Contact தொடர்பு

உலகமக்கள் நன்மைகருதி சித்தர் சுவடிகள்

Saturday, 29 October 2016

பற்றுகள் அனைத்தும் துறந்த மகான் பட்டினத்தார் அருளிய ஆசி நூல்

ஞானி என்பதற்கு அடையாளம் ஓங்காரக்குடில் ஆசானே!

உலகில் பலபேர் ஆன்மீக வாழ்வில் முன்னேற வேண்டுமென பல வழிகளில் முயற்சி செய்து பலவிதமான நபர்களை சந்தித்து அவர்களால் தமக்கு வழிகாட்ட முடியுமா? என அவர்களை நாடி இறுதிவரை தெளிவு பெறாமல் அவரவர்களுக்கு தெரிந்தவரையில் ஆன்மீகம் என்ற பெயரில் ஏதேதோ, எதைஎதையோ கற்றுக் கொண்டு உண்மை ஆன்மீகம் பற்றியும், உண்மை வழிகாட்டியான குருநாதரைப் பற்றியும் தெரியாமல் தடுமாறி, தாங்கள் ஆன்மீகத்துறையில் முன்னேறி வருவதாக தாங்களாகவே கற்பனை செய்து வருகின்றனர். இவர்கள் மேல் குற்றமில்லை.


இவர்களில் தர்மசிந்தனையுடன் தான தர்மங்கள் செய்பவர்களும், உண்மையான பக்தி விசுவாசத்துடனும், யாருக்கும் தீங்கு நினைக்காமல் இறைவனை மனமார பூஜித்தும் வருகிறவர்கள் இருக்கிறார்கள்.


ஆனால் அவர்களது ஆன்மீக வழிகாட்டியாக உள்ளவர்கள் சரியில்லாததால் இவர்கள் தடம்மாறி சென்று ஆன்மீகத்தில் முன்னேற முடியாமல் தவிக்கின்றனர். அப்படிப்பட்டவர்கள் உண்மை குருவை தேடிக் கண்டுபிடித்து அக்குரு உபதேசம் பெற்று அவர் கூறும் வழிகளைப் பின்பற்றினால் அவர்கள் இனிப்பிறவா நிலையையும் அடையலாம். இவர்கள் உண்மைகுரு யாரென்று தமக்குள் ஒரு கருத்து வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.


அது என்னவெனில் குருவானவர் காட்டில் ஆசிரமம் வைத்திருப்பார்கள், அங்குள்ளவர்கள் எல்லோரும் காவி உடை தரித்து முனிவர்களாக இருப்பார்கள், அங்கு பெண்களே இருக்க மாட்டார்கள், அவர்கள் உலகியல் வாழ்விலிருந்து விடுபட்டு யாரையும் சந்திக்காமல் இரகசியமாக வாழ்வார்கள், பொதுமக்களை சந்திக்க மாட்டார்கள். இரகசிய பூஜைகள், இரகசிய மந்திரங்கள் செய்வார்கள், ஜடாமுடி தரித்திருப்பார்கள், தாடி வைத்திருப்பார்கள், அவர்கள் தவம் செய்ய ஆரம்பித்தால் அவர்களைச் சுற்றி புற்று வளரும் அளவிற்கு தவம் செய்வார்கள், யாருடனும் பேச மாட்டார்கள், உடம்பெல்லாம் விபூதியோ திருமண்ணோ தரித்திருப்பார்கள், அவர்கள் உக்கிரமான பக்தி வசப்பட்டு ஆடுவார்கள் என்றெல்லாம் பற்பல கற்பனைகளை மனதில் பதிய வைத்துக் கொண்டு இந்த உலகிலும் காடுகளிலும் தேடி அலைந்து இன்றுவரை யாரும் உண்மை குருநாதரை கண்டுபிடித்ததாக தெரியவில்லை.


