Contact தொடர்பு

உலகமக்கள் நன்மைகருதி சித்தர் சுவடிகள்

Friday, 22 March 2019

மகான் ஆறுமுக அரங்கர் அருளுரைகள் - பாவம் தீர


பாவம் தீராமல் வாசி நெறி பற்றி நாம் அறிய முடியாது. வேண்டுமானால் பொங்கல், புளியோதரை வைத்து பூஜை செய்து கொண்டிருக்கலாம். பொங்கல், புளியோதரை வைத்து பூஜை செய்வதெல்லாம் ஏதோ மன ஆறுதலே தவிர, அது பிறவித்துன்பத்தை ஒழிக்க முடியாது. இது பற்றிக் கேட்டால் நீங்கள் என்ன நாத்திகவாதியா என்று கேட்பார்கள்? அப்போ பாவத்தை ஒழிப்பதற்கு என்ன செய்ய வேண்டும்?

தான் என்ற கொடும்பாவம் தீர்க்கும் ஆசான்
தர்மத்தின் வழிசொல்லிக் கருணை வைப்பான்
ஊன் என்ற மந்திரமே உபதேசித்து
உண்மையுடன் சுழிமுனையிலே இருக்கும் என்று
கோன் என்ற சிவரூபம் கண்ணில் காட்டி
கோபமென்ற முனைபோக்கி ஆசை போக்கி
நான் என்ற ஆணவங்கள் தன்னைப்போக்கி
நாட்டுவார் குருநாதன் மோட்சந் தானே.
- மகான் கொங்கண மகரிஷி - 12.

தானென்ற கொடும்பாவம் தீர்க்கும் ஆசான் - கொடும் பாவம் இருக்கும் வரையில் எதை எடுத்தாலும் சந்தேகம் வரும். இந்த கருத்தே உங்களுக்கு சந்தேகமாக இருக்கும்.

மோட்சம் தருபவன் ஆசான்தான். மனிதன்தான் தெய்வமாகிறான். மனிதன் நிலை உயர்ந்தால் தெய்வமாகிறான். மற்றதெல்லாம் தெய்வம் இல்லையென்று உணர்கின்ற பரிபக்குவம் எவருக்கு உண்டோ அவர்தான் ஞானியாகின்றான். இந்த உலகத்தில் தோற்றமாகின்ற தெய்வங்களெல்லாம் மேலான ஒரு பொருள் உண்டு. அதை அறிகின்ற மக்கள்தான் ஞானியாக முடியும்.

நட்டகல்லைத் தெய்வமென்று நாலுபுட்பஞ் சாத்தியே
சுற்றிவந்து முணமுணென்று சொல்லுமந்திர மேதடா
நட்டகல்லும் பேசுமோ நாதனுள்ளி ருக்கையில்
சுட்டசட்டி சட்டுவங் கறிச்சுவைய றியுமோ.
- மகான் சிவவாக்கியர் - கவி எண் 520.

மாபெரும் யோகிகளுக்கு, ஊழ்வினை அற்றவர்களுக்கு, பண்புள்ள மக்களுக்கு, சிறந்த அறிவாற்றல் உள்ள மக்களுக்குத்தான் இதை சொல்ல முடியும். இதை மற்றவர்களுக்கு சொல்ல முடியாது.

இதை ஆசான் சிவவாக்கியர் சொல்வார்,
கோயில்பள்ளி ஏதடா குறித்துநின்ற தேதடா
வாயினால் தொழுது நின்ற மந்திரங்க ளேதடா
ஞானமான பள்ளியில் நன்மையாய் வணங்கினால்
காயமான பள்ளியிற் காணலா மிறையையே.
- மகான் சிவவாக்கியர் பாடல்கள் - கவி எண் 186.

ஞானமான பள்ளி எது? எந்த மந்திரம் சொன்னால் என்ன ஆகும்? காற்று போனால் மந்திரம் போச்சு.ஞானமான பள்ளி என்பது புருவமத்தி. இங்கே இடகலை என்று சொல்லப்பட்டது பெண் கலை. வலது கலை ஆண் கலை அல்லது சூரியகலை. இரண்டையும் எங்கே சேர்க்க வேண்டும்? புருவ மத்தியில் சேர்க்க வேண்டும்.

