Contact தொடர்பு

உலகமக்கள் நன்மைகருதி சித்தர் சுவடிகள்

Monday, 8 April 2019

மகான் இராமதேவர் அருளிய முதல்நிலை யோகப்பயிற்சி

மகான் ஆறுமுக அரங்கர் அருளுரைகள்





யோகம் என்பது மூச்சுக்காற்று, மூச்சுக்காற்றின் இயக்கம். மூச்சுக்காற்று ஒரு நாழிகைக்கு 360 முறை வந்து போகும் அல்லது 360 சுவாசமாக இருக்கும். நாள் ஒன்றுக்கு 21,600 முறை மூச்சுக்காற்று வந்து போகும். நாம் தூங்கினாலும் வேலை செய்தாலும் இது இயற்கையாகவே நடந்து கொண்டிருக்கும்.


ஆக, மூச்சுக்காற்றின் இயக்கம் இயற்கை. அந்த இயக்கத்தை நிறுத்த முடியாது. வேகமாக ஓடும் போதும், வேலை செய்யும்போதும் மூச்சு வேகமாக வாங்கும். பிறகு ஒரு சமமான நிலைக்கு வரும்.


ஓரறிவு முதல் ஐந்தறிவு வரையுள்ள எல்லா உயிர்களுக்கும் காற்று வேண்டும். ஐந்தறிவுள்ள எல்லா ஜீவராசிகளுக்கும் மூச்சுக்காற்று வந்து போகும். கால்நடையாக இருந்தாலும் சரி, பறவையாக இருந்தாலும் சரி, ஊர்வனவாக இருந்தாலும் சரி, நீர்வாழ் ஜந்தாக இருந்தாலும் சரி, இவைகளெல்லாம் உயிர்வாழ காற்று அவசியம்.


மூச்சுக்காற்று இயக்கம் என்பது எல்லா ஜீவராசிகளுக்கும் இருந்தாலும் மனிதனுக்கு மட்டும்தான் மூச்சுக்காற்றைப் பற்றி அறியவும், அதை  ஸ்தம்பித்து, ரேசித்து, கும்பிக்கவும் முடியும். மனிதனுக்கு மட்டுமே நாள் ஒன்றுக்கு 21,600 முறை மூச்சுக்காற்று இயக்கம் அல்லது சுவாசம் வந்து போவதாக ஞானிகள் கணக்கு எடுத்திருக்கிறார்கள்.


மூச்சுக்காற்றின் இயக்கமே ஆன்மாவின் இயக்கமாக இருக்கும். ஆன்மாவின் இயக்கமே மனம். ஆக மூச்சுக்காற்றின் இயக்கமே ஆன்மாவாகவும், மனமாகவும் இருக்கும். மூச்சுக்காற்றின் இயக்கத்தினால் உள்ளே கருவி கரணங்கள் அசையும். அதனால் 96 தத்துவங்களும் இயங்கும்.



மூச்சுக்காற்றின் இயல்பை மனிதன் அறிந்து, அதோடு தொடர்பு கொள்ள வேண்டும். அப்படி தொடர்பு கொள்வதற்கு பயிற்சி வேண்டும். மூச்சுக்காற்றை இழுத்து ஸ்தம்பித்து பழக வேண்டும். அப்படி பழகினால் இரண்டு பக்கமும் சுவாசம் வந்து போகும். அப்படிப்பட்ட பயிற்சி  இருந்தால்தான் இரண்டு பக்கமும் சுவாசம் வருகிறதா என்று கண்டுபிடிக்க முடியும். அதற்கு மூச்சுக்காற்றோடு பழக வேண்டும். இதை முதல்நிலை பயிற்சி என்று சொல்கிறார்கள்.


மூக்கில் கை வைத்துப் பார்க்கும் போதே சுவாசம் சந்திரகலையில் இயங்குகின்றது அல்லது சூரியகலையில் இயங்குகிறது என்பதை அறியலாம். இது எங்களுக்குத் தெரியும். இந்தத் துறையில் வருகின்ற மக்களுக்கும் தெரியும்.