உண்மையில் ஞானிகள் அப்படி மனித சமுதாயத்தை விட்டு விலகி இருக்க மாட்டார்கள். மக்களோடு மக்களாகவே சமுதாயத்தில் தொழில் செய்து கொண்டே, இறைவனை பூஜித்து வெளியே அடையாளம் தெரியாமல் இயல்பான வாழ்க்கையில் தான் இருப்பார்கள், அவர்களிடம் வீண் ஆரவாரம் இருக்காது, பொய் பேசமாட்டார்கள், ஜடாமுடியும் தாடியும் இருக்காது, பொய்வேடம் போடமாட்டார்கள். அவர்களது செயல்பாடுகளினால்தான் அவர்களை அடையாளம் காண முடியுமே தவிர தோற்றத்தினால் அடையாளம் காண முடியாது.


மகான் அகத்திய முனிவர், திருமூலர் போன்றோர் ஜடாமுடி தரித்து உருத்திரம் அணிந்து, புலித்தோல் ஆசனத்தில் அமர்ந்திருப்பது போல் அடையாளம் காண்பிக்கப்பட்டு இருப்பது, அது தத்துவ விளக்கங்களேயாகும்.


மேலும் அவர்கள் நிலை உயர்ந்தவர்கள். அவர்களை அலட்சியமாக எண்ணக்கூடாது, இடையூறு செய்து விடாதீர்கள், கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்பதை பொதுமக்கள் தெரிந்து கொள்வதற்காகவே தவ வேடத்தில் இருப்பார்கள். ஒருவர் தவவேடம் போட்டதால் மட்டும் அந்நிலை அடைந்தவராக கொள்ளக்கூடாது. அப்படிப்பட்ட உண்மை குரு, இப்போதைய காலக்கட்டத்தில் வள்ளல் பெருமானுக்கு பிறகு துறையூர் ஓங்காரக்குடிலாசான்தான் என்பதை மக்கள் உணர வேண்டும்.


அவரைத் தேடிக் கண்டுபிடித்து அவர் திருவடி பணிந்து பணிந்து அவர் செய்யும் அறப்பணிகளிலும் தர்மகாரியங்களிலும் கலந்து கொண்டு தொண்டு செய்தால் குடிலாசான் ஆசியினாலும் மகான்களின் ஆசியினாலும் துயரண்டாத வாழ்வும், நற்செல்வமும், புகழும், கீர்த்தியும், நற்பண்புகளும் வாழ்வில் நினைத்ததை முடிக்கும் வல்லமையும், மனிதருள் மேன்மையான நிலையும் சிறந்த இடத்தையும் பெற்று மரணமில்லா பெருவாழ்வையும் இறுதியில் பெறலாம். இக்கலியுகத்தில் தற்போது ஞானி என்ற சொல்லிற்கு, ஞானி என்பதற்கு அடையாளம் ஓங்காரக்குடில் ஆசானே. அவரே முற்றுப்பெற்ற ஞானி, அவரை அடைந்து ஆசி பெற்றால் அனைத்தும் விளங்கும். ஞான சூட்சுமங்கள் படிப்படியாக தெளிவடையும், உண்மை புரியும் என மகான் பட்டினத்தார் கூறுகிறார்.

வில்லிற்கு விஜயன் மகான் அர்ச்சுனர் அருளிய ஆசி நூல்

அரங்கரைப் போல் ஞானிகள் இனிவருவது கடினம்

முற்காலங்களில் மக்களைக் காக்கும் பொருட்டு மன்னர்கள் பலவிதமான வேள்விகளை வளர்த்து, அந்த வேள்வியின் பயனால் மக்களைக் காப்பதை கூறுவர். அதுபோல மன்னர்கள் வெற்றி பெறுவதற்காகவும், பலவித யாகங்களும், வேள்விகளும் செய்து அதன் பயனாய் வெற்றி பெறுவார்கள்.


ஆனால் அரங்கமகாதேசிகர் முப்பத்தாறு ஆண்டுகளுக்கு மேலாக தவமியற்றி, தவமே வேள்வியாகச் செய்தார். ஆறுமுகப் பெருமானின் அவதாரமாகத் தோன்றிய அன்னல் மகான் அரங்கமகாதேசிகர் தமது வாழ்வையும், தவ ஆற்றலையும் உலக மக்கள் நலனிற்காகவே அர்ப்பணித்து பிறருக்கு தர்மம் செய்வதையும், தவம் செய்வதையுமே வேள்வியாக வளர்த்து அதன் பயனையும் உலக மக்களுக்கு அளித்து இன்புறும் பேராசானாவார்.


