Contact தொடர்பு

உலகமக்கள் நன்மைகருதி சித்தர் சுவடிகள்

Thursday, 14 May 2020

முருகனது நாமங்கள் அவ்வளவு உயர்வானதா?


மகான் ஆறுமுக அரங்கர் அருளுரைகள்


முருகப்பெருமானை வணங்கி பூஜை செய்து ஆசி பெற்றிட்டால் :




எல்லா ஞானிகளுக்கும் மூத்தோனும் ஞானவர்க்கத்தின் தலைவனுமாகிய முருகப்பெருமானது நாமங்களை மனம் உருகிமுருகாஎன்றோ, “ஓம் முருகப்பெருமான் திருவடிகள் போற்றிஎன்றோ, ஓம் சரவண பவ”  என்றோ, “ஓம் சரவணஜோதியே நமோ நமஎன்றோ பூஜித்திட்டால்,  பூசிப்பவர் பஞ்சமா பாவியாகினும் சரி, அவனது பாவங்கள்  பொடியாகுவதோடு முருகன் நாமங்களை சொல்லிய அக்கணமே நவகோடி  சித்தரிஷி கணங்களின் பார்வைக்கும் அவன் ஆளாகி ஜென்மத்தைக் கடைத்தேற்றும் மார்க்கமதிலே வந்துவிடுவான்.


முருகனது நாமங்கள் அவ்வளவு உயர்வானதா? எனில் ஆம், முருகனது நாமங்களுக்கு மிஞ்சியது வேறெதுவும் இல்லை. ஏனெனில் மூத்தோன், ஞானத்தலைவன் முருகனது ஆசி பெற்றவர்களே பிரம்மனும், விஷ்ணுவும், ருத்ரனும், நவகோடி சித்தரிஷி கணங்களும், முப்பத்து முக்கோடி தேவரிஷி கணங்களும், சப்த ரிஷிகள், நவக்கிரக நாயகர்கள், நாற்பத்து எண்ணாயிரம்  ரிஷிமார்கள் இன்னும் அநேகம் அநேகம் கோடி தேவகணங்களும் முருகனது  அருள் பெற்றதால்தான் அந்தந்த பதவிகளைப் பெற்றார்கள்.


ஆயின்  முருகனது ஆசியே இந்தவிதமான உயர்வை தரும். ஆதலின் தலைவன்  முருகனது நாமத்தை சொன்னால் யாரடா அது? என் தலைவனை அழைப்பது  நாங்களெல்லாம் இருக்கின்றோம் உன்னை காக்க. எனவே தலைவன் முருகன்  வருமுன்னே கணப்பொழுதினிலே எல்லா சக்திகளும் தலைவனுக்கு முன்னே  உடன் விரைந்து அழைத்தோர் தம்மை சூழ்ந்து காத்தருளும். அப்பப்பா  அப்பப்பா என்னவென்று சொல்வது முருகன் ஆற்றலை, என்னவென்று  சொல்வது முருகன் பெருமையை. முருக நாமமே உயர் நாமம், அதற்கிணை இவ்வுலகினிலேயே, ஏன் இப்பிரபஞ்சத்திலேயே கிடையாது. இனியும் தோன்ற போவதும் இல்லை.


பிரணவத்தின் சூத்ரதாரியான முருகனே அனைத்திற்கும் ஆதாரமாகி இயக்கமும், ஒடுக்கமும் ஆகி எல்லா ஜீவர்களிடத்தும் கலந்து நின்று இயற்கையோடு இயற்கையாய் கலந்துவிட்ட படியினாலே தேவரிஷி கணங்களும், சர்வ சக்திகளும் மட்டுமல்ல, இயற்கை கடவுளால் படைக்கப்பட்ட அத்துணை உயிருள்ள ஜீவராசிகளும் ஆசிகளை வழங்கிடும் அவ்வளவு உயர்ந்த ஆற்றலுடைய முருகனின் நாமங்கள். ஏன் ஜடப்பொருள்கள் கூட உயிர்பெற்று இயங்கும்.


அற்புதமான சக்திகளை அருளவல்லதும், ஞானத்தை ஊட்ட வல்லதுமானதும், அனைத்தும் தரவல்லதும், ஏன் முருகனைப் போலவே ஆக்கி கொள்ளக் கூடிய வல்லமைகளையும் அந்த முருகனது நாமங்களே நமக்கு அருளுமென்றால் எப்பேர்ப்பட்ட ஆற்றலுடையது முருகனின் நாமங்கள்.


எல்லாம் வல்ல முருகனது நாமங்களை சொல்லி ஆசி பெற விரும்பினால்,  ஜீவதயவே வடிவான முருகனுக்கு பாத்திரமான உலக உயிர்களுக்கு துன்பம்  செய்யாது, உயிர்க்கொலை தவிர்த்து, புலால் மறுத்து, சுத்த சைவ உணவை மேற்கொள்ள வேண்டும்.  தினம் தினம் மறவாமல் காலை 10 நிமிடமும், மாலை 10 நிமிடமும், இரவு 10  நிமிடமும் முருகனது நாமங்களை சொல்லி பூஜை செய்திட வேண்டும்.


முருகனது ஜீவதயவு தோன்றுமிடங்களான உலக உயிர்கள் துன்பம் கண்டு இரங்கி இதம் புரிவதோடு மாதம் ஒருவருக்கேனும் பசித்த ஏழைகளுக்கு பசியாற்றுவிக்க வேண்டும் என்பதுவே முருகனது ஆசியைப் பெற முதன்மை தகுதிகளாகும்.
..................

முத்தர்கள் போற்றும் முருகப்பிரான் திருவடியை
நித்தமும் போற்றிட நினைத்தவை சித்தியே.