Contact தொடர்பு

உலகமக்கள் நன்மைகருதி சித்தர் சுவடிகள்

Thursday, 14 May 2020

முருகனது நாமங்கள் அவ்வளவு உயர்வானதா?


மகான் ஆறுமுக அரங்கர் அருளுரைகள்


முருகப்பெருமானை வணங்கி பூஜை செய்து ஆசி பெற்றிட்டால் :




எல்லா ஞானிகளுக்கும் மூத்தோனும் ஞானவர்க்கத்தின் தலைவனுமாகிய முருகப்பெருமானது நாமங்களை மனம் உருகிமுருகாஎன்றோ, “ஓம் முருகப்பெருமான் திருவடிகள் போற்றிஎன்றோ, ஓம் சரவண பவ”  என்றோ, “ஓம் சரவணஜோதியே நமோ நமஎன்றோ பூஜித்திட்டால்,  பூசிப்பவர் பஞ்சமா பாவியாகினும் சரி, அவனது பாவங்கள்  பொடியாகுவதோடு முருகன் நாமங்களை சொல்லிய அக்கணமே நவகோடி  சித்தரிஷி கணங்களின் பார்வைக்கும் அவன் ஆளாகி ஜென்மத்தைக் கடைத்தேற்றும் மார்க்கமதிலே வந்துவிடுவான்.


முருகனது நாமங்கள் அவ்வளவு உயர்வானதா? எனில் ஆம், முருகனது நாமங்களுக்கு மிஞ்சியது வேறெதுவும் இல்லை. ஏனெனில் மூத்தோன், ஞானத்தலைவன் முருகனது ஆசி பெற்றவர்களே பிரம்மனும், விஷ்ணுவும், ருத்ரனும், நவகோடி சித்தரிஷி கணங்களும், முப்பத்து முக்கோடி தேவரிஷி கணங்களும், சப்த ரிஷிகள், நவக்கிரக நாயகர்கள், நாற்பத்து எண்ணாயிரம்  ரிஷிமார்கள் இன்னும் அநேகம் அநேகம் கோடி தேவகணங்களும் முருகனது  அருள் பெற்றதால்தான் அந்தந்த பதவிகளைப் பெற்றார்கள்.


ஆயின்  முருகனது ஆசியே இந்தவிதமான உயர்வை தரும். ஆதலின் தலைவன்  முருகனது நாமத்தை சொன்னால் யாரடா அது? என் தலைவனை அழைப்பது  நாங்களெல்லாம் இருக்கின்றோம் உன்னை காக்க. எனவே தலைவன் முருகன்  வருமுன்னே கணப்பொழுதினிலே எல்லா சக்திகளும் தலைவனுக்கு முன்னே  உடன் விரைந்து அழைத்தோர் தம்மை சூழ்ந்து காத்தருளும். அப்பப்பா  அப்பப்பா என்னவென்று சொல்வது முருகன் ஆற்றலை, என்னவென்று  சொல்வது முருகன் பெருமையை. முருக நாமமே உயர் நாமம், அதற்கிணை இவ்வுலகினிலேயே, ஏன் இப்பிரபஞ்சத்திலேயே கிடையாது. இனியும் தோன்ற போவதும் இல்லை.


பிரணவத்தின் சூத்ரதாரியான முருகனே அனைத்திற்கும் ஆதாரமாகி இயக்கமும், ஒடுக்கமும் ஆகி எல்லா ஜீவர்களிடத்தும் கலந்து நின்று இயற்கையோடு இயற்கையாய் கலந்துவிட்ட படியினாலே தேவரிஷி கணங்களும், சர்வ சக்திகளும் மட்டுமல்ல, இயற்கை கடவுளால் படைக்கப்பட்ட அத்துணை உயிருள்ள ஜீவராசிகளும் ஆசிகளை வழங்கிடும் அவ்வளவு உயர்ந்த ஆற்றலுடைய முருகனின் நாமங்கள். ஏன் ஜடப்பொருள்கள் கூட உயிர்பெற்று இயங்கும்.