அப்படி தன்னலமற்ற ஞானி அரங்கமகாதேசிகரை காணவும், அவருடன் பேசவும், அவரது கரம் நம்மீது படவும், அவரது பார்வை படவும், அநேகம் கோடி தவங்கள் நாம் செய்திருந்தாலன்றி அவ்வளவு எளிதில் முடியாது.


மாஆற்றல் பொருந்திய அரங்கமகாதேசிகரின் அறப்பணிகளுக்கு தொண்டும், பொருளுதவியும் இடைவிடாது செய்து அரங்கமகாதேசிகரினை முழுமையாக நம்பி, தம்மை அர்ப்பணித்து பணி செய்தால் அவர்கள் சித்தர் லோகத்தில் ஒருவராக மாறுவார் என்கிறார் மகான் அர்ச்சுனர்.

முப்பத்தாறு ஆண்டுகளுக்கு மேலாக தவமியற்றவும், தடைபடாத அறப்பணிகள் மூலம் தர்மம் செய்யவும், அதற்கு தேவையான எல்லா ஞானிகளின் ஆசியும், பெரும் ஆற்றல் பெறவும், அரங்கமகா தேசிகர் கடைப்பிடித்த கொள்கைகளே அரங்கமகா தேசிகருக்கு உறுதுணையாக இருந்தது. ஜாதி, மத, இன, மொழி, ஏழை பணக்காரன் என்ற பாகுபாடற்று எல்லோரையும் ஒரு தாய் பிள்ளைகளாக எண்ணியதும், அவர்களிடம் பாரபட்சம் பாராமல் அன்பு காட்டியதும், தம்மை நாடியவர்களையும், தொண்டு செய்பவர்களையும் தம்மைப்போல் எண்ணி அன்பு காட்டியதாலும் இவ்வித பெருந்தவத்தையும், தருமத்தையும் செய்ய முடிந்தது. பொதுவாகவே ஒருவருக்கு ஞானம் பெற வேண்டுமாயின் சில அடிப்படை கொள்கைகளை கடைப்பிடிக்க வேண்டும். 


இத்துறையின் அடிப்படை கொள்கையான தொண்டருக்கு வருகின்ற இன்பதுன்பம் தனக்கு வந்ததாக எண்ணி அவற்றை ஏற்றுக் கொள்பவராகவும், இதை வாழ்வின் இலட்சியமாக கொண்டவர்தான் அரங்கமகாதேசிகர்.


கிடைத்ததற்கரிய குருநாதன் கிடைத்தும் இனியும் காலம் தாழ்த்தாது திருவடி பணிந்து பெறுதற்கரிய பெரும்பேற்றை பெற வேண்டும்.


ஓங்காரக்குடிலாசான் அரங்கமகாதேசிகரின் அறப்பணிகள் எல்லையின்றி விரிவடைந்து வருகின்றது. ஆரம்பத்தில் ஐந்து நபர்கள், பிறகு பத்து நபர்கள், ஐம்பது நபர்கள், ஆயிரம் நபர்கள், பத்தாயிரம் நபர்கள் மேலாகவும் அன்னதானம் நாளுக்கு நாள் விரிவடைந்து கொண்டு வருகிறது. இதுவரை சுமார் 2784 இலவச திருமணங்களை நடத்தி வைத்துள்ளார். குடிநீரில்லாத கிராமங்களுக்கு குடிநீர் அளித்துள்ளார். கண்சிகிச்சை முகாம்கள் நடத்தி கண்பார்வை அளித்துள்ளார்கள். இன்னும் சொல்ல சொல்ல இவை விரியும். இவ்வளவு அறப்பணிகளும் உண்மையும், அன்பும், பணிவும், முன்ஜென்ம தொடர்பும் உடைய தொண்டர்கள் உதவியினால்தான் செய்ய முடிந்தது.


இதுவே அவர்கள் செய்த தவப்பயன் என்பதை உணர்ந்து எக்காலத்தும் தொண்டரின் தொண்டினை மறவாமல் போற்றும் ஞானவானாக திகழ்கின்றார் அரங்கமகாதேசிகர்.