ஆசான் இராமதேவர் முதல்நிலை வாசிப்பயிற்சி சொல்லும்போது என்ன சொல்கிறார்? காலை பிரம்மமுகூர்த்தமாகிய 4.30 மணிக்கு எழுந்து காலைக்கடன்களை முடிக்க வேண்டும். இது அவசியம். தவறினால் காலை ஐந்து மணிக்கு எழுந்து காலைக்கடனை முடிக்க வேண்டும். பின்பு அருட்பா, திருவாசகம், போற்றித்தொகுப்பு இவற்றில் எதை இலகுவாக படிக்க  முடியுமோ அதை ஒரு பத்து நிமிடம் படிக்கலாம். இந்த பயிற்சிக்கு அடிப்படை சுத்த சைவ உணவாக இரவு நேரத்தில் ஓரளவு சாப்பிடலாம். பின்பு மகான் இராமதேவரை அழைக்க வேண்டும். ஆசான் இராமதேவரை சாஷ்டாங்கமாக வீழ்ந்து வணங்க வேண்டும்.


மகான் இராமதேவரிடம் நீரே எனது மூச்சுக்காற்றோடும், ஊனோடும், உணர்ச்சியோடும், உயிரோடும், உணர்வோடும் சார்ந்து இருந்து அருள்  செய்ய வேண்டுமென்று கேட்டு அவர் அருளை பெற வேண்டும். ஆசான் இராமதேவரே வாசிப்பயிற்சி அல்லது யோகாப்பியாசம் அல்லது பிராணாயாமம் துறைக்கு ஆசானாக இருக்கிறார்.


ஒரு ஜென்மத்தில் யாகோபாக இருந்து சித்தி பெற்று ஞானத்தை உலக மக்களுக்கு போதித்துள்ளார்கள். சிலர் இவருடைய உபதேசத்தை பெற்று ஞானத்தை அடைய முயற்சி செய்தனர். இப்படி முயற்சி செய்தவர்களில் சிலருக்கு ஞானம் கைவரப்பெறாததினால், இவர்கள் ஞானத்தை அடைவதற்காக மீண்டும் இராமதேவராக அவதாரம் எடுத்து உபதேசம் செய்தார்.


ஆசான் இராமதேவரை சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி அடியேனது அகமும், புறமுமாக இருந்து வாசியோடு வாசியாக கலந்து எனக்கு அருள் செய்ய வேண்டுமென்று கேட்டுதான் மூச்சை உள்ளிழுக்க வேண்டும். யோகப்பயிற்சி பிள்ளைகள் தவழ்ந்து செல்வது போல் மெதுவாக செய்ய வேண்டும். விரைவாக அடைய வேண்டுமென்று ஆர்வம் கொள்ளக்கூடாது. விரைவாக அடைய வேண்டுமென்று நினைத்தால் நோய்வாய்ப்படுவார்கள்.


யோகத்தை மேற்கொள்பவர்கள் சைவத்தை மேற்கொள்ள வேண்டும். அறத்தை மேற்கொள்ள வேண்டும். தன்னுடைய மனைவியை புரிந்து, அவள்  மனம் நோகாமல் நடந்து கொள்வது அறமே! புலால் உண்ணாது இருப்பது அறம். தன்னுடைய பிள்ளைகளுக்கு நல்ல கல்வியைத் தருவதும் அறமே!

நமக்கு கல்வி தந்து இந்த அளவிற்கு வாழ்வு தந்து நம்மை பெற்று வளர்த்த தாய் தந்தையரிடம் அன்பு காட்ட வேண்டுமென்று நினைப்பதும், செய்வதும் அறம்.


பொருள் ஈட்டும்போது நெறிக்குட்பட்டு சேர்க்க வேண்டுமென்று எண்ணுவதும், அறத்திற்குட்பட்டு பொருள் சேர்ப்பதும் அறம். பேசும்போதும், பிறர் மகிழும்படி பேசுவதும் அறம், இனிமையாக பேசுவதும் அறம்.

பிற உயிர்களுக்கு மகிழ்ச்சியானவற்றை செய்வது அறம். பொய் சொல்லாதிருப்பது அறம். ஈட்டிய பொருளை ஏழை எளிய மக்களுக்கு பயன்படுத்த வேண்டுமென்று எண்ணுவதும் அறம்.


அறம் இல்லையென்றால் அங்கே பொருளில்லை. பொருள் என்பது உண்மை பொருள் இல்லை என்று பொருள்படும். செய்கையிலே நீதி இருக்க வேண்டும். பேச்சிலே பிறர் மனம் புண்படப் பேசினால், ஐயோ பாவி! என்னை இப்படி பேசிவிட்டான் என்று சொல்வான். பிறர் மனம் புண்படும்படி பேசினால் அது அறமல்லாத செயல்.


நல்லவர், ரொம்ப இனிமையாக பேசுகிறார். பெரிய மனசு. அவர் பேச்சே, யாரேனும் மனம் அல்லற்பட்டு வரும்போது, வருபவர்களின் மனம் மகிழும்படி பேசுவார். அதுவே அறம்.


