Contact தொடர்பு

உலகமக்கள் நன்மைகருதி சித்தர் சுவடிகள்

Tuesday, 29 May 2018

வைகாசி மாத ஞானத்திருவடி நூலிற்கு மகான் கருவூரார் அருளிய ஆசி நூல்



பிரணவ சக்தியே ஆறுமுகனே
பிரளயம் தனையும் தடுத்து காத்து
தரணியெங்கும் மகா சக்தியாக
தயவு காட்டி மக்களை நோக்கி

நோக்கியே பலகோடி சூட்சுமமாக
நீதிமான்கள் வழி வெளிப்பாட்டை
ஆக்கமுடன் செய்து அருளும்
ஆறுமுகனே கனிகிரி வேலவனே

வேலவனே கலிகாலம் தன்னில்
விளையாட்டை துவக்கி நன்கு
காலமதை நிர்ணயம் செய்து
கடுந்தவமியற்றி பலபிறவி தோறும்

பிறவிதோறும் தன்னை நோக்கி
பெருந்தவமும் தர்மமும் செய்து வந்த
துறவிதனை ஆறுமுகன் அனைத்து
தூயஅவதாரம் ஆக்கி இனிதே

இனிதே இந்த கலியுகத்தில்
ஏழாம்படை வீடு படைத்துமே
கனிவுமிக்க ஆறுமுக அரங்கனாக
கந்தனும் உயர்சேவை ஆற்றிவர

வருகவே ஆறுமுகன் சக்தியாக
வரமென வரும் ஞானத்திருவடி நூலுக்கு
கருவூரார் யானும் விளம்பி விடை திங்களில்
கண்டுரைப்பேன் ஆசிநூல் தன்னை

தன்னில் கலிகாலம் தன்
தகாத வலிமை பெருக்கி
இன்னலென மக்களை அழித்தாலும்
இடர்பாடுகள் இயற்கை சீற்றமென

சீற்றமென நிலநடுக்கம் சுனாமி
சிக்கலான மழைவள மின்மை
ஆற்றலான வெப்பக் கொடுமை
அநீதியான மக்கள் செயல்கள்

செயல்கள் மிகுந்து வந்தாலும்
செந்தில் வேலனார் கலியுகத்தை
தயவு கொண்டு தடுத்து காக்க
தவசியாக அரங்கனாக இறங்கி இருக்க

இருக்கவே எல்லா பாதுகாப்பும்
இந்த யுகத்தில் அடைந்து வாழ
கருத்தாக கலிவாழ் மக்கள்
கட்டாயம் அரங்கன் வடிவிலான ஆறுமுகனை

ஆறுமுகனை அணுகி வணங்கி
ஆற்றலான தீட்சை பெற்று
மாறுதலை வேண்டி உலகோர்
மனமுவந்து தான தருமத்தை

தருமத்தை ஏற்று செய்துவர
தட்டாது தொடரும் அரங்கனின்
தருமத்தில் பொருளுதவி செய்தும்
தன்னார்வ தொண்டர்களாக இணைந்தும்

இணைந்தும் அரங்கன் சேவையில்
எல்லா மக்களும் கலந்துவர
இணையில்லா சக்திபலம் கண்டு
இந்த உலகமே பாதுகாப்பு பெறும்

காப்புடனே மக்களின் தேவைகள்
கண்ணியமான வழியில் பூர்த்திபெறும்
ஒப்புக்கொண்டு நீர்நிலை கழனி
உயர்வு பெறும் தர்மம் வளரும்

வளரவிலா தடுத்து வரும்
வக்ரமான ஆளுமை கொடுமை
பலமிழந்து போக நேரும்
பாதுகாப்பான மழை வளமும்

வளமும் நீர்நிலை பெருக்கமும்
வஞ்சிக்கின்ற ஆளுமை மாறவே
பலமும் ஏற்றமும் உலகம் காணும்
பண்புடன் ஆளுமை மாந்தர்கள்

மாந்தர்கள் கருணை கொண்டு
மண்ணுலகில் கழனி காக்காவே
சிந்தைபட கழனி மக்களை காக்கவே
சிரத்தையுடன் எற்காவிடில்

எற்காவிடில் ஆளுமை மாறும்
இயற்கை சீறும் கலி இடராக
எற்காவிடில் அஞ்ஞானவான்கள்
இருப்பிடம் தெரியா அழியநேரும்

நேர்மைபட ஞானிகளை வணங்கும்
நீதிமான்கள் தர்மவான்கள் எல்லாம்
ஆறுமுக அரங்கன் வழியில் தொடர
அறம்வழி எல்லாமக்களும் இணைய

இணையவே மக்களின் தேவைகளும்
இயற்கை வளங்கள் எல்லாம்
இணையிலா அளவில் பெருகியே
இறைவடிவான அரங்கனால் பூர்த்தியாகும்

ஆகவே அரங்கன் காட்டும்
அனைத்து அறவழிகளும்
வகைபட ஆறுமுகன் காட்டும் வழிகள் ஆகும்
வல்லமைபட ஞானவழிகளாகும்

