உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளும் அவை அவை தம்தம் வாழ்வியல் சூழலிற்கு ஏற்ப வாழ்கின்றன. அவையெல்லாம் தமக்கு பிற உயிர்களால் இடையூறு ஏற்பட்டால் அவை ஒன்று நேருக்கு நேர் எதிர்த்து தம்மால் இயன்ற அளவு தாக்கி போராடும் அல்லது எதிரி வலுவுள்ள உயிராக இருந்தால் அவை பயந்து ஓடிவிடும்.
ஆனால் எதிரி தம்மை தாக்கிவிட்டதை ஞாபகம் வைத்து சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து காத்திருந்து கொல்லும்படியான அறிவு பெரும்பாலும் ஐந்தறிவு வரையுள்ள உயிர்களிடத்து காணப்படுவதில்லை. ஆனால் நன்மை தீமைகளை உணர்ந்து மனிதன் கடைத்தேறுவதற்காக இறைவனால் அளிக்கப்பட்ட சிறப்பான கொடையே ஆறாம் அறிவாகிய பகுத்தறிவாகும். இதை அவன் நல்லபடியாக வாழ்ந்து தீயனவிலக்கி மேல்நிலை அடைய வேண்டுமே அன்றி அந்த அறிவை தீயவழிகளில் பயன்படுத்தி மேலும் மேலும் பாவியாகக் கூடாது.
விலங்குகள் கூட தமக்கேற்பட்ட துன்பத்தை மறந்து அவை மீண்டும் இயல்பாக வாழ்கின்றன. ஆனால் மனிதனோ தமக்கு ஒருவர் இடையூறு செய்து விட்டால் வலுவுள்ளவனாக இருந்தால் அவன் உடனே தமது கோபத்தினால் எதிரியை தாக்கி அழித்துவிடுகிறான்.
எதிரியை அழிக்க இயலாத போது அவன் அந்த நிகழ்வை மறக்காமல் தமது மனதிற்குள்ளாகவே ஆழப்புதைத்து எதிரியை தாக்கி அழிக்க, தக்க சந்தர்ப்பத்தை எதிர்நோக்கி வஞ்சகமாய் காத்திருந்து தக்க சந்தர்ப்பம் ஏற்பட்ட உடன், எதிரி எதிர்பாராத வகையில் தாக்கி அழித்துவிடுகிறான்.
ஒருவன் மற்றொருவரால் பாதிக்கப்பட்டால் நேருக்கு நேர் தமது மனவெளிப்பாட்டை வெளிப்படுத்தினால் அதைக் கண்டு எதிரி, இவன் நம்முடன் ஒத்துப்போகாதவன், இவன் தொடர்பு தேவையில்லை, இவன் நமது எதிரி என எண்ணி அவனது பார்வையினின்று அகன்று சென்றுவிடுவான் அல்லது ஒதுங்கி வாழ்வான்.
ஆனால் நடந்த சம்பவங்களை மறக்காமல் உள்ளுக்குள்ளேயே வைத்துக் கொண்டு சந்தர்ப்பத்திற்காக காத்திருந்து அந்த சந்தர்ப்பம் கிடைக்கும்வரை எதிரியிடத்து தான் பணிந்து விட்டதாகவும் அவனிடம் நட்பாக நடந்துகொள்வது போல நடந்து இனிமையாக அவனை புகழ்ந்துபேசி அவனது நம்பிக்கையைப் பெற்று எதிரி அயர்ந்த சமயம் பார்த்து நயவஞ்சகமாக பேசி பேசி இறுதியில் வீழ்த்தி வெற்றி காண்கின்ற நயவஞ்சக செயல் மிகக் கொடுமையான செயலாகும்.
ஒருவன் தனக்கு எதிரி என்றால் அது வெளிப்படையாக தெரிவதால் ஒன்று எதிர்த்து போராடுவான். இல்லை தோல்வியை ஒப்புக்கொண்டு ஒதுங்கி விடுவான். ஆனால் வஞ்சகம் உள்ளவன் அவ்வாறில்லாமல் எப்போது என்ன செய்வான்? எப்படிப் பேசுவான் என்று தெரியாததால் அவன் மிகக் கொடுமையானவன் ஆவான்.
எப்போது மனிதனின் மனதில் தூய்மையில்லையோ, பொறாமை உள்ளதோ, பொருள் பற்று உள்ளதோ, காமம் உள்ளதோ, அப்போது அவனது மனதில் கள்ளம் தோன்றி வஞ்சனை கொள்வான். ஒருவன் பொருள்பற்றினாலும், பிறர்மீது கொண்ட பொறாமையினாலும் வஞ்சனை கொள்வான்.
ஆயினும் வஞ்சனையாக உள்ளோர் பழி உணர்வை பெரும்பாலும் வெளிப்படையாக தெரியும்படி நடந்து பகை உணர்வு கொள்வதால் எதிராளி விலகிச் சென்று விடுவான். அவனிடம் நட்பு கொள்ளாமல் விலகிவிடுவான்.
ஆனால் சிலர் தாம் எடுத்துக் கொண்ட காரியத்தை பகையை முடிக்க எண்ணி எவர் எதிரியோ அவனிடமே நட்பு பாராட்டி ஆழ்ந்த நட்பு உள்ளவரைப் போல் நடித்து உள்ளத்தில் வஞ்சமும் புறத்தில் அளவில்லா அன்புள்ளவனாகவும் அவனது நலனில் மிகுந்த அக்கறை கொண்டவனாகவும், அவனுக்காக இவன் தியாகம் செய்வது போல தேனொழுக இனிமையாக பேசி அவனை நம்பச்செய்து இறுதியில் பகை முடித்து வீழ்த்திவிடுவான்.
உள்ளத்தில் நஞ்சும் உதட்டில் தேனும் கொண்டு பேசுகின்ற இவர்களிடம் மிகுந்த எச்சரிக்கையுடன் இருந்திட வேண்டும். இச்செயல் மிகக் கொடுமையான செயல், நம்பிக்கைத் துரோகமான செயல். ஆதலால் வஞ்சகம் பேசேல் எனக் கூறுகிறார் மகான் ஒளவையார்.
No comments:
Post a Comment