முருகப்பெருமான் துணை
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி
10.07.2018, செவ்வாய்க்கிழமை
பிரணவ சித்தியே குமரா
சரவண ஜோதியே நமோ நம எனும்
செபதபத்தால் உலகோர்க்கு கிட்டும்
கிட்டும் பயனாக போகமகாரிஷியும்
கூறிடுவேன் அரங்கமகான் கேட்க
திட்டமுடன் ஆறுமுகனார் சூட்சும
தேசிகனார் வெளிப்பாடு உறுதி காண
காணவே இந்தவித நாமசெபம்
கட்டாய செபமாக தொடர்ந்து ஒலிக்க
ஞான சக்தி ஏழாம் படை வீட்டில்
ஞான ஒளியாக வெளிப்படக் கூடும்
கூடவே அரங்க மகானிடத்தில்
கூறியே பாதங்களை பிடித்து
திடமுற தொண்டு செய்திட
தேசிகனுள் இந்த நாம ஒலி பரவ
பரவவே ஆறுமுகனார் சக்தி
பரவி அரங்கனுக்கு தேக திடம்
தரணியிலே கரம் கால்கட்கு உரமாகி
தண்டாயுதன் துணைபட நடை வெளிப்பாடு
வெளிப்பாடு சடுதி காணும்
வினவிட ஞான சக்தி கூடும்
தெளிவுபட செபதப பலம்
தேசிகன் அவதார சூட்சுமம் வெளிப்படுத்தும்
வெளிப்படுத்த அரங்கனே முருகனெனும்
வானவர் கண்ட சூட்சுமம் உறுதிபடும்
தெளிவுபட இவை செபதபத்தை
தொடரும் தொண்டர்கள் வாழ்வில்
வாழ்வில் காரிய வெற்றி காணும்
வந்த நோக்கங்கள் மலரும்
ஊழ் அறுக்கும் தூண்டலாக
உயர் தொண்டும் செபமும் வழி வகுக்கும்
வகுக்கவே ருண ரோகமிடர்
வஞ்சம் ஏவல் சூழ்ச்சி விலகும்
வகைபட அரங்கனோடு இருந்து
வலுவான சேவை செபதபம் காண
காணவே ஞான பலமுடன்
கருணையும் பக்குவமும்
ஞானவான்கள் ஆகிட ஆசியும் அருளும்
ஞானிகளாகவே ஆகும் வாய்ப்பு கிட்டும்
குறைவில்லா எண்ணிக்கை செபிக்க
கட்டநட்டம் எதிர்முறை குணம் விலகும்
கருணை தயவு பாதுகாப்பு பெருகும்
ஆகவே நாமசெபம் ஒலிக்க
அடியவர் என வந்தவர் எல்லாம்
யுகமாற்ற பங்களிப்பில் இடம் பெறுவர்
உலகை ஆளும் தகுதியும் பெறுவர்
பெருமைபட அகிலத்தவர்களும்
பிரணவம்பட இவை செபம் செய்ய
வறுமை விலகி தன் நிறைவும்
வசதி வளம் நல்பாதுகாப்பும் அடைவர்
அடைவர் அறிவும் பலமும்
அடைவர் சிந்தை தெளிவு திடமும்
சோடையான உலக மாயை வென்று
சுப்பனால் ஞான வாழ்வு பெறுவர்
வாழ்வினில் முருகனே தலைவன்
வையகம் காக்கும் இறைவன் எனும்
தாழ்விலா உண்மை அறிவர்
தக்க செபதபம் தொடர
தொடர உலக அழிவினின்றும்
துன்பமான வாழ்வினின்றும் மீள்வர்
இடரை வென்று காக்க வந்த
எங்கள் அரங்கனே முருகன் எனும்
எனும் சூட்சும அறிவு பெறுவர்
இந்தவித செபதபம் தொடர
ஞான உணவு சைவமே என்றும்
ஞானிகள் பூசையே உயர் பூசை எனும்
எனும் பக்குவம் திடம் பெறுவர்
எக்காலமும் செபதபம் செய்பவர்
ஞானவான்கள் தயவு பெற்றுமே
ஞானயுக வாழ்வும் ஞானியாகும் நிலை அடைவர்
அடையநல் இந்தவித செபதபம்
அளவிலா அனுதினம் செய்ய
சோடை வெல்வது அறமே எனும்
சுத்த தருமமே கருமம் போக்குவது எனும்
எனும் அரங்கன் தருமத்தின்
எல்லையிலா சக்தியை உணர்வர்
தானதரும வழியை கடைப்பிடித்து
தவராசன் தண்டாயுதன் துணைபட வாழ்வர்
வாழ்வினில் ஆபத்து இடைகண்டம்
வாராத எமபயம் விலகி
தாழ்விலா நெடிய ஆயுளும்
தானவர்கள் இனி பிறவா கதி பெறுவர் ஆசி நூல் முற்றே.