அற்புதமான சக்திகளை அருளவல்லதும், ஞானத்தை ஊட்ட வல்லதுமானதும், அனைத்தும் தரவல்லதும், ஏன் முருகனைப் போலவே ஆக்கி கொள்ளக் கூடிய வல்லமைகளையும் அந்த முருகனது நாமங்களே நமக்கு அருளுமென்றால் எப்பேர்ப்பட்ட ஆற்றலுடையது முருகனின் நாமங்கள்.


எல்லாம் வல்ல முருகனது நாமங்களை சொல்லி ஆசி பெற விரும்பினால்,  ஜீவதயவே வடிவான முருகனுக்கு பாத்திரமான உலக உயிர்களுக்கு துன்பம்  செய்யாது, உயிர்க்கொலை தவிர்த்து, புலால் மறுத்து, சுத்த சைவ உணவை மேற்கொள்ள வேண்டும்.  தினம் தினம் மறவாமல் காலை 10 நிமிடமும், மாலை 10 நிமிடமும், இரவு 10  நிமிடமும் முருகனது நாமங்களை சொல்லி பூஜை செய்திட வேண்டும்.


முருகனது ஜீவதயவு தோன்றுமிடங்களான உலக உயிர்கள் துன்பம் கண்டு இரங்கி இதம் புரிவதோடு மாதம் ஒருவருக்கேனும் பசித்த ஏழைகளுக்கு பசியாற்றுவிக்க வேண்டும் என்பதுவே முருகனது ஆசியைப் பெற முதன்மை தகுதிகளாகும்.
..................

முத்தர்கள் போற்றும் முருகப்பிரான் திருவடியை
நித்தமும் போற்றிட நினைத்தவை சித்தியே.

Friday, 28 February 2020

சரவண ஜோதி வழிபாடு







மக்களே இனிவரும் காலங்களிலே முருகப்பெருமானார் வெளிப்படும்  ஜோதியான சரவண ஜோதியினை ஒவ்வெருவர் வீட்டிலும் ஒரு  திருவிளக்கினை வைத்து அதில் நெய் அல்லது நல்லெண்ணை ஊற்றி அதை  தீபமேற்றி வழிபடல் வேண்டும்.

தீபம் ஏற்றும் போதுஓம் சரவண ஜோதியே நமோ நமஎனக்  கூறிக்கொண்டே தீபம் தனை ஏற்றிடல் வேண்டும். ஏற்றிய சரவண ஜோதியை பயபக்தி விசுவாசத்துடன் வணங்கி அச்சோதியிலே ஆசான் முதுபெரும்  தலைவன் ஆதிஞான பரப்பிரம்மம் முருகப்பெருமான் எழுந்தருளியுள்ளதாக  எண்ணி வழிபடல் வேண்டும்.
ஏற்றிய ஜோதியிலே முருகப்பெருமானே தோன்றியதாய் பாவித்து ஜோதியின் முன் அமர்ந்துஓம் சரவண ஜோதியே நமோ நமஎன்று குறைந்தது 108  முறையேனும் கூறிடல் வேண்டும். இப்படி காலை மாலை முடிந்தால் நள்ளிரவு  பன்னிரண்டு மணிக்கு ஒரு முறை என ஒரு நாளில் இரண்டு அல்லது மூன்று முறையேனும் வழிபடல் வேண்டும்.

ஆறுமுகனார் வெளிப்படும் சரவண ஜோதி வழிபாடு செய்துஓம் சரவண ஜோதியே நமோ நமஎன்ற மகா மந்திரத்தை ஜெபித்தால் வரும் நன்மைகள்.