தலைவனே அவதாரமாக வந்துதித்தபோதும், சாதாரண தொண்டனிடத்தும் நேரிடையாக மனம்விட்டு பேசி அவனையும் மதித்து எந்த ஏற்றதாழ்வும் பார்க்காது அவரையும் தம்மைப்போலவே எண்ணி வாழ்த்தும் உயரியகுணமும், அன்பும் இவ்வுலகில் வேறெங்கும் எந்த சங்கத்திலும், எந்த இடத்திலும் காண இயலாது. அது ஓங்காரக்குடிலில் மட்டுமே காணமுடியும்.


அதை அரங்கர் மட்டுமே செய்ய முடியும். இதை வேறு யாராலும் செய்ய முடியாது. நன்றி மறவாமையை தன் உயிராக போற்றி பாதுகாப்பவர்கள் ஞானிகள் என்பது அரங்கரின் இச்செயல்களே சாட்சியாக கொள்ளலாம். அத்தகு ஞானியை, சற்குருவை முழுமையாக நம்பி தொண்டு செய்து வரவிருக்கின்ற பெரும் அறப்பணிகளில் தம்மை அர்ப்பணித்து ஞானிகளின் ஆசியும், அரங்கமகாதேசிகரின் ஆசியும் பெற்று ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ளுங்கள்.

இனியொரு காலம் இப்படி வாய்ப்பு கிடைக்காது, அரங்கரைப் போல் ஞானிகள் இனிவருவது கடினம், அரங்கரைப்போல் தாயுள்ளம் எவருக்கும் இல்லை, அரங்கரைப்போல் அன்பு எவரிடமும் இல்லை. அரங்கனே தாயும், தந்தையும், சாமியும், தெய்வமும் ஆவார். விரைந்து வாரீர், பெற வேண்டியவற்றைப் பெறுவீர், என உலக ஆன்மீகவாதிகளை விரைந்து அழைக்கிறார் வில்லிற்கு விஜயனான மகான் அர்ச்சுனர்.

Wednesday, 19 October 2016

இளமை நிலையாமை, செல்வம் நிலையாமை, உடல் நிலையாமை

முருகா என்றால்,


இளமை நிலையாமை, செல்வம் நிலையாமை, உடல் நிலையாமை என்பன பற்றி அறிந்து உணரலாம்.



நாம் பெற்ற இந்த இளமை என்றும் நிலையானது அல்ல என்றும் இந்த இளமை காலத்தால் அழியக்கூடியது என்றும் அந்த இளமை உள்ளபோதே நம்மைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்ற உண்மை அறிவு முருகனருளால் நம்முள் தோன்றி இளமை உள்ளபோதே என்றும் மாறா இளமை கொண்ட அருட்கடவுள் முருகப்பெருமான் திருவடியைப் பற்றி ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ள வேண்டும் என்ற பேரறிவும் ஆறுமுகனார் தம் திருவடிப் பற்றிட ஆர்வமும் முயற்சியும் உண்டாகி என்றும் மாறா இளமை பெற்ற அந்த ஆறுமுகனார் பெற்றிட்ட அந்த அற்புத வாய்ப்பை தாமும் பெறவேண்டுமென்ற ஞானஅறிவு தோன்றி ஆன்மாவினில் எழுச்சி உண்டாகி ஞானத்தேடலை தோற்றுவிக்கும். ஞானத்தேடலின் முடிவாக ஞானவான் முருகனே இதனை அளிப்பவனென்றும் அவனடிப் பற்றினாலன்றி அழியும் இளமையை அழியாமல் காக்க இயலாதென்பதனை உணர்ந்து என்றும் அழியா இளமையை பெற ஞானபண்டிதனின் ஆசியை பெற்றுயர முயற்சிகளை செய்வார் முருகனருள் பெற்றோர்.



செல்வம் என்பது ஓரிடத்திலும் என்றும் யாவரிடத்தும் நிலையாய் இருப்பதில்லை என்ற உண்மையை உணர்வார்கள்.