-சுபம்-
முருகப்பெருமான் துணை
மகான் போகமகாரிஷி அருளிய ஓம் சரவணஜோதியே நமோ நம எனும் செபத்தால் கிட்டும் பயன் குறித்த ஆசி நூலின் சாரம் :
ஓங்கார சக்தியே முருகப்பெருமானே ஓங்காரத்தின் வெற்றியே குமரப் பெருமானே “ஓம் சரவண ஜோதியே நமோ நம” எனும் ஜெபத்தினால் உலகோர்க்கு கிடைத்திடும் பயன்களையெல்லாம் அரங்கன் கேட்க போகமகாரிஷி யானும் ஆசி நூலாக விளம்பி வருடம் ஆனி மாதம் 26ம் நாள் 10.07.2018, செவ்வாய்க்கிழமையான இன்றைய தினமதனிலே உரைக்கின்றேன் என்கிறார் மகான் போகமகாரிஷி.
உறுதியாக குறித்த சமயத்தில் முருகப்பெருமானின் சூட்சுமமான அரங்கமகா தேசிகன் வெளிப்பாடு உறுதிபட நடந்திட வேண்டுமாயின் இத்தகைய வல்லமைமிக்க மந்திரமான ஓம் சரவண ஜோதியே நமோ நம எனும் மந்திரம் ஜெபமாக தொடர்ந்து ஒலித்திட ஞானசக்தி ஏழாம் படை வீடு தன்னிலே ஞானஒளியாக வெளிப்படுமப்பா.
ஆறுமுக அரங்கனை வணங்கி பணிந்து அரங்கன் முன்னிலையில் ஓம் சரவணஜோதியே நமோ நம என்று தொடர்ந்து ஜெபித்துமே அரங்கனின் கால் பாதங்களை பிடித்து திடமுற தொண்டுகளை செய்து வரவர, தேசிகனாருள் சரவணஜோதி மந்திர ஒலி பரவி முருகப்பெருமானின் சக்தி பரவி, ஆறுமுக அரங்கனுக்கு தேகதிடம் பெருகி அரங்கனின் கரம்கால்கள் உரமாகி முருகப்பெருமானின் துணைபட அரங்கனும் எழுந்து நடந்து தவஅறையினின்று வெளிப்பட்டு உலக மாற்ற செயல்பாடுகளுக்காக வெளியே வருவார்.
இத்தகைய வெளிப்பாடு விரைந்து நடந்திட சரவணஜோதி மந்திரத்தின் செபதப பலம் கூடிட விரைந்து வெளிப்பாடு காணும், ஞானசக்தி கூடி நிற்கும், செபதப பலத்தால் தேசிகனாரின் அவதார சூட்சுமம் வெளிப்படுத்தும்.
சரவணஜோதி மந்திர பலமானது அரங்கனின் அவதார சூட்சுமம் தன்னை வெளிப்படுத்திட ஆங்கே அரங்கமகா தேசிகப்பெருமானே முருகப்பெருமானாக உள்ள உண்மை தேவர்களும் ஞானிகளும் கண்ட உண்மையை தொண்டர்களும் கண்டு ரசிப்பார்கள்.
