ஞானத்தை அடைய முயற்சிப்பவர்கள் ஒன்றை நன்கு தெரிந்து கொள்ள வேண்டும். ஞானத்தை அடைய யோகமார்க்கம் என்ற ஒன்று உண்டு. அப்படி செய்யப்படும் யோகமானது ஆசான் ஞானபண்டிதனாகிய ஆறுமுகப்பெருமானும், மகான் அகத்திய பெருமானும் நமது உடலோடு கலந்து நின்று உள்ளிருந்து உணர்த்த உணர்தலால் செய்யக்கூடிய பயிற்சியாகும்.
அத்தகு யோகப்பயிற்சி செய்யுங்காலத்து உடலின் தன்மைக்கும் யோகசக்திக்கும் ஏற்ப அவ்வப்போது கற்பங்களும் மூலிகைகளும் ஆசான் உணர்த்த அவற்றின் உதவியால் உடலைக் காத்துக் கொள்ள வேண்டும்.
தவத்திற்கென்று ஞானத்தலைவனும், குருமுனி அகத்திய பெருமானும், மற்றைய ஞானிகளும் அவ்வப்போது உடல் தகுதிக்கேற்பவும் உடல் உஷ்ணத்திற்கேற்பவும் தவஉணவினை சொல்லியும், அவற்றை உண்ணும் அளவுகள் குறித்தும் அறிவுறுத்தியும் உடனிருந்து யோகத்தை நடத்துவார்கள்.
இதன்றி பல்வேறு வகையான கனி வகைகள், பல்வேறு வகையான மூலிகைகள், பல்வேறு வகையான கற்பங்கள், மருந்துகள், சூரணங்கள் இப்படிப் பலபல விதங்களில் நொடிப்பொழுதும் யோகியை விட்டு நீங்காது ஒரு பெரிய ஞானியர் கூட்டமே அவ்யோகியை சுற்றி அரூபநிலையில் நின்று கண்காணித்துக் கொண்டே இருந்து அவ்வப்போது உள்ள சூழ்நிலைக்கேற்ப மாற்றி மாற்றி ஆலோசனைகளை சுவடிகள் மூலமாகவும், சகுணங்களாகவும், அசரீரியாகவும், பொருள்கள் மூலமாகவும் அறிவுறுத்திக் கொண்டே இருப்பார்கள்.
ஏன் தண்ணீர் அருந்துவது என்றால்கூட உடற்சூட்டின் அளவைப்பொறுத்து இவ்வளவுதான் குடிக்க வேண்டும். அதற்கு மேல் குடிக்கக் கூடாது என உத்தரவுகள் வரும். இப்படி முழுதும் ஞானிகள் திருவடிக்கு தன்னை முழுமையாக ஒப்படைத்து இமைப்பொழுதும் அவரது சிந்தை நீங்காமல் தவமாய் தவமிருந்து செய்வதே வாசி யோகமாகும்.
அப்படிச் செய்தால்தான் குண்டலினி சக்தி விழிப்படைந்து அவ்யோகிக்கு பலன் அளித்து இறுதியில் மரணமில்லா பெருவாழ்வைத் தரும். அதை விட்டுவிட்டு சிலர் குண்டலினியைப் பற்றி சற்றும் அறியாமல் ஏதோ விளையாட்டாக தவறான முறையில் யோகப்பயிற்சிகள் தருகிறார்கள். அதை நம்பி பலர் அப்பயிற்சிகளை மேற்கொண்டு நீடிய மலச்சிக்கல் ஏற்பட்டு, உடல் உஷ்ணம் ஏறி, முறையான யோகப்பயிற்சிகள் செய்யாமலும், உணவுக்கட்டுப்பாட்டை கடைப்பிடிக்காமலும் இருந்து இறுதியில் உடல் வீங்கி துன்பப்பட்டு இறந்தும் போய்விடுகிறார்கள். ஞானிகளுக்கு யோகப்பயிற்சி அவசியம்தான்.
அடையோகம் என்பது ஒரு வருட காலம் ஒரே அறையில் இருந்து வெளிமக்களைச் சந்திக்காமல், தன் எண்ணம், சிந்தை, ஆன்மா அனைத்தையும் உள்முகமாக திருப்பி ஒருநிலைப்படுத்தி ஒரேசிந்தையாக இறைவன் திருவடியையே சிந்தித்து ஆன்ம விசாரணையில் இருந்து கடுந்தவமியற்றுவதாகும்.