செல்வம் என்பது ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ள நாம் முன்சென்ம புண்ணியத்தால் நமக்கு கடவுளால் அளிக்கப்பட்ட கொடை என்றும் அந்த செல்வம் காலத்தால் நம்மைவிட்டு ஒரு நாள் சென்றுவிடும் என்றும், நிலையற்ற செல்வத்தை நம்முடனே நிலைப்படுத்த அந்த செல்வத்தை பயன்படுத்தி ஏழை எளியோர்க்கும், இயலாதோருக்கும் தரும அறப்பணிகளாய் செய்து நிலையில்லாத செல்வத்தை என்றும் மாறாத பிரபஞ்சமே அழிந்தாலும் அழியாது நம்மை தொடர்ந்து உடலை ஆன்மா மறந்து உடல்விட்டு உயிர் பிரிந்தாலும் ஆன்மாவை தொடர்ந்து வந்து மீண்டும் மீண்டும் பிறவிதோறும் நம்மை தொடரும் தரும ஆற்றலாய் மாற்றிக் கொள்ள வேண்டுமென்ற பெரும் சிறப்பறிவு முருகனை வணங்க வணங்க அவர்தம்முள் தோன்றும்.



தொடரும் தரும ஆற்றல் துணை கொண்டு நிலையற்ற செல்வத்தை நிலையான பெருஞ்செல்வமாம் முருகனருளாய் மாற்றியே முருகன் திருவடி திருத்தொண்டிற்கே ஒப்புவித்து முருகனருள் என்ற பெருஞ்செல்வத்தை பெற்று என்றும் மாறா அருட்செல்வமாம் முருகனருளை பெறுவதே இந்த செல்வத்தின் பயன் என்றுணர்ந்து ஆறுமுகனார் திருவடிக்கே யாம் பெற்ற செல்வமும் வாழ்வும் என்றே அவனது திருவடிக்கே சரணாகதியாகிடும் அற்புதமான ஞானமும் அவர் தம்முள்ளே தோன்றி ஆறுமுகனருளாலே ஆறுமுகன் திருவடிப்பற்றி செல்வத்தின் துணைகொண்டு திருப்பணிகள் செய்து திருவருள் பெற்று நிலையான பேரின்ப வாழ்வை பெற்றுயரும் வாய்ப்பினை முருகன் திருவடிக்கே சரணடைந்து பெற்றிடவும் வழிவகை செய்யும் முருகன் நாமமே என்றுணர்ந்து முருகன் திருவடி பற்றிட தூண்டிடும் முருகனின் பக்தியின் சக்தி. யாக்கை நிலையாமையாகிய இந்த உடம்பை பற்றிய உண்மை ஞானம் உண்டாகும். நாம் பெற்ற இளமையும், செல்வமும் நிலையற்றது என்றுணர்ந்து அப்பன் ஆறுமுகன் திருவடிக்கே சரணாகதி அடைந்திட அடைந்திட நாம் பெற்ற இந்த தேகமும் ஒரு நாள் அழிந்தே போகும். என்றும் அழியக்கூடிய இந்த தேகத்தின் உதவியால்தான் அழியாத தேகத்தை பெறமுடியும் என்றும் உணர்வார்கள்.




முருகன் அருளால் முருகனின் மீது செலுத்திய பக்தியின் ஆற்றலால் முருகநாமத்தின் சக்தியால் அவர் தம்முள்ளே அந்த முருகனே உண்மை அறிவை தூண்ட தூண்ட ஞானஅறிவின் தூண்டல்தனை பெற்ற அவரெல்லாம் அழியக்கூடிய இந்த தேகத்தின் உதவியால் அழியாததேகம் பெற்றிட என்றும் மாறா இளமையும், எல்லையில்லா பேராற்றலும், ஞானத்தின் தலைவனாயும் உள்ள ஞானபண்டிதனாம் முருகன்தான் நம்மைச் சார்ந்து அழியும் இந்த தேகத்தை அழிவற்ற ஞானதேகமாக தோற்ற தேகமான இந்த தூலதேகம் சார்ந்து கசடு நீக்கி அழியும் தேகத்தை அழியாத ஒளி பொருந்திய சூட்சும தேகமாக மாற்றிடுவான் என்றுணர்ந்து அந்த ஆறுமுகனார் வருகைக்காக இந்த மும்மலக் குற்றமுடை கசடான இந்த தேகம் கடைத்தேறிட அளவிலா பக்தியையும் அளவிலா தர்மத்தையும் செய்திட முனைந்து ஞானவழிதனிலே அவனருள் பெற்று சென்றிடுவார்கள் முருகனருளால்.