ஆகவே ஞானயுகத்தை நோக்கி
அரங்கன் சேவை முடுக்கப்பட்டதால்
யுகமே நாடிவரும் சடுதி அரங்கனை
யுகமே தேறும் ஞானயுகமாக

ஆகவே அற்புத சேவைகளை
அரங்கன் சக்திகளை கொண்டுவரும்
யுக ஞான நூலாக வரும்
உயர் ஞானத்திருவடி நூலை

நூலை வைத்திருப்பவர்களும்
நித்தம் வாசித்து வருபவர்களும்
காலை மாலை என பூஜித்து
கரம்தனில் தொட்டு வணங்கி

வணங்கி வரும் மக்களுக்கும்
வாசிக்க கேட்டு வருபவர்களும்
இணங்கி முருகன் அருளுவான்
எக்காலமும் பெருந்துணை புரிவான்
ஞானத்திருவடி நூலுக்கு கருவூரார் ஆசிநூல் முற்றே.

-சுபம்-



மகான் கருவூரார் அருளிய விளம்பி வைகாசி மாத ஞானத்திருவடி நூலுக்கு ஆசி நூலின் சாரம்:


பிரணவமாம் ஓங்கார சக்தியே ஆறுமுகப் பெருமானே பிரளயத்தையும் தடுத்து மக்களை காத்து உலகம் எங்கும் மகா சக்தியாக தயவு காட்டி, உலக மக்களை ஆதரித்து அன்பு செய்து பலகோடி சூட்சுமமாய் நின்று அருள் செய்து, நீதிமான்கள் மூலமாக நீதியை வெளிப்படுத்தி உலகினில் நீதியை நிலைநிறுத்தி ஆக்கமுடன் அருள் செய்யும் ஆறுமுகனே, பழநி மலை வாழ் வேலவனே முருகா, கலிகாலத்தினில் உமது திருவிளையாடல்களை துவக்கியே அத்திருவிளையாடல்களை நிகழ்த்திட, தக்க காலமதை நிர்ணயம் செய்து அத்தகைய தருணமதில் பல்லாயிரம் ஆண்டுகள் தவமியற்றி பலபல பிறவிகள்தோறும் முருகப்பெருமானை நோக்கி பெரும்தவமும் செய்து வந்த துறவி ஆறுமுக அரங்கமகாதேசிகனை முருகப்பெருமானும் அனைத்து அருள் புரிந்து தூய அவதாரமாக மாபெரும் ஞானியாக ஆக்கி, இனிதே இக்கலியுகத்தினில் ஏழாம்படை வீடு படைத்து கனிவுமிக்க ஆறுமுக அரங்கமகாதேசிகனாக கந்தப்பெருமானும் உயர் சேவைகளை ஆற்றிவர, முருகப்பெருமானின் சக்தி வடிவமாக வரமாய் உலகோர்க்கு வந்து காத்தருள் புரியும் ஞானத்திருவடி நூலுக்கு, கருவூரார் யானும் விளம்பி வருடம் வைகாசி மாதம்தனிலே ஆசி நூல்தனை உரைக்கின்றேன் மகான் கருவூர்த்தேவர்.

கலிகாலம் தன்னுடைய சக்தியான தீயகுணங்களை, தீயசக்திகளை வலிமைகளை பெருமளவில் பெருக்கி மக்களுக்கு பலவாறாய் இன்னல்கள் தந்து மக்களை அழித்தாலும் இன்னலாய் இயற்கை சீற்றமாகவும், நிலநடுக்கங்களாகவும், ஆழிப்பேரலையாகவும், சிக்கல்மிகுந்த பருவமாற்றங்களினாலும், மழைவளயின்மையாலும், அதிகமழை வெள்ளத்தாலும், எல்லைகடந்த சூரிய வெப்பக் கொடுமைகளாலும் அராஜகம் புரியும் அநீதியான மக்களின் தகாத செயல்களினாலும் எல்லை கடந்து உலகில் பாவச்செயல்கள் மிகுந்து வந்தாலும், செந்தில் வேலன் முருகப்பெருமான் எண்ணிலா கருணை கொண்டுமே கலியுகத்தின் கோரச்செயல்களை இன்னல்களை அளவு கடக்காது தடுத்து காத்து அருள் செய்து மக்களை மீட்கவே மகாதவசியாக ஆற்றல்மிகக் கொண்ட மகாஞானியாக ஆறுமுக அரங்கமகாதேசிகனாக அவதாரமாய் இறக்கி இருப்பதினாலே உலகினில் எல்லா பாதுகாப்பும் அடைந்திட அவரவரும் அரங்கனை நாடுங்கள்.      