அவர்களுக்கு தேவையான உணவுகள் கூட அவர்களே அவர்களது கைகளால் தயாரித்துக் கொள்ள வேண்டுமே அன்றி பிறர் உதவியை நாடாதிருக்க வேண்டும்.
ஆனால் ஒரு சிலர் அடிநாக்கை அறுத்துக் கொண்டு நுனி நாக்கை உள்நாக்கில் அடக்குவார்கள். அப்படி அடக்கிய நாக்கு சில சமயம் வெளிவரும், சிலசமயம் உள்ளடங்கி திரும்பிவராமல் சுவாசக்குழாயை அடைத்து கடுமையான மூச்சுத்திணறலுக்கு ஆளாகி அல்லல்பட்டு துடிதுடித்து சாவார்கள்.
அது முதுபெரும் தலைவன் ஞானத்தலைவன் ஆசான் ஆறுமுகப்பெருமானின் தனிப்பெருங்கருணையினால் மட்டுமே சாத்தியம். அதற்கு பலகோடி ஜென்மங்கள் ஞானிகள் திருவடி பணிந்து பாடுபட்டிருக்க வேண்டும். ஏதோ பயிற்சியினால் மட்டும் அதை அடைய முடியாது.
ஆனால் யோகப்பயிற்சிகள் செய்வதால் மட்டும் ஒருவர் ஞானியாகிவிட முடியாது. அப்படி பயிற்சிகளால் ஞானிகளாகி விடலாம் என்றால் இவ்வுலகில் எண்ணற்ற கோடிக்கணக்கானோர் ஞானிகளாகி இருப்பார்கள். ஞானம் பெறுவதும், யோகம் பெறுவதும், வாசி வசப்படுவதும் அவரவர் விருப்பமல்ல.
இப்படி கடினமானதும், பலஜென்ம புண்ணியத்தாலும் வரக்கூடிய யோகப்பயிற்சியினை ஞானநூல்களை படித்தோ, பிறர் கூறியதன் பேரிலோ, தவறான வழிகாட்டுதல்களினாலோ அல்லது தானாகவோ முயற்சி செய்து யோகப்பயிற்சிகளை செய்பவர்களும், செய்து பாதிக்கப்பட்டவர்களும் , செய்ய நினைப்பவர்களும் வாசியோகம் முழுதும் அறிந்த, குண்டலினி சக்தியைப் பற்றி முழுதும் அறிந்த, உடல் தத்துவமும், ஆன்ம தத்துவமும் அறிந்த, யோக நிலைகளும், தத்துவ நிலைகளையும் அறிந்து அவற்றையெல்லாம் கடந்து முழுமை பெற்ற ஆறுமுகனின் அவதாரமான ஓங்காரக்குடிலாசான் அரங்கமகாதேசிகர் வாசம் செய்யும் ஓங்காரக்குடிலிற்கு வந்து அரங்கமகாதேசிகரின் ஆசி பெற்றால் தவறான யோகப்பயிற்சியினால் ஏற்பட்ட பாதிப்புகளிலிருந்து விடுபட்டு உண்மையான யோகத்தை அறியவும், ஞானவாழ்வில் தடைபட்டவர்கள் தடைகள் நீங்கி ஞானவாழ்வை தொடரவும் தவறான யோகத்தினால் பாதிக்கப்பட்ட சக்கரங்கள் மீண்டும் இயங்கவும் செய்யும்.
குருவருளும் திருவருளும் புண்ணியபலமும் உள்ளவர்கள்தான் யோகத்தைப் பற்றி சிந்திக்கலாமே தவிர குருவருளும், திருவருளும், புண்ணியபலமும் இல்லாதவர்கள் யோகத்தைப் பற்றி சிந்திக்கவே கூடாது. ஏனெனில் யோகமானது முழுதும் பூர்வஜென்ம புண்ணியபலத்தாலும், குருவருளாலும் நிகழக்கூடிய ஒன்றாகும். கல்வியினாலோ, பயிற்சியினாலோ செய்யக் கூடியது அல்ல.
ஞானத்திருவடி- மாசி 2013
No comments:
Post a Comment