முருகன் அருள் கூட கூட ஒரு காலத்திலே முன்செய்த தருமமும் தொண்டும் உடன்வர முருகன் அருள் துணைபுரிய முருகனே தயவாய் மாறியே தேகம்தனை மாற்றி ஒளிதேகம் தந்திட பிறவா நிலையும் பெற்றுயர்வார்கள் முருகன் பக்தியின் ஆற்றலினால்.



இளமை நிலையாமை உணர்ந்து காலம் உள்ளபோதே முருகனை பூசித்தும் தொண்டுகள் செய்தும் செல்வம் உள்ளபோதே தர்மங்கள் செய்து அழியா அருள் செல்வத்தையும் என்றும் அழியா புண்ணியத்தையும் பெற்று அழியக்கூடிய இந்த தேகத்தை அழியாத தேகமாக ஆக்கிக் கொள்ள வேண்டுமென்ற உண்மை பேரறிவு முருகபக்தியால் மட்டுமே பெறமுடியும்.




முருகா முருகா முருகா என்றே மனம் உருகி போற்றிடுங்கள் முருகனை. முருகனருளால் முருகனாக உணர்ந்து முருகனாகவே ஆகிவிடலாம் முருக பக்தியினாலே!



முருகன் திருவடியை போற்றுவோம்!
முக்தியும் சித்தியும் பெறுவோம்!
வாழ்க முருக நாமம்! வளர்க முருகன் புகழ்!!
அனைத்துமானாய் நீயேயாய் முருகா! வந்ததும் நீயே தந்ததும் நீயே! வாழ்வதும் நீயே!
வாழவைப்பதும் நீயே!
எல்லாமும் ஆனாய் எம்பெருமானே!
காப்பாய் எம்மை கருணைக்கடலே!
கடைத்தேற்றுவாய் அருள் தயவே!
உமதடிக்கே எம்மை ஆளாக்கிடுவாய் அருட் கருணையே!
உண்பதும் உடுப்பதும் நீயே ஆவாய்!
நாடுவதும் தேடுவதும் நீயே ஆவாய்!
கூடுவதும் குழைவதும் நீயே ஆனாய்!
உண்மை உரைப்பதும் நீயே ஆனாய்!
உத்தமனாய் ஆக்குவதும் நீயே ஆவாய்!
உன்னடி பற்றிட உறுதுணை நீயே ஆவாய்!
சிந்தையும் நீயே ஆவாய்!
செயலும் நீயே ஆவாய்!
சொல்லும் நீயே ஆவாய்!
சொல்ல வைப்பதும் நீயே ஆவாய்!


எல்லாமும் ஆகியே எம்மை ஆட்கொண்டருள் எம்பெருமானே முருகா! முருகா! முருகா! ஞானபண்டிதா! சற்குருவே! தயாநிதியே! தற்பரமே! பொற்பதமே! காத்தருள் புரிவாய் அன்பே! ஆறுமுகனே என்று போற்றிடுங்கள் முருகனை! பெற்றிடுங்கள் பேரின்ப லாபத்தை! கந்தன் என்றபோதே வந்தேன் என்றருள்வான் முருகன்! விடாதீர்கள் முருகனை! ஓடும் முருகனை உண்மை உள்ளன்பால் பிடித்து வையுங்கள்! சொல்லுவோம் முருகன் நாமத்தை! வெல்லுவோம் வேற்படை கொண்டு வினைகளை!

-சுபம்-


மகான் ஆறுமுக அரங்கமகாதேசிகர் சுவாமிகள்

     

Related Articles

2000 வருடங்களுக்கு முன் தமிழ்ச்சித்தர்கள் வகுத்த உயிரியல் (Biology)

Nathan Surya
http://thamilsiddhas.blogspot.co.uk/2017/05/biology.html