1. வறுமையில்லா வாழ்வு அமையும்.
2. நோயற்ற வாழ்வு அமையும். 
3. குடும்பத்தில் ஒற்றுமையும், பண்புள்ள புத்திரபாக்கியமும் ஏற்படும்.
4. பிள்ளைகளுக்கு கல்வியில் தேர்ச்சியும், நல்ல வேலைவாய்ப்பும் அமையும்.
5. பிள்ளைகளுக்கு தகுதியுள்ள வரன் அமையும்.
6. உயிர்க்கொலை தவிர்த்து, புலால் மறுத்து சுத்த சைவநெறியை கடைப்பிடிக்கின்ற அறிவு வரும்.
7. பசித்த ஏழைகளுக்கு பசியாற்றுவிக்கின்ற எண்ணம் உண்டாகும்.
8. பிறரை அனுசரித்தல், மதிக்க கற்றுக்கொள்ளுதல், சகிப்பு தன்மை, விட்டுக் கொடுத்தல், நம்மை சார்ந்தவர்கள் செய்திட்ட குற்றங்களை பொறுத்துக்  கொள்ளுதல்,  பொறுத்து மன்னித்தல், மறத்தல், மனம் விட்டு பரஸ்பரம்  பழகுதல், எதிலும்  பெருந்தன்மை ஆகிய நற்பண்புகள் உண்டாகும்.

பல்வாறாய் நன்மையே அளிக்கவல்ல ஆறுமுகனார் வெளிப்படும் ஆறுமுக  ஜோதியாம் சரவண ஜோதியினை ஏற்றி சித்தர் பூசைகளை மறவாது  தொடர்ந்து சலிப்பின்றி செய்திட செய்திட அற்புதமாய் பல மாற்றங்களை வாழ்வில் காண்பர்.

- மகான் ஆறுமுக அரங்கமகாதேசிகர்


Monday, 24 February 2020

இல்லறம்-துறவறம்

மகான் அரங்கர் அருளுரைகள்


முருகா என்றால்,



இல்லறம் என்பது தாய், தந்தை, மனைவி மக்கள், தம்மை சார்ந்தோர்க்கும் பாதுகாப்பாய் இருப்பதோடு வருகின்ற விருந்தை உபசரித்தல் மற்றும் நட்பை  பெருக்கிக் கொள்ளுதல், நெறிக்கு உட்பட்டு பொருள் சேர்த்தல், காலை  மாலை ஒரு ஐந்து நிமிடமேனும் ஞானத்தலைவன் முருகப்பெருமான் திருவடியைப் பற்றி பூசித்தல், உயிர்க்கொலை தவிர்த்து புலால் மறுத்து ஜீவகாருண்யநெறி நின்று சைவத்தை மேற்கொள்ளுதல், முடிந்த அளவிற்கு பசியாற்றுவித்தல், வறியவர், சான்றோர், யோகி, ஞானிகளுக்கு உற்ற பாதுகாவலனாக இருத்தல் என இவையனைத்தும் இல்லற கடமைகள் என்றே அறியலாம்.



உலக மக்களோடு மக்களாக சார்ந்து இருத்தல் வேண்டும். மக்களோடு மக்களாக சார்ந்திருந்தாலும் சிந்தை மட்டும் அந்தரங்கத்திலே சதாசர்வ காலமும் இடைவிடாது சிந்தை முழுவதும் ஞானபண்டிதராம் முருகப்பெருமான் திருவடி மீதே வைத்து தமக்கு விதிக்கப்பட்ட கடமைகளை எவ்வித குறைபாடுமின்றி செய்து முடிப்பதே துறவாகும் என்றும் அறிவான்.


மக்களோடு மக்களாயும் வாழ்ந்து அகத்தே தனித்தும் வாழ்வதே துறவாகும் என்றும் அறிவான். அதைவிடுத்து மக்கள் துணையின்றி காட்டிற்கு சென்றோ தெருவில் சென்று பிச்சையெடுத்து வாழ்வதோ துறவு அகாது என்றும் உணர்வான்.


எந்த பிரதிபலனும் எதிர்பாராது உயர்ந்தோர், தாழ்ந்தோர் என்று பார்க்காமல் சாதி, இன, மொழி, சமய பேதாபேதமின்றி எல்லாவற்றிலும் சமமாய் நின்று தொண்டுகள்தனை மனிதசமுதாயத்திற்கும் பிற உயிர்களும் மகிழும் வண்ணம் செய்வதே பொதுசேவையாகும் என்பதை அறிவான்.


