Contact தொடர்பு

உலகமக்கள் நன்மைகருதி சித்தர் சுவடிகள்

Friday, 22 March 2019

மகான் ஆறுமுக அரங்கர் அருளுரைகள் -வாசி நெறி




வாசி நெறி அறியாத மக்களுக்கு ஞானம் சித்திக்காது என்பது தத்துவம். அப்போது வாசி நெறி என்பது என்ன? இந்த நுரையீரலில் நிறுத்துகின்ற காற்று வாசி நெறியாக இருக்க முடியாது. அப்போ நாசி வழியாகத்தான் போக வேண்டும், வேறு வழி இல்லை.

அற்பமா மூட ரறியாமல் யோகம்
சொற்பமா யெண்ணிச் செய்தே மரித்தார்
கற்பமில் லாட்டால் காணுமோ ஞானம்
அற்பர்செய் யோகம் அழிம்பிது பாரே.
- மகான் சட்டமுனிவர் அருளிய குரு சூத்திரம் 21 - கவி எண் 17.

ஆசான் இதை வகுத்து தர வேண்டும். எவனொருவன் மூச்சுக்காற்றை அறியாமல், எத்தனை பக்தி செலுத்தினாலும், அவனுக்கு பிறவி உண்டு. அவன் மீண்டும் பிறப்பான். பிறவித்துன்பம் அற்றுப் போக வேண்டுமென்றால், அவன் வாசி நெறியைக் கற்று அறிய வேண்டும். அதற்குத் தானே சன்மார்க்க சங்கத்தை சார சொல்லியிருக்கின்றோம்.

வாசிப் பழக்க மறியவே ணுமற்று
மண்டல வீடுகள் கட்டவேணும்
நாசி வழிக்கொண்டு யோகமும் வாசியும்
நாட்டத்தைப் பாரடி வாலைப்பெண்ணே.
- மகான் கொங்கணர் - வாலைக்கும்மி - கவி எண் 27.

எத்தனை பக்தி செலுத்தினாலும் வாசிப்பழக்கம் அறிய வேண்டும். இந்த மூச்சுக்காற்றைப் பற்றி அறிந்திருக்க வேண்டும். மண்டல வீடுகள் என்பது ஆதித்த மண்டலம், அக்கினி மண்டலம், சந்திர மண்டலம் ஆகிய மூன்று மண்டலங்கள்.

நுரையீரல் வழியே சென்று வருகின்ற மூச்சுக்காற்று மும்மண்டலத்தையும் கோர்த்து வராது. வயிற்றிலே பழைய உணவு இல்லாமல், மலச்சிக்கல் இல்லாமலிருந்து, வினாத்தண்டு நிமிர்ந்திருந்து எல்லா மகான்களையும் உள்ளம் உருக பூஜித்து அடியேன் வாசியோடு வாசியாக கலக்க வேண்டுமென்று கேட்டு வாசியை ஸ்தம்பித்து நிறுத்தி, அந்தக் காற்றை கண்ட ஸ்தானத்தில் இழுக்கவேண்டும்.

அதற்கு உகாரம் என்று பெயர், வெளிக்காற்றுக்கு அகாரம் என்று பெயர். இந்த அகார உகாரத்தையும் புருவமத்தியில் ஸ்தம்பிப்பார்கள். அப்படி ஸ்தம்பித்தால் ஆதித்த மண்டலம், அக்கினி மண்டலம், சந்திர மண்டலம் இந்த மூன்று மண்டலங்களும் ஒரு அடுக்குக்கு வரும். இது தத்துவம். இந்த காற்றே மும்மண்டலத்தையும் கோர்க்கின்ற காற்றாகும்.

உண்மை ஆன்மீகத்தை அறிய ஓங்காரக்குடிலில் வீற்றிருக்கும் முருகப்பெருமானின் அவதாரம் சற்குரு தவத்திரு ஆறுமுக அரங்கமாதேசிக சுவாமிகள் அவர்களிடம் திருவடி பணிந்து சரணடையுங்கள்!

No comments:

Post a Comment