தத்துவப் பேயோடே தலையடித்துக் கொள்ளாமல்
வைத்தவருண் மோன வள்ளலையே - நித்தமன்பு
பூணக் கருது நெஞ்சு; போற்றக் கரமெழும்பும்;
காணத் துடிக்குமிரு கண்.
- மகான் தாயுமானவர் - உடல் பொய்யுறவு - கவி எண் 29.

அகத்தியர் தத்துவம் முந்நூறு என்ற ஒரு நூல் உள்ளது. அதை பூரணமாக படிப்பதென்றால், படித்து அதன் பொருளை அறிவதென்றால், சுமார் பதினான்கு ஆண்டுகள் ஆகும். இந்த பதினான்கு ஆண்டுகள் என்ன செய்ய வேண்டும்?

மகான் தாயுமானசுவாமிகள் வகுத்தது போல், எவனொருவன் உண்மைப் பொருள் உணர்ந்தானோ, அந்த அகார உகார இரகசியத்தை அறிந்தானோ, அவன் பாதத்தைத் தொடர்ந்து பூசித்தால் அது போதும். தத்துவத்தை படித்து காலத்தை வீணாக்காதே!


உண்மை ஆன்மீகத்தை அறிய ஓங்காரக்குடிலில் வீற்றிருக்கும் முருகப்பெருமானின் அவதாரம் சற்குரு தவத்திரு ஆறுமுக அரங்கமாதேசிக சுவாமிகள் அவர்களிடம் திருவடி பணிந்து சரணடையுங்கள்!

மகான் ஆறுமுக அரங்கர் அருளுரைகள் -வாசி நெறி




வாசி நெறி அறியாத மக்களுக்கு ஞானம் சித்திக்காது என்பது தத்துவம். அப்போது வாசி நெறி என்பது என்ன? இந்த நுரையீரலில் நிறுத்துகின்ற காற்று வாசி நெறியாக இருக்க முடியாது. அப்போ நாசி வழியாகத்தான் போக வேண்டும், வேறு வழி இல்லை.

அற்பமா மூட ரறியாமல் யோகம்
சொற்பமா யெண்ணிச் செய்தே மரித்தார்
கற்பமில் லாட்டால் காணுமோ ஞானம்
அற்பர்செய் யோகம் அழிம்பிது பாரே.
- மகான் சட்டமுனிவர் அருளிய குரு சூத்திரம் 21 - கவி எண் 17.

ஆசான் இதை வகுத்து தர வேண்டும். எவனொருவன் மூச்சுக்காற்றை அறியாமல், எத்தனை பக்தி செலுத்தினாலும், அவனுக்கு பிறவி உண்டு. அவன் மீண்டும் பிறப்பான். பிறவித்துன்பம் அற்றுப் போக வேண்டுமென்றால், அவன் வாசி நெறியைக் கற்று அறிய வேண்டும். அதற்குத் தானே சன்மார்க்க சங்கத்தை சார சொல்லியிருக்கின்றோம்.

வாசிப் பழக்க மறியவே ணுமற்று
மண்டல வீடுகள் கட்டவேணும்
நாசி வழிக்கொண்டு யோகமும் வாசியும்
நாட்டத்தைப் பாரடி வாலைப்பெண்ணே.
- மகான் கொங்கணர் - வாலைக்கும்மி - கவி எண் 27.

எத்தனை பக்தி செலுத்தினாலும் வாசிப்பழக்கம் அறிய வேண்டும். இந்த மூச்சுக்காற்றைப் பற்றி அறிந்திருக்க வேண்டும். மண்டல வீடுகள் என்பது ஆதித்த மண்டலம், அக்கினி மண்டலம், சந்திர மண்டலம் ஆகிய மூன்று மண்டலங்கள்.

நுரையீரல் வழியே சென்று வருகின்ற மூச்சுக்காற்று மும்மண்டலத்தையும் கோர்த்து வராது. வயிற்றிலே பழைய உணவு இல்லாமல், மலச்சிக்கல் இல்லாமலிருந்து, வினாத்தண்டு நிமிர்ந்திருந்து எல்லா மகான்களையும் உள்ளம் உருக பூஜித்து அடியேன் வாசியோடு வாசியாக கலக்க வேண்டுமென்று கேட்டு வாசியை ஸ்தம்பித்து நிறுத்தி, அந்தக் காற்றை கண்ட ஸ்தானத்தில் இழுக்கவேண்டும்.