இப்படிப்பட்ட உயர்வான வல்லமைமிக்க ஜெபதபத்தை தொடர்ந்து சொல்லும் தொண்டர்களின் வாழ்வினிலே உள்ள காரியத் தடைகள் எல்லாம் விலகி காரிய வெற்றி காணுமப்பா. அவர்கள் இந்த பூமியில் எதற்காக பிறவி எடுத்தார்கள் என்பதையும் முன்ஜென்ம நோக்கங்களையும், தொடர்பையும் அறிந்து பிறவியின் நோக்கங்கள் நிறைவேறும். முன்ஜென்ம பாவங்களான ஊழ்வினையை உணர்ந்து ஊழ்வினை அறுத்து விடுபடும் முயற்சியாக ஊழறுக்கும் சக்தியாக முருகப்பெருமானின் உயர் மந்திரமாகிய ஓம் சரவணஜோதியே நமோ நம எனும் மந்திரம் உள்ளதை உணர்ந்து அதை தவறாது ஜெபித்திட அவர்களது இந்த ஜெபதபமும் உயர் தொண்டும் ஊழறுக்கும் வல்லமை தந்திடும்.
ஊழ்வினையை அறுத்து வெற்றிதரவல்ல சரவணஜோதி மந்திர ஜெபமதை தொடர்ந்து செய்து வர, அவரவரைப் பற்றிய கடன் துன்பங்கள் தீர்ந்திடும், அவரவர்க்கு உண்டான வஞ்சனைகள் விலகும், ஏவலும் சூழ்ச்சிகளும் செயலிழந்து அவர்களை விட்டு விலகி ஓடும்.
உத்தம மகா ஞானி முருகப்பெருமானின் அவதாரம் ஆறுமுக அரங்கனின் திருவடி நிழலே கதியென தஞ்சமடைந்து திருவடி நிழலில் தங்கி அரங்கனோடு உடனிருந்து வலுவாய் தொண்டுகளையும் ஜெபதபங்களையும் தவறாது செய்து வந்தால், அவரெல்லாம் ஞானபலம் தன்னை பெறுவதுடன் அரங்கனின் கருணையையும், பரிபக்குவத்தையும், அவரெல்லாம் ஞானவான்களாக ஆகிட எல்லா ஞானிகளின் ஆசியும் அருளும் பெற்று ஞானிகளாகவே ஆகும் வாய்ப்பையும் பெறுவார்கள்.
சரவணஜோதியே நமோ நம என்று குறைவின்றி நிறைவாக அதிக அளவில் ஜெபித்து வரவர, கஷ்டங்களும் நஷ்டங்களும் விலகும். எதையெடுத்தாலும் எதிர்மறையாக சிந்திக்கும் வக்கிர குணம் விலகும், எதிர்பதமான சிந்தனைகள் விலகும், அவர் தம்முள்ளே கருணையும் அருள் பாதுகாப்பும் தயவு உணர்வும் பெருகி நிற்கும்.
ஆதலினால் “ஓம் சரவணஜோதியே நமோ நம” என்றே நாமஜெபத்தை ஒலிக்கும் அடியவர்கள் எல்லோரும் யுகமாற்ற பங்களிப்பில் இடம் பெற்று சிறப்படைவார்கள், இந்த உலகை ஆளும் தகுதியும் பெறுவார்கள்.
உலக மக்களெல்லாம் ஓங்காரனாம் முருகப்பெருமானின் ஆசியுடன் ஓம் சரவணஜோதியே நமோ நம என்றே தொடர்ந்து ஜெபதபங்களை செய்து வரவர, அவரவரைப் பற்றிய வறுமை விலகி தன்னிறைவு காணும், நல்ல வசதியும் வளமும் நல்பாதுகாப்பும் பெற்று சிறப்படைவார்கள், சிறந்த அறிவு பலமும் சிந்தை தெளிவும் மனோதிடமும் பெற்று குற்றமுள்ள துன்பமயமான உலக மாயையை வென்று சுப்பனாம் முருகப்பெருமானால் ஞானவாழ்வை பெறுவார்கள்.
வாழ்வினில் அவரவரும் உறுதியுடன் முருகப்பெருமானே எமக்கு தலைவன், அவனே இந்த பிரபஞ்சத்திற்கும் தலைவன். இவ்வுலகைக் காக்கும் இறைவன் எம்பெருமான் முருகப்பெருமானே என்கிற அற்புதமான பேருண்மையையும் அறிந்து தெளிவார்கள்.
