்றது.


பதினாறு வயதிற்கு மேல் அவனது சிந்தனையும் செயலும் ஒருமுகப்படுத்த முடியாமல் பல்வேறு விதமான வழிகளில் அலைபாயவிடுவதோடு கல்வியில் நாட்டம் குறைந்து பிற விசயங்களை கற்பதில் நாட்டம் அதிகமாகிவிடும். என்னதான் மனம் ஊன்றி கல்விகற்க முயற்சித்தாலும் அவனது தேகமும் மனமும் அவனை சிந்திக்கவிடாமல் அவனை அலைக்கழித்துவிடும்.


எனவே எதைக் கற்பதாக இருந்தாலும் அதை இளமையில் கற்றால்தான் அவன் கற்பதன் முழுப்பலனை பெறமுடியும். எவ்வித தடைகளும் இல்லாத  இளம்பிராயத்தில் கற்கின்ற அனைத்தும்பசுமரத்து ஆணிபோலஅப்படியே எளிமையாக மனதில் ஆழமாக பதியும்.


இங்கு கல்வி என்பது இரண்டு வகையாக பிரிக்கலாம். ஒன்று இவ்வுலக விசயங்களான வாழ்க்கை வாழ்வதற்கான உலகியல் சார்ந்த மாயா காரிய  சம்பந்தமுடைய இகலோக வாழ்வினை அடிப்படையாகக் கொண்டே ஞாபகங்களை அடிப்படையாக கொண்டு மனதில் பதிய வைக்கின்ற வகையில் நடத்தப்படுவதும், இகலோகக் கல்வியாகிய ஏட்டுக்கல்வியாகும்.


மற்றொன்று இவ்வுலக விசயங்களுக்கெல்லாம் அப்பாற்பட்டு மாயா காரிய சம்பந்தமில்லாத முற்றுப்பெற்ற முனிவர்களாலும், சித்தர்களாலும், தேவர்களாலும், ரிஷிகளாலும் வழிவழியாக குருகுலத்தின் வழியாக உலகின் உண்மையை பரம்பொருளைக் குறித்த, பிறப்பு இறப்பிற்கு அப்பாற்பட்ட மேம்பட்ட பரலோக வாழ்வைக் குறித்த கல்வியாகும்.


இது கற்காமலேயே  பக்தியினாலும் உணர்விக்கப்படுவதினாலும் அவரவர் குருமுகாந்திரத்தினால் தம்முள் கற்கின்ற என்றும் அழியாத சாகாக் கல்வியாகும்.


மனிதன் இவ்வுலகில் வாழ வேண்டுமென்றால் அவனுக்கு நடைமுறை கல்வியாகிய பள்ளிக் கல்வி அவசியம்தான், ஏனெனில் அந்த பள்ளிக் கல்வி  மூலம்தான் அவன் மொழியறிவையும், சமூக அறிவையும், உலக அறிவையும், கணிதம், விஞ்ஞானம், பூகோளம், சரித்திரம், தொழில்நுட்பம் போன்ற  வாழ்க்கைக்கு தேவையான அனைத்துவித அறிவுகளையும் அவனால் பெற  முடியும்.


இல்லறத்தார்கள் தங்களது வாழ்வை நடத்திட தேவையான பொருளாதாரத்தை அளிப்பதும் இந்த கல்வியின் பிரதிநிலையேயாகும்.
ஆதலால் மனிதனாய் பிறந்த ஒவ்வொருவரும் அடிப்படைக் கல்வியேனும் கட்டாயம் கற்றிருக்க வேண்டும். அப்பொழுதுதான் அவன் இவ்வுலகில்  பிறரை புரிந்துகொண்டு வாழமுடியும். இல்லையெனில் கல்வி இல்லாதவன்  வாழ்வானது கடும் சிரமத்திற்கு உள்ளாகும்.


அப்படி கற்கும் கல்வியை கற்கும் காலமான இளமையான வயதாகிய பதினாறு வயதிற்குள்ளாகவே கற்க வேண்டும். அதன்பிறகு கற்பவையெல்லாம் அவன் கட்டாயத்தின் பேரில்தான் கற்க முடியுமே தவிர ஈடுபாட்டோடு இருக்க முடியாது. எனவே இளமையிலேயே பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு கண்டிப்பாக தமது பிள்ளைகளின் எதிர்கால வாழ்க்கைக்கு தேவையான கல்வியினை தரமாக தந்து அவர்களது வாழ்வை வளமாக்கிட வேண்டும்.