உலகின் கொடுமையிலிருந்து மீண்டு எல்லா பாதுகாப்பும் இந்தயுகத்தில் அடைந்து வாழ கருத்துடன் கலியுகத்தினில் வாழும் மக்களெல்லாம் அவசியம் ஆறுமுக அரங்கமகாதேசிகனார் வடிவினில் இருக்கும் முருகப்பெருமானை நாடிச்சென்று பயபக்தியுடன் வணங்கி ஆற்றல் அளிக்கும் தீட்சை உபதேசங்களை அடைந்து உலகமாற்றம் நடந்திட வேண்டுகோள் வைத்து அவரவரும் தருமபலன் பெருகும்விதமாக தானதருமங்களை மனமுவந்து செய்து வரவேண்டும். ஆறுமுக அரங்கன் ஆற்றும் தானதருமப்பணிகளுக்கு தளராமல் தொடர்ந்து பொருளுதவிகளைச் செய்து அரங்கன் தேவைகளில் தன்னார்வத் தொண்டர்களாக ஆகி தொண்டுகள் செய்து அரங்கன் அருளால் இணையில்லா சக்தியை பெற்று இந்த உலகமே அரங்கன் அருளால் அருள் பாதுகாப்பை பெற்றிடும். அரங்கனின் அருள் பாதுகாப்பினால் உலக மக்களின் எல்லாத் தேவைகளும் கண்ணியமான முறையிலே பூர்த்தி அடையும், நீர்நிலைகளில் நீர் ஆதாரம் பெருகிடும், விவசாயம் சிறப்பாக நடந்து மேன்மை பெறும், நாட்டினில் தருமம் வளரும்.


மக்களின் வளர்ச்சியை தடுத்து வருகின்ற வக்ரமான ஆட்சிகளும், ஆட்சியாளர்களும் பலமிழந்து போக நேரிடும். மழையானது தவறாமல் பெய்து நாட்டில் வளம் பெருகும். நீர்நிலைகள் அதிகரிக்கும். மக்களை வஞ்சிக்கும் கொடுமையான ஆட்சியாளர்கள் முருகப்பெருமான் அருளினால் மாறிவிடுவார்கள். அதனால் நீதி பெருகி நாட்டில் பலமும் முன்னேற்றம் உண்டாகி நல்லுலகமாக ஆகிடும்.


ஆட்சி செய்வோர் பண்புடன் நடந்து கருணையோடு விவசாயத்தை காத்து அதிகமாக செய்திட விவசாயப்பெருமக்களும் அரசால் நன்கு பராமரிக்கப்பட்டு விவசாயிகளை அரசு காப்பாற்றவேண்டும். விவசாயிகளின் நலத்தினில் உடனடியாக கவனம் செலுத்தி விவசாயிகளை பாதுகாக்க வேண்டும், விவசாயிகளை காக்க மறந்தால் ஆட்சி மாற்றம் உண்டாகும், இயற்கையும் சீறும். கலியுகத்தின் மாயையினால் இதை ஏற்க மறுத்தால், இயற்கை சீற்றம் உண்டாகும். அவ்வித அஞ்ஞானவான்கள் இருந்த இடம் தெரியாமல் அழிந்து போவார்கள்.


நீதிநேர்மையுடன் தர்மத்தின் வழியிலே நடந்து முற்றுப்பெற்ற ஞானிகளை வணங்கும் நீதிமான்கள், தருமம் அளவிலான செய்திட்ட தர்மவான்கள் எல்லாம் ஆறுமுக அரங்கமகாதேசிகனார் வழியில் தொடர்ந்து சென்றிட, அரங்கனின் அறப்பணிகளில் கலந்து மக்களெல்லாம் இணைந்திட மக்களின் தேவைகள் இயற்கை வளமெல்லாம் பெருகி, இறைவடிவான ஆறுமுக அரங்கனால் பூர்த்தி பெறும்.


ஆகவே ஆறுமுக அரங்கமகாதேசிகனார் காட்டும் அனைத்து அறவழிகளும் முருகப்பெருமானின் அறவழிகளாகும், வல்லமைமிக்க ஞானவழிகளாகும்.


ஆகவே ஞானயுகத்தை நோக்கி அரங்கன் சேவை முடுக்கப்பட்டுள்ளதால் இந்த உலகமே விரைவில் அரங்கனை நாடி வரும். இந்தயுகமே ஞானயுகமாக தேறிடும்.

ஆதலினால் மிக அற்புதமான சேவைகளை ஆறுமுக அரங்கனின் சக்திகளை கொண்டிருக்கும் இந்தயுகத்தின் ஞானநூலாக வெளிவரும் உயர் ஞானத்திருவடி நூலை வைத்திருப்பவர்களும், தினம்தினம் பயபக்தியுடன் பூஜித்து வாசித்து வருபவர்களும், வாசிக்க கேட்கின்றவர்களும், ஞானத் தலைவன் முருகப்பெருமான் அருள் செய்து நிற்பான், எக்காலமும் பெருந்துணை புரிவான் என தமது ஞானத்திருவடி ஆசிநூல் மூலம் உலகறிய உரைக்கின்றார் மகான் கருவூர்த்தேவர்.

-சுபம்-