நாட்டுப்பற்றுடன் இருப்பதோடு, நாட்டுப்பற்றுள்ளோர்க்கு பாதுகாவலனாயும்  இருக்க வேண்டும். நாட்டின் நலனிற்கு ஊறு விளைவிக்கின்ற எவராயினும்  சரி, அவர்தம் குற்றத்தை ஆராய்ந்து அவர்தம் குற்றங்களுக்கு ஏற்ப  அவர்தம்மை கண்டித்து கயவர்களிடமிருந்து நாட்டைக் காப்பாற்றி, மக்கள்  அமைதியாக வாழ வழி செய்வதே அரசாட்சியாகும் என்பதையும் அறிவான்.  


மேலும் பொதுசேவை செய்கின்றவனும் அரசாட்சி செய்கின்றவனும், ஏன் இல்லறத்தானும், துறவறத்தானும், யாராயினும் சரி, அவரவர்க்கு உற்ற இல்லறம் சார்ந்திட்டு செயல்பட வேண்டுமே அன்றி பொல்லாத  காமுகனாய் இருக்கக் கூடாது, பொருள் வெறியனாக இருக்கக் கூடாது, எல்லோரையும் சமநோக்காக பார்க்க வேண்டும்.


அரசாட்சி செய்யும் நிலையில் உள்ளவர்கள் எந்த உணர்ச்சிகளுக்கும் மிகையாக ஆட்படாமல் எல்லாவிதத்திலும் பொறுப்புள்ளவனாகி அஞ்சாத நெஞ்சம் உடையவராயும், தயைசிந்தை மிக்கவராயும், நாட்டுப்பற்று மிக்கவராயும், சகிப்புத்தன்மை உடையவராயும், பிறர் தம்மை இகழ்ந்து பேசினாலும் பொறுத்துக் கொள்கின்ற பண்புடையவராயும், பிறர் கூறும் கருத்துக்களை பொறுமையுடன் கேட்டு தகுந்த கருத்துக்கள் நியாயமாக இருந்தால், நீதிக்கு உட்பட்டதாய் இருந்தால் அதற்கு தக்க மதிப்பை தருகின்றவராய் இருத்தல் வேண்டும்.


எந்த செயல்களிலும் உணர்ச்சி  வசப்படாமல் ஆழ்ந்து சிந்தித்து முடிவெடுக்க வேண்டும், தலைமை  தாங்குபவன் தன் அறிவை முழுமையாக நம்பாமல் முற்றுப்பெற்றோர்,  சான்றோர் என்றே நீதிநெறி வழுவாத சான்றோர்தம் ஆலோசனையைக் கேட்டு அவர்தம் சொல்லிற்கு கீழ்படிந்து தமக்குற்ற அரசை இறைவனது  அரசாய் எல்லாம்வல்ல ஆண்டவரின் அரசாய் மாற்றி சான்றோர் வழிநடத்தும்  அரசாய் நடத்திடல் வேண்டும். பழி வாங்கும் உணர்வு அவர்தம் உள்ளத்தே கடுகளவும் இருக்கக் கூடாது.


பிறர் தமக்கு செய்கின்ற இடர்களை, தமக்குற்ற  வினைக்குற்றமாய் ஏற்று பொறுத்துக் கொள்ள வேண்டுமே அன்றி இடருக்கு இடர் என்றே எக்காலத்திலும் செயல்படல் ஆகாது. மாற்றானையும் மதிக்கத் தெரிந்தவராய் இருந்திடல் அவசியம்.


எவராயினும் சரி, எந்தவித வாழ்க்கை முறை மேற்கொண்டவராயினும் சரி, அவர்கள் மேற்கொண்ட இல்லறம், துறவறம், பொதுசேவை, அரசாட்சி என அனைத்து வாழ்க்கை மேற்கொண்டவரும்,  சான்றோர்கள் துணைக்கொண்டே நடத்திட நலமாய் வாழலாம்.