செய்கையிலே நீதி இருக்க வேண்டும். சிந்தையிலே நீதி இருக்க வேண்டும். நீதி என்பதற்கு அறம் என்று பொருள். மனம் வாக்கு காயத்தால் வல்வினை மூளுமென்பார். மனம் தூய மனதாக இருக்க வேண்டும். தூய மனதுக்கு அறம் என்று பொருள். மனம் தீயதை எண்ணும். நாக்கு தீiமையை பேசும்.

மனம் வாக்கு காயத்தால் வல்வினை மூளும்.
மனம் வாக்கு நேர்நிற்கில் வல்வினை மன்னா
மனம் வாக்கு நேர்மையாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் சிந்தனையும் சொல்லும் செயலும் நேர்மையாக இருக்கும். அந்த தூய்மைதான் அறமாக விளைகிறது, அறமாக மிளிர்கிறது, தெளிவாக இருக்கிறது.

உடம்பு காமவிகாரத்தில் இருக்கும். மனம் கெட்டால் வாக்கு கெடும். வாக்கு கெட்டால் உடல் கெடும். அப்ப காயம் என்பது உடம்பால் வருகின்ற கேடுகள். சிந்தனையால் வருகின்ற கேடுகள், பேச்சால் வருகின்ற கேடுகள் ஆகும்.

ஆசானிடம் கேட்டு அறத்தைப் பற்றி நன்கு அறிய வேண்டும். இது முதல் படி. இதை ஆசான் வள்ளுவர் தனது திருக்குறளில் சொல்லியுள்ளார். முப்பத்தெட்டு அதிகாரங்கள்அறத்துப்பால், எழுபது அதிகாரங்கள் பொருள்பால், இருபத்தைந்து அதிகாரங்கள் காமத்துப்பால். இதிலேயே வீடுபேறு இருக்கிறது. அறம், பொருள், இன்பம் இதற்குள் வீடுபேறாகிய இரகசியம் இருக்கிறது.


அறத்தைப் பற்றி ஒருவன் அறியாமல் வெறும் வாசிப்பயிற்சியை மட்டும் மேற்கொண்டால் அது ஜீவனற்ற ஆன்மீகமாக போகும். அப்ப ஜீவனுள்ள ஆன்மீகம் ஒவ்வொரு செயலிலும் வஞ்சனையில்லாது இருக்க வேண்டும். ஒரு சொல்லாக இருந்தாலும் சரி! அது பிறரை பாதிக்கக் கூடாது. ஒரு செயலும் பிறரை பாதிக்கக் கூடாது. சொல்லும் செயலும் அறமாக இருந்தால் அந்த இடத்தில் அறம் இருக்கும். இல்லையென்றால் பாடுபட வேண்டும்,  குற்றமில்லை.


எல்லோரும் அப்படித்தான் இருக்கிறார்கள். ஆக குணக்கேடு இருந்தால் கடவுளாக முடியாதோ என்றெண்ண வேண்டாம், இருக்கலாம். குணக்கேட்டுடன் தான் ஆரம்பத்தில் ஞானிகள் இருந்திருக்கிறார்கள். திருவருள் துணை கொண்டு அந்த குணக்கேட்டை மாற்றியிருக்கிறார்கள்.

குணக்கேடு என்ற அழுக்கை திருவடி என்று சொல்லப்பட்ட தடாகத்தில் கழுவியெடுக்க வேண்டும். குணக்கேட்டை கழுவி எடுக்க வேண்டிய முறை என்ன என்றால், “இராமதேவா என் தாயே தயவுடைய தெய்வமே! இந்த பாவியின் மீது கருணை காட்டுஎன்று கேட்க வேண்டும். எத்தனையோ பாவிகள் ஐயா! உன் ஆசி பெற்றிருக்கிறார்கள்.


நாயினும் கடையேனாகிய எனக்கும் உன் திருவருள் கடாட்சம் வேண்டும். என்பால் கருணைகொண்டு என்னை ஏற்று அருள் செய்ய வேண்டும் தாயே! என்று ஆசானை பணிந்து வேண்டினால், அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச்சொல், பொறாமை, பேராசை, சினம், வன்சொற்கள் என்று சொல்லப்பட்ட அழுக்கு கழுவப்படுகிறது.

வேறு கல்வியின் துணை கொண்டு இதை செய்ய முடியுமோ? கல்வியும் வேண்டும், இல்லையென்றால் தெரிய வேண்டும். இதெல்லாம் அழுக்காறு என்று தெரிய வேண்டும். அழுக்காறு என்றால் பொறமை. அவா என்றால் பேராசை. இதெல்லாம் புரிந்து கொள்வதற்கு கல்வி வேண்டும்.