அதற்கு உகாரம் என்று பெயர், வெளிக்காற்றுக்கு அகாரம் என்று பெயர். இந்த அகார உகாரத்தையும் புருவமத்தியில் ஸ்தம்பிப்பார்கள். அப்படி ஸ்தம்பித்தால் ஆதித்த மண்டலம், அக்கினி மண்டலம், சந்திர மண்டலம் இந்த மூன்று மண்டலங்களும் ஒரு அடுக்குக்கு வரும். இது தத்துவம். இந்த காற்றே மும்மண்டலத்தையும் கோர்க்கின்ற காற்றாகும்.

உண்மை ஆன்மீகத்தை அறிய ஓங்காரக்குடிலில் வீற்றிருக்கும் முருகப்பெருமானின் அவதாரம் சற்குரு தவத்திரு ஆறுமுக அரங்கமாதேசிக சுவாமிகள் அவர்களிடம் திருவடி பணிந்து சரணடையுங்கள்!

குரு என்றால் யார்? குரு வழிபாடு என்றால் என்ன?


திருச்சி மாவட்டம், துறையூர், ஓங்காரக்குடிலாசான், சிவராஜயோகி, பரமானந்த சதாசிவ சற்குரு தவத்திரு ஆறுமுக அரங்கமகாதேசிகர் சுவாமிகள் அவர்கள்

கருணை கொண்டு 09.06.2011 அன்று அருளிய ஆன்மீக உபதேசப் பேட்டி பேட்டி கண்டவர் - திரைப்பட இயக்குநர் திரு. யார் கண்ணன்

யாரொருவன் காமத்தை வென்றானோ, அவன்தான் குரு. காமம் என்பதற்கு காரணம் மும்மலக்குற்றம். மல ஜல சுக்கிலம் அல்லது ஆணவம், கன்மம், மாயை என்று சொல்வார்கள். ஆணவம், கன்மம், மாயை என்றால் புரியாது. ஆண்களுக்கு மல, ஜல, சுக்கிலம். பெண்களுக்கு மல, ஜல, சுரோணிதம். இந்த மூன்றுதான் மும்மலக்குற்றம்.

மும்மலக்குற்றம்தான் ஒரு மனிதனுக்கு மாயையை உண்டு பண்ணும். இதை ஜெயிக்க வேண்டும். அதை எப்படி ஞானிகள் செய்கிறார்களென்றால் உடம்பைப் பற்றி அறிவாங்க, உடம்பு முன்னே வந்ததா? உயிர் முன்னே வந்ததா? என்று கேட்பார்கள்.

உடம்பும், உயிரும் சேர்ந்துதான் வந்தது. எப்படி வந்தது என்று கேட்டான். ஒரு பெண்ணோடு ஆண் கூட நினைக்கும்போது சிந்தனையாக இருந்தான். அப்படி கூடும்போது சுக்கில சுரோணிதமாக மாறுவான். சுக்கில சுரோணிதமாக மாறும்போது பத்து மாதம் தீட்டு வெளியாகாமல் இந்த கரு உற்பத்தியாகும். கரு உற்பத்தியானவுடன் இந்த உடம்பு என்ன செய்யும்?

இந்த தேகம் அசுத்த தேகம், பத்து மாதம் தீட்டும் அசுத்தம், சுக்கிலமும் அசுத்தம். பெண்ணுடலின் சுரோணிதமும் அசுத்தம். இதன் காரணமாகத்தான் மாசு இருக்கும், மனமாய்கை இருக்கும்.

இந்த மாய்கையை வெல்வதற்கு ஒரு உபாயம் இருக்கிறது. எப்படி வெல்கிறார்கள் என்று கேட்டால், இடது பக்கம் வருகின்ற சந்திர கலையையும், வலது பக்கம் வருகின்ற சூரிய கலையையும் சேர்த்து புருவ மத்தியில் செலுத்துகிறார்கள். அப்படி செலுத்தினால் உள்ளே உடம்பில் கனல் ஏறும். உள்ளே கனல் ஏற ஏற ஏற இந்த மும்மலக் குற்றங்களெல்லாம் விலகிப் போகும்.