ஒவ்வொருவரும் தம்தம் பிள்ளைகளை இவ்வுலகின் பரிணாமத்தில் சிறந்து விளங்க அவரவர்கள் அவரவரால் முடிந்த அளவு தமது பிள்ளைகளுக்கு தேவையான கல்வியினை அளித்துள்ளார்கள். ஆயினும் இது வெறும்  ஏட்டுக்கல்விதான். அவன் இறந்த உடன் அவன் எவ்வளவு கற்றிருந்தாலும் அவன் பாடுபட்டு பன்னெடுங்காலம் கற்ற கல்வியனைத்தும் அவனைவிட்டு சென்றுவிடுகிறது.


அவன் கற்றகல்வி அவனது மறுபிறவிக்கு செல்லுமா என்றால் கண்டிப்பாக செல்லாது. சரி அவன் ஞாபகமானது குறைந்தாலோ விபத்தினாலோ ஞாபகக்குறைபாடு ஏற்பட்டாலோ, அவன் அதுவரைக் கற்ற கல்வி பயன்படுமா என்றால் கண்டிப்பாக பயன்படாது.


ஆக இகவாழ்வை மட்டும் சார்ந்துள்ள இந்த கல்வி கற்றாலும் என்றும் அழியாத, நீரால், நெருப்பால், காற்றால் அழிக்க முடியாததும், பஞ்சபூதங்களினால் எந்த இடையூறும் செய்ய முடியாததும் யுகம்யுகமாக ஆன்மாவைத் தொடர்ந்து பற்றி வருகின்றதும் இன்று கற்றால் இனி எடுக்கும் ஜென்மங்கள்தோறும் தொடர்ந்து தொடர்ந்த இடத்திலிருந்து தோன்றி மனிதனை மனிதனாக, மனிதனை தேவனாக, ஏன் மனிதனை கடவுளாகவும் ஆக்க வல்லதும், எம்பெருமான் முருகப்பெருமானாரால் தோற்றுவிக்கப்பட்டு எண்ணிலாகோடி சித்தரிஷிகணங்கள் தோன்ற காரணமாயிருந்ததும், பாவ புண்ணியம் பற்றி உரைப்பதும் மனிதன் கடைத்தேறும் மார்க்கம் கூறுவதும், இல்லறத்தானும், துறவறத்தானும், யோகியும், ஞானியும் இப்படி எல்லோரும் எல்லாவிதத்திலும் வாழ்கின்ற வாழ்வை வளமாக வாழ வழி சொல்லுகின்ற மாபெரும் கல்வியாம் சாகாக்கல்வியை கற்பதே உண்மையான கல்வி கற்றதாகும்.


ஒரு மனிதன் கல்விகற்பதற்கு அவனது இளமையான பருவம்தான் தக்க சூழ்நிலையாகக் கொள்ளப்படுகிறது. அதே போலத்தான் ஞானக்கல்வியாகிய சாகாக்கல்வியை கற்கவும் இளமையே தக்க பருவமாகும்.


ஏனெனில்  சாகாக்கல்வியை கற்றிட ஜாதி, மத, இன, மொழி, துவேசங்கள் மனதினுள் இருக்கக்கூடாது. ஜீவகாருண்யம் மிக்கவராக இருக்கவேண்டும்.  பிறஉயிர்கள்பால்  அன்பு செலுத்தவேண்டும். காமவிகாரமற்று  இருக்கவேண்டும். பொருள்பற்று இருக்கக்கூடாது. பொய்பேசக்கூடாது.


இந்த பண்புகள் அனைத்தும் மனிதனுடைய வாழ்வில் பிள்ளைபிராயத்தில் அதாவது பாலபருவத்தில் நற்பண்புகள் அதிகமாகவும் வயது ஏறஏற இந்த  நற்குணங்கள் குறைந்து பிறநாட்டங்கள் அதிகமாகி அவனது மனமும், சொல்லும், செயலும், சிந்தனையும் படிப்படியாக களங்கப்பட்டு இறுதியில்  அசுத்தமாகிவிடுவதால், அசுத்தமான மனதில் தெளிவான ஞான அறிவினை ஏற்படுத்துவது மிகவும் கடினமானதும், இயலாததும்கூடதும் ஆகும்.