பக்தி, உருகி தியானித்தல் மூலம் குணக்கேடுகளை கழுவி எடுத்தால் அங்கே அறம் தங்கி விடும். சினம் மிகுதியாக வருகிறது. பாவத்தின் சின்னம். ஐயனே இராமதேவா! நான் சினம் இல்லாது இருக்க நினைக்கிறேன். என்ன பாவம் செய்தேனோ? தாயே! மற்ற ஜீவராசிகளுக்கு இடையூறு வந்தால் சினம் கொள்ளும். பாம்பை மிதித்தால் தீண்டினால் சினம் வரும். மாட்டை அடித்தால் கோபம் வரும்.

ஆனால் இந்த பாவிக்கு ஒருவன் கடுமையாக பார்த்தாலே எனக்கு கோபம் வரும். இனம் புரியாத ஒரு குணக்கேடு. பிறவிக்கு காரணமானது சினம்.

சினம்என்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனம்என்னும்
ஏமப் புணையைச் சுடும்.
- திருக்குறள் - வெகுளாமை - குறள் எண் 306.
தன்னைத்தான் காக்கின் சினம்காக்க காவாக்கால்
தன்னையே கொல்லும் சினம்.
- திருக்குறள் - வெகுளாமை - குறள் எண் 305.



சினம் என்ற பாவி, பல ஜென்மங்களாக மீண்டும் மீண்டும் பிறவி எடுக்க காரணமாக இருக்கிறது. பிறவிக்கு காரணம் சினம். அந்த கொடிய பாவிதான் என்னை வஞ்சிக்கிறது. காமவிகாரம், பேராசை என்னை வஞ்சிக்கிறது. அதுவும் பிறவி எடுக்க காரணமாய் இருக்கிறது. எனவே அந்த பாவியும் என்னை விட்டு ஒழிய வேண்டும்.


நீரோ எதைக்கண்டும் பொறாமைப்பட மாட்டீர். என்னுடைய புல்லறிவோ அல்லது நான் செய்த பாவம் என்னை ஆட்டிப்படைக்கிறது. பொறாமை,  பேராசை, சினம், வன்சொற்கள் ஆகிய இந்த நான்கு குணக்கேடுகளும் மனித  வர்க்கம் தோன்றும் போதே இருக்கிறது. இது இடையில் வந்ததல்ல. இடையில் வந்தால் இடையில்தான் போக வேண்டும். இந்த நான்கு குணங்களும் மனித  வர்க்கத்தை ஆட்டிப் படைக்கின்றன.


மனிதனை மீண்டும் மீண்டும் நரகத்தில் தள்ளுவதும் இந்த நான்கு குணக்கேடுகள்தான். இது மனிதவர்க்கம் தோன்றும்போதே இருக்கிறது. மற்றைய ஜீவராசிகளுக்கு இந்த குணக்கேடுகள் இல்லை. அழுக்காறு, அவா, வெகுளி, மற்ற ஜீவராசிகளுக்கு இருக்க முடியாது. அவைகளெல்லாம் ஐந்தறிவுள்ள ஜீவராசிகள்.


ஆறறிவுள்ள மனித இனத்திற்கு, பொறாமை இருக்கும், பேராசை இருக்கும், சினம் இருக்கும், வன்சொற்கள் இருக்கும். இந்த குணக்கேடுகளை நீக்குவதற்கு எனக்கு வல்லமையில்லை. சினம் என்ற பாவி எனக்கு தொடர்ந்து பிறவியை உண்டாக்குகிறான். பேராசை என்று சொல்லப்பட்ட பாவி எனக்கு பிறவியை உண்டாக்குகிறான். பொறாமை என்று சொல்லப்பட்ட பாவியும் எனக்கு மீண்டும் பிறவியை உண்டாக்குகிறான்.


பிறர் மனம் புண்பட பேசி அப்படி பேசுவதால் பிறர் மனம் அல்லல்படுவதாலும் எனக்கு பிறவி வருகிறது. இந்த நான்கும் நான் மீண்டும் பிறப்பதற்கு காரணமாக இருக்கிறது. ஆனால் ஞானிகளாகிய நீங்கள் இத்தனை குணக்கேட்டோடு இருந்திருக்கிறீர்கள்ஐயனே நீர் மட்டும் எப்படி ஐயா இந்த குணக்கேடுகளை நீக்கும் வாய்ப்பை பெற்றீர்என்று ஆசான் இராமதேவரிடம் கேட்டபோது, எனது ஆசான் திருவருள் கடாட்சத்தால் குணக்கேடுகளை வெல்லும் வாய்ப்பை பெற்றேன். பொல்லாத பொருள் வெறி நீங்கியது, பொல்லாத காமவிகாரத்தை வென்றேன், பொறாமை அற்றது, பிறர் மனம் புண்படப் பேச வேண்டிய அவசியமில்லை, இவையெல்லாம் எனது ஆசான் திருவருள் கடாட்சத்தால் கிடைத்ததுஎன்றார் ஆசான் இராமதேவர்.