மும்மலக் குற்றம் விலகினால் மனதில் தெளிவான அறிவு உண்டாகும். தெளிவான அறிவு உண்டானால், அவனுக்கு நரை திரை இருக்காது. அவர்கள்தான் ஐந்தொழிலையும் செய்வார்கள். படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஐந்தொழில் செய்யும் வல்லமை அவர்களுக்கு உண்டு. அவர்களைத்தான் வணங்க வேண்டும். அவர்கள் யாரென்றால் திருஞானசம்பந்தன், திருமூலதேவன், காலாங்கிநாதர், போகமகாரிஷி, அருணகிரிநாதர், அகத்தீசர், ஆசான் ஞானபண்டிதன். அவர்தான் இந்த உண்மையைக் கண்டுபிடித்தார்.

ஏன் மனிதன் சாக வேண்டும்? சாவதற்கு உடல் குற்றமா? உயிர் குற்றமா? உடல் குற்றமும், உயிர்குற்றமும் சேரும்போது மனமாசை உண்டுபண்ணும். மாய்கையை உண்டு பண்ணும். அப்போ மும்மலக் குற்றத்தை நீக்கினவன் எவனோ? அவன்தான் ஞானி. அப்படி மும்மலக்குற்றத்தை நீக்கிய முதல் தலைவன் ஆசான் சுப்பிரமணியர்தான்.

ஆசான் சுப்ரமணியருடைய சீடர்தான் அகத்தீசர். அவர்தான் ஊர்ஊராக சென்று ஒன்பது கோடி மானுடர்களை ஞானியாக்கியவர். அவர்தான் உலகத்திற்கே தலைவர். அவருடைய ஆசியில்லாமல் ஒருவரும் கடைத்தேற முடியாது. ஆக குரு என்று சொன்னாலே அவன் குற்றமற்றவன். மும்மலக் குற்றம் அற்ற உடனேயே காமம் அற்றுப்போகும். காமம் அற்றவுடனேயே பசியற்றுப் போகும். பசியற்றவுடன் நரை திரை மூப்பு இருக்காது, பரிணாம வளர்ச்சி இருக்காது. பரிணாம வளர்ச்சிக்குக் காரணம் மும்மலக் குற்றமே.

மும்மலக்குற்றமுள்ள தேகத்திற்கு பரிணாம வளர்ச்சி உண்டு. ஆனால் இந்த உடம்புக்குள்ளேயே சூட்சும தேகம் ஒன்று இருக்கிறது. அந்த தேகத்திற்கு நரை திரை மூப்பு கிடையாது. அவன் குரு. அப்படிப்பட்ட குருநாதரை வணங்கனும். எப்படி வணங்கவேண்டும்?

திருஞானசம்பந்தரை வணங்கினாலும் சரி! ஆசான் அருணகிரிநாதரை வணங்கினாலும் சரி! ஆசான் பதஞ்சலி முனிவரை வணங்கினாலும் சரி! எல்லாமே ஒரே தன்மையுள்ளவர்கள்தான். இத்தனைபேரும் எப்படி முன்னேறினார்கள்? அத்தனைபேரும் ஆன்மாவைப் பற்றி அறிந்து கொண்டார்கள். ஆன்மா இந்த உடம்பில் இருக்கும்போது, ஏன் மாசுபட்டதென்றால், உடல் மாசு காரணமாக உயிர் மாசு வந்தது.

உடல் மாசு என்றால் என்னவென்று கேட்டான்? மல, ஜல, சுக்கிலம். மல, ஜல, சுக்கிலம் எப்படி வந்தது? பசி. பசிக்கு என்ன காரணமென்று கேட்டான்? மூச்சுக்காற்றின் இயக்கம். நாளொன்றுக்கு 21,600 முறை வந்து போகின்ற மூச்சுக்காற்று. இந்த மூச்சுக்காற்றே பசிக்குக் காரணம். பசிக்கு உணவு தந்தால் அது சத்து அசத்தைப் பிரிக்கும். அசத்தாகிய மல, ஜலத்தை வெளியே தள்ளும். பிறகு 72000 நாடி நரம்புகளை முறுக்கேற்றும். அப்படி முறுக்கேற்றினால் மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐம்புலன்களும் வேலை செய்யும்.