தன் அறிவே பெரிது, தாமே மிக்க கற்றோன், தமக்கே மிகுந்த அனுபவம் உள்ளது, நமக்கு தெரிந்தது யாருக்கும் தெரியாது, எம்மைப் போல்  சிறந்தவர் வேறொருவர் இல்லை என்றெல்லாம் தம்மை, தமது அறிவை, தமது அனுபவத்தை, தமது கல்வியை வியந்து தமக்குத் தாமே பாராட்டி பிறர்தம்மை  மதியாது, சான்றோர் துணை நாடாது, தனித்து செயல்படுவானேயாயின் வாழ்வில் சரிவுகள் ஏற்படும்.


அதிலும் பொதுவாழ்வில் உள்ளவரோ, தானும் கெட்டு தம்மைச் சார்ந்த சமுதாயத்தையும் தவறான பாதையில் இட்டுச் செல்வார். அரசியலில் உள்ளவரோ அந்த நாட்டையே பாழ்படுத்தி மக்களுக்கு இடர்களையே பரிசாய்  தந்து மக்களின் மனவேதனைக்கு ஆளாகி பாவத்தினை சுமப்பார்.


ஆயின் எவ்வகையாலும் சான்றோர் துணையின்றி செயல்படுதல் தீமையே பயக்கும் என்றே உணர்ந்து முருகன் அடி தொழும் உத்தம சான்றோர் தம்மை நாடியே தன்னை ஒப்புவிப்பான் முருகனை வணங்கினோரெல்லாம்.


முருகனது ஆசியைப் பெற்றால் இல்லறமும், துறவறமும், பொதுசேவையும், அரசாட்சியும் என்றே அனைத்தையும் செம்மையாக வெற்றியுடன் செய்து முடிக்கலாம்.


நாம் மேற்கொள்ளும் அந்தரங்க பூஜைக்கும் (தனித்து செய்யும் பூஜை) அன்னதானத்திற்கும் நமக்கு உற்றவர்களாய் உள்ள மனைவி, மக்கள், சகோதரர், பெற்றோர், உற்றார், உறவினர், நண்பர்கள் எல்லாம் தடையாய் இருந்தாலும் சரி, உதவாவிட்டாலும் சரி முருகனை வணங்கிட வணங்கிடவே முருகன் அருள்கூடி நமது ஜென்மத்தைக் கடைத்தேற்றிட தேவையான பூஜைக்கும், தானதருமங்களிற்கும் நமக்கு உதவாது முரண்பட்ட அனைவரையும் அந்த ஞானத்தலைவன் முருகனே அவர்களுள் சார்ந்து அவர்களது மனதினை மாற்றி முரண்பட்டோரையும், முரண்பாடற்றவராய் மாற்றி உதவுபவர்களாக மாற்றித் தருவான் முருகன் என்பதை உணர்வான்.


முருகனைப் போற்றுவோம்
எதிலும் வெற்றி பெறுவோம்.

முருகனைப் போற்றுவோம் இல்லறத்தையும் துறவறத்தையும்
செம்மையாக நடத்தி ஜென்மத்தைக் கடைத்தேற்றுவோம்.  

Monday, 11 November 2019

வேள்வி, யாகம் என்பதே ஜீவதயவை பெருக்குவது ஒன்று மட்டுமேயாகும்


முருகா என்றால்,



பெறுதற்கரிய மானுடதேகம் பெற்றவர்கள்தான் பிற உயிர்கள் படுகின்ற துன்பத்தை உணரவும், அவ்வுயிர்களுக்கு உதவி செய்து அவ்வுயிர்படும் துன்பத்தை நீக்குகின்ற வல்லமையையும் பெற்றது என்பதை அறியலாம்.


பிற உயிர்கள் அஞ்சி நடுங்கும்படி செய்கின்றவனுக்கு, தான் அஞ்சி நடுங்கும்படியான சூழ்நிலை வரும் என்பதை அறியலாம்.


ஒரு உயிர், கொலை செய்யப்படும்போது அவ்வுயிர் படுகின்ற துன்பத்தை அறியக்கூடிய உணர்வை தந்து, பிறஉயிர்களுக்கு இனி மேலும் துன்பம் செய்யக்கூடாது என்ற உறுதியைதந்து இதுவரை நாம் செய்த இந்த மகாபாதக செயலின் பாவத்திலிருந்து விடுபட முருகனிடத்து மன்றாடுவான்.