இந்த நான்கு குணக்கேடுகளும் அழுக்கு. இந்த குணக்கேடுகள் மனித வர்க்கம் தோன்றும் போதே இருந்திருக்கிறது. இது இயற்கையான ஒன்று. இது செயற்கையல்ல. செயற்கையாக இருந்தால் அது மனித வர்க்கத்தை விட்டு போயிருக்க வேண்டும். எனவே இந்த குணக்கேடுகள் இயற்கை. இந்த உலகத்தில் பல லட்சம் ஆண்டுகள் ஆனாலும் மனித வர்க்கம் தோன்றினால் இந்த குணக்கேடு இருக்கத்தான் செய்யும். இந்த குணக்கேடுகள் நீங்கினால் அவன் கடவுள் தன்மை அடைகிறான். அப்படி நீங்காவிட்டால் நரகத்திற்கு போகிறான். நீக்குவதற்கு என்ன உபாயம்? பக்தி என்ற சுத்த ஜலத்தால் கழுவினாலன்றி இந்த குணக்கேடுகள் நீங்காது. இந்த குணக்கேடுகளை வெல்வதற்கு என்ன உபாயம்?


 இந்த குணக்கேடுகளெல்லாம் இயற்கைதான். அதை யாரும் மறுக்க முடியாது. இந்த இயற்கையான குணக்கேடுகளை, இயற்கையின்  துணையோடு இயற்கையை வென்ற ஞானிகளுடைய தயவால் ஆசியால் குணக்கேடுகளை நீக்கிவிட முடியும்.


என்று ஒருவன் குணக்கேடுகளைப் பற்றி அறிந்து நீக்கிக் கொண்டானோ அன்றே அவன் அறத்தை பின்பற்றுகிறான் என்று பொருள். அறமென்பது  தருமம்.

இது முதல் படிக்கட்டு. குணக்கேடு அற்றிருப்பது அறம். கோபம் என்ற  குணக்கேடு முழுவதுமாக நீங்கியிருப்பது ஞானம். இந்த குணக்கேடுகள் மனிதன் இறந்த பின் ஏன் இல்லை? மனிதன் இறந்தவுடன் குணக்கேடும் இறந்துவிட்டது.
அப்படி இறந்தபின் ஏன் இல்லை? இறந்த பின் குணக்கேடு இறந்துவிட்டது. மூச்சுக்காற்று இயக்கத்தால்தான் இந்த உடம்பில் குணக்கேடு இருக்கிறது. மூச்சுக்காற்றின் இயக்கமே ஆன்ம இயக்கம். ஆன்மா இயங்குகிறது. ஆன்ம இயக்கமே மனம். அந்த இயக்கத்தின் காரணமாக குணக்கேடு இருக்கிறது.


மூச்சு நின்று விட்டது. குணக்கேடும் இறந்து விட்டது. ஆனால் பொல்லாத பாவத்தை சேகரித்து ஆன்மாவுக்கு கொடுத்தது. ஆன்மா தனியாக போகவில்லை.

புண்ணியம் செய்தால் ஆன்மா புண்ணிய பலத்தை கொண்டு செல்லும். அந்த குணக்கேடு ஆன்மாவை மாசுபடுத்துகிறது. அதனால் ஆன்மா  பாவத்தை சுமக்கிறது.


ஒருவன் இறந்தால் மூச்சுக்காற்று போவது மட்டுமல்ல, இந்த உடம்பு தாங்கி இதுவரை செய்த பாவபுண்ணியங்கள் ஆன்மாவோடு செல்கிறது. அப்படி சென்ற ஆன்மா என்ன செய்யும்? எந்த அளவுக்கு ஆன்மா பாவ புண்ணியங்கள் செய்திருக்கிறதோ, அதற்குரிய பிறவி எடுக்கும்.


எனவே அறமென்று சொல்லப்பட்ட ஒன்றை கடைப்பிடித்தால் ஆன்மா ஆக்கம் பெறுகிறது.



No comments:

Post a Comment