பிறகு மனம், புத்தி, சித்தம், அகங்காரம் ஆகிய அந்தகரணங்களும் வேலை செய்யும். ஆக பொறி ஐந்து, புலன் ஐந்து இதெல்லாம் தத்துவங்கள். இந்த உடம்பு என்பது காமதேகம். இந்த காமதேகத்திற்கு காரணம் மும்மலக் குற்றம்தான். மும்மலக்குற்றத்தை ஆசான் துணை கொண்டு மூலக்கனலை எழுப்பினால், மும்மலக்குற்றம் அற்றுப்போகும். மும்மலக்குற்றம் அற்றுப்போகும்போது அவன் மரணமிலாப் பெருவாடிநவை பெறுவான். அப்படி பெற்றவன்தான் குரு. இது போன்ற வாய்ப்பை பெற்றவர்கள் நவகோடி சித்தர்கள். அதில் ஆசான் அகத்தீசர்தான் முதன்மையானவர். இதற்கெல்லாம் தலைவன் ஆசான் ஞானபண்டிதன். உலகத்திற்கே தலைவன் முருகன்தான். ஆசான் ஞானபண்டிதன் ஆசியில்லாமல் முடியாது. முருகா என்று சொல்வதற்கே மூன்று கோடி தவம் செய்திருக்க வேண்டும்.

முருகா எனவோர்தர மோதடியார்
முடிமேல் இணைத்தாள் அருள்வோனே

என்று சொல்கிறார் ஆசான் அருணகிரிநாதர்.

முதற்தலைவன் சுப்ரமணியர். அவரை வணங்கினாலும் குருவின் ஆசியில்லாமல் ஒருவன் கடைத்தேற முடியாது. ஆக குரு என்று சொல்லப்பட்டவன் மும்மலக்குற்றம் அற்றவன். பொருள் பற்று அற்றவன், ஜாதி துவேசம் அற்றவன். உண்மைப் பொருள் தெரிந்தவன். எதையும் செய்வான். ஆணைப் பெண்ணாக்குவான். பெண்ணை ஆணாக்குவான். எல்லா வல்லமையும் அவர்களுக்கு உண்டு. அவர்கள்தான் குரு.

ஞானத்திருவடி- வைகாசி 2013

“ஓம் சரவண ஜோதியே நமோ நம”

முருகா என்றால்:

முருகப்பெருமான்தான் ஞானத்தலைவன் என்பதை அறியலாம். முருகனது ஆசி பெற்றிட உகந்த வழியும் புலப்படும். தினசரி மறவாமல் அதிகாலை 4.30 மணிக்குள் எழுந்து முகம் கழுவி காலைக் கடன்களை முடித்துவிட்டு முடிந்தால் குளித்துவிட்டும் இயலாவிட்டாலும் பரவாயில்லை அவரவர் வீட்டினிலே பயபக்தியுடன் வீழ்ந்து வணங்கி ஒரு அடிக்கு மிகாத உயரத்திலே ஒரு நெய் தீபமோ அல்லது நல்லெண்ணெய் தீபமோ ஏற்றி வைக்க வேண்டும்.

தீபம் ஏற்றும்போதே 
“ஓம் சரவண ஜோதியே நமோ நம”
“ஓம் சரவண ஜோதியே நமோ நம”
“ஓம் சரவண ஜோதியே நமோ நம” என்று
தொடர்ந்து ஆறுமுறையேனும் கூறி தீபம் ஏற்ற வேண்டும்.