ஆதலினால் பெற்றோர்கள் கடமையாக இந்த நாட்டிற்கு எதிர்கால நல்ல சந்ததிகளை அளித்து நாடு நலம் பெற வேண்டி ஒவ்வொருவரும் தமது  கடமையாக உலக நலம் பெற வேண்டி தமது பிள்ளைகளை நல்லோராக  வளர்க்கின்ற பொறுப்புள்ள பெற்றோரின் கடமையாக இளமைப்  பருவத்திலேயே பாலபருவம் தொடங்கியே பிள்ளைகளுக்கு எளியமுறையில்  பக்தி நெறியினை ஊட்டி வளர்த்திடல் வேண்டும்.


சிவபுராணம், தேவாரம், திருவாசகம், சித்தர்பாடல்கள், வள்ளலார் பாடல்கள், அருட்பெருஞ்ஜோதி அகவல் போன்ற மாமேருவான ஞானிகளால் படைக்கப்பட்ட அதிஅற்புதமான மனிதனுக்கு நல்லறிவு ஊட்டி வினைதீர்த்து  மனிதனை மேல்நிலைப்படுத்தி ஆன்ம சுத்தி செய்து மனிதனை கடவுளாகவும் ஆக்கவல்ல நூல்களை படிக்கச்செய்து தினந்தினம் தவறாமல் பக்தி நெறிக்கு உட்படுத்தி ஒரு சிறு கால அளவேனும் அவர்களை பூஜை செய்திட சொல்லி அதற்கான உதவிகளை பெற்றோர்கள் செய்து கொடுத்து அவர்களுக்கு நினைவுகளில் நல்ல செய்திகளை, பக்தியை, விசுவாசத்தினை பதியவைத்திடல் வேண்டும்.

அவர்களுக்கு முற்றுப்பெற்ற ஞானிகளை அறிமுகப்படுத்தி அவர்களை வணங்கிடச்செய்து பாவபுண்ணியமற்ற பரமானந்த ஜோதி சுடர்களான  ஞானிகளின் அருளாசி கிடைத்திடும்படி செய்திட வேண்டும்.

இளமையிலேயே தர்மத்தினைப் பற்றியும், தர்மத்தின் பலத்தினை, தர்மத்தின் ஆற்றலை கூறி அவர்கள் உணரும்படிச் செய்து சிறுவர்களது கைகளாலேயே தானங்கள், தர்மங்கள் செய்திடும்படி செய்து தான பண்பினையும் தர்மம் செய்கின்ற பண்பினையும் வளர்த்து அவர்களை நல்லவர்களாக ஆக்கி இவ்வுலக சமுதாயத்திற்கு அவர்களை நல்ல மக்களாக ஞானிகள் விரும்புகின்ற மக்களாக ஆக்கிடவேண்டும்.

கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்
- திருக்குறள் - கடவுள் வாழ்த்து - குறள் எண் 2.
கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழா அர் எனின், தூய்மையான அறிவுள்ளவன் திருவடியை பற்றாவிட்டால் நீ என்ன கற்று, என்ன பயன் என்று சொன்னார்.


சிறுவர்களுக்கு ஞானமா? அவர்களுக்கு இது புரியுமா? விளையாட்டுப்பருவத்தில் தேவாரமா? திருவாசகமா?
அய்யோ என்மகன் சாமியாராகிவிடுவானே! குடும்ப வாழ்க்கையில் பின்னாளில் நாட்டம் இருக்காதே! பள்ளிக்கூட கல்வியில் அவனுக்கு நாட்டம் இருக்காதே! வாழ்க்கையில் பணம் சம்பாதிக்கின்ற எண்ணம் வராதே! என்றெல்லாம் குழப்பிக்கொள்ளக்கூடாது.

இவையனைத்தும் அனுபவித்து அவற்றின் உண்மைத் தன்மையை உணர்ந்து பின் அவற்றையெல்லாம் கடந்து பெருநிலையடைந்தவர்கள்தான் ஞானிகள்அவர்களுக்கு இந்த பிரச்சனைகள் அனைத்தும் தெரியும். அவர்கள் அவரவர் தகுதிக்கேற்ப அருள் செய்வார்கள். பிள்ளைகளுக்கு இளமையில் பாலபருவத்தில் இவை புரியுமா? என கேட்கக்கூடாது. புரிகிறதோ புரியவில்லையோ ஞானிகள் நூல்களை ஞானிகளைப்பற்றிய செய்திகளை அவர்களது நினைவுகளில் பதியவைக்கவேண்டும். ஏனெனில்,