தகுந்த விதத்தில் முறையுடன் நாமஜெபங்களை ஜெபதபமாக தொடர்ந்து செய்திட அவரெல்லாம் உலகின் இயற்கை பேரிடர்களிலிருந்தும் மீள்வார்கள், துன்பமயமான உலக வாழ்வினிலிருந்தும் மீள்வார்கள். மக்களின் துன்பங்களை வென்று காத்திடவே வந்துதித்த எங்கள் அரங்கமகா ஞானியே முருகப்பெருமான் எனும் சூட்சும அறிவையும் பெறுவார்கள்.
இப்படிப்பட்ட உண்மையான ஆற்றல் பொருந்திய சரவணஜோதி திருமந்திரத்தை மந்திர ஜெபமாக தொடர்ந்து ஜெபித்து உருவேற்றினால் ஞானத்தினை அடைய தகுந்த உணவு சைவமே என்பதும், ஞானஉணவு சைவம்தான் என்றும், உயிர்க்கொலை தவிர்த்து புலால் மறுத்து சுத்த சைவ உணவை மேற்கொண்டாலன்றி ஞானத்திற்கு உரிய அறிவையோ, உணர்வையோ, ஞானத்தையோ ஒருபோதும் பெற முடியாது என்பதையும் அறியலாம். ஞானிகளை வணங்குவதுதான் உயர் பூஜை என்பதையும், மற்ற மற்ற சிறுதெய்வ வழிபாடுகளும், செத்து பிறந்த மனிதர்களை வணங்குவதும், மேன்மையடைய செய்யாது என்பதையும் தெளிந்து உணர்ந்து பக்குவம் பெறுவர். ஆக ஞான உணவு சைவமே என்றும், ஞானிகள் பூஜையே உயர்ந்த பூஜை எனும் பரிபக்குவம் மனோதிடமும் பெற்று சிறப்படைவார்கள்.
எல்லா காலத்தும் “ஓம் சரவண ஜோதியே நமோ நம” என்றே ஜெபதபம் செய்து வருகின்றவர்கள் ஞானவான்களின் தயவினை பெற்று ஞானயுக வாழ்வும் ஞானியாகும் நிலையையும் அடைவார்கள். சரவணஜோதி மந்திரத்தை ஒவ்வொரு நாளும் தவறாது அளவிலாது ஜெபதபம் செய்து வந்தால், நம்மைப் பற்றிய மும்மல குற்றங்களையும் வெல்வது அறமே என்றும், சுத்த தருமமே கருமமாகிய முன்ஜென்ம பாவங்களை போக்குவது என்றும், அதனாலேயே மக்களின் வினைபோக்கும் மாதரும செயல்களை ஆறுமுக அரங்கனும் செய்து அன்னதானத்தை விரிவாக நடத்துகிறார் என்பதையும் ஆறுமுக அரங்கனின் தருமத்தின் எல்லையில்லா சக்தியையும் உணர்ந்து தெளிவார்கள்.
தானதருமத்தின் வழியே சிறந்த வழி என்றே உணர்ந்து, தர்மத்தின் வழியை கடைப்பிடித்து தவராசன் அரங்கன் துணையுடனும் தண்டாயுதன் முருகப்பெருமான் துணையுடனும் வாழ்ந்து சிறப்படைவார்கள். அவர்களது வாழ்வில் ஆபத்துகள் ஏதும் வாராமல் இடைத்துன்பங்களும் வாராது நல்வாழ்வு வாழ்ந்து எமபயமாகிய மரணபயம் விலகி தாழ்விலாத நீடிய ஆயுளையும் பெற்று இனி பிறவாத கதியாகிய மரணமிலாப் பெருவாழ்வு எனும் பெருநிலையை பெற்று சிறப்படைவார்கள் என தமது ஆசி நூல் மூலம் உலகறிய உரைக்கின்றார் மகான் போகமகாரிஷி.
-சுபம்-
நக்கீரன் திருவடியை நாளும் போற்றிட
தக்க துணையென்றே சாற்றுவோர் நல்லோர்.
- மகான் ஆறுமுக அரங்கமகா தேசிகர்.