தீபம் ஏற்றி தீபத்தின் முன் தீபத்தினிலே அருள்மிகு ஆறுமுகனான முருகப்பெருமானே தோன்றி ஜோதி வடிவமெடுத்து நமக்கு விளங்குவதாய் எண்ணி ஜோதிதனை முருகப்பெருமானாய் பாவித்து வீழ்ந்து வணங்கி பின் எழுந்து சரவண ஜோதியின் முன் அமர்ந்து பயபக்தி விசுவாசத்துடன் பணிந்து ஜோதியே முருகனின் தோற்றமாய் தம்முன் முருகன் தோன்றி அமர்ந்திருப்பதாக பாவித்து,
“ஓம் சரவண ஜோதியே நமோ நம”ˆ
“ஓம் சரவண ஜோதியே நமோ நம”
என்று மனம் ஒன்றி தொடர்ந்து 1008 முறைகள் கூறிவர வேண்டும்.

இவ்விதம் நாள் ஒன்றுக்கு குறைந்தது 1008 முறையேனும் மந்திரம்தனை ஜோதியேற்றி சரவணஜோதி வழிபாடுதனை பக்தியுடன் செய்து வரவர, செய்கின்றோர்க்கு உண்டான துன்பங்கள் நீங்கி அவர் வாழ்வினிலே அவர் தம்மைப் பற்றிய பொருளாதார பிரச்சனைகள் நீங்கி வாழ்வின் வறுமை ஒழியும். வழிபாடு செய்வோர் அசைவ பழக்கம் உள்ளவராக இருந்தால், அவர் உண்ணும் உணவு உயிர்க்கொலை செய்த பாவத்தால் வந்தது, இது பாவச்செயலாகும் என்று உணர்ந்து அசைவ பழக்கத்திலிருந்து விடுபடுவார், சுத்த சைவ உணவு பழக்கத்தை மேற்கொள்வார், தீய நட்புகள் விலகி தகுதியுள்ள நட்புகள் அமையப் பெறுவார்கள், பூஜையை தொடர்ந்து செய்திட ஏதுவான சுகாதாரமான அமைதியான சுற்றுபுறமும் பூஜைக்கு ஏற்ற தக்க சூழ்நிலையும் அமைந்து மனம் ஒன்றி பூஜை செய்திட ஏதுவான சூழ்நிலை அமையும்.

தொடர்ந்து சரவண ஜோதி பூஜைதனை மந்திர ஜெபம் செய்யசெய்ய யோக அறிவு உண்டாகி யோகத்தினை செய்வதற்கான தகுதிகளும் பெருகி யோகத்திற்கான செய்முறைகளும் முருகன் அருளால் அவர் தமக்கு உணர்த்தப்படுவதோடு அவரது புண்ணியபலமும் ஆன்மபலமும் பெருகி அற்புதமான சுகமான வாழ்வைப் பெற்று உயரலாம் என்பதை அறிவார்கள்.

Friday, 15 March 2019

அகத்தியப் பெருமான் அருள் வாக்கு

அகத்தியப் பெருமான் அருள் வாக்கு



ஒரு ஆத்மா, உடலோடு இருந்தாலும், உடலற்று இருந்தாலும், அதனுடன் இருப்பது பாவங்களும், புண்ணியங்களும்.

எனவே, ஆத்மா நித்திய சந்தோஷமாக, நித்திய நிம்மதியாக, இருக்கவேண்டும் என்றால், புண்ணியம், புண்ணியம், புண்ணியம், புண்ணியம், புண்ணியம், சதா சர்வகாலம் மனிதன் புண்ணியத்தை தேடித்தான் ஆகவேண்டும்.

ஒரு விலங்கு புண்ணியத்தை சேர்க்க இயலாது. பாவத்தையும் செய்ய இயலாது. அது செய்த பாவத்தை அந்த விலங்கு உடலுக்குள் அந்த ஆத்மா புகுந்து செயல்பட்டு, அந்த விலங்காகவே வாழ்ந்து, அந்த பிறவியை முடிக்க வேண்டும் என்பது விதியின் கட்டளை. ஆனால் மனிதன் நினைத்தால், புண்ணியத்தை சேர்த்துக் கொள்ள முடியும். இந்த சுதந்திரம் மனிதனுக்கு இறைவனால் கொடுக்கப்பட்டிருக்கிறது. கொடுத்த சுதந்திரத்தை மனிதன் என்றுமே சரியாக பயன்படுத்தியதாக சரித்திரமில்லை. சரியாக பயன்படுத்தினால் இறைவனருள் தொலைவில் இல்லை. ஆசிகள்.

-சித்தன் அருள்