அகவேள்வியும் புறவேள்வியும்

யாகம் என்பது வளர்த்தல் என்பதாகும். யாகம் செய்து வளர்க்கப்பட வேண்டிய ஜீவகாருண்யமே அல்லாது நெருப்பை மூட்டி நெருப்பை வளர்ப்பது  அல்ல. அதாவது மனிதனுள் உள்ள ஜீவதயவினை, தயவெனும் ஒளியினை,  தயவெனும் ஆன்ம ஜோதியை வளர்ப்பதாகும். அதை விடுத்து புறத்தில் காணப்படுகின்ற எரிகின்ற நெருப்பான ஜோதியை எரியும் நெருப்பை  பலவித பொருள் கொண்டு மேலும் மேலும் வளர்க்கின்றதான, செயல் யாகம் அல்ல.

ஆன்ம ஜோதியான ஆன்மா எனும் அணையா நெருப்பை, தீபத்தை மேலும் ஒளி பெறச்செய்வதான ஆன்ம யாகத்தை வளர்த்திட,


ஓம் சரவண பவ எனும் அருட்சோதி வடிவினனான அந்த சுயஞ்சோதி பிரகாச பேரொளியாளன் முருகப்பெருமானின் மூலமந்திரத்தை செபிப்போம்.


நம்மைப்போலவே கடவுளால் படைக்கப்பட்ட அனைத்து உயிர்களிடத்தும் அன்பு செலுத்திடல் வேண்டும்.


உயிர்களை உடல் விட்டு நீக்கும் கொடும் கொலைபாதக செயலை செய்யாதிருத்தல் வேண்டும்.


உயிர்க்கொலை செய்து உடல்தனை உண்ணும் கொடும்பாவத்தை செய்யாதிருத்தல் வேண்டும்.


எந்த அளவிற்கு இயலுமோ, அந்த அளவிற்கு பிற உயிர்களுக்கு பசியாற்றிவித்து அவ்வுயிர்களுக்கு பாதுகாவலனாய் இருக்க வேண்டும். 


நமக்கு உற்ற விருந்தை உபசரிப்பதும், பிறரை மதித்து நடத்தலும் பிறர் குற்றத்தை பொறுத்தலும் அவர் நமக்கு செய்த குற்றத்தை மன்னித்து, விட்டுக்கொடுத்து அனுசரித்து செல்ல வேண்டும்.


எதிலும் பொது நோக்கமாய் இருத்தல்.

இவையனைத்துமே ஆன்மசோதி விளக்கம் பெறுவதற்கான செய்யப்படுகின்ற ஆன்ம வேள்வியாகிய யாகத்தினை வளர்க்கும் உபாயங்களாகும். இவையே ஆன்மசோதியை அருட்பெருஞ்சோதியாக மாற்றவல்ல சக்திகளாகும்.

வேள்வி, யாகம் என்பதே ஜீவதயவை பெருக்குவது ஒன்று மட்டுமேயாகும் என்பதை அறிந்து தெளியுங்கள்.


பகலவனாம் முருகனின் பாதம் பணிந்திடவே
இகழெலாம் விலகியே இன்பம் உண்டாம்.

மகான் திருவள்ளுவப்பெருமானும் தமது திருக்குறளில் கொல்லாமை, புலான்மறுத்தல் என்ற தலைப்பில் ஒரு அதிகாரமாகவே இதை வைத்து இதன் முக்கியம் பற்றி இம்மனித சமுதாயத்திற்கு அறிவிக்கிறார்.

கொல்லாமை

குறள் 321:
அறவினை யாதெனின் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாந் தரும்.

மு.வரதராசனார் உரை:
அறமாகிய செயல் எது என்றால் ஒரு உயிரையும் கொல்லாமையாகும், கொல்லுதல் அறமல்லாத செயல்கள் எல்லாவற்றையும் விளைக்கும்.

குறள் 322:
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாந் தலை.

மு.வரதராசனார் உரை:
கிடைத்ததைப் பகுந்து கொடுத்துத் தானும் உண்டு பல உயிர்களையும் காப்பாற்றுதல் அறநூலார் தொகுத்த அறங்கள் எல்லாவற்றிலும் தலையான அறமாகும்.