சித்தர் மொழிநூல்தனை தொட்டபோதே
சித்தரெல்லாம் ஒன்றென சேர்ந்து கொள்வார்

 என்பது ஞானிகள் வாக்காகும். எப்போதெல்லாம் பிள்ளைகள் ஞானிகள் நாமம் சொல்கின்றார்களோ, எப்போதெல்லாம் ஞானிகள் நூலினை தொடுகிறார்களோ எப்போதெல்லாம் ஞானிகள் நூலினை வாசிக்கின்றார்களோ எப்போதெல்லாம் ஞானிகளைப்பற்றி பேசுகிறார்களோ எப்போதெல்லாம் ஞானிகளைப்பற்றி சிந்திக்கின்றார்களோ அப்போதெல்லாம் எங்கும் வியாபித்து உள்ள ஞானிகள் அழைக்க அக்கணமே வந்துஅஞ்சேல் மகனே! யாமிருக்க பயம் ஏன்?” என ஓடிவந்து அருள்செய்வதினால் பால பருவப்பிள்ளைகள் சித்தர் நூல்களை படித்தாலும், தொட்டாலும், கேட்டாலும் ஞானிகளின்  ஆசியைப்பெற்று வாழ்வில் பலப்பல முன்னேற்றங்களை அடைவார்கள்  என்பது எங்களது அனுபவமாகும்.


கல்வி கற்பது கண்டிப்பாக வேண்டும். அதுவும் கற்கவேண்டிய பருவத்திலேயே கற்க வேண்டியதை கற்றுக் கொள்ள வேண்டும். இதன் அவசியத்தைத்தான் பல ஞானிகளும், முனிவர்களும் பல நூல்கள் வாயிலாக வலியுறுத்திக் கூறுகிறார்கள்.

யாம் ஓதிய கல்வியும், எம் அறிவும்
தாமே பெற, வேலவர் தந்ததனால்
பூ மேல் மயல் போய் அறம் மெய்ப் புணர்வீர்
நாமேல் நடவீர், நடவீர் இனியே.
-கந்தர் அநுபூதி- அருணகிரிநாதர்

நான்உரைக்கும் வார்த்தைஎலாம் நாயகன்தன் வார்த்தை...
- திருஅருட்பா - இராமலிங்கசுவாமிகள்.

ஒருவன் இகலோக கல்வியான ஏட்டுக்கல்வியாக இருந்தாலும் பரலோக ஞானக்கல்வியாக இருந்தாலும் இளமையிலேயே கற்க வேண்டும். அவன் இளமையில் ஞானத்திற்கான அறிவை அவனுக்கு புரிந்தாலும் புரியாவிட்டாலும் கற்றால்தான் பின்னாளில் ஆசான் அருள் செய்ய முற்படும்போது அதற்குண்டான பரிபக்குவத்தில் இருக்க முடியும். அவ்வாறின்றி அவன் கற்க மறந்தால், அருள் செய்தாலும் ஆசானின் அருளை இன்னதென்று உணர முடியாமல் போய்விடும்.  கிடைக்கக்கூடிய அரிய வாய்ப்பை இழந்துவிடுவான்.

ஆகவே  காலமுள்ளபோதே கற்க வேண்டியவற்றை கற்க வேண்டும். பிறகு பார்த்துக்கொள்ளலாம் என விட்டுவிடக் கூடாது என்பதை உணர்த்தவே மகான் ஒளவையார் இளமையில் கல் எனக் கூறுகிறார்.

குறள் 391:
கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.

மு.வரதராசனார் உரை:
கல்வி கற்க நல்ல நூல்களைக் குற்றமறக் கற்க வேண்டும், அவ்வாறு கற்ற பிறகு, கற்ற கல்விக்கு தக்கவாறு நெறியில் நிற்க வேண்டும்.

குறள் 400:
கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை.

மு.வரதராசனார் உரை:
ஒருவனுக்கு அழிவு இல்லாத சிறந்த செல்வம் கல்வியே ஆகும், கல்வியைத் தவிர மற்றப் பொருள்கள் (அத்தகைய சிறப்புடைய) செல்வம் அல்ல.


இதை எமக்கு கற்றுக்கொடுத்த குருநாதர் ஆறுமுக அரங்கமகாதேசிக சுவாமிகள் அவர்களின் பொற்திருவடிகள் சரணம் சரணம்!!


 https://www.facebook.com/MahanArumugaArangar/