குறள் 323:
ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன்
பின்சாரப் பொய்யாமை நன்று.

மு.வரதராசனார் உரை:
இணையில்லாத ஓர் அறமாகக் கொல்லாமை நல்லது, அதற்கு அடுத்த நிலையில் கூறத்தக்கதாகப் பொய்யாமை நல்லது.

குறள் 324:
நல்லாறு எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
கொல்லாமை சூழும் நெறி.
மு.வரதராசனார் உரை:
நல்ல வழி என்று அறநூல்களால் சொல்லப்படுவது எது என்றால், எந்த உயிரையும் கொல்லாத அறத்தைப் போற்றும் நெறியாகும்.

குறள் 325:
நிலைஅஞ்சி நீத்தாருள் எல்லாம் கொலைஅஞ்சிக்
கொல்லாமை சூழ்வான் தலை.

மு.வரதராசனார் உரை:
வாழ்க்கையின் தன்மையைக்கண்டு அஞ்சித் துறந்தவர்கள் எல்லாரிலும், கொலைசெய்வதற்க்கு அஞ்சிக் கொல்லாத அறத்தைப் போற்றுகின்றவன் உயர்ந்தவன்.

குறள் 326:
கொல்லாமை மேற்கொண் டொழுகுவான் வாழ்நாள்மேல்
செல்லாது உயிருண்ணுங் கூற்று.

மு.வரதராசனார் உரை:
கொல்லாத அறத்தை மேற்கொண்டு நடக்கின்றவனுடைய வாழ்நாளின் மேல், உயிரைக்கொண்டு செல்லும் கூற்றுவனும் செல்லமாட்டான்.

குறள் 327:
தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது
இன்னுயிர் நீக்கும் வினை.

மு.வரதராசனார் உரை:
தன் உயிர் உடம்பிலிருந்து நீங்கிச் செல்வதாக இருந்தாலும், அதைத் தடுப்பதற்காகத் தான் வேறோர் உயிரை நீக்கும் செயலைச் செய்யக்கூடாது.

குறள் 328:
நன்றாகும் ஆக்கம் பெரிதெனினும் சான்றோர்க்குக்
கொன்றாகும் ஆக்கங் கடை.

மு.வரதராசனார் உரை:
கொலையால் நன்மையாக விளையும் ஆக்கம் பெரிதாக இருந்தாலும், சான்றோர்க்குக் கொலையால் வரும் ஆக்கம் மிக இழிவானதாகும்.

குறள் 329:
கொலைவினைய ராகிய மாக்கள் புலைவினையர்
புன்மை தெரிவா ரகத்து.

மு.வரதராசனார் உரை:
கொலைத்தொழிலினராகிய மக்கள் அதன் இழிவை ஆராய்ந்தவரிடத்தில் புலைத்தொழிலுடையவராய்த் தாழ்ந்து தோன்றுவர்.

குறள் 330:
உயிர்உடம்பின் நீக்கியார் என்ப செயிர்உடம்பின்
செல்லாத்தீ வாழ்க்கை யவர்.

மு.வரதராசனார் உரை:
நோய் மிகுந்த உடம்புடன் வறுமையான தீய வாழ்க்கை உடையவர், முன்பு கொலை பல செய்து உயிர்களை உடம்புகளில் இருந்து நீக்கினவர் என்று அறிஞர் கூறுவர்.

புலான்மறுத்தல்

குறள் 251:
தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான்
எங்ஙனம் ஆளும் அருள்.

மு.வரதராசனார் உரை:
தன் உடம்பைப் பெருக்கச் செய்வதற்காகத் தான் மற்றோர் உயிரின் உடம்பைத் தின்கின்றவன் எவ்வாறு அருளுடையவனாக இருக்க முடியும்?.

குறள் 252:
பொருளாட்சி போற்றாதார்க்கு இல்லை அருளாட்சி
ஆங்கில்லை ஊன்தின் பவர்க்கு.

மு.வரதராசனார் உரை:
பொருளுடையவராக இருக்கும் சிறப்பு அப்பொருளை வைத்துக் காப்பாற்றாதவர்க்கு இல்லை, அருளுடையவராக இருக்கும் சிறப்பு புலால் தின்பவர்க்கு இல்லை.

குறள் 253:
படைகொண்டார் நெஞ்சம்போல் நன்னூக்காது ஒன்றன்
உடல்சுவை உண்டார் மனம்.

மு.வரதராசனார் உரை:
ஓர் உயிரின் உடம்பைச் சுவையாக உண்டவரின் மனம் கொலைக்கருவியைக் கையில் கொண்டவரின் நெஞ்சம் போல் நன்மையாகி அருளைப் போற்றாது.

குறள் 254:
அருளல்ல தியாதெனிற் கொல்லாமை கோறல்
பொருளல்ல தவ்வூன் தினல்.

மு.வரதராசனார் உரை:
அருள் எது என்றால் ஓர் உயிரையும் கொல்லாமலிருத்தல் அருளல்லாது எது என்றால் உயிர்களைக்கொள்ளுதல் அதன் உடம்பைத் தின்னுதல் அறம் அல்லாதது.

குறள் 255:
உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊனுண்ண
அண்ணாத்தல் செய்யாது அளறு.

மு.வரதராசனார் உரை:
உயிர்கள் உடம்பு பெற்று வாழும் நிலைமை, ஊன் உண்ணாதிருத்தலை அடிப்படையாகக் கொண்டது ஊன் உண்டால் நரகம் அவனை வெளிவிடாது.

குறள் 256:
தினற்பொருட்டால் கொல்லாது உலகெனின் யாரும்
விலைப்பொருட்டால் ஊன்றருவா ரில்.

மு.வரதராசனார் உரை:
புலால் தின்னும் பொருட்டு உலகத்தார் உயிர்களைக் கொல்லா திருப்பாரானால், விலையின் பொருட்டு ஊன் விற்பவர் இல்லாமல் போவார்.

குறள் 257:
உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன்
புண்ணது உணர்வார்ப் பெறின்.

மு.வரதராசனார் உரை:
புலால் உண்ணாமலிருக்க வேண்டும், ஆராய்ந்து அறிவாரைப் பெற்றால், அப் புலால் வேறோர் உயிரின் புண் என்பதை உணரலாம்.

குறள் 258:
செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார்
உயிரின் தலைப்பிரிந்த ஊன்.

மு.வரதராசனார் உரை:
குற்றத்திலிருந்து நீங்கிய அறிவை உடையவர், ஒர் உயிரினிடத்திலிருந்து பிரிந்து வந்த ஊனை உண்ணமாட்டார்.

குறள் 259:
அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத் துண்ணாமை நன்று.

மு.வரதராசனார் உரை:
நெய் முதலியப் பொருள்களைத் தீயில் சொரிந்து ஆயிரம் வேள்விகள் செய்தலை விட ஒன்றன் உயிரைக்கொன்று உடம்பைத் தின்னாதிருத்தல் நல்லது.

குறள் 260:
கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிருந் தொழும்.

மு.வரதராசனார் உரை:
ஓருயிரையும் கொல்லாமல் புலால் உண்ணாமல் வாழ்கின்றவனை உலகத்தில் உள்ள எல்லா உயிர்களும் கைகூப்பி வணங்கும்.


இப்படி எந்தவொரு சூழ்நிலையிலும், உயிர்க்கொலை செய்யாது, புலால் உண்ணாது, ஜீவதயவே ஜென்மத்தைக் கடைத்தேற்றும் என்று முழுமையாக நம்பி ஆன்ம இலாபத்தை பெறுவதற்கு அடிப்படை ஜீவதயவு என்று உணர்ந்து ஜீவதயவின் தலைவனாம் ஜீவதயவுடை சோதி சொரூபனாம் முருகனை இடைவிடாது செபித்து ஆன்மாவை ஒளி பெற செய்வதே உண்மையான வேள்வி அல்லது யாகமாகும்.